🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்!- தொடர்-20

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் (19 ஆம் வாரத் தொடர்ச்சி)

எம்ஜிஆரின் தத்துவம்: "நன்மை செய்வதே என் கடமை ஆகும், நன்றி சொல்வதே என் கண்ணியம் ஆகும், நட்பை வளர்ப்பதே என் லட்சியம் ஆகும்."

என் உயிரின் உயிரான உறவுகளே, நண்பர்களே வணக்கம். தொடரும் இருபதாம் வாரத்தில்   உங்களைச் சந்திப்பதில் உள்ளபடியே மட்டற்ற மகிழ்ச்சிப் பெருக்கோடு இந்த சரித்திரத்தைத் தொடங்குகிறேன்.

1980 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தொடர்ந்து இரண்டாம் முறையாக ஜூன்  9 ல் முதலமைச்சர் அரியணையை அலங்கரிக்கத் தொடங்குகிறார். முதலமைச்சர் எம்ஜிஆர் தலைமையிலான புதிய அமைச்சரவையில் 1.நெடுஞ்செழியன்-நிதித்துறை 2.பண்ருட்டி இராமச்சந்திரன்-மின்சாரத்துறை 3.கே.ஏ.கிருஷ்ணசாமி-கிராமத்தொழில்துறை 4.எஸ்.டி.சோமசுந்தரம்-வருவாய்த்துறை 5.ஆர்.எம். வீரப்பன்-செய்தி,அறநிலையத்துறை 6.அரங்கநாயகம்-கல்வித்துறை 7.காளிமுத்து-விவசாயத்துறை 8.பொன்னையன்-சட்டத்துறை 9.குழந்தைவேலு-உள்ளாட்சித்துறை 10.ராகவானந்தம்-தொழிலாளர் நலத்துறை 11.ஹெச்.வி.ஹண்டே-சுகாதாரத்துறை 12.ராஜாமுகமது-கூட்டுறவுத்துறை 13.எஸ்.முத்துச்சாமி-போக்குவரத்துத்துறை 14. திருநாவுக்கரசு -பெருந்தொழில்கள் 15.எஸ்.என். இராஜேந்திரன்-கைத்தறித்துறை 16.விஜயசாரதி-அரிஜன நலத்துறை 17.கோமதி சீனிவாசன்-சமூக நலத்துறை போன்றோர் அங்கம் வகித்து பணியாற்றினர்.

 மக்கள் திலகம் எம்ஜிஆரின் வெற்றி குறித்து ஆனந்த விகடன் எழுதிய தலையங்கத்தைக் காண்போம்: அதிமுகவுக்கு கிடைத்திருக்கும் இந்த மகத்தான வெற்றி எம்ஜிஆரின் மீது மக்கள் கொண்டுள்ள அன்புக்கும், மதிப்புக்குமான அடையாளமாகும். அவரது நாணயமான, நேர்மையான, லஞ்ச ஊழலற்ற ஆட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்றிதலும் ஆகும். எதிர்க்கட்சிகள் எம்ஜிஆர் ஆட்சியின் மீது அபாண்டமான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கியதைக் கேட்டு,நாங்கள் அதையெல்லாம்  நம்பத் தயாரில்லை. அவரைப் பற்றி எங்களுக்குத் தெரியும் என்று தமிழ் மக்கள் கூறுவது போல் அமைந்திருக்கிறது தேர்தல் முடிவு என்று  தலையங்கம் தீட்டியது. தொடர் தோல்விகளைக் கண்ட கருணாநிதி, தமிழர்களே!தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கி வீசினாலும்  கட்டுமரமாகத் தான் மிதப்பேன், அதில் ஏறி நீங்கள் சவாரி செய்யலாம். தமிழர்களே!தமிழர்களே! நீங்கள் என்னை நெருப்பில் தூக்கிப் போட்டாலும் விறகாகத் தான் விழுவேன்,அதில் நீங்கள் சமைத்துச் சாப்பிடலாம். தமிழர்களே!தமிழர்களே! நீங்கள் என்னைப் பாறையில் மோதினாலும் வெறும் கல்லைப் போல் பொடிப் பொடியாகிவிடமாட்டேன், தேங்காய் சிதறுவதைப் போல சிதறி தின்பண்டாமாக மாறுவேன், நீங்கள் அதை எடுத்து தின்று மகிழலாம் என விரக்தியில் பேசினார்.

எம்ஜிஆரின் தலைமையில் இரண்டாம் முறையாக பதவியேற்ற அமைச்சர்களின் முதல் அமைச்சரவைக் கூட்டம் ஜூன் 12 ல் கூடி சில முக்கிய முடிவுகளை எடுக்கிறது. அதைத்தொடர்ந்து முதலமைச்சர் எம்ஜிஆர் ஜுலை 29 அன்று சட்டமன்றத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறார். அது என்னவெனில் தமிழ்நாட்டில் உள்ள 48000 காவலர்களுக்கும் 1 கிலோ அரிசி 50 பைசா,300 கிராம் சர்க்கரை 70 பைசா,250 கிராம் சமையல் எண்ணெய் 2 ரூபாய் என்ற மலிவு விலையில் அக்டோபர் 2 முதல் நடைமுறைப் படுத்தப்படும் என்பதே. இதனிடையே ஜுலை 20 அன்று  மதுரை மாவட்டம் மூதூர் என்ற ஊரில் திமுகவின் இளைஞர் அணி உருவாக்கப்படுகிறது.

எம்ஜிஆர் ஆட்சி பொறுப்பேற்றதும் நடத்த விரும்பிய உலகத் தமிழ் மாநாட்டை 1981 ஜனவரி 4 முதல் 10 வரை மதுரையில் நடத்துவதென முடிவு செய்து அறிவிப்பு வெளியானது. அதற்கான பொறுப்பு ஆர்.எம்.வீரப்பனிடம் அளிக்கப்படுகிறது. அவருக்கு உதவிகரமாக ஒளவை நடராஜன், சிலம்பொலி செல்லப்பன் ஆகியோர் செயல்பட்டனர். திமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டும், திமுக கலந்து கொள்ளாது என கருணாநிதி எதிர்வினை ஆற்றினார். டில்லி சென்ற எம்ஜிஆர் இந்தியப் பிரதமர் இந்திராகாந்திக்கு நேரடி அழைப்பு விடுக்கிறார். பிரதமர் இந்திராவும் விழாவில் கலந்து கொள்ள முதல்வர் எம்ஜிஆரிடம் சம்மதம் தெரிவிக்கிறார். மதுரையில் நடைபெற்ற இந்த 5 ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் கலை நிகழ்ச்சி, நாட்டியம்,பாடல், பட்டிமன்றம் என அரங்கேற இருந்தன.மக்கள் கூட்டம் அமர்க்களம் செய்தது. மாநாடோ மிகப் பிரமாண்டமாக காட்சி அளித்தது.அதில் குறிப்பாக கலைச்செல்வி ஜெயலலிதாவின் "காவிரி தந்த கலைச்செல்வி" என்ற நாட்டிய நாடகம் வெகுச் சிறப்பாக நடந்தேறியது. இந்திராகாந்தியும் கலந்து கொண்டு சிறப்பான உரை நிகழ்த்தினார். மாநாடும் ஏராளமான கலைநிகழ்ச்சிகளுடன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.எப்பொழுதும் தங்கமாக ஜொலிக்கும் எம்ஜிஆரின் முகமோ இதைக்கண்டு மிகவும் பிரகாசமாக ஜொலிக்கிறது. 

தமிழுக்குத் தொண்டாற்றி "முத்தமிழ் காவலர்" என்று போற்றப்பட்டவர் கி.ஆ.பெ.விசுவநாதம். இவர் நீதிக்கட்சியிலும் பணியாற்றி உள்ளார். அப்பொழுது சமஸ்கிருதம் படித்திருக்கும்  மாணவர்கள் மட்டுமே மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியும் எனச் சட்டம் இருந்தது. நீதிக்கட்சியின் சார்பில் 1921 முதல் 1926 வரை பனகல் அரசர் சர்.ராமராய நிங்கார் சென்னை ராஜதானியின் முதல்வராக இருந்தார். எனவே பனகல் அரசரை சந்தித்த விசுவநாதம் தமிழும், ஆங்கிலமும் படித்த மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரிகளில் இடம் வேண்டும் என வலியுறுத்தி அதில் வெற்றியும் பெறுகிறார். அதன் பின்னரே பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் மருத்துவக்கல்லூரி வாயிலில் நுழைய முடிகிறது. (பனகல் அரசர் நினைவாக சென்னை சைதாப்பேட்டையில் 'பனகல் மாளிகை'மற்றும் தியாகராயநகரில் 'பனகல் பூங்காவும்'அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.)  இதுமாதிரி சிறப்புப் பெற்ற  தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் போன்றோர் விடுத்த 'தமிழ் பல்கலைக் கழகம்' கோரிக்கையை மகிழ்ச்சியுடன் ஏற்ற எம்ஜிஆர், அதற்கானத் திட்டங்களை தயாரிக்கும் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்ததுடன், அவருடைய தலைமையில் ஒரு குழுவும் அமைக்கிறார். 

பின்னர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று எம்ஜிஆர் தஞ்சாவூரில் தமிழுக்கு என்றே சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழ் பல்கலைக் கழகத்தை  நிறுவுகிறார். அதேபோல் தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வது எம்ஜிஆரின் தனிச் சிறப்பு. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில் தன்மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம்போல, தன்னைக் கடுமையாக விமர்சனம் செய்வோரையும் வெறுப்புக் காட்டாமல் அரவணைக்கும் பண்பு எம்ஜிஆரிடம் நிறையவே இருந்தது. அதில் ஒரு சம்பவம், கவியரசர் கண்ணதாசன் அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக எம்ஜிஆரை மேடைகளில் கடுமையாக விமர்சனம் செய்து வந்தபோதும், திடீரென ஒருநாளில்  கண்ணதாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் எம்ஜிஆர் தன்னைச் சந்திக்க அழைப்பு விடுக்கிறார். எதற்காக எம்ஜிஆர் அழைக்கிறார் என்று புரியாமல் சென்ற கண்ணதாசனிடம், தங்களை தமிழக அரசின் 'அரசவைக் கவிஞராக' நியமனம் செய்கிறேன். உங்களிடம் சம்மதம் என்ற ஒரு வார்த்தையை மட்டுமே  எதிர்பார்க்கிறேன் எனக் கூறி இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். எம்ஜிஆரின் அன்பிலும், மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போகிறார் கண்ணதாசன். "அரசவைக் கவிஞர்" பட்டம் அளிப்பு விழாவில் உணர்ச்சி வசப்பட்ட கண்ணதாசன், நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்தச் சிறப்பை எனக்கு வழங்கிய எம்ஜிஆருக்கு முன்கூட்டியே நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அவர் பேசியது போலவே சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற கண்ணதாசன் சடலமாகவே வந்து சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

   சரித்திரம் தொடரும்....

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved