🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சட்டவிரோதமோ-சமூக விரோதமோ கம்பளத்தார் பண்பு அல்ல! - காவல்துறை அதிகாரி

தமிழக வரலாற்றில் பலநூற்றாண்டுகால பெருமைமிகு வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் இராஜகம்பளத்தார் சமுதாயத்தினர். மாநிலத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் விவசாயக்குடிகளாக வாழ்ந்துவருபவர்கள். நான் வசிக்கும் நாமக்கல் மாவட்டத்தில் ஏறக்குறைய இருநூறு கிராமங்களில் பல சமுதாயங்களோடு சமூக நல்லிணக்கத்தோடு காலம்காலமாக வாழ்ந்து வரும் இச்சமுதாயத்தினரை கால்சட்டைப்பருவம் முதல் அறிந்தவன் என்ற முறையில் கடந்த வாரம் நடைபெற்ற மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263-வது பிறந்தநாளின் போது நடைபெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்களை மேற்கோள்காட்டி நேற்று விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் விடுத்துள்ள அறிக்கையின் அடிப்படையில் சில கருத்துகளை இளைஞர்கள் பார்வைக்கு வைக்க விரும்புகின்றேன்.

ஒரு வரலாற்று ஆசிரியர், காவல்துறை அதிகாரி, சமூக செயல்பாட்டாளர் என்ற முறையிலும் தமிழக மண்ணின் வரலாற்றை ஓரளவு உள்வாங்கிக்கொண்டவன். தனிப்பட்ட சாமானியன், சாதனையாளன் என்றாலும் சமூக கட்டமைப்போடு வளர்ந்த சமூங்கள், வீழ்ந்த சமூகங்கள் என ஒவ்வொருவரின் பின்புலத்தையும், வரலாற்றையும், கடந்து வந்த பாதைகளையும் அவர்களோடு வாழ்ந்தும், கேட்டும், பழகியும், படித்தும் தெரிந்துகொள்ளக்கூடிய ஆர்வமுள்ளவன். அந்த வகையில் எனக்கு நெருக்கமான ஒரு சமுதாயமாக இந்த தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைப் பார்க்கிறேன். பாளையம்,ஜமீன், நிலவுடமையாளர்கள் என்று சமூகத்தின் பல்வேறு பரிணாமங்களைக் கொண்டிருந்தாலும் ஆதிக்கவாதிகளாக, மேட்டிமைவாதிகளாக காட்டிக்கொள்ளாதவர்கள். சகமனிதனுக்குறிய உரிமைகளை மறுக்காமல், தங்கள் குடிகளுக்கே உரித்தான கட்டுப்பாடுகளோடும், பண்பாட்டு முறைகளோடும், நீதிமான்களாக, நெறிமுறை தவறாமல், கட்டுப்பாடோடும், மிகுந்த கண்ணியத்தோடும், சகோதர பாசத்தோடும் வாழ்வது கம்பளத்தாரின் தனிச்சிறப்பு என்றால் மிகையல்ல.

வீரம் செறிந்த பல வரலாற்று நாயகர்கள் காலம் கம்பளத்தார்களுக்கு அளித்த பெருங்கொடை. வரலாற்றில் வெற்றியும், வீழ்ச்சியும் எந்த ஒரு தனிப்பட்ட சமுதாயத்திற்கும் சொந்தமானதல்ல. மாறி வரும் சூழல்களில் சமூக மாற்றமும் நடந்துகொண்டே உள்ளது என்பதும் சேர்த்தேதான் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அந்தவகையில் பெருமைமிகு கம்பளத்தார் சமுதாயமும் வரலாற்றில் பல்வேறு போர்ச்சூழல்கள், நெருக்கடிகள், அடக்குமுறைகளை சந்தித்து தேசத்தின் நாலாபுறமும் சிதறி சிக்குண்டு சின்னாபின்னமானாலும் சில அடிப்படை பண்புகளை மாற்றிக்கொள்ளாதவர்கள் என்பதை இளைஞர்களான நீங்கள் உணர்ந்துள்ளீர்களோ இல்லையோ நான் உணர்ந்துள்ளேன் என்பதை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஆம், வீழ்ச்சின் பள்ளத்தாக்கில் சிக்கிக்கொண்டபோதும் கூட கம்பளத்தார்கள் திருட்டு,மோசடி,அபகரிப்பு,ஆள்கடத்தல் என்று எந்த சட்டவிரோத செயலும் செய்ததை பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை. இதை எந்தக்காவல் நிலையமும் சான்றளிக்கும். 

கொ.நாகராஜனின் அறிக்கையை படிக்கையில் எனக்கே சற்று வியப்பாக, அதே சமயத்தில் கவலையாகவும் இருந்தது. சட்ட விரோதமோ அல்லது சமூகவிரோதமோ அது நிச்சயம் கமபளத்தார் பண்பு இல்லை என்பது மட்டும் உறுதியாக சொல்லமுடியும். ஏற்கனவே கூறியதுபோல் மாறிக்கொண்டே இருப்பது இயற்கையின் நியதி. இது சமுதாய தலைவர்களுக்கும், சமுதாய அக்கறை உள்ளவர்களுக்கும் அடித்துள்ள எச்சரிக்கை மணி. வீசும் காற்றில், குடிக்கும் நீரில், உண்ணும் உணவில் என புறத்திலும், அகத்திலும் நச்சு கலந்துவிட்டதை நாள்தோறும் படிக்கின்றோம், கேட்கின்றோம், அனுபவிக்கின்றோம். கொ.நா. சுட்டிக்காட்டியதைப்போல் கம்பளத்தார் சமூகமும் கொடிய நச்சுத்தாக்குதலுக்கு ஆளாகி வருகிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளது. அந்த நச்சு கண்ணுக்குத்தெரியாத கொடிய வைரஸ் அல்ல நண்பர்களே, மது என்ற அரக்கன் தான். இதை கட்டுப்பாட்டுக்கு பெயர்போன கம்பளத்தார்கள் எளிதில் வீழ்த்துவார்கள் என்பதில் ஐயமேதுமில்லை. வரலாற்றுப்பக்கங்களில் உங்கள் முன்னோர்கள் பல அரசர்களை வீழ்த்தியவர்கள். மது என்ற அரக்கர்கனை வீழ்த்துவதா கடினம். அதை நிச்சயம் நீங்கள் செய்துமுடிப்பீர்கள். இப்போரில் ஆண்களே நீங்கள் களம் காண வேண்டியதில்லை, எம் தங்கைகள் அதை செய்து முடிப்பர் என்பது திண்ணம். களத்திலே யுத்தம் என்றால் தோள் வலிமை வாகைசூடும். இது மனதோடு நடக்கும் யுத்தம் அது மங்கையரால் மட்டுமே முடியும். இது தொடக்க நிலை தான், முற்றிலும் பழுதாகிப்போகவில்லை. சக்கதேவியின் அருளோடு இதை சாதிப்பார்கள் என்பது நிச்சயம்.

இளைய சமுதாயமே கரம் கோருங்கள், மீண்டும் படைக்கலாம் வரலாறு. உங்கள் வெற்றியில் மகிழும் உங்களில் ஒருவனாக...

(கட்டுரையாளர் குறிப்பிட வேண்டாமென்று அன்போடு கேட்டுக்கொண்ட கம்பளத்தார் சமுதாய ஆசிரியர் அரவணைப்பில் வளர்ந்த காவல்துறை அதிகாரி தான் ஆசிரியர் வாயிலாக அனுப்பிய செய்தி)

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved