🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! - தொடர்-24

எம்ஜிஆரின் தத்துவம்: "பதவி வரும்போது பணிவு வரவேண்டும், துணிவும் வரவேண்டும் தோழா "

தமிழக மக்களின் தேவைகளை செவ்வனே செய்யும் நல்லாட்சி புரிகிறார் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள். 1984 மார்ச் 29 ல் நாடாளுமன்ற மாநிலங்களவையின் 4 இடங்களுக்கான தேர்தல் நடக்கிறது. அதில் அதிமுக சார்பில் புரட்சி தலைவி ஜெயலலிதாவும், வலம்புரி ஜானும் தேர்வு செய்யப்படுகின்றனர். திமுக சார்பாக வைகோவும், காங்கிரசிலிருந்து தங்கபாலுவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதற்கு மறுநாளில் சட்டமன்ற மேலவைக்குத் தேர்தல் வருகிறது. அதில் உள்ள 6 இடங்களில் அதிமுக சார்பில் ஜேப்பியார், மதுசூதனன் உள்ளிட்ட 5 பேர் வெற்றி பெறுகின்றனர். திமுக சார்பாக கருணாநிதி தேர்வு செய்யப்படுகிறார்.

பெண்களுக்கென்று தனியாக ஒரு பல்கலைக் கழகத்தை கொடைக்கானலில் தொடங்க முடிவு செய்கிறார் எம்ஜிஆர்.  பல்கலைக் கழகத்தின் தொடக்க  விழாவில் தனது தொண்டுகளால் பெண் இனத்திற்கே பெருமை தேடித் தந்த அன்னை தெரசா மற்றும் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர். விழா மேடையில் உரையாற்றிய எம்ஜிஆர், அந்தப் பெண்கள் பல்கலைக் கழகத்திற்கு அன்னை தெரசாவின் பெயரைச் சூட்டி மகிழ்கிறார். இதைக்கண்ட தெரசா நெகிந்து போகிறார். மேடையில் இருந்து எழுந்து சென்ற பரூக் அப்துல்லாவும் எம்ஜிஆரை ஆரத்தழுவி மகிழ்ச்சியில் திளைக்கிறார். இந்து மதத்தைச் சேர்ந்த எம்ஜிஆர், கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த அன்னை தெரசா பெயரைச் சூட்டுகிறார். முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த பரூக் அப்துல்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். மத வேறுபாடுகள் மறைந்து மனித நேயம் உயர்ந்து நிற்கிறது.

ஒருமுறை நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியின் மருத்துவ விடுதி திறப்பு விழா நாகூர் தர்கா அருகில் நடக்கிறது. விழாவில் முழங்கிய எம்ஜிஆர், நான் கைலி கட்டாத முஸ்லீம், சிலுவை அணியாத கிறிஸ்தவன், திருநீறு பூசாத இந்து என்கிறார். கூடியிருந்த கூட்டம் ஆரவாரத்தில் திக்குமுக்காடியது. தமிழகதின் மாவட்டங்களுக்கு தேசத்தலைவர்கள், நாட்டிற்கு சேவை செய்தவர்கள், தியாகிகள் ஆகியோரின் பெயர்களைச் சூட்டிப் பெருமை சேர்த்தவர் எம்ஜிஆர். அதன் அடிப்படையில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளான ஜுலை 15 ல் அவர் பிறந்த இடமான விருதுநகரைத் தலைமையாகக் கொண்டு காமராஜர் மாவட்டத்தை உருவாக்குகிறார்.

செப்டம்பர் 16 அன்று தஞ்சாவூரில் இராஜராஜ சோழனின் 1000 ஆவது முடிசூட்டு விழாவில், பிரதமர் இந்திராகாந்தியுடன், தமிழக முதல்வர்  எம்ஜிஆர் அவர்கள் கலந்து கொள்கிறார். இவ்வாறு சிறப்பாக பணியாற்றிக்கொண்டு இருந்த எம்ஜிஆருக்கு அக்டோபர் 5 அன்று நள்ளிரவு நேரத்தில்  திடீரென உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. உடனே சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பரிசோதனை செய்த மருத்துவர்கள் முதலில் சிறுநீரகப் பாதிப்பு என்றனர். அடுத்த இரண்டு நாட்களில்  மீண்டும் ஓர் அதிர்ச்சியாய் நுரையீரல் கோளாறு, மூளையில் வீக்கம், சர்க்கரை நோய் என்பதுடன், பக்கவாதம் தாக்கி வலது கை, கால் செயல் இழக்கும் நிலை என்கிறார்கள். இந்தச் செய்தி கழகத் தொண்டர்களின் இதயத்தில் இடியாய் இறங்குகிறது. விடிவதற்குள் மருத்துவமனையின் முன்பு ஆயிரக்கணக்கா ன கழகத்தினரும், பொதுமக்களும் திரண்டு விடுகின்றனர். அப்பலோ வளாகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. எம்ஜிஆரின் உடல்நிலை மென்மேலும் பாதிப்புக்கு உள்ளாகி அனைவரையும் கவலை கொள்ளச் செய்கிறது.

எம்ஜிஆரின் உடல்நிலை சரியாக வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்கள், மசூதிகள், தேவாலயங்கள் என சர்வமத பிராத்தனைகளில் மக்கள் இறங்கினர். அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் போன்ற முக்கியப் பிரபலங்கள் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் இருந்தனர். மருத்துவமனையில் எம்ஜிஆருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் சிகிச்சை முறை பற்றி அறிய முற்பட்டனர். மருத்துவர்களும் அவ்வப்போது மருத்துவ சிகிச்சைக் குறிப்புகளை வெளியிட்டனர். அப்பொழுது சட்டசபைக் கூட்டம் நடைபெற்று வந்ததால் நெடுஞ்செழியனும், ஹண்டேவும் எம்ஜிஆரின் சிகிச்சை மற்றும் உடல்நிலை பற்றி சட்டமன்றத்தில் தெரிவித்தனர். நோயின் தாக்கம் கடுமையாக இருந்ததால் அக்டோபர் 15 ல் தமிழக சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் எம்ஜிஆர் விரைவில் குணமடைய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, தேதி குறிப்பிடப்படாமல் இரண்டு அவைகளுமே ஒத்திவைக்கப்பட்டது.

எம்ஜிஆர் விரைவில் குணமடைய வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று இந்திய ஜனாதிபதி ஜெயில்சிங் தந்தி மூலம் செய்தி அனுப்புகிறார். தமிழக சுற்றுப்பயணங்களில் இருந்த துணை ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் காஞ்சி சங்கராச்சாரியரைச் சந்தித்து எம்ஜிஆர் குணமாக  பிரார்த்தனை செய்ய வேண்டுகிறார். அக்டோபர் 16 அன்று பிரதமர் இந்திரா காந்தி தனி விமானம் மூலம் சென்னை வருகை தந்து அப்போலோவில் எம்ஜிஆரின் உடல்நலம் பற்றி விசாரிக்கிறார். பின்னர் எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜானகியிடம்  ஆறுதல் கூறிய இந்திரா டாக்டர்களைச் சந்தித்து சிகிச்சை பற்றி கேட்டறிகிறார். கிண்டி ஆளுநர் மாளிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து,  எம்ஜிஆரிடம்  நீங்கள் ஒரு தைரியசாலி, கஷ்டமான சந்தர்ப்பங்களில் எல்லாம் சமாளித்து இருக்கிறீர்கள். அதுபோல இப்போதும் மன தைரியத்துடன் இருங்கள். நீங்கள் விரைவில் பூரண குணம் அடைய இந்திய மக்கள் எல்லோரும் விரும்புகிறார்கள் என்று நான் சொன்னதும் எம்ஜிஆர் புன்னகை செய்தார். இப்போது வெளிநாட்டு மருத்துவர்களும் இங்கு வர இருக்கிறார்கள். வெளிநாடு அழைத்துச் செல்வதை அவர்களே முடிவு செய்வார்கள். எம்ஜிஆரின் சிகிச்சைக்காக எல்லா உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என்று கூறுகிறார்.

மருத்துவமனையில் ஜானகி அம்மையார், நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீ, ஹண்டே போன்ற சிலரே எம்ஜிஆருக்கு அருகில் அனுமதிக்கப்பட்டனர். அக்டோபர் 17 ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் டவுட்ஸ்டேட் மருத்துவமனையின் சிறுநீரகப் பிரிவுத் தலைவர் டாக்டர் பிரீட்மென், வாஷிங்டன் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் கிறிஸ்டோபர், புரூக்ளின் மருத்துவமனையின் டயாலிசிஸ் பிரிவு டைரக்டர் ஸ்ரீ பாதராவ், டெக்சாஸ் நகர மருத்துவக் கல்லூரி நரம்பியல் துறை பேராசிரியர் ஜான்ஸ் டிரிலிங்மேயர் ஆகிய உலகின் தலைசிறந்த மருத்துவக் குழுவினர் எம்ஜிஆரை பரிசோதனை செய்தனர். எம்ஜிஆரின் மூளைப் பகுதியில் ஏற்பட்ட ரத்தக்கட்டியை கரைப்பதற்காக ஜப்பானைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் கானு, நகமோரா ஆகியோர் தனி விமானம் மூலம் அக்டோபர் 20 ல் சென்னை வருகிறார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல எம்ஜிஆரிடம் அளவற்ற அன்பு கொண்ட 10 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தீக்குளிப்பு போன்ற விபரீத முடிவுகளால் தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர். எம்ஜிஆர் நலம்பெற வேண்டி கவர்னர் குரானா திருப்பதி சென்று பிரார்த்தனை செய்கிறார். திமுக தலைவர் கருணாநிதி தனது வெளிமாவட்ட சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு நானும் பிரார்த்தனை செய்கிறேன் எனச் சொல்லி பிரார்த்தனை என்பதற்கு "துதி" என்பது மட்டுமல்ல, "வேண்டுகோள்" என்றும் பொருள் உண்டு என அறிக்கை விடுகிறார்.

இதே காலகட்டத்தில் அக்டோபர் 31 அன்று இந்தியாவையே உலுக்கிய மேலும் ஓர் அதிர்ச்சியான செய்தி வெளியாகிறது. எம்ஜிஆர் பூரண நலம் பெறுவதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்வோம் எனக்கூறிய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, அக்டோபர் 31 அன்று காலை 9.30 மணிக்கு டில்லியில் உள்ள தன் வீட்டிலிருந்து  ஆர்.கே. தவானுடன் புல்தரையில் நடந்து வருகிறார்.அப்பொழுது எதிரே வந்த அவரின் மெய்க்காப்பாளர் பியாந்த் சிங் 38 ரக ரிவால்வரால் கண்ணிமைக்கும் நேரத்தில் இந்திரா காந்தியின் அடிவயிற்றில் சுடுகிறார். அதேநேரம் சற்று தொலைவிலிருந்த சத்வந்த் சிங், ஸ்டென் ரக துப்பாக்கியால் இந்திராவின் உடலைச் சல்லடையாக்கிய கோரச் சம்பவம் நடந்தேறியது. நெஞ்சைப் பதைபதைக்கும் இந்த சம்பவத்தால் இந்தியாவே சோகத்தில் மூழ்கியது. ஆங்காங்கே கலவரங்கள் மூண்டன.குறிப்பாக தலைநகர் டில்லியிலும், பஞ்சாப் போன்ற இடங்களிலும் சீக்கியர்கள் மீது காங்கிரசார் தாக்குதல் நடத்துகின்றனர். பதட்டம் நிலவிய சூழ்நிலையில் இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி பிரதமர் பதவியை ஏற்கிறார். தமிழகத்தில் ஒருமாத காலம் சிகிச்சை பெற்ற எம்ஜிஆர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறது.

சரித்திரம் தொடரும்....

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved