🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! - தொடர்-21

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்(20-ஆம் வாரத் தொடர்ச்சி)

எம்ஜிஆரின் தத்துவம், "நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை, நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை ".

என் உயிரின் உயிரான உறவுகளே, நண்பர்களே வணக்கம்.வரும் பிப்ரவரி 19 ல் நடைபெற இருக்கும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சி காண, நல்ல சேவை மனப்பான்மை உள்ள வேட்பாளர்களுக்கு  விலை மதிப்பு இல்லாத தங்களின் வாக்கை அளித்து ஜனநாயகக் கடமையை ஆற்றும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

தமிழக முதல்வர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மக்கள் நலத்திட்டங்களைத் தீட்டி சிறப்புடன் ஆட்சி செய்கிறார். கலைத்துறையில் பணியாற்றி உச்ச நட்சத்திரமாக மின்னிய 'கலைச்செல்வி ஜெயலலிதா'  1982 ஜூன்'4 அன்று எம்ஜிஆரின் தலைமையிலான அதிமுகவில் இணைந்து அரசியல் தடம் பதிக்கத் தொடங்குகிறார். முதலமைச்சர்  எம்ஜிஆர் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் பசியைப் போக்கும் சத்துணவுத் திட்டம் கொண்டு வர முடிவு செய்கிறார். ஆனால் அதிகாரிகளோ நிதிநிலையைக் காரணம் காட்டி சிரமம் என்கின்றனர். ஆனாலும் பச்சிளம் பாலகனாக இருந்தபோதே பசியின் கொடுமையை உணர்ந்தவர் என்பதால், எம்ஜிஆர் சிந்தையில் துளிர்ந்த இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் மிகவும் உறுதியாக இருக்கிறார். 

அதுபோலவே  ஜுலை'1 அன்று சத்துணவு திட்டத்தை நடைமுறைப்படுத்தியும் சாதனை படைக்கிறார். முதன் முதலில் திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சி என்ற கிராமத்தில்   குழந்தைகளுடன் அமர்ந்து தானும் சாப்பிட்டு மகிழ்ந்து, இந்த மகத்தான திட்டத்தை சுமார் ரூ 100 கோடி மதிப்பீட்டில் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தை நிர்வகிக்க முதல்வர் எம்ஜிஆர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் அப்போதைய நிதியமைச்சர் நெடுஞ்செழியன், கல்வி அமைச்சர் அரங்கநாயகம், சமூக நலத்துறை அமைச்சர் கோமதி சீனிவாசன் உள்ளிட்டவர்களும்   மற்றும் சிலரும் இடம் பெற்றனர். இந்த திட்டத்தினால்  17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் மூலம் சுமார் 70 லட்சம் பள்ளிக்குழந்தைகள் பசியாறிப் பயன் அடைந்தனர்.

அது மாத்திரமல்ல குழந்தைகளின் வயதுக்கேற்ப சத்துணவு வழங்கப்பட்டது. இரண்டு வயது முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 80 கிராம் அரிசி,10 கிராம் பருப்பு,7 கிராம் எண்ணெய் மற்றும் காய்கறிகள் எனவும், ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் 100 கிராம் அரிசி, அதற்கேற்ப பருப்பு, எண்ணெய், காய்கறிகள் என்ற அளவில் பரிமாறப்பட்டது. 

இது மட்டுமல்ல, இத்திட்டத்தின் மூலம் சத்துணவு சமைப்பதற்கு பணியாளர்கள்,பொறுப்பாளர்கள் என பலருக்கும் வேலை கிடைத்துப் பலன் பெற்றனர். இத்திட்டதை விரிவுபடுத்துவதற்காக வானொலியிலும், தொலைக்காட்சியிலும் கூடுதல் நிதி கோரப்பட்டு, பலரிடமும் நன்கொடை பெறப்பட்டது. இத்திட்டம் பற்றி மேடை தோறும் எம்ஜிஆரும் முழங்கினார். பின்னர் தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் புரட்சி தலைவி ஜெயலலிதாவை உயர்மட்டக் குழு உறுப்பினராக நியமனம் செய்கிறார். இதன் பின்பு கலை உலகில் இருந்த எனக்கு அரசியலில் ஆர்வம் வருவதற்கு காரணமே எம்ஜிஆர் கொண்டு வந்த "சத்துணவு திட்டம்" தான் என மேடைக்கு மேடை ஜெயலலிதா உரையாற்றத் தொடங்கினார். இது காலப்போக்கில் கிராமப்புறங்களில் வாழும் ஆதரவற்ற ஏழை எளிய முதியோர்களுக்கும் பசியைப் போக்கி உதவி புரிந்தது. இந்த சத்துணவு திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. நேற்று வரை தெய்வப் பிறவியாகக் கண்ட  தமிழக மக்கள் தற்போது எம்ஜிஆரை தெய்வமாகவே பூஜிக்கத் தொடங்கினர். அத்துடன் உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம் யுனெஸ்கோ உள்பட பல்வேறு சர்வதேச, சமூக நிறுவனங்களும் பாராட்டு தெரிவித்தன.

  அதேபோல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்ட அன்னை தெரசா  எம்ஜிஆரைப் பாராட்டி மகிழ்ந்தார். இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியும் சென்னை வருகை புரிந்தபொழுது, ஏழைக் குழந்தைகளின் பசிபோக்கும் இத்திட்டம் அவசியமான மிகச் சிறந்த திட்டம் என்று பாராட்டிச் சென்றார். பல்வேறு சிறப்பு பெற்ற இத்திட்டம் இன்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் என்ற பெயரில் முட்டை, கலவை சாதம், பயறு வகைகள் என பரிணாம வளர்ச்சியுடன் சீரும் சிறப்புமாக செயல்பட்டு வருவதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இவ்வாறு பல பாராட்டுகளைப் பெற்ற இத்திட்டத்தின் மூலம் எம்ஜிஆர் சத்துணவு தந்த சரித்திர நாயகன் என அனைவராலும் பாராட்டுப் பெற்றார். 

இந்தியக் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவி ரெட்டியின் பதவிக் காலம் நிறைவடைய இருந்ததால் பிரதமர் இந்திராகாந்தி, முதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர். வெங்கட்ராமன் அல்லது ஆந்திராவைச் சேர்ந்த பி.வி. நரசிம்மராவ் ஆகிய இருவரில் ஒருவரை வேட்பாளராக்க விரும்பியதாகச் சொல்கின்றனர். ஆனால் இறுதியில் பொற்கொல்லர் வகுப்பைச் சேர்ந்த கியானி ஜெயில்சிங்கை வேட்பாளராக நிறுத்தினார் இந்திரா. எதிர்க்கட்சிகள் ஹச்.ஆர்.கன்னாவை வேட்பாளராக நிறுத்தியது. தமிழ் நாட்டில் அதிமுகவும், திமுகவும் ஜெயில்சிங்கை ஆதரித்தன. ஜுலை 12 ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 7 வது குடியரசுத் தலைவரானார் கியானி ஜெயில்சிங்.

கிட்டத்தட்ட இந்த சமயத்தில் திமுக இளைஞரணியை வழுப்படுத்தும் நோக்கில் மு.க. ஸ்டாலின், திருச்சி சிவா, பரிதி இளம்வழுதி, வாலாஜா அசேன், தாரை மணியன் ஆகியோர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது.  கொல்கத்தா நகரில் (மும்பையில் 'மாதுங்கா' டில்லியில் 'கரோல்பாக்' போல்) தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான 'லேக் ஏரியா'வில் கட்டப்பட்ட தமிழ்ச் சங்கக் கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக அதன் நிர்வாகிகள் அழைத்ததன் பேரில்  எம்ஜிஆர் அங்கு செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கொல்கத்தா சென்ற  எம்ஜிஆருக்கு தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் விமான நிலையம் முதல் ஆளுநர் மாளிகை வரையில் மேற்குவங்க அரசின் விருந்தினராக  வரவேற்பு அளிக்கப்படுகிறது. எம்ஜிஆர் தங்குவதற்கு "ராஜ் பவனில்"ஏற்பாடு செய்திருந்தனர். தான் தங்கும் இடத்தை சுற்றிப்பார்த்தவர் திடீரென ஹோட்டலில் தங்க முடிவு செய்து ஆளுநர் மாளிகை உள்ள 'டல்ஹவுசி சதுக்கம்' பகுதியிலேயே ஒரு ஹோட்டலில் தங்குகிறார். அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் தாங்கள் இங்கேயே தங்கலாமே எனக் கேட்கின்றனர். அதற்கு உங்களின் அன்புக்கு நன்றி, இங்கு எல்லா வசதிகளும் உள்ளது. ஆனால் என்னைப் பார்க்க தமிழர்கள் அதிகமானோர் வருவார்கள். கட்டுப்பாடுகள் நிறைந்த ஆளுநர் மாளிகைக்குள் அவர்கள் நுழைவது கடினம் என்பதால், அவர்களின் வசதிக்காகவே இந்த முடிவு என எம்ஜிஆர் பதிலளிக்கிறார். திரளாக வந்த தமிழர்களும் வரவேற்புக் கொடுக்கின்றனர். எம்ஜிஆர் கணித்தபடியே அவரைச் சந்திக்க கூட்டம் கூடுகிறது. கூடிய கூட்டத்தில் இருந்த ஏழை எளிய சாதாரண மக்களின் கைகளில் எம்ஜிஆர் உதவியாளர் மாணிக்கம் மூலம் பணம் கொடுத்து உதவுகிறார். வந்த கூட்டமும் எம்ஜிஆரை வாழ்த்திச் செல்கிறது.  அன்று மாலை நடந்த விழாவில் எம்ஜிஆர் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இந்த கட்டிடம் எழும்ப ரூபாய் 5 லட்சம் நன்கொடை வழங்கி மூலகாரணமாக இருந்தவரே எம்ஜிஆர் தான். 

பின்னர் மறுநாள் காலை நேரத்தில் எம்ஜிஆர் தமிழ்ச் சங்க நிர்வாகிகளுடன் சாலையில் நடந்து செல்கிறார். அப்பொழுது சாலையில் கொய்யாப் பழம் விற்றுக்கொண்டிருந்த வயதான தமிழ்ப் பெண்ணிடம் பழம் என்ன விலை? என ஜாலியாகக் கேட்கிறார். அந்த மூதாட்டியோ எம்ஜிஆரை கண்ட மகிழ்ச்சியில் உனக்குப் போய் விலை சொல்ல முடியுமாய்யா? எல்லாமே உனக்குதான்யா எடுத்துக்கோ எனக் கூறுகிறார். உடனே எம்ஜிஆர் அந்த மூதாட்டி நினைத்தும் பார்க்க முடியாத தொகையை அவரின் கைகளில் திணிக்கிறார். கூடையில் இருந்த பழங்களை எடுத்து அருகில் இருந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு, இந்தா நீயும் சாப்பிடு என்று அந்த மூதாட்டிக்கும் கொடுக்கிறார். மகிழ்ச்சி பொங்க "நீ நல்லா இருக்கணும் ராசா" என கூறிக்கொண்டே காலில் விழ முயன்றவரை தடுத்து அணைத்து ஆறுதல் கூறியபடியே, அங்கிருந்து விடை பெறுகிறார் எம்ஜிஆர்.

தமிழகம் தாண்டியும் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் எம்ஜிஆரின் புகழ் ஓங்கி ஒலித்தது.அப்போதைய மேற்குவங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவை சந்தித்துப் பேசிவிட்டு தமிழகம் திரும்புகிறார்.வாலிப கவிஞர் வாலியை இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமனம் செய்கிறார் எம்ஜிஆர். அதற்கு முன் கெளரவப் பதவியாக இருந்த அதன் பதவிக் காலத்தை மூன்று ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளாக நீட்டித்து மாத ஊதியமாக ரூபாய் 3000 வழங்கி ஆணையிடுகிறார். இவ்வாறு மக்கள் பாராட்டும் நல்லாட்சியைத் தொடர்கிறார் முதல்வர் எம்ஜிஆர்.

      சரித்திரம் தொடரும்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved