🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்.ஜி.ஆர்! - தொடர்-17

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் (16 ஆம் வாரத் தொடர்ச்சி )

எம்ஜிஆரின் தத்துவம்,

முன்னேற்றப் பாதையிலே மனசை வைத்து

முழுமூச்சாய் அதற்காக தினம் உழைத்து,

மண்ணிலே முத்தெடுத்துப் பிறர் வாழ

வழங்கும் குணம் உடையோன் விவசாயி

என் உயிரின் உயிரான உறவுகளே, நண்பர்களே வணக்கம்.

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று சொன்னார்கள் நமது முன்னோர்கள். நமது கலை, கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வீர தீரத்தை நாட்டிற்கு எடுத்துச் சொல்லும் தை திருநாளில் அனைவரின் இல்லங்களிலும், "அன்பும் ஆனந்தமும் பொங்கிட, அறமும் வளமும் தலைத்திட  பொங்கல் திருநாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்.

இந்த தொடரின் சரித்திரம் போற்றும் சகாப்த நாயகன் எம்ஜிஆர் அவர்களுக்கு ஏராளமான சிறப்புகள் உண்டு. அன்னைத் தமிழ் நாட்டில் தொடர்ந்து மூன்றுமுறை பொற்கால ஆட்சி செய்த மன்னாதி மன்னன் எம்ஜிஆர்.கேட்டவர்களுக்கெல்லாம் கொடை கொடுத்தவன் கர்ணன் என்றால், கேட்காதவர்களுக்கும் வாரி வழங்கியவன் கடையேழு வள்ளல்களில் எட்டாம் வள்ளலாகத் திகழ்ந்தவர் எம்ஜிஆர். அந்த  மகத்தான தலைவனின் 105 வது பிறந்தநாளில்  (ஜனவரி 17) வணங்கி இந்த வாரத்  தொடரைத் தீட்டுகிறேன்.

1977 ஆம் ஆண்டு புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு அரசியல் வரலாற்றில் புதியதோர் சரித்திரதைப் பதிவு செய்வதில் முனைப்புக் காட்டியது . பெரும்பாலான அரசியல் தலைவர்களின் நீண்ட எதிர்பார்ப்புகளுடன் தமிழக சட்டமன்றத் தேர்தல் ஜூன் மாதம் அறிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களில் எல்லாம் வேறொருவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்த எம்ஜிஆர், முதல் முறையாக தானே முதலமைச்சர் வேட்பாளராகக் களம் இறங்கத் தயாராகிறார். அதிமுக,திமுக போல் மற்ற கட்சிகளும் கூட்டணி உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டத் தொடங்கின. அதுவரை அதிமுக கூட்டணியிலிருந்த இ.கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருகிறார். அதேபோல் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மா.கம்யூனிஸ்ட் பி. ராமமூர்த்தி அதிமுக கூட்டணிக்கு வந்து சேருகிறார். புதிய உதயமாம் நெடுஞ்செழியன் தலைமையிலான 'மக்கள் திமுகவும்' அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கிறது. திராவிடர் கழகம் , மணலி கந்தசாமி தலைமையிலான தமிழ்நாடு கம்யூனிஸ்ட் ஆகியவை திமுகவுக்கு ஆதரவு தருகின்றன. ஜனதா தனித்துப் போட்டியிடுகிறது. 

 எனவே தமிழ்நாட்டில் நான்கு முனைப் போட்டி உருவாகிறது. எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கிய 5 ஆண்டுகளில் நடைபெறும் முதல் சட்டமன்ற பொதுத் தேர்தல் என்பதால் களம் களை கட்டியது. தமிழகம் முழுவதிலும் முதல் முறையாக எம்ஜிஆரின் இரட்டை இலை சின்னம்  பசுமையுடன் காட்சி அளிக்கிறது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எம்ஜிஆர் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் களமாட முடிவு எடுக்கிறார். அன்றைய அந்த காலகட்டத்தில் அருப்புக்கோட்டை தொகுதி என்பது திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது எனவும், அருப்புக்கோட்டை நகர் மற்றும் ஒன்றியப் பகுதிகள் அனைத்தும் சாத்தூர்   சட்டமன்ற தொகுதிக்குள்  இருந்ததாகவும் சொல்கிறார்கள் .(அப்பொழுது நான் ஏதும் அறியாத சிறுவயது பாலகனாக  வளரும் தருவாயில்)  எம்ஜிஆர் அருப்புக்கோட்டை தொகுதியில் களமாடுகிறார். ஆனாலும் இன்றைய இந்த சமயத்தில் தொகுதி மறுவரையின் காரணமாக    அருப்புக்கோட்டை தொகுதியில்   வாக்களிக்கும் வாய்ப்பை பெற்றவன் என்ற முறையில்  எனக்குப் பெருமையே . எம்ஜிஆர் என்ற அந்த சரித்திர நாயகனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் என் உறவினரான மாமா சிவசாமி  போட்டியிடுகிறார்.  

 திமுக சார்பில் போஸ், ஜனதா சார்பில் முத்துவேல் சேர்வை போன்றோரும், சுயேச்சையாக 8 வேட்பாளர்களும் போட்டியில் இறங்கினர். தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் எம்ஜிஆரின் தங்கமுகம் இரட்டை விரல் காட்டி பிரகாசிக்கிறது. எம்ஜிஆர் அதிமுக தொடங்கியவுடன் சந்தித்த முதல் தேர்தலான திண்டுக்கல்லில் எப்படி ரசிகர் பட்டாளம் தொண்டர்களாய் களத்தில் களமாடியதோ, அதுபோலவே புயலாய் களம் கண்டது.தமிழக மக்களின் அன்பும், ஆதரவும் என்றுமே  எம்ஜிஆருக்குத் தான் என்பதை நிரூபிக்க களம் தயாரானது.எம்ஜிஆர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வரும் வழியில் மதுரை வைகை ஆற்றுப்பாலத்தின் தென்பகுதியில்  சிம்மக்கல்லில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வருகிறார். சுமார் 10 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கும் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பதில் சிரமம் இருந்ததை உணர்ந்த சிலர் எம்ஜிஆரிடம், நீங்கள் மாலையை தொட்டுக் கொடுங்கள் நாங்கள் போட்டுக்கொள்கிறோம் என்றனர். அதை நிராகரித்த எம்ஜிஆர் சிலையை நோக்கி லாவகமாக மாலை அணிவிக்கிறார். தொண்டர்களின் ஆரவாரத்தால் அந்த இடமே அமர்க்களம் ஆகிறது. ஜூன் 12,14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடந்த தேர்தலில் முடிவுகள் பதினைந்தாம் தேதி வெளியாகிறது.  'விடியும் வேளை வரப்போகுது, தர்மம் தீர்ப்பைத் தரப்போகுது, நியாயங்கள் சாவதில்லை, என்றும் நியாயங்கள் சாவதில்லை' என்ற பாடல் வரிகளுகளை மெய்யாக்கும் விதத்தில், அதிமுக 130 தொகுதிகளில் வெற்றி பெற்று மாபெரும் சகாப்தம் படைக்கிறது.ஆதலால் அதிமுகவிடம் ஆட்சியை  இழந்த திமுக 48 இடங்களில் மட்டுமே வெற்றியைத் தக்க வைக்கிறது. காங்கிரஸ் 27, ஜனதா 10, மா. கம்யூனிஸ்ட் 5, இ. கம்யூனிஸ்ட் 12, பார்வர்டு பிளாக் 1, முஸ்லீம் லீக் 1 என்ற அளவில் வெற்றி பெறுகின்றன. வாக்கு சதவீதம் எனில் அதிமுக 30.37, திமுக 24.89, ஜனதா 16.66, சதவீதமாக பெற்றது.

அதிமுக சந்தித்த முதல் திண்டுக்கல் இடைத்தேர்தலில், திமுகவை மூன்றாம் இடத்திற்குத் தள்ளியது போல்,  எம்ஜிஆரை எதிர்த்து அருப்புக்கோட்டையில் போட்டியிட்ட திமுகவை தற்போது நான்காம் இடத்திற்குத் தள்ளுகிறார். அதுமாத்திரம் அல்ல ஜனதா தவிர்த்து திமுக உட்பட அனைவரும் டெபாசிட் இழக்கின்றனர். அருப்புக்கோட்டை வாக்கு நிலவரம் : எம்ஜிஆர் பெற்ற வாக்குகள்- 43065, ஜனதாவின் முத்துவேல் சேர்வை- 13687, காங்கிரசின் சிவசாமி- 12075, திமுகவின் போஸ்- 5415 வாக்குகள் பெற்றனர்.தமிழ்நாட்டின் எட்டு திசைகளும் கொட்டு முரசு கொட்டி பொன்மனச் செம்மல் எம்ஜிஆரை ஆட்சி அரியணைக்கு அழைப்பு விடுக்கிறது. அருப்புக்கோட்டையில் வெற்றிக் கொடி நாட்டிய எம்ஜிஆருக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் அரியணை மகுடம் சூட்டி அழகு சேர்க்கிறது.

 ஜூன் 30 அன்று சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்திற்கு காலைப் பொழுதில் தன் சகாக்களுடன்  சுமார் 8.30 மணியளவில் வருகை தருகிறார் எம்ஜிஆர். பின்னர்  9.15 மணிக்கு வருகை புரிந்த அன்றைய கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி எம்ஜிஆர் அவர்களுக்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.  தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டம் ஜுலை 7 ல் தொடங்குகிறது. அந்த வேளையில் தற்காலிக சபாநாயகராக பாவார்ட் பிளாக் கட்சி தலைவர் பி. கே. மூக்கையா தேவர் நியமிக்கப் படுகிறார். அதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் நடைபெறுகிறது. அதன்பின்னர் நடைபெற்ற சட்டமன்ற சபாநாயகர் தேர்தலில் தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனுஆதி ஏகமனதாக தேர்வு செய்யப்படுகிறார். துணை சபாநாயகராக எஸ். திருநாவுக்கரசு (இன்றைய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் )தேர்ந்தெடுக்கப்படுகிறார்.  எம்ஜிஆர் தலைமையிலான 14 அமைச்சர் பட்டியல் இதோ உங்கள் பார்வைக்கு : 1. எம்ஜிஆர் -காவல் துறை, சுகாதார துறை, தொழில் துறை 2. நாஞ்சில் மனோகரன் - நிதித்துறை,3.கே. நாராயணசாமி முதலியார் -சட்டத்துறை,4. ஜி. ஆர். எட்மண்ட் -உணவுத்துறை,5. பண்ருட்டி எஸ். ராமசந்திரன்-பொதுப்பணித்துறை, 6. எஸ். அரங்கநாயகம்-கல்வித்துறை,7.ஆர். எம். வீரப்பன்-செய்தித்துறை, 8. பி. சௌந்திரபாண்டியன்-அரிஜனநலத் துறை, 9.கே. காளிமுத்து-உள்ளாட்சித்துறை,10. எஸ். ராகவானந்தம்-தொழிலாளர் நலத்துறை, 11.சி. பொன்னையன்-போக்குவரத்து துறை, 12. பி.டி.சரஸ்வதி-சமூக நலத்துறை,13. ஜி. குழந்தைவேலு-விவசாயத்துறை,14. ராஜா முகம்மது-கூட்டுறவுத்துறை என்பது ஆகும். இதற்கு முன்பு முதல்வராக இருந்த கருணாநிதி  அண்ணா நகர் தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார்.திமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது.

எம்ஜிஆர் முதல்வராகப் பொறுப்பேற்று சட்டசபை தொடங்கிய ஒரு சமயத்தில் நடைபெற்ற விவாதத்தின்பொழுது எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி, "ஆட்சி அதிகாரம் எங்களுக்குப் புதிது அல்ல, நாங்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலை தான் அது" என்று பேசுகிறார். உடனே எழுந்த எம்ஜிஆர், தனக்கே உரிய டிரேட் மார்க் புன்னகையுடன், "நீங்கள் எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்று கணக்குப் பார்க்கத்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்" எனப் பதிலடி கொடுக்கிறார். எதையும் சமயோசிதமாக சிந்தித்துச் செயல்படும் எம்ஜிஆர் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மக்கள் பணியாற்றத் தொடங்குகிறார்.

 கரித்திரம் தொடரும்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved