🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! - தொடர்-27

எம்ஜிஆரின் தத்துவம்,"வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே "

மக்கள் நலத்திட்டங்களில் புதிய திட்டங்களைக் கொண்டு வருவதில் வல்லவராகத் திகழ்ந்தவர் எம்ஜிஆர். அந்த வகையில்  தமிழக மக்களுக்கு இலவசத் தொலைக்காட்சி வழங்கும் திட்டத்தை முதலில் அறிமுகம் செய்தவர் எம்ஜிஆரே ஆவார். ஜுலை 2 அன்று சென்னை துறைமுகம் பகுதியில் உள்ள குடிசை வாழ் மக்களுக்கு எம்ஜிஆர் இலவசத் தொலைக்காட்சியை  வழங்கினார்.

அதேநேரம் இலங்கை ராணுவமும், தமிழ் போராளி இயக்கங்களும் போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் இறங்கின. அதன்படி ஜுலை 8-இல் பூடான் தலைநகர் திம்புவில்  விடுதலைப் புலிகள், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற போராளி இயக்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் அமிர்தலிங்கம், சிவ. சிதம்பரம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். ஐந்து நாட்கள் தொடர்ந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிகிறது.

இதே மாதத்தில் ஜப்பான் சென்ற எம்ஜிஆர், அங்குள்ள தொழில் வளர்ச்சித் திட்டங்களைப் பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து அமெரிக்கா சென்று புரூக்ளின் மருத்துவமனையில் தனது உடல்நிலையைப் பரிசோதனை செய்துகொண்டு ஆகஸ்ட் 24 ல் தமிழகம் திரும்புகிறார்.

ஆகஸ்ட் 25 ல் ஜே.சி.டி. பிரபாகர் தன் மனைவி கிரேஸ்ஜெயந்தி ராணியுடன் சென்று எம்ஜிஆரை சந்திக்கிறார். இருவரையும் இமைகொட்டாமல் பார்த்த எம்ஜிஆர், பிரபாகரிடம் திருமணப் பரிசாக உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்கிறார். பிரபாகர் பொன்னைக் கேட்பார், பொருளைக் கேட்பார் என்று மற்றவர் நினைக்கக் கூடும். ஆனால் பிரபாகர் அப்படி எதுவும் கேட்கவில்லை. அவரோ மதம் மாறிய வன்னிய (படையாச்சி) கிறிஸ்துவர்களை பிற்பட்டோர்  பட்டியலில் சேர்க்க வேண்டும். இதுவே தாங்கள் எனக்கு கொடுக்கும் திருமணப் பரிசு எனப் பேப்பரில் எழுதிக் கொடுக்கிறார். அதை வாங்கிப்படித்த எம்ஜிஆர், அன்று மாணவர்கள் பசிக்கு உதவி கேட்ட நீ, இன்று மக்களுக்காக கேட்கிறே... ஆவண செய்கிறேன் எனச் சொல்லி அனுப்புகிறார். ஆகஸ்ட்டில் உறுதியளித்த எம்ஜிஆர் டிசம்பரில் அதை நிறைவேற்றுகிறார்.

செப்டம்பர் 24 அன்று இலங்கை அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்து, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் உள்ள அண்ணாசதுக்கம் அருகே, எம்ஜிஆர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கிறார். இதுபோல் தமிழகம் முழுவதிலும் அதிமுக போராட்டம் நடத்துகிறது. டில்லியில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் (N.D.I) கூட்டத்தில் பங்கேற்பதற்காக எம்ஜிஆர் தன் மனைவி ஜானகி அம்மையாருடன் செல்கிறார். கூடவே தலைமைச் செயலாளர் கார்த்திகேயன், தமிழக திட்டக்குழு துணைத்தலைவர் பாவலர் முத்துச்சாமி மற்றும் திட்டக்குழுச் செயலர்களும் செல்கின்றனர். அங்குள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தங்கிய எம்ஜிஆர், பாவலர் முத்துச்சாமியை அழைத்து எப்படியோ சத்துணவுத் திட்டத்தை அமுல்படுத்திவிட்டோம். அத்துடன்  குழந்தைகளுக்கு சீருடை வழங்குவதற்கு பிரதமர் ராஜீவ்காந்தியிடம் மானியம் கேட்கலாம் என நினைக்கிறேன். அதற்கான  பட்ஜெட் எவ்வளவு தேவை என்று  அரைமணி நேரத்தில் எனக்குச் சொல்லுங்கள் என்கிறார்.

குறிப்பிட்ட சரியான நேரத்திற்குள் பாவலர் முத்துச்சாமி 125 கோடி ரூபாய் தேவை எனக் கணக்கிட்டுச் சொல்கிறார். பாராளுமன்றக் கட்டிட கான்பரன்ஸ் ஹாலில் தொடங்கிய கூட்டத்தில் சில கோரிக்கைகளுடன் இந்த கோரிக்கையையும் சேர்த்து எம்ஜிஆர் வைக்கிறார். மற்ற கோரிக்கைகளுக்கு உடனே ஒப்புக்கொண்ட ராஜீவ், இந்த கோரிக்கைக்கு மட்டும் அடுத்த பட்ஜெட்டில் ஆவண செய்கிறேன் என்கிறார். திருப்தி அடையாத எம்ஜிஆர் கூட்டத்திலிருந்து வெளியேறி தமிழ்நாடு ஹோட்டலுக்குத் திரும்புகிறார். சில மணித்துளிகளில் பிரதமரின் அலுவலகத்திலிருந்து ஆர்.கே. தவான் தொலைபேசியில்  தொடர்பு கொள்கிறார். மீண்டும் அன்று மாலையில் பிரதமரைச் சந்தித்த எம்ஜிஆர் வெற்றி முகத்துடன் திரும்புகிறார். தான் நினைத்ததை முடிப்பவன் என்பதை ஒவ்வொரு விசயத்திலும் நிரூப்பித்துக் காட்டிய எம்ஜிஆர் இதிலும் வெற்றி பெறுகிறார்.

1986 ல்  4 இடங்களுக்கான  தமிழக சட்டமன்ற மேலவைத் தேர்தல்  வருகிறது. (பட்டதாரிகளும், ஆசிரியர்களும் வாக்களித்து தேர்ந்தெடுப்பது) அதிமுக, திமுக தலா ஒரு இடத்திலும், மற்ற இரண்டில் சுயேட்சைகளும் வெற்றி பெறுகின்றன. இதன் பின்பு ஏப்ரலில் ஆளுநரால் நியமிக்கப்படும் மூன்று  உறுப்பினர்களுக்கான மேலவைத் தேர்தலில் எம்ஜிஆரின் வழக்கறிஞர் என். சி. ராகவாச்சாரி,  நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா,  ஜி.சுவாமிநாதன் ஆகிய அதிமுக வைச் சேர்ந்தவர்கள் தேர்வாகிறார்கள். இதில் வெண்ணிற ஆடை நிர்மலாவின் நியமனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. சொந்தமாகப் படம் தயாரித்து பெருத்த நஷ்டத்துக்கு ஆளான இவர் 'இன்சால் வென்சி' நோட்டீஸ் கொடுத்திருந்தார். இது ரத்தாக வேண்டுமெனில் அவர் 10 லட்சம் ரூபாய் கடன் தொகையைக் கட்டவேண்டும். ஆதலால் அதை ஒரே நாளில் நீதிமன்றத்தில் செலுத்தினார் என்பதால், அதுவும் கடும் விமர்சனம் எழுந்தது. இறுதியில் தன் எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்கிறார் வெண்ணிற ஆடை நிர்மலா.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மே 14 ல் தமிழக சட்டமேலவையை கலைப்பதற்கான தீர்மானம் கொண்டு வருகிறது அதிமுக. தீர்மானம் வெற்றிபெற மூன்றில் இரண்டு பங்கு (சுமார் 156) உறுப்பினர்கள் ஆதரவு தேவையாக இருந்தது. அதிமுகவிடம் 129 உறுப்பினர்கள் இருந்தனர். தீர்மானதின் மீது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் என். எஸ்.வி. சித்தன் மேலவை ஒழிக்கப்பட நிறைய காரணங்கள் உள்ளது. எனினும் தொடர்வதற்கும் நியாயங்கள் உள்ளன. மேலவை தேவை இல்லை என்று 1955 ல் சிம்லாவில் நடந்த சபாநாயகர்கள் மாநாடு வலியுறுத்தியுள்ளது. ஆனாலும் அதற்கான காலமும் சூழ்நிலையும் இப்போது இல்லை என்பதால் நாங்கள் இதில் சம்பந்தப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை எனக் கூறி  அவையிலிருந்து காங்கிரஸ் வெளியேறுகிறது.

காங்கிரஸ் வெளிநடப்பு செய்த நிலையில் 161 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கின்றனர். அதில் 118 உறுப்பினர்கள் ஆதரவே தேவை என்ற நிலையில் 136 பேரின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதற்கு அன்றைய ஜனாதிபதி ஜெயில்சிங் செப்டம்பர் 4 ல் கையெழுத்திடுகிறார். அதைத்தொடர்ந்து நவம்பர் 1 முதல் தமிழக மேல்சபை முற்றிலும் ரத்தாகிறது. அப்பொழுது மேல்சபையின் தலைவராக ம.பொ.சி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது மேல்சபையின் மொத்த 63 இடங்களில் 31 இடங்கள் காலியாக இருந்தாகச் சொல்கிறார்கள்.

இதற்கு முன்னர் எம்ஜிஆரின் குடும்பத்தினர் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாகப் புகார் எழுகிறது. இந்த விசயம் எம்ஜிஆரின் கவனத்திற்குச் செல்கிறது. உடனே அரசு நிர்வாகத்தில் சம்பந்தம் இல்லாத யாருடைய தலையீட்டையும், குறுக்கீட்டையும் நான் எப்போதும் விரும்புவதில்லை. என் மனைவியாகவே இருந்தாலும் அல்லது எனது உறவினர் என்று சொல்லிக்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந்தும்.  அமைச்சர்கள், அதிகாரிகள் என் அபிப்ராயம் அறிந்து நடக்கவேண்டும் என்று எம்ஜிஆர் ஜூன் 13 ல் முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார்.

ஜுலையில் மிகப் பிரமாண்டமாக எம்ஜிஆர் மன்ற மாநாட்டை மதுரையில் நடத்துகிறார் எம்ஜிஆர். அந்த மாநாட்டில் எம்ஜிஆருக்கு தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிச் செங்கோல் வழங்குகிறார் ஜெயலலிதா. செப்டம்பர் மாதத்தில் மீண்டும் அமெரிக்கா சென்று உடல்நிலை பரிசோதனை முடித்து தமிழகம் திரும்புகிறார் எம்ஜிஆர். அக்டோபரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்ற எம்ஜிஆர், அப்பொறுப்பில் இருந்த சண்முத்தை விடுவிக்கிறார். இதற்கு முன்பாக 1974 ல் நடைபெற்ற அதிமுகவின் முதல் பொதுக்குழுவில் எம்ஜிஆர் முறைப்படி பொதுச்செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு ராகவானந்தம், நெடுஞ்செழியன், ப. உ. சண்முகம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். தற்பொழுது 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் எம்ஜிஆர் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரித்திரம் தொடரும்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved