🔴 LIVE | முப்பெரும் விழா 2023


எட்டிவிடும் தொலைவு இல்லை, எட்டாக்கனியே ஒருசாதிக்கு இடஒதுக்கீடு - திருப்பி அடி-1

வன்னியர் சாதிக்கு மட்டும் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் தமிழக அரசின் 8/2021 சட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதியரசர்கள் திரு.துரைசாமி, திரு.முரளி சங்கர் அமர்வு அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றுகூறி கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி வழங்கிய தீர்ப்பில் ரத்து செய்து உத்தரவிட்டது. 

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும், பாட்டாளி மக்கள் கட்சியும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தன. இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதியரசர்கள் திரு.நாகேஷ்வரராவ் திரு.கவாய் அமர்வு கடந்த வியாழக்கிழமை (31.03.2022) சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இந்தியா முழுமைக்கும் கவனத்தைப்பெற்ற இத்தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவர் ஐயா இராமதாசு அவர்கள், வன்னியர் இடஒதுக்கீடு எட்டிவிடும் தொலைவில் தான் என்றும், உயர்நீதிமன்றம் எழுப்பிய ஏழு கேள்விகளில் 6 கேள்விகளை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டதாகவும், ஒரேஒரு கேள்வியின் அடிப்படையிலேயே இச்சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதுவும் விரைவில் சரிசெய்யப்பட்டு வன்னியர் இடஒதுக்கீட்டைப்பெறும் வரை ஓயப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழக அரசு தரப்பில் இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான  திரு.துரைமுருகன் இது குறித்து சட்டவல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்தக்கருத்து இதர சமுதாயங்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே, சமூகநீதி பேசும் திமுக அனைத்து சமூகங்களுக்கும் உரிய இடஒதுக்கீடு கிடைக்கப்பாடுபடும் என்று உறுதியளித்தது. அதிமுக ஆட்சியின் இறுதி நேரத்தில் மற்ற சமுதாயங்களின் கோரிக்கைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு இயற்றப்பட்ட இச்சட்டத்தை மதுரை உயர்நீதிமன்றக்கிளை ரத்து செய்து தீர்ப்பளித்தவுடன், புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக அரசு, அனைத்து சமூகங்களுக்கும் பொதுவாக இல்லாமல், ஒருதலைப்பட்சமாக, ஓடோடி உச்சநீதிமன்றத்திற்கு இந்த வழக்கை எடுத்துச்சென்று, பிற சமுதாய மக்களின் வரிப்பணத்தில் இந்தியாவின் தலைசிறந்த மூத்த வழக்கறிஞர்களையெல்லாம் அச்சமுதாயங்களுக்கு எதிராகவே களமிறக்கி, மனசாட்சியின்றி நடந்துகொண்டு கடைசியில் உதைபட்டு நிற்கிறது. இருந்தாலும் இன்னும் சமூகநீதி போர்வையில் இயங்கும் சாதிவெறியர்கள் அரசை தவறான வழிநடத்துகிறார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சிலரின் பேச்சுகள் அமைந்திருப்பதைக்கண்டு பிற சமுதாயங்கள் மிகுந்த அச்சம் கொண்டுள்ளன. 

திமுக அரசைப்பொறுத்தவரை ஒருசாதி மீது மட்டும் காட்டும் அளவுகடந்த கரிசனம் அப்பட்டமாக தெரியவதாக சமூகநீதியின் பால் உண்மையான அக்கறையுள்ளவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஆலங்குளம் தொகுதியில் பிரச்சாரம் செய்த இன்றைய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், DNT ஒற்றைச்சான்றிதழ் கேட்டுப்போராடும் சமூகங்களுக்கு, திமுக ஆட்சி அமைந்தவுடன் ஒற்றைச்சான்றிதழ் வழங்கப்படுமென்று உறுதியளித்தார். பொதுமக்கள் குறைகள் மீது நூறுநட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், முதல்வர் தொகுதியில் நேரடியாக DNT சான்றுகோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கப்படவில்லை. அதேபோல் பாமக எம்எல்ஏ குழுக்களை உடனடியாக சந்தித்து வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு பதிலளிக்கும் தமிழக முதல்வர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதியிலுள்ள பிற சாதி பிரதிநிதிகள் பலமுறை சந்திக்க நேரம் கேட்டும் ஏறெடுத்தும்கூட இதுவரை பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் தொடர் அலட்சியத்தால் புறக்கணிக்கப்பட்டிருக்கும் 115 சாதிகளைச் சேர்ந்த மக்களுக்கு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள் ஆறுதலாக அமைந்துள்ளன. இருந்தும் குறுக்கு வழியையே தொடர்ந்து பின்பற்றுபவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை திசைதிருப்பி உயர்நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட 7 வினாக்களில் 6 வினாக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டதாக கூறியுள்ளதும், மூத்த அமைச்சரின் பேச்சும் வன்னியர் இடஒதுக்கீட்டுற்கு உச்சநீதிமன்றமே பச்சைக்கொடி காட்டிவிட்டதாக பொதுவெளியில் கருத்துருவாக்கம் செய்ய முனைகின்றனரோ என்ற ஐயப்பாடு எழுகிறது. இது அரசு எந்த நேரத்திலும் மீண்டும் 115 சமுதாய மக்களை ஏமாற்ற தயாராகி வருவதை கோடிட்டுக்காட்டியுள்ளது. 

எனவே வன்னியர் 10.5 விழுக்காடு போர் நிறைவுபெற்றதாக 115 சமூகங்கள் இருந்துவிடக்கூடாது. சமூகநீதிபேசும் கட்சியின் மூத்த அமைச்சர் தன் சாதிக்காக துடிக்கையில் 115 சமூகங்களைச் சேர்ந்த நமது எம்.பி, எம்.எல்.ஏ, மேயர் உள்ளிட்ட இன்ன பிற தலைவர்களெல்லாம் சுயநல நோக்கோடு வாய்மூடி மௌனிகளாக நிற்பது வேதனையானது. ஆகவே மக்கள்தான் தங்கள் உரிமைகளை காக்க முன்வரவேண்டும், அமைப்புகளுக்கு துணைநிற்க வேண்டும். தாங்களும் இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வு பெற்றுவிட்டதை அடையாளப்போராட்டங்கள் மூலம் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதற்கு சமூகநீதி கூட்டமைப்பு முன்னெடுக்கும் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்வதே அரசு மீண்டும் ஒரு தவறான பாதைக்கு செல்வதை தடுக்கும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்துவிட்ட சூழலில் பல அமைப்புகள் இந்த வெற்றிக்கு தாங்கள் தான் காரணம் என்று கூறி சமூக ஊடகங்களிலும், பொதுமக்களிடமும் தவறான கருத்தைப் பரப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர். DNT சமுதாயங்கள்  நமது கோரிக்கைகளை வென்றெடுக்க் இன்னும் நெடுந்தொலை பயணப்பட வேண்டியுள்ளது. அதற்கு இன்னும் பலகட்டப் போராட்டங்களை நடத்த வேண்டிய சூழலில், அரசுக்கு ஆதரவாக சில கட்டுச்சோற்று எலிகள் உள்ளேபுகுந்த சிதைப்பதும், இதைக்காரணம் காட்டி சில அமைப்புகளின் தலைவர்கள் அரசிடம் சலுகைகள், பதவி பேரங்களுக்கு பயன்படுத்த முயற்சிப்பதையும் பார்க்கத்தான் போகிறோம். அரசும் அவர்களுக்கு வாரியப்பதவிகளை, எழும்புத்துண்டுகளை வீசி போராட்டத்தை சீர்குழைக்க முயலும். எனவே மிகுந்த விழிப்புணர்வோடும், எச்சரிக்கையோடும் ஒவ்வொரு சமுதாயமும் செயல்பட வேண்டும் என்று சமூகநீதி கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.

7 இல் 6  மருத்துவருக்கு வெற்றியா? உண்மை என்ன? சமூக நீதி கூட்டமைப்பின் விளக்கத்துடன் தொடர்ச்சி நாளை...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved