🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! - தொடர்-22

எம்ஜிஆரின் தத்துவம்: "பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு, நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு"

தமிழக மக்கள் விரும்பிய சிறப்பான மக்கள் ஆட்சியை  ஏற்படுத்திய முதலமைச்சர் எம்ஜிஆர், மாநிலத்தில் உள்ள மாவட்ட நூலகங்களுக்கு "தேவநேயப் பாவாணர்" பெயர் சூட்டி அரசாணை வெளியிடுகிறார். மாயவரம் என்பதை மயிலாடுதுறை எனப் பெயர் மாற்றம் செய்து உத்தரவிடுகிறார். அதே நேரத்தில் அதிரடி நடவடிக்கை எடுப்பதிலும் எம்ஜிஆர் ஒருபோதும் தயங்கியது இல்லை என்பதற்கு ஒரு உதாரணம், தமிழகத்தின் வடஆற்காடு மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஒரு சிலர் குழுவாக இணைந்து சட்டத்திற்குப் புறம்பான சில செயல்களில் நக்சலைட்டுக்கள் போல் ஈடுபடுகின்றனர். அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய நினைத்த எம்ஜிஆருக்கு திருப்பத்தூரில் நடந்த மேலும் ஒரு சம்பவம்  தீவிரப்படுத்தியது. அது என்னவெனில் விசாரணைக்காக  திருப்பத்தூர் காவலர்கள் ஒருவரை ஜீப்பில் அழைத்துச் சென்றபொழுது,அந்த நபர் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை திடீரென வெடிக்கச் செய்ததில், பயணம் செய்த அனைவரும் செத்து மடிகின்றனர். உடனடியாக ஆலோசனையில் இறங்கிய எம்ஜிஆர் சம்பந்தபட்ட அத்தனை பேரையும் ஒடுக்க உடனே உத்தரவு பிறப்பிக்கிறார். அந்த நடவடிக்கைக்கு 'ஆபரேசன் நக்சலைட்' எனப் பெயர் சூட்டப்பட்டது.

அதற்கான பொறுப்பை எஸ். மோகன்தாஸ் மற்றும் தேவாரம் ஆகிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கிறார். எம்ஜிஆரின் இந்த நடவடிக்கையால் சுமார் இருபது நாட்களில் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. விமர்சனங்களுக்கு பதிலளித்த எம்ஜிஆர், காவல் துறையினரை சுடுவதையும் வெளிநாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியுமா? எனக்கு சட்டம் ஒழுங்கு தான் முக்கியம் என்கிறார். இன்று நம் தமிழகத்தில் நக்சலைட்டுக்கள் வேரூன்ற முடியாமல் போனதற்கு  எம்ஜிஆர் தான் காரணம் என்கிறார்கள். இதுபோன்ற  மக்கள் விரோத, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் எம்ஜிஆர்,  ஒருபோதும்  சமரசம் செய்து கொண்டதில்லை என்பதையே இது நமக்கு உணர்த்துகிறது.

எம்ஜிஆருக்கு பல தரப்பிலும் ரசிகர்கள் இருந்தனர். அன்றாட கூலித் தொழிலாளி முதல் உயர் அதிகாரிகள் வரை ரசிகர்களாக இருந்தனர். அதில் முக்கியமானவர் கர்நாடக முதலமைச்சராக இருந்த குண்டுராவ்.  இவர் தன்னை எம்ஜிஆர் ரசிகர் என்று பகிரங்கமாகவே அறிவித்துக் கொண்டவராவார். அப்படிப்பட்ட குண்டுராவ் கர்நாடக முதல்வராக இருந்தபொழுது, தன் பெங்களூரு இல்லத்திற்கு வரும்படி தமிழக முதல்வர் எம்ஜிஆரை அழைத்துக்கொண்டே இருந்தார். அப்பொழுது ஒருமுறை குண்டுராவின் பிறந்தநாளில் நேரடியாக வாழ்த்துச் சொல்ல முடிவு செய்த எம்ஜிஆர், தனது TMX 4777 என்ற எண் கொண்ட அம்பாசிடர் காரில் மனைவி ஜானகி அம்மையார் மற்றும் ஜானகி அம்மையாரின் சகோதரர் மகள் லதா ஆகியோரையும் அழைத்துக்கொண்டு புறப்படுகிறார். பெங்களூரு சென்ற எம்ஜிஆர் "வெஸ்ட் எண்ட் "என்ற ஹோட்டலில் தங்கிவிட்டு, மறுநாள் காலை 9 மணியளவில்  தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள், கர்நாடக முதல்வர் குண்டுராவின் இல்லத்திற்குச் சென்று,  பரிசளித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார். ஆசிபெற்ற குண்டுராவ் எம்ஜிஆருக்கு விருந்தோம்பல் செய்கிறார். (இதுமாதிரியான நட்பின் அடிப்படையில்  விளம்பரமே இல்லாமல் ஒருமுறை காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுக் கொடுத்திருக்கிறார் எம்ஜிஆர்) இந்த நிகழ்ச்சி முடித்து

சென்னை திரும்பும்பொழுது ஓசூர் அருகே சுட்டெரிக்கும் உச்சி வெயிலில், ஒரு மூதாட்டியும், சுமார் பத்து வயது சிறுமியும் தலையில் பெரிய புல்கட்டைச் சுமந்தவாறு காலில் செருப்பு கூட இல்லாமல் நடந்து சென்று கொண்டிருந்தனர். இதைக் கவனித்த எம்ஜிஆர்,ஓட்டுனரிடம்  அவர்கள் அருகில் காரை நிறுத்தச் சொல்கிறார். ஒரு புல்கட்டு விற்றால் ஒரு ரூபாய் கிடைக்கும் என்பதை உதவியாளர் மூலம் அறிந்த எம்ஜிஆர், தன் மனைவி மற்றும் லதா ஆகியோரின் செருப்புகளை கொடுத்ததுடன், ஒரு கணிசமான பணத்தையும் உதவியாளர் மூலம் அவர்களுக்கு கொடுத்து உதவுகிறார். அதைப் பெற்றுக்கொண்ட மூதாட்டிக்கோ ஒன்றும் புரியவில்லை. அப்போது காரின் கண்ணாடியை இறக்கிய எம்ஜிஆர் மூதாட்டியையும், சிறுமியையும் பார்த்து வணங்கியபடியே புன்முறுவலுடன்  விடைபெறுகிறார்.  அதன்பிறகே தங்கள் இருவருக்கும் உதவி புரிந்தது எம்ஜிஆர் தான் என்பதை அறிந்து  மகிழ்ச்சி வெள்ளத்தில் திகைத்து நிற்கின்றனர். இது போன்ற வேகாத வெயிலிலும் காலில் செருப்பு இல்லாது கல்லிலும், முள்ளிலும்  வெறும் காலுடன் நடந்து தவிக்கும் ஏழை மக்களுக்காகவே, எம்ஜிஆர் இலவச காலணி வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்து அவர்களின் துயரத்தைப் போக்கினார் என்றால் அது மிகையல்ல. இதேபோல் பள்ளி குழந்தைகளுக்கும் காலணியுடன், சீருடைத் திட்டமும் அறிமுகம் செய்து மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றவர். சிறுவயதில் ஒரு பிடி சோற்றுக்கும், ஒரு ஜோடி துணிக்கும் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்குத்  தெரியும். அதனால் தான் இந்த திட்டத்தைக் கொண்டுவர முயன்றேன் என்கிறார் எம்ஜிஆர். தேர்தல் அறிக்கையில் இல்லாத  மக்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய இதுபோன்ற நல்லத் திட்டங்களைக் கொண்டு வருவதில்  எம்ஜிஆர் மிகச் சிறந்த வல்லவர், அதுபோல்   வேறுபாடு இல்லாமல் அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிடும் வகையில் தமிழக திருக்கோவில்களில் "சமபந்தி போஜனம்" திட்டத்தை அறிவித்து, அதை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ல் செயல்படுத்தியவர் எம்ஜிஆர்.

பாட்டாளி ஏழைகளின் நலன் காப்பதில் மற்ற அரசியல் தலைவர்களைக் காட்டிலும் முன்னுரிமை கொடுப்பவர் என்பதையே இந்த நிகழ்வு  நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இதையே முன்பொருமுறை  கவிஞர் வாலி, எம்ஜிஆரை இப்படி வாழ்த்தினார். "மனிதர்களில் எத்தனையோ நடிகர்கள் உண்டு, நடிகர்களில் நான் கண்ட முதல் மனிதன் நீதான்" எனப் பாராட்டினார் நடிகரும் துக்ளக் பத்திரிக்கை ஆசிரியருமான 'சோ 'அவர்கள், "எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள், ஆனால் எம்ஜிஆருக்கு மட்டுமே பக்தர்கள் இருக்கிறார்கள்" என்று பேசியுள்ளார்.

1982 ல் எம்ஜிஆரின் தலைமையிலான அதிமுகவில் இணைந்த ஜெயலலிதா,கடலூரில் உள்ள மஞ்சக்குப்பம் மைதானத்தில் தனது கன்னிப் பேச்சை பேசத் தொடங்குகிறார்.ஜெயலலிதாவின் சீரிய செயல்பாடுகளால், எம்ஜிஆர் அவரை கழகத்தின் கொள்கைபரப்புச் செயலாளராக 1983 ஜனவரி 28 ல் நியமனம் செய்கிறார். பொறுப்பை ஏற்ற ஜெயலலிதா, தமிழகம் முழுவதும் கழக மேடைகளில் உரையாற்றத் தொடங்குகிறார். செல்லும் இடமெல்லாம் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. அவரின் புள்ளிவிபரப் பேச்சுக்கள் தொண்டர்களின் ஆரவாரத்தைப் பெறுகிறது. முன்பு ஆந்திரவில் முன்னணி நடிகராக இருந்த என்.டி. ராமாராவ் தனிக்கட்சி தொடங்கும் நோக்கில் எம்ஜிஆரிடம் ஆலோசனை பெறுவதற்காக சென்னை வருகிறார். அப்பொழுது புதிய கட்சிக்கு 'தெலுங்கு ராஜ்ஜியம்' என்ற பெயர் சூட்ட எண்ணிய ராமாராவிடம், எம்ஜிஆர் "தெலுங்கு தேசம்" எனப் பெயர் சூட்டுங்கள் பொருத்தமாக இருக்கும் என ஆலோசனை கூறுகிறார். அதை அப்படியே ஏற்ற ராமாராவ், எம்ஜிஆர் எனக்கு  வழிகாட்டி, அண்ணனைப் போன்றவர், அவரைப் பின்பற்றியே அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவிக்கிறார். பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று இதே ஆண்டு ஜனவரியில் முதல்வராகப் பதவியேற்ற என். டி. ராமாராவ், எம்ஜிஆரிடம் ஆசிபெற மீண்டும் சென்னை வருகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் கூறிய எம்ஜிஆர், தனது வீட்டில் தடபுடலாக விருந்தோம்பல் செய்கிறார். எதையும் மதிநுட்பமாகவும், நுணுக்கமாகவும் சிந்திக்கும் எம்ஜிஆர், சென்னையில் உள்ள தண்ணீர் பிரச்சனைக்கு ஆந்திராவிலிருக்கும் கிருஷ்ணா நதியிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டல் நன்றாக இருக்கும் என்கிறார். இதைக்கேட்டு மறுப்பேதும் இல்லாமல் மே 25 ல் பிரதமர் இந்திரா காந்தி கலந்து கொண்ட சென்னை விழாவில்  தெலுங்கு கங்கைத் திட்டத்தை நிறைவேற்ற முன்வருகிறார் என். டி. ராமாராவ். மகிழ்ச்சியடைக்கிறார் எம்ஜிஆர். இவ்வாறு தமிழகத்திற்குப் பல திட்டங்களை  கொண்டு வருவதில் எம்ஜிஆர் வெற்றி பெற்றுள்ளார்.

சரித்திரம் தொடரும்....

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved