🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! - தொடர்-18

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் (17-ஆம் வாரத் தொடர்ச்சி)

எம்ஜிஆரின் தத்துவம்,

"வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்".

என் உயிரின் உயிரான உறவுகளே, நண்பர்களே வணக்கம். நமது இந்திய திருநாட்டின் 73 ஆவது குடியரசு தின (வரும் ஜனவரி 26 ல்) அட்வான்ஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் உள்ளபடியே மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாட்டின் "முதலமைச்சர் சிம்மாசனம்" பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களை வண்ண மலர்கள் தூவி வரவேற்றது. இதற் கிடையே எம்ஜிஆர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட  படங்களை நடித்துக் கொடுப்பதற்காக  15 நாட்கள் இடைவெளி எடுத்துக்கொள்கிறார். (தேர்தல் முடிவு வெளியானது ஜூன் 15 எம்ஜிஆர் முதல்வர் பதவியேற்றது ஜூன் 30) எம்ஜிஆர் பதவியேற்புக்கு முன்னர் இயக்குனர் ஸ்ரீதரை அழைத்து, 'மீனவ நண்பன்' படத்தை எடுத்து முடிப்பதற்கு இன்னும் எத்தனை நாட்கள் தேவைப்படும் எனக் கேட்கிறார். அதற்கு ஸ்ரீதர் இரண்டு நாட்கள் ஒதுக்கினால் போதும் படத்தை முடித்து விடலாம் எனப் பதிலளிக்கிறார். பின்னர் இப்படத்தின் இறுதிக் காட்சியில் பெரும் புயலுடன் கொந்தளிக்கும் கடலில், கொட்டும் மழையிலும் எம்ஜிஆர் மோட்டார் படகில் வில்லன் நடிகர் நம்பியாரை  விரட்டும் சண்டைக் காட்சியில் நடிக்கத் தயாராகிறார். உடனே  எம்ஜிஆரிடம் ஸ்ரீதர், அண்ணே மழைக்காட்சி மட்டும் இப்ப வேணாம்.

இன்னும் ஒரு வாரத்தில் முதல்வர் பதவி ஏற்கப் போகிறீர்கள். இந்த நேரத்தில் நீரில் நனைந்து சளி, காய்ச்சல் வந்துவிட்டால் என்னாவது? ஆதலால் இடி, மின்னலுடன் நிறுத்திக் கொள்ளலாம் என்கிறார். எதையும் முழு அர்ப்பணிப்புடன் செய்யும் எம்ஜிஆர், எனக்கு ஒன்றும் ஆகாது மழையும் இருக்கட்டும் அப்பொழுது தான், காட்சி இயல்பாக இருக்கும் எனக்கூறி மழைக் காட்சியுடன் நடித்து முடிக்கிறார். எம்ஜிஆர் நினைத்திருந்தால் எனக்குப் பதில் டூப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லி இருக்கலாம். ஆனால் இயக்குனரே வேண்டாம் எனச் சொல்லியும்,எம்ஜிஆர் அர்ப்பணிப்புடன் மழையில் நனைந்தபடியே நடித்துக் கொடுக்கிறார். "மீனவ நண்பன்" படமும் நல்லதொரு வெற்றி பெற்றது. எம்ஜிஆருக்கு இந்தப் படத்தின் சம்பளமாக ரூ 45 இலட்சம்  வழங்கப்படுகிறது. அதுவரை தென்னகத்தில் வேறு எந்த நடிகருக்கும் அவ்வளவு பெரிய தொகை சம்பளமாகக் கொடுக்கப்படவில்லை எனத் தெரிய வருகிறது.அதன் பின்னர் எம்ஜிஆரின் கடைசிப் படமான "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" படக் காட்சிகளும் நிறைவு பெறுகிறது. 'மருதநாட்டு இளவரசி' படத்தில் எம்ஜிஆரின் வாள் வீச்சு எப்படி இருந்ததோ, அதே  துள்ளலும்,வேகமும் , கடைசி படமான இப்படத்திலும் இருந்ததைக் காணலாம்.

அதில் பங்கேற்ற அனைவருக்கும் எம்ஜிஆரின் சொந்த செலவில் வகை வகையான உணவு பரிமாறப்படுகிறது. அடுத்து அவர்களை அழைத்த எம்ஜிஆர், இதுவரை நடிகனாக இருந்த நான், இனி 'தமிழக முதல்வராக' பதவி ஏற்கப் போகிறேன். இப்போ உங்களுக்கு செய்கிற அளவுக்கு இனிமேல் செய்ய முடியுமா? என எனக்குத் தெரியல... அதனால இப்போ உங்களுக்கு என்ன தேவைன்னு சொல்லுங்க எனக் கேட்கிறார். திரை உலகிற்கு விடை கொடுத்த எம்ஜிஆர், அரசியலில் படை நடத்தி வெற்றிக் களிப்பில் கோட்டையைக் கைப்பற்றுகிறார். எம்ஜிஆர் முதல்வர் பதவி ஏற்றதும் 'பொம்மை' இதழுக்காக நடிகை லதா பேட்டி காண்கிறார். அப்பொழுது நீங்கள் காஞ்சிப் பெரியவரை சமீபத்தில் தரிசித்துப் பேசினீர்களா? எனக் கேள்வி எழுப்புகிறார். அதற்கு எம்ஜிஆர்,  ஒரு நல்ல துறவியான பரமாச்சாரியாரை,  பிறருக்காக வாழ்வதே மாந்தர் தம் கடமை என்ற தத்துவத்தின் ஒட்டுமொத்த உருவமாக காட்சியளிக்கும் ஒரு பெரியவரை நான் கண்டேன் என பதில் அளிக்கிறார். தன்னை நாத்திகர் என்று எம்ஜிஆர்  ஒருபோதும் சொன்னது இல்லை. 

அதனையடுத்து இலங்கையில் தம் மண்ணுக்காகப் போராடும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அதிமுக அரசு தமிழக சட்டமன்றத்தில் ஆகஸ்ட் 24 அன்று  தீர்மானம் நிறைவேற்றுகிறது. பின்னர் 10 ஆம் வகுப்பு முடித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 50 ரூபாயும், பி.யூ.சி. படித்து முடித்து வேலை இல்லாதவர்களுக்கு மாதம் 65 ரூபாயும் உதவித் தொகையாக வழங்க எம்ஜிஆர் ஆணை பிறப்பிக்கிறார்.

எம்ஜிஆரின் கார் ஓட்டுநர் கோவிந்தன் ஒரு நாள் பணிக்கு வரும் வழியில் கத்திப்பாரா சந்திப்பு அருகில் லாரி மோதிய விபத்தில் பலியாகிறார். உடனே எம்ஜிஆருக்கு இந்தச் செய்தி   வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த எம்ஜிஆர், கோவிந்தனின் உடலை சட்டப்படி பிரேத பரிசோதனை செய்யச் சொல்கிறார். அதில் குடும்பத்தினர்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும், எம்ஜிஆர் பிரேத பரிசோதனையில் அக்கறை காட்டுகிறார். பிரேத பரிசோதனை முடிந்து கோவிந்தனின் உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, சில மணித்துளிகளில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் நடந்த இறுதி ஊர்வலத்தில் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு வரையில் முதலமைச்சர் எம்ஜிஆர் நடந்தே செல்கிறார். இறந்து போன தன் ஊழியரின் இறுதி ஊர்வலத்தில் நடந்தே சென்ற ஒரு மாநிலத்தின் முதல்வர் எம்ஜிஆராக மட்டும் தான் இருக்க முடியும். அதன் பிறகு கோவிந்தன் குடும்பத்திற்கு பணமும் கொடுத்து உதவுகிறார். அவரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் வீட்டு வசதி வாரியத்தில் பணி வழங்குகிறார். அத்துடன் காப்பீடு தொகையும் கிடைக்க ஏற்பாடு செய்து உதவுகிறார். இந்த காப்பீடு தொகை பெற்றுத்தரவே, உடல் பரிசோதனை செய்யச் சொல்லி இருக்கிறார் எம்ஜிஆர் என்பது இதன் பின்னரே குடும்பத்தினருக்குத் தெரிய வருகிறது.இவ்வாறு எம்ஜிஆர் தங்கள் மீது காட்டும் அன்பையும், ஆதரவையும் கண்ட கோவிந்தன் குடும்பத்தினர் தங்களின் துயரத்தையும் மறந்து நன்றி தெரிவிக்கிறனர்.

அதுமாத்திரம் அல்ல முன்பெல்லாம் இருசக்கர மிதிவண்டியில் இரண்டு நபர்கள் செல்ல தடை உண்டு. ஆதலால் அதில் இருவர் சென்றால் காவல் துறையினர் அபராதம் விதிப்பார்கள்.  ஏழைகளின் இந்த பரிதாப நிலையைக் கண்ட  எம்ஜிஆர் அந்த தடையை உடைத்தெரிந்து ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கிறார். அது போலவே சென்னையில் கிண்டி தொடர்வண்டி நிலையம் அருகே  சுரங்கப்பாதை திறப்பு விழாவிற்காக எம்ஜிஆர் செல்கிறார். அங்கு  எம்ஜிஆர் தன் உதவியாளரிடம், ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்ற ஒருவரை அழைத்து வரச் சொல்கிறார். படபடப்புடன் அருகில் வந்த நின்றவரிடம் கத்தரிகோளைக் கொடுத்து ரிப்பனை வெட்டச் சொல்கிறார். அவரும் கண்களில் கண்ணீர் மல்க ரிப்பனை வெட்டித் திறந்து வைக்கிறார். அந்த நபர் தான் சுரங்கப்பாதையைக் கட்டிய 'மேஸ்திரி ஏழுமலை' எனப் பின்னர் தெரியவருகிறது. இதைத்தான் கவிஞர் வாலி மனிதர்களில் எத்தனையோ நடிகர்கள் உண்டு, நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதன் எம்ஜிஆர் தான் என்கிறார்.

சென்னையில் உள்ள சத்யா ஸ்டூடியோவில் செப்டம்பர் 18 அன்று அதிமுகவின் பொதுக்குழு கூடுகிறது. அப்பொழுது நெடுஞ்செழியன் தலைமையிலான "மக்கள் திமுக" அதிமுகவுடன் இணைகிறது. பின்னர் நெடுஞ்செழியன் அதிமுகவின் அவைத்தலைவராக நியமிக்கப்படுகிறார். கோவை மாவட்டம் சூலூர் அருகில் பள்ளபாளையம் கிராமத்தில் கவிஞர் புலமைப்பித்தனின் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டை அவரின் தந்தை மற்றும் அண்ணன்கள் இருவரும் சேர்ந்து 1967 ல் அடமானம் வைத்துள்ளனர். அடுத்த ஆண்டில் அவரது தந்தை காலமாகிவிடுகிறார். 1971 பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் அடமான வீட்டை மீட்காவிட்டால் அந்த வீடு கடன் கொடுத்தவருக்கே சொந்தம் ஆகிவிடும். இந்த நிலையில் வாகினி ஸ்டூடியோவில் எம்ஜிஆரைச் சந்திக்கிறார் புலமைப்பித்தன். அவர் ஏதோ சொல்ல நினைப்பதை உணர்ந்த எம்ஜிஆர் சிரித்தபடியே என்னவென்று கேட்கிறார். தன் நிலைமையை எம்ஜிஆரிடம் விரிவாகப் பகிர்கிறார் புலமைப்பித்தன். கேட்ட அடுத்த வினாடியே நான் பணம் தருகிறேன் எனக் கூறிய எம்ஜிஆர் கொடுத்தும் உதவுகிறார்.  மற்றவர்களுக்கு உதவுவதில் மனித நேயம் மிக்கவர் எம்ஜிஆர் என்பதை இப்படி நாம் தொடர்ந்து  அறியலாம்.டிசம்பர் 31 ல் கவிஞர் புலமைப்பித்தனை சட்ட மேலவை உறுப்பினராக நியமனம் செய்கிறார் எம்ஜிஆர். பின்னர் சட்ட மேலவையின் துணைத்தலைவர் ஆகவும் தேர்வு செய்யப்படுகிறார். தமிழக மக்கள் மற்றும் நாகர்கோவில் ரசிகர்களால் எம்ஜிஆருக்கு 'இதய தெய்வம்' பட்டம் வழங்கப்பட்டது. 

சரித்திரம் தொடரும்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved