🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வெள்ளிவிழா வாரத்தில் கம்பளத்து எழுத்தாளரின் தொடர்! - வரலாற்று நாயகருக்கு வாழ்த்துகள்!

தொட்டிய நாயக்கர் சமுதாயத்திலுள்ள பல்துறை வித்தகர்களை அடையாளம் கண்டு பொதுவெளியில் அறிமுகம் செய்ய வேண்டும் என்பது  www.thottianaicker.com இணையதளத்தின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று. அந்த வகையில் எழுத்துலகில் படைப்பாற்றல் மிக்கவர்களாக கம்பளத்தார் சமுதாயத்தில் மின்னும் நட்சத்திரங்கள்  சொற்பமே. அந்தவகையில் அரிதிலும் அரிதாக நம்மிடையே அந்த ஆற்றலைப்பெற்றுள்ள திரு.காசிராஜன் அவர்கள் தன் முதல் முயற்சியாக "சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் என்ற தலைப்பில் தொடரை எழுதத்துவங்கி இன்று அது வெள்ளி விழா வாரத்தை தொட்டுள்ளது. வாசிக்கும் வர்க்கமல்ல கம்பளத்தார் வர்க்கம், எனவே நாம் எழுதுவதை அவர்கள் கவனிக்காமலே கடந்து செல்லும் வாய்ப்பே அதிகம் எனத்தெரிந்தும், அரசியல் துறையில் நெடுங்காலமாக பயணித்து தமிழகத்தை நீண்டநாட்களாக ஆட்சி செய்த கட்சியில் மாவட்ட அளவில் பொறுப்பினை பெற்றவரான திரு.காசிராஜன் அவர்களின் எழுத்து நாம் எதிர்பார்த்தது போலவே சமுதாயம் கடந்து சென்றாலும், கட்சி வட்டாரத்தில் கவனிக்கப்படுவதும், பிற பத்திரிக்கையாளர்கள் மற்றும் வரலாற்று வாசிப்பாளர்கள் கவனத்தை பெற்றிருப்பதும் இத்தொடர் குறித்து அவர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் உறுதி செய்கிறது. இது நாம் எந்த நோக்கத்திற்காக தொடங்கினோமோ அதை நிறைவேற்றியுள்ளதாகவே உணர்கிறோம். இத்தொடர் திரு.காசிராஜன் அவர்களின் அரசியல் பயணத்தில் மைல்கல்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நிர்வாகம்,
www.thottianaicker.com

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் (24 ஆம் வாரத் தொடர்ச்சி)

எம்ஜிஆரின் தத்துவம், "அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா, ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா"

என் உயிரின் உயிரான உறவுகளே, நண்பர்களே வணக்கம். தொடர்ந்து 25 வாரங்களாக  (வெள்ளி விழா வாரத்தில்) உங்களைச் சந்திப்பதில் பேரானந்தமே... இந்த தொடரைத் தொடர்ந்து படித்து வரும் அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்.

கோடிக்கணக்கான தமிழக மக்களின் அன்பைப் பெற்ற பொன்மனச்செம்மல் எம்ஜிஆரின் உடல்நிலையில்  முன்னேற்றம் காணத் தொடங்கியது.  நவம்பர் 3-ல் ஜப்பான் டாக்டர் "கானு" மீண்டும் வந்து பரிசோதனை செய்து,எம்ஜிஆரின் மூளையில் இருந்த வீக்கம் முழுவதும் குறைந்துவிட்டதாகக் கூறுகிறார். ஆனாலும் அவரை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் முடிவு செய்கின்றனர். அங்குள்ள நியூயார்க்கின் உலகப் புகழ்பெற்ற புரூக்ளின் மருத்துவமனையில் எம்ஜிஆருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்படுகிறது. இதற்காக ஒரு தனி விமானத்தின் இருக்கைகள் அகற்றப்பட்டு சிறிய மருத்துவமனை போல் மாற்றப்படுகிறது. அதில் படுக்கை வசதியுடன் ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) கருவிகள், ரத்தப் பரிசோதனைக் கருவிகள், பிராணவாயு சிலிண்டர் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு, நவம்பர் 5 அன்று இரவு 9 மணியளவில், எம்ஜிஆர் அமெரிக்கா அழைத்துச் செல்லப்படுகிறார். அவருடன் மனைவி ஜானகி அம்மையார், தனிச்செயலாளர் பரமசிவம் IPS, அமைச்சர் ஹண்டே, டாக்டர்கள், நர்ஸ்கள், உதவியாளர்கள் என மொத்தம் 21 பேர் பயணம் செய்கின்றனர். 

விமானம் மறுநாள் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு நியூயார்க்கில் தரை இறங்குகிறது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையை அடைகிறார்கள். அங்கு பிரிட்மென் தலைமையில் மருத்துவக் குழுவினர் எம்ஜிஆருக்கு  சிகிச்சையை வெற்றிகரமாகத் தொடங்குகின்றனர். இந்த சமயத்தில் நவம்பர் 13 ல்  இந்திய நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது. தமிழகத்தில் டிசம்பர் 24 அன்று தேர்தல் என அறிவிக்கப்படுகிறது. இத்துடன் தமிழக சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்க முடிவு செய்த அதிமுக முன்னணியினர், பிரதமர் ராஜீவ்காந்தியுடன் ஆலோசனை செய்தனர். பின்னர் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டசபையை கலைத்துவிட்டு , நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலையும் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவும், காங்கிரசும் கூட்டணி கண்டனர். சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக 162, காங்கிரஸ் 72 எனவும், நாடாளுமன்றதிற்கு அதிமுக 12, காங்கிரஸ் 26 என்றும் முடிவாயின. 

திமுக கூட்டணியில் திமுக 158, (27 நாடாளுமன்ற தொகுதி) ஜனதா,மா. கம்யூனிஸ்ட், இ.கம்யூனிஸ்ட்,முஸ்லீம் லீக், பழ. நெடுமாறனின் தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ், நாராயணசாமி நாயுடுவின் உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழ்நாடு பார்வர்டு பிளாக் ஆகியவை இடம் பெற்றன. நவம்பர் 22 ல் வெளியிடப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் எம்ஜிஆர் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இருந்த எம்ஜிஆரின் வேட்புமனு, அங்கிருந்த இந்திய தூதர் அருண் பட்வர்தன் முன்பாக பூர்த்தி செய்யப்படுகிறது. பின்னர் சத்தியப் பிரமாணமும் செய்யப்படுகிறது. நவம்பர் 22 ல் எம்ஜிஆரின் வேட்புமனுவுடன் ஹண்டே சென்னை வருகிறார். நவம்பர் 23 ல் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களுடன் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில், பொதுச்செயலாளர் ப.உ. சண்முகம், பொருளாளர் செ. மாதவன், ஜேப்பியார் மற்றும் அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் ஊர்வலமாகச் சென்று ஆண்டிபட்டி தொகுதி தேர்தல் அதிகாரி அழகர்ராஜாவிடம் எம்ஜிஆரின் வேற்புமனு தாக்கல் செய்யப்படுகிறது.

எம்ஜிஆரை எதிர்த்து திமுக கூட்டணியில் தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் பி.என். வல்லரசு போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. எம்ஜிஆர் அமெரிக்காவிலிருந்து நலம்பெற்று வந்தவுடன் ஆட்சியை அவரிடமே ஒப்படைத்து விடுகிறேன் எனக் கருணாநிதி பிரச்சாரம் செய்கிறார். நவம்பர் 15 ல் அமெரிக்கா சென்ற நடிகர் பாக்யராஜ் எம்ஜிஆரிடம் ஆசிபெற்று திரும்புகிறார். 

எம் ஜிஆரின் சகோதரர் சக்ரபாணியின் மகள் லீலாவதியின் சிறுநீரகம் எம்ஜிஆருக்கு வழங்கப்பட்டு டிசம்பர் 19 ல்  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. அப்பொழுது கடல் கடந்து வாழும் மக்கள் கூட சர்வமத பிரார்த்தனையில் இறங்கினர். தமிழகத்தில் எம்ஜிஆரின் 'ஒளிவிளக்கு' படத்தில் சௌகார் ஜானகி பாடும், "இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு, தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு,  உள்ளமதில் உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்னாகும்," இறைவா...என்ற பாடல் வரிகள்  மூலை முடுக்கெல்லாம் ஓங்கி ஒலித்தது . அதைக்கேட்ட பெரும்பாலான தாய்மார்களும், தொண்டர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதபடியே, பிரார்த்தனை செய்த காட்சி, காண்போரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. தமிழகத்தின் பல பகுதிகளில் எம்ஜிஆர் பூரண நலம்பெற வேண்டி, பொதுமக்கள் பலரும் மொட்டை அடித்தனர். உலகில் எந்தவொரு தலைவருக்கும்  எவரும் இதுபோல் செய்ததாக வரலாறு இல்லை என்ற அளவில் புதிய ஒரு வரலாறு உருவானது. 

கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனைக்கும், மருத்துவர்களின் தரமான உயர் சிகிச்சைக்கும் உரிய பலன் கிடைத்து, எம்ஜிஆருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.எம்ஜிஆர் உடல் நலம் தேறி சுமார் 6 வார காலத்தில் தாயகம் திரும்புவார் என்று புரூக்ளின் மருத்துவமனை மருத்துவவர்கள் அறிவிப்புச் செய்தனர்.எம்ஜிஆர் அமெரிக்காவில் நலமுடன் இருக்கிறார் என்பதற்கான புகைப்படங்கள் தமிழகம் முழுவதிலும் சுவரொட்டிகளாக காணப்பட்டன.எம்ஜிஆர் நடப்பது, இரட்டை விரல் காட்டுவது போன்றவற்றை வீடியோ மூலம்  கண்ட மக்கள் ஆனந்தம் அடைந்தனர்.டிசம்பர் 24 ல் நடைபெற்ற தேர்தலின், வாக்கு எண்ணிக்கை 28 ஆம் தேதி என்பதால் இடைப்பட்ட மூன்று நாட்கள் தமிழகம் பரபரப்பின் உச்சத்திற்கே செல்கிறது. சரித்திரம் தொடரும்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved