🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! - தொடர்-26

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் (25 ஆம் வாரத் தொடர்ச்சி )

எம்ஜிஆரின் தத்துவம், "நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும் "

தமிழ்நாட்டில் நடைபெற்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 28 அன்று பரபரப்பாகத் தொடங்கியது. தொடக்கம் முதலே அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில்  எம்ஜிஆரின் அதிமுக 132 இடங்களில் வெற்றி வாகை சூடுகிறது. கூட்டணியான காங்கிரஸ் 62 இடங்களைக் கைப்பற்றியது. திமுக 20 இடங்களில் வெற்றி பெறுகிறது. ஆண்டிபட்டியில் எம்ஜிஆர் முடிசூடினார். திமுக தலைவர் கருணாநிதியோ இந்த தேர்தலில் போட்டியிடவே இல்லை. நாடாளுமன்றத்தில் அதிமுக 12 லும்,கூட்டணியான காங்கிரஸ் 25 லும் வெற்றி பெறுகிறது. திமுகவோ மத்திய சென்னையில் மட்டும் வெற்றி பெற்றது. தேசிய அரசியலில் காங்கிரஸ் 415 இடங்களில் வெற்றி பெற்றது. புதிதாக உருவாகி இருந்த பாரதிய ஜனதா 2, ஜனதா 10, மா. கம்யூனிஸ்ட் 22, இ. கம்யூனிஸ்ட் 6 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்த தேர்தலின்போது எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரத்திற்கே செல்லமுடியாமல் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஆனாலும் தமிழக மக்கள் எம்ஜிஆர் மீது கொண்ட அன்பாலும், நம்பிக்கையாலும் இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்தார்கள் என்றால் அது மிகையல்ல. இது முதல்முறை அல்ல, இதற்கு முன்னரும் இது மாதிரியான மாபெரும்  வெற்றியை 1967 ல் 'அண்ணாவின்' திமுகவுக்கு கொடுத்திருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.1967 மற்றும் தற்போதைய வெற்றி ஆகிய இரு வெற்றிகளின் போதும் எம்ஜிஆர் மருத்துவமனையில் சிகிச்சையிலேயே இருந்தார். அவரின் சுவரொட்டிகளே பிரச்சாரக் களம் கண்டன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் எம்ஜிஆர் எனும் மாபெரும் அரசியல் சக்திக்கு முன்னால் எவரும் வெற்றி பெறமுடியாது என்ற வரலாற்றை உலகிற்கு  பதிவு செய்தது. அதுமாத்திரமல்ல  "வில்லுக்கு விஜயன், வேலுக்கு வேலவன், வாளுக்கு கட்டபொம்மன், சொல்லுக்கு அண்ணா, தேர்தலுக்கு எம்ஜிஆர் " என்று சொல்லும் அளவில் இந்தத் தேர்தல் வெற்றி புதியதோர் சகாப்தம் படைத்தது என்றே கூறலாம். 

தேர்தல் வெற்றிச் செய்தி அமெரிக்க மருத்துவமனையில் உள்ள எம்ஜிஆருக்கு எட்டியது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சொக்கலிங்கமும்,நெடுஞ்செழியனும் அமெரிக்கா விரைந்து சில தினங்களில் சென்னை திரும்பினர்.1985 பிப்ரவரி 4 ல் எம்ஜிஆர் தாயகம் திரும்புவார் என்று அறிவிக்கபட்டது. எம்ஜிஆரைக் காணும் ஆவலுடன் தமிழகமே தவமாய் தவம் இருந்தது. பூரண நலம் பெற்ற எம்ஜிஆருக்கு அமெரிக்கா தமிழ்ச் சங்கம் சார்பில் வரவேற்பு விழா நடத்திப் பாராட்டின. அந்த நிலையிலும் தனது வள்ளல் தன்மை மாறாத எம்ஜிஆர், அச்சங்கத்திற்கு 3 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குகிறார். இதைக்கண்ட அமெரிக்கா வாழ் தமிழர்கள் எம்ஜிஆரைப் பெரிதும் போற்றிப் பாராட்டுகின்றனர். அமெரிக்காவில் சிகிச்சை முடித்து விமானத்தில் ஏறிய எம்ஜிஆர் 1985 பிப்ரவரி 3 அன்று இரவு நேரத்தில் மும்பை வருகிறார். பின்னர் பிப்ரவரி 4  அதிகாலையில் சென்னை மீனம்பாக்கத்தில் இறங்குகிறார். 

எம்ஜிஆரைக் காண்பதற்காக கூடிய கூட்டத்தால் மீனம்பாக்கம் திண்றுகிறது. மக்களின் ஆரவாரத்துடன் எம்ஜிஆர் வெளியே வருகிறார். பரங்கிமலை ராணுவப் பயிற்சி மைதானத்தில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மேடை ஏறிய எம்ஜிஆர் எதிரே இருந்த மேல்சபைத் தலைவர் ம.பொ.சி. மற்றும் சட்டசபை சபாநாயகர் ராசாராம் ஆகியோரை சைகை மூலம் மேடைக்கு அழைத்து கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இதேநாளில் காலை 9.30  மணிக்கு எம்ஜிஆரின் இல்லத்திற்குச் சென்ற கவர்னர் குரானா எம்ஜிஆரை சந்திக்கிறார். வாசல்வரை வந்த எம்ஜிஆர் பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்கிறார். 

1985 பிப்ரவரி 7 அன்று கவர்னரின் அழைப்பை ஏற்று  எம்ஜிஆர் ராஜ்பவன் செல்கிறார். பிப்ரவரி 10 அன்று காலை 9 மணியளவில் கவர்னர் மாளிகையில்  முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட எம்ஜிஆர், அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வணங்கிவிட்டு தலைமைச் செயலகம் சென்று முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டு தனது இல்லம் திரும்புகிறார். பிப்ரவரி 14 ல் கவர்னரைச் சந்தித்து 16 அமைச்சர்கள் கொண்ட பட்டியலைக் கொடுக்கிறார். அப்பொழுது எம்ஜிஆர் உடன் சென்ற நெடுஞ்செழியன். பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோருக்கு அன்றே பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் கவர்னர் குரானா. பிப்ரவரி 16 ல் மற்ற 14 அமைச்சர்களின் பதவிப் பிரமாணம் நடக்கிறது. சட்டசபையின் மூத்த உறுப்பினரான ப.உ.சண்முகம் தற்காலிக சபாநாயகராக இருந்து புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். பின்னர் பி.எச்.பாண்டியன் சபாநாயகராகவும், வி.பி.பாலசுப்பிரமணியன் துணை சபாநாயகராகவும் போட்டியின்றி தேர்வாகின்றனர். 

தொடர்ந்து மூன்றாம் முறையாக முதலமைச்சரான எம்ஜிஆரின் தலைமையிலான அமைச்சரவைப் பட்டியல் இதோ உங்கள் பார்வைக்கு : 1. நெடுஞ்செழியன் -நிதி, 2. பண்ருட்டி ராமச்சந்திரன்-மின்சாரம், 3.கே.ஏ. கிருஷ்ணசாமி-தொழிலாளர் நலம், 4.ஆர்.எம். வீரப்பன்-செய்தி, அறநிலையத்துறை 5.செ.அரங்கநாயகம்-கல்வி 6. கா. காளிமுத்து-விவசாயம் 7. சி.பொன்னையன்-சட்டம் 8. எச்.வி.ஹண்டே-சுகாதாரம் 9.எஸ்.முத்துச்சாமி-போக்குவரத்து 10. எஸ்.திருநாவுக்கரசு-உணவு 11. ஆர்.சௌந்திரராஜன்-வீட்டு வசதி, ஊராட்சி 12. எம்.ஆர். கோவிந்தன்-பிற்படுத்தப்பட்டோர் நலன் 13.கோமதி சீனிவாசன் -சமூக நலம், சத்துணவு 14. விஜயலக்ஷ்மி-கதர் 15. ஒய்.எஸ்.எம்.யூசுப்-பொதுப்பணி 16.கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்-கூட்டுறவு, ஊரகத்தொழில் என அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்படுகின்றன. 

மூன்றாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்ற எம்ஜிஆர் பிப்ரவரி-28 ல் சட்டசபைக்கு வருகை தருகிறார். விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள் உள்பட பலரும் பயன்பெறும் திட்டங்களில் கவனம் செலுத்துகிறார். பிப்ரவரி-29 அன்று அதிகாலையில் சுமார் 3 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகை தந்த ராஜீவ்காந்தியை, சந்தனமாலை அணிவித்து வரவேற்கிறார் எம்.ஜி.ஆர்..பின்னர் எம்.ஜி.ஆரும், ராஜீவும் ஒரே காரில் ராஜ்பவன் சென்று சுமார் 40 நிமிடம் உரையாடுகின்றனர். பன்முகத் திறமை வாய்ந்த நடிகை பானுமதிக்கு கலைமாமணி விருது வழங்கியதோடு மட்டுமல்லாமல் அவரை அரசு இசைக்கல்லூரியின் முதல்வராகவும் நியமனம் செய்கிறார். ஆதரவற்ற பெண்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி,ஆதரவற்ற விதவை தாய்மார்களின் பெண்களுக்கு ரூபாய் 1000 வழங்கவும் ஆணை இட்டவர் எம்ஜிஆரே ஆவார். மழைக் காலங்களில் சென்னையில் வெள்ளப்பெருக்கைத் தடுக்க கூவம் நதியின் கரைகளை உயர்த்தி, ஆழப்படுத்தினார்.

ஒருநாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் எம்ஜிஆரைச் சந்தித்து இயக்கப் பணிகளுக்காக பணம் தேவைப்படுகிறது என்கிறார். அதற்காக எம்ஜிஆர் தனது சொந்தப் பணத்தில் இருந்து  ரூபாய் நான்கு கோடி  கொடுத்து உதவுகிறார் . ஜுன் மாதத்தில் இந்தியப் பிரதமர் ராஜீவும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் சந்தித்துப் பேசுகின்றனர்.

டில்லிக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே, 'ஈழப்பிரச்சனை கொழுந்துவிட்டு எரிவதற்கு தமிழக முதல்வர் எம்ஜிஆர் தான் காரணம்' என்று கூறுகிறார். இதுபற்றி மாநிலங்களவையில் பேசும்பொழுது, வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியா வந்தால் இந்தியாவின் உள்நாட்டு அரசியல் பேசும் வழக்கம் இல்லை. நாம் தரும் விருந்தை சாப்பிட்டுவிட்டு மரியாதையாகப் போகவேண்டும். தமிழக முதல்வர் பற்றி ஜெயவர்த்தனே கூறியது அக்கிரமம். அவர் அருகில் இருந்த இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி பேசாமல் இருந்தது சகிக்க முடியாதது என்று பேசினேன் என வைகோ பதிவு செய்துள்ளார். அத்துடன் எம்ஜிஆர் மீது எனக்கு திடீர் காதல் வந்திருப்பதாக கிண்டல் செய்த காங்கிரசாருக்கு, எங்களுக்குள் அரசியல் மோதல்கள் உண்டு. அதை தமிழக அரசியல் களத்தில் வைத்துக்கொள்வோம். ஆனால் எம்ஜிஆர் எங்கள் மாநிலத்தின் முதலமைச்சர். அவரை இன்னொரு நாட்டுக்காரர், அதுவும் தமிழர்களுக்கு எதிரானவர் கண்டனம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று பதில் அளித்தேன் என்று உணர்ச்சி மேலிட வைகோ கூறுகிறார். ஒரு கட்டத்தில் எம்ஜிஆரைப் பற்றி விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்,  தன்னிடம் சில விபரங்கள் கூறியதற்குப்பிறகு, அரசியல் ரீதியாகக் கூட எம்ஜிஆரை விமர்சிப்பதை  அடியோடு நிறுத்தி விட்டதாகவும் வைகோ கூறியதாக இந்து பதிவு செய்துள்ளது. இப்படி எல்லா தரப்பினரின் நன்மதிப்பைப் பெற்றத் தலைவராக விளங்கும் ஓரே தலைவர் எம்ஜிஆர் ஆவார்.

    சரித்திரம் தொடரும்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved