🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அதிகாரத்தில் அனைவருக்கும் பங்குகொடு! - மதுரையில் ஆர்ப்பாட்டம்.

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி மதுரையில் போராட்டம்!

உலக நிலப்பரப்பில் 2.4 விழுக்காடு மட்டுமே உள்ள இந்தியாவில் 18 விழுக்காடு மக்கள் வசிக்கின்றனர். இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் முதன்முறையாக 1872-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அப்பொழுது நடைபெற்ற கணக்கெடுப்பு என்பது வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நடத்தப்பட்டது. எனவே அப்பொழுது திரட்டப்பட்ட புள்ளி விபரங்கள் தோராய மக்கள்தொகையை கணக்கிட மட்டுமே பயன்பட்டது. அதனையடுத்து ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெறுகின்றன. 1881-82இல் நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பின்பொழுது தான் நாடுமுழுதும் ஒரே நேரத்தில் முதன்முறையாக மக்கள்தொகை கணக்கெடுக்கும்பணி நடைபெற்றது. அதுமுதல் கடைசியாக 2010-11 ஆண்டுவரை 15 முறை  கணக்கெடுக்கும்பணி நடைபெற்றுள்ளது. இதில் சுதந்திரத்திற்குப்பின் மட்டும் 7 முறை நடைபெற்றுள்ளது.

இப்பணியை 1948ஆம் ஆண்டு இந்திய கணக்கெடுப்பு சட்டத்தின் (1948 Census of India Act) கீழ் இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் மேற்கொள்கிறது. இந்தச் சட்டத்தின்படி கணக்கெடுப்பு நாட்களை முடிவு செய்யவும், கணக்கெடுக்கும் பணிக்கு எந்த குடிமகனையும் அழைக்கவும் அரசிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பிற்கு தேவைப்படும் தகவல்களை பிழையின்றி அளிப்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிழையான தகவல்களைக் கொடுப்பதற்கும் தகவல்களை மறுப்பதற்கும் தண்டனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மற்றுமொரு சிறப்பம்சமாக இச்சட்டத்தில் தனிநபர் தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்ற உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்புத் தகவல்கள் மீளாய்விற்கோ நீதிமன்ற சாட்சியத்திற்கோ தரப்படாது.

கணக்கெடுப்பு இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டத்தில் இல்லங்களும் வீட்டெண்களும் பட்டியலிடப்படுகின்றன. இரண்டாம் கட்டத்தில் தனிநபர் தகவல்கள் பதியப்படுகின்றன. 2010-11 கணக்கெடுப்பில் 2010 - ஜூன் 01 முதல் ஜுலை 15 வரை முதற்கட்ட கணக்கெடுப்பு நடந்தது. இரண்டாம் கட்டப் பணி பிப்ரவரி 9, 2011 முதல் பிப்ரவரி 28 வரை நடைபெற்றது. கடைசியாக மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டபொழுது மக்களிடமிருந்து பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டன. அதில் தனிநபர் விபரம், குடும்ப தலைவருக்கு உறவு முறை, இனம், பிறந்த தேதி, வயது, திருமண நிலை, மதம், எஸ்.சி.,/எஸ்.டி., மாற்றுத்திறன், தாய்மொழி, அறிந்த பிற மொழி, எழுத்தறிவு, கல்விநிலையம் செல்லும் நிலை, அதிகபட்ச கல்வி, வேலை, தொழில், பிறந்த இடம், கடைசியாக வசித்த இடம், இடம்பெயர்ச்சிக்கான காரணம், கிராம/நகரில் தங்கிய விபரம், பிறந்த மொத்த குழந்தைகள், உயிருடன் வாழும் குழந்தைகள், கடந்த ஓராண்டில் பிறந்த மொத்த குழந்தைகள் போன்ற 29 கேள்விகளுக்கு பதில் சேகரிக்கப்பட்டது.

இந்தியாவில் நான்காயிரத்திற்கும் அதிகமான சாதிகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும், அதுகுறித்து சரியான அறிவியல் ரீதியான புள்ளி விபரங்கள் திரட்டப்படவில்லை. இதனால் ஜனநாயகத்தின் பலனை ஒருசில குறிப்பிட்ட சாராரே எந்த தங்கு தடையுமின்றி அனுபவித்து வருகின்றனர். அதிக எண்ணிக்கையிலுள்ள் மக்களின் உரிமைகள் சுரண்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உதாரணமாக தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் மாநிலம் முழுவதும் 30 முதல் 40 லட்சம் மக்கள் வசித்தபொழுதும் அரசியல் அதிகாரம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. ஒரு சட்டமன்ற தொகுதியில் 2.5 முதல் 3 லட்சம் வாக்காளர்கள் என்று கணக்கிட்டாலும் கம்பளத்தார் சமுதாயத்திற்கு குறைந்தபட்சம் 5 முதல் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கவேண்டும். ஆனால் ஒருவர்கூட இல்லை. அதேபோல் அரசுத்துறை வேலை வாய்ப்பிலும் கம்பளத்தார்களின் எண்ணிக்கை 0.02 விழுக்காடுக்கு கீழ் தான் உள்ளனர். 

இதுபோல் நாடுமுழுவதும் எண்ணற்ற சமுதாயங்கள் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் உள்ளன. எனவே ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்குமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக இருந்துவருகிறது. 2021 துவங்கியிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுக்கும்பணி கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிப்போய் உள்ளது. தற்போது நவீன தொழில்நுட்பங்கள் மூலம் எளிமையாகவும் விரைவாகவும் மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியை செய்ய முடியும் என்ற பொழுதும் மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள மறுத்து வருகிறது. ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என இராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் ஏற்கனவே வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் அக்கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக இம்மாத இறுதியில் மதுரையில் போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை சமூகநீதி கூட்டமைப்பு மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக சமூகநீதி கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved