🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்.ஜி.ஆர்!- தொடர்-19

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்.ஜி.ஆர் (18-ஆம் வாரத் தொடர்ச்சி )

எம்ஜிஆரின் தத்துவம்,
"நாளை நமதே... இந்த நாளும் நமதே...
தாய் வழி வந்த, தங்கங்கள் எல்லாம்...
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே "

தமிழ்நாட்டின் முதலமைச்சர் இதய தெய்வம் எம்.ஜி.ஆர் அவர்களால் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எஸ்.டி.சோமசுந்தரம், மாநில மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு  எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்படுகிறார். ஆதலால் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறது. அதில் எம்.ஜி.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் சிங்காரவேலுவை ஆதரித்து வெற்றி பெறச் செய்கிறார். பின்னர் கர்நாடக மாநிலம் சிக்மகளூர் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வருகிறது. அதில் இந்திராகாந்தி போட்டியிடுகிறார்.  தமிழர்கள் நிறைந்த அந்த தொகுதியில் அதிமுக அவரை ஆதரிக்கிறது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனதாவை திமுக ஆதரித்தது. இறுதியில் எம்ஜிஆரின் ஆதரவைப் பெற்ற இந்திராகாந்தி அமோக வெற்றி பெறுகிறார். தேர்தலில் தனது வெற்றிக்காக அயராது உழைத்த அதிமுகவுக்கு இந்திராகாந்தி பாராட்டு தெரிவிக்கிறார்.

1978 ல் எம்ஜிஆர் அவர்கள் மதுரை பல்கலை கழகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரைச் சூட்டி பெருமை சேர்க்கிறார். இதே ஆண்டின் இறுதியில் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட இல்லத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தவர்களின் கூட்டத்தில் ஒரு பெண்மணி தயங்கியபடியே நிற்கிறார். அங்கு நின்றவர்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு கோட்டைக்குச் செல்வதற்கு தயாரான எம்ஜிஆரிடம், அந்த பெண்மணியின் விபரம் தெரிவிக்கப்படுகிறது. உடனே அந்த இடத்திற்குச் சென்ற எம்ஜிஆர், அப்பெண்ணிற்கு வணக்கம் தெரிவித்து விட்டு அவரது கணவரின் நலம் பற்றி விசாரிக்கிறார். பின்னர் உணவு சாப்பிடச் சொல்லி அவரின் குடும்ப நிலையையும் செவிமடுத்து அறிந்தவர், தனது ஓட்டுனரிடம்  அவரை வேறொரு காரில் வீட்டில் கொண்டு போய் விடச்சொல்கிறார். 

காமராஜர் ஆட்சியில் 10 ஆண்டுகள் அமைச்சராகப் பணியாற்றியவர் என்றாலும், பொது வாழ்வில் புடம் போட்டத் தங்கமாக வாழ்ந்தவர் கக்கன். தமிழக வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்த கக்கனுக்கு பல மாத வாடகை நிலுவையில் இருந்ததால் அதிகாரிகள் சீல் வைக்க வந்து விடுகிறார்கள் (மாத வாடகை 170 ரூபாய் செலுத்த முடியாத நிலை). அப்பொழுது அவர்களிடம் ஒருநாள் அவகாசம் கேட்டுவிட்டு நம்பிக்கையுடன் எம்.ஜி,ஆரிடம் மனு அளிக்கப் புறப்பட்ட, மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணி கக்கனின்  மனைவி ஆவார். வறுமையில் வாடும் யாவருக்கும் உதவும் எம்.ஜி.ஆர், கக்கன் குடும்பத்தின் மொத்த வாடகையையும் தன் சொந்த பணத்தில் கட்டி உதவுகிறார். அத்துடன் கக்கனுக்கு இலவசமாக வீடு வசதியும் செய்து தருகிறார். மேலும்  அவரின் குடும்பத்திற்கு அரசு சார்பில்  மாதம் 500 ரூபாய் உதவி தொகை வழங்க உத்தரவு போடுகிறார். இதற்கு எல்லா தரப்பினரும் எம்.ஜி.ஆரை பாராட்டினர். அந்த வரிசையில் கவியரசு கண்ணதாசன், கக்கனைப் போன்ற உண்மையான தியாகிகளுக்கு உதவிடும் எம்ஜிஆரை எந்தக் கட்சிக்காரனும் பாராட்டித்தான் ஆகவேண்டும் எனப் பாராட்டுகின்றார்.

1978-79 ல் தமிழகம் முழுவதும்  தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவை  அதிமுக அரசு எம்ஜிஆர் தலைமையில் கொண்டாடியது. அப்பொழுது மாவட்டம் தோறும் பெரியார் நினைவுத் தூண் எழுப்பப்பட்டது. அதேபோல் மாவட்ட தலைநகரங்களில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு ஒளி-ஒலி காட்சியாக காண்பிக்கப்பட்டது. பெரியாரின் பொன்மொழிகள் நூல் வடிவில் உருவாக்கப்பட்டது. 1979 ல் பெரியாரின் பிறந்தநாளில் ஈரோடை தலைநகரமாய் கொண்டு "பெரியார் மாவட்டம்" உருவாக்கியவர் எம்ஜிஆர்.

தேசிய அரசியலில் பிரதமர் மொரார்ஜிதேசாய்க்கும் துணைப்பிரதமர் சரண்சிங்கிக்கும் இடையில் மோதல்கள் உருவாகின. மொரார்ஜி பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார். காங்கிரஸ் ஆதரவுடன் சரண்சிங் பிரதமர் பொறுப்பு ஏற்கிறார். 1979 ஆகஸ்ட் 19-இல் சரண்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அதிமுகவின் சத்தியவாணிமுத்து, பாலாபழனூர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி பெற்றுத் தருகிறார் எம்ஜிஆர். இதன் மூலம் தமிழ் நாட்டின் மாநிலக் கட்சி சார்பில் மத்திய அமைச்சர் பொறுப்பு வகித்த முதல் கட்சி அதிமுக என்ற சிறப்பைப் பெற்றுக் கொடுக்கிறார் எம்ஜிஆர். பிறகு மத்திய அரசுக்கு கொடுத்த ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற்றதால் சரண்சிங் அரசு கவிழ்கிறது. தமிழக முதல்வர் எம்ஜிஆர் மக்கள் பணியில் தீவிரம் காட்டுகிறார்.

இந்திய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் பல மாற்றங்களை நோக்கிய அரசியல் நகர்வுகள் தொடங்கின. அக்டோபர்-01 அன்று நடந்த சென்னை கடற்கரைக் கூட்டத்தில் கருணாநிதியும், இந்திராகாந்தியும் ஒரே மேடையில் தோன்றி திமுக, காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்தனர். அதிமுக ஜனதா மற்றும் இடது சாரிகளுடன் கூட்டணிக்கு தயாரானது. 1980 ஜனவரி மாதம் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. தொகுதி உடன்படிக்கையும் நடந்தேறின. அதன்படி அதிமுக கூட்டணியில் அதிமுக 24, ஜனதா 10, இரு கம்யூனிஸ்ட்களும் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவாயின.

அதேபோல் திமுக கூட்டணியில் திமுக 16, காங்கிரஸ் 23 (புதுச்சேரி உட்பட ) முஸ்லீம் லீக் 1 என பகிர்ந்து கொண்டது. ஜனவரி 6 ல் வெளியான தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சிவகாசி, கோபிசெட்டிப்பாளையம் ஆகிய 2 இடங்களில் மட்டுமே வெற்றி என்ற அதிர்ச்சியைத் தந்தது. காங்கிரஸ் 21, திமுக 16 இடங்களில் வெற்றி பெற்றன. தேசிய அளவில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக  அரசு ஜனவரி 24 அன்று 31 விழுக்காடு இருந்த பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை 50 விழுக்காடு உயர்த்தி உத்தரவிட்டது. எம்ஜிஆரின் இந்த ஆணைக்கு திராவிடர் கழகம் பாராட்டுத் தெரிவித்தது.

ஆட்சிப் பொறுப்பேற்ற இந்திராகாந்தி பிப்ரவரி 17 ல் உத்திரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ஒரிசா, குஜராத், மத்தியப்பிரதேசம் ஆகிய 8 மாநில ஆட்சியைக் கலைக்க முடிவு எடுக்கிறார். அத்துடன் தமிழக அரசையும் கலைக்க திமுகவும், காங்கிரசும் வலியுறித்தியதன் பேரில் தமிழக அரசும் கலைக்கப்படுகிற து. எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு கலைக்கப்பட்ட தகவல் வெளியானதும் மீண்டும் தமிழகம் போராட்டக் களமானது. இந்நிலை மாறுவதற்குள் மே மாதம் சட்டமன்றப் பொதுத்தேர்தல்  அறிவிப்பு வெளியாகிறது. தமிழகத் தேர்தல் களம் மீண்டும் சுறுசுறுப்பாயின. தேர்தல் பணியில் அதிமுக தீவிரம் காட்டத்தொடங்கியது. அதற்காக அதிமுகவில் உயர்மட்டக்குழு உருவாக்கப்பட்டது.

திமுகவும், காங்கிரசும் தலா 109 தொகுதிகளிலும், மீதமுள்ள 16 தொகுதிகளில் முஸ்லீம் லீக், பசும்பொன் தேவர் கட்சி, உழைப்பாளர் கட்சி, தேசிய பார்வார்டு பிளாக் போன்ற சிறிய கட்சிகளும் போட்டியில் இறங்கியது. அதிமுக தலைமையில் உருவான கூட்டணியில் அதிமுக 168, இரு கம்யூனிஸ்ட்க்கும் தலா 16, குமரி அனந்தன் தலைமையிலான காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் 12, பழநெடுமாறன் தலைமையிலான தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் 7 மேலும் சில தொகுதிகளில் சிறிய கட்சிகளும் களம் கண்டது.

நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்கள் ஆட்சி ஏன் கலைக்கப்பட்டது? போன்ற வினாக்கள் எழுப்பிய எம்ஜிஆர், நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் அளித்த தீர்ப்பு தவறு என்றால், அதை இப்பொழுது திருத்தி எழுதுங்கள் என தமிழகம் முழுவதும் பரப்புரை செய்தார். எம்ஜிஆர் எழுப்பிய முழக்கம் மக்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்று சொல்லும் அளவுக்கு கரை கண்ட வெள்ளமாய் மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. திமுகவும் தாலிக்குத் தங்கம் போன்ற அறிவிப்பு மூலம் பிரச்சாரம் செய்தது. ஆனாலும் இங்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள்  சம அளவில் போட்டியிட்டதால், தேர்தலுக்குப் பிறகு யார் முதல்வர் என்ற குழப்பம் நிலவியது. மே 28 முதல் 31 வரை  நடந்த தேர்தல்களின் முடிவுகள் வெளிவரத் தொடங்கியதில் இருந்தே அதிமுக முன்னிலை பெறத் தொடங்கியது. இறுதியில் அதிமுக 128, மா. கம்யூனிஸ்ட் 11, இ.கம்யூனிஸ்ட் 10, கா.கா.தே.கா-6, இடங்களில் வெற்றி பெற்றது. திமுக 38, காங்கிரஸ் 30 என்ற வரிசையில் வெற்றியைப் பெற்றது. அண்ணாநகர் தொகுதியில் கருணாநிதிக்கும் அதிமுக சார்பில் களம் கண்ட எச்.வி.ஹண்டே வுக்கும் இடையில் நீண்ட இழுபறி ஏற்பட்டு இறுதியில் 699 வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி வென்றதாக அறிவிப்பு வெளியானது.

1977 ல் அருப்புக்கோட்டையில் வென்ற எம்ஜிஆர் இந்த முறை மதுரையின் மேற்கு தொகுதியில் களம் கண்டு 57019 வாக்குகள் பெற்று வெற்றி பெறுகிறார். மதுரை எப்போதும் எம்ஜிஆரின் ரசிகர்கள் நிறைந்த கோட்டை ஆகும். எம்ஜிஆருக்கு முதல் முதலில் ரசிகர் மன்றம் தொடங்கிய இடமும் மதுரை தான் என்பதை முந்தைய பதிவுகளில் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். வெற்றி மகிழ்ச்சியில் எம்ஜிஆர்....

  சரித்திரம் தொடரும்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved