🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! - தொடர்-28

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் (27 ஆம் வாரத் தொடர்ச்சி )

எம்ஜிஆரின் தத்துவம்,"நான் ஏன் பிறந்தேன்? நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன், என்று நாளும் பொழுதும் வாழும்வரையில் நினைத்திடு என்தோழா, நினைத்துச் செயல்படு என்தோழா "

தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள், மக்கள் பணியில் எப்படி முனைப்புடன் பணியாற்றினாரோ அதுபோலவே அமைச்சர்கள் மீதும் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டவர். அப்படி ஒரு நடவடிக்கையாக 1986 ல் அக்டோபர் 21 அன்று ஆர்.எம்.வீரப்பன், காளிமுத்து,ஹண்டே, ராகவானந்தம், அரங்கநாயகம் உள்பட 10 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து உத்தரவிடுகிறார். 

மத்திய அரசின் ஊழியர்கள் அனைவரும் இந்தியில் தான் கையெழுத்து இடவேண்டும், இந்தி வாரம் கொண்டாடவேண்டும் என மத்திய அரசு செப்டம்பரில் சுற்றறிக்கை அனுப்புகிறது. இதை எதிர்த்த திமுகவினர் அரசியலமைப்புச் சட்டநகல் கொளுத்தும் போராட்டத்தை நவம்பரில் நடத்துகின்றனர். இந்தப் பிரச்சனையை சட்ட சபையில் எழுப்புகிறார் காங்கிரசின் என்.எஸ்.வி.சித்தன். அதன்விளைவாக திமுகவின் 10 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்து  சபாநாயகர் பி.எச்.பாண்டியன் நடவடிக்கை எடுக்கிறார். மேலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கருணாநிதி,வைகோ,ஆற்காடு வீராசாமி,கோ.சி.மணி உள்ளிட்ட திமுகவினர் பலரும் கைது செய்யப்படுகின்றனர். 

நவம்பர் 16 ல் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வாக இந்திய அரசு முன்வைத்த திட்டங்கள் பற்றி பிரபாகரனிடம் பேசுகிறார் தீட்சித். கிழக்கு மாகாணத்தை மூன்றாகப் பிரித்து, அதில் ஒரு பகுதியையும், வடக்குப் பிராந்தியத்தையும் இணைத்து உருவாகும் மாநிலத்திற்கு பிரபாகரணை முதலமைச்சர் ஆக்குவது போன்ற யோசனைகள் அனைத்தையும்  நிராகரிக்கிறார் பிரபாகரன். தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் பெங்களூருக்கு அழைக்கப்படுகிறார். அங்கு எம்ஜிஆருக்கும், பிரபாகரனுக்கும் இடையே சந்திப்பு நடைபெறுகிறது. இலங்கைப் பிரச்சனையின் பல்வேறு விபரங்கள் அலசி ஆராயப்படுகின்றன. விடுதலைப் புலிகள் அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்புத் தரவில்லை எனக்கூறி மத்திய அரசு சில நடவடிக்கையில் இறங்குகிறது. பெங்களூரிலிருந்து சென்னை திருப்பிய பிரபாகரன், தங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களைத் திரும்பத் தரவேண்டும் என்று உண்ணாவிரதத்தில் இறங்குகிறார். இதைக் கேள்விப்பட்ட எம்ஜிஆர், உடனே ஆயுதங்களை ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கிறார்.

தமிழகத்தில் சட்டமன்ற மேலவை கலைக்கப்படுவதற்கு முன்பு , அதன் தலைவராக இருந்தவர் (மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது, திருத்தணி ஆந்திராவில் சேர்க்கப்பட்டதை எதிர்த்துப் போராடி  வெற்றி கண்ட) ம.பொ.சி. அவர்கள். முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் வெள்ளையருக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த பாலகங்காதரத் திலகருக்கு, தற்போது புனேயில் வெண்கலச் சிலை வைக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்கிறது. தேசியத் தலைவரான அவரின் சிலை நிறுவுவதற்கு மற்ற மாநிலங்களின் பங்களிப்பையும் விரும்பியதால், எல்லா மாநிலங்களிடமும் மகாராஷ்டிர அரசு நிதி கோரியது. அப்பொழுது திலகரின் பேரன் அந்த மாநிலத்தில் சட்டமேலவைத் தலைவராக இருந்தார். எனவே அம்மாநில அரசின் சார்பில் நிதி திரட்டுவதற்காக அவர் தமிழகம் வருகிறார். இதற்கு முன்பே தமிழக மேல்சபைத் தலைவரான ம.பொ.சிக்கு, ஒரு குறிப்பிட்ட நாளில் தமிழகம் வருவதாகக் கடிதம் மூலம் தகவல் தருகிறார் திலகரின் பேரன். அந்த நேரத்தில் தமிழக சட்டப்பேரவையின்  இரண்டு அவைகளிலும் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.தமிழகம் வருகை தந்து ம.பொ.சி யைச் சந்தித்த திலகரின் பேரன், பின்னர் எம்ஜிஆரை சந்திக்க விருப்பம் தெரிவிக்கிறார். எம்ஜிஆரை சந்தித்து தான் வருகை தந்ததின் நோக்கத்தை விவரிக்கிறார். செவிமடுத்த எம்ஜிஆர் தனது செயலாளரை அழைத்து ஏதோ காதில் முனுமுனுக்கிறார். உடனே முதல்வரின் அறைக்குச் சென்று திரும்பியவர் காசோலைப் புத்தகத்தைக் கொண்டு வருகிறார். திலகரின் சிலை அமைக்க என் நன்கொடை 50 ஆயிரம் ரூபாய் எனச் சொல்லி எம்ஜிஆர் காசோலையை நீட்டுகிறார்.

அந்தக் காசோலையை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட திலகரின் பேரனுக்கு மனதில் ஒரு சிறிய குழப்பம் ஏற்பட்டு, அரசிடம் எதிர்பார்த்த நிலையில் தங்களின் சொந்தப் பணத்தில் இருந்து கொடுக்கிறீர்களே எனத் தயங்கியபடியே வினா எழுப்புகிறார். அதற்கு அரசாங்க நிதியில் கொடுப்பதென்றால் நான் எழுதும் கடிதம் ஒவ்வொரு துறையாகச் சென்று ஒப்புதல் பெற்று பணம் கிடைக்க காலதாமதம் ஆகிவிடும். அதைத் தவிர்க்கவே என் சொந்தப் பணத்தைக் கொடுக்கிறேன். மேலும் திலகரின் சிலை அமைவதற்கு நானே நன்கொடை வழங்குவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே என புன்முருவலுடன் எம்ஜிஆர் பதில் அளிக்கிறார். இதைக்கேட்டு நெகிழ்ச்சியுடன் புறப்படுகிறார் திலகரின் பேரன். 

இதே ஆண்டில் எம்ஜிஆர் அவர்கள் கவர்னர் குரானா, நெடுஞ்செழியன். கவிஞர் வாலி ஆகியோருடன்  சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில்  தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தனுக்கு "கலைமாமணி" விருது வழங்கிச் சிறப்பிக்கிறார். எம்ஜிஆரைப் பற்றி எத்தனையோ கவிதைகளை பலர் எழுதியிருந்தாலும்,வாலிபக்  கவிஞர் "வாலி" வடித்த ஒரு கவிதை பலரையும் கவர்ந்தது போல் என்னையும் வெகுவாகக் கவர்ந்தது. அதை இங்கு  எனக்குக் கிடைத்த வாய்ப்பாகக் கருதி, உள்ளபடியே மகிழ்ச்சிப் பெருக்கோடு நான் பதிவிடுகிறேன். வாலி எம் ஜி ஆர் அவர்களைப் பற்றி எழுதிய அருமையான கவிதை. 

நீ இந்தியாவில் பிறந்து

இலங்கைக்குச் சென்ற இராமச்சந்திரனல்ல;

இலங்கையில் பிறந்து

இந்தியா வந்த இராமச்சந்திரன்.!

அந்த இராமச்சந்திரன்

சூரிய குலத்தில் வந்தவன்.

நீயும் உதய சூரியனின்

வழித்தோன்றல்தான்.

அவனும் ஜானகி மணாளன்.

நீயும்  ஜானகி மணாளன்.

அவனும்

பதவி ஆசை பிடித்தவர்களால்

வெளியேற்றப்பட்டான்

நீயும் அப்படியே.

அவனும்

நாடோடியாகத் திரிந்து

மன்னனானான்.

நீயும்-நாடோடி மன்னன்தான்.

 அவனிடத்தில் இருந்தது போலவே

உன்னிடத்திலும் "வில்பவர்" இருந்தது

 அந்த இராமச்சந்திரன்

தெய்வமாக இருந்து

மனிதனாக மாறியவன்.

நீ-மனிதனாக இருந்து

தெய்வமாக மாறியவன்.

இதனால்தான் உன்னை

இதய தெய்வம் என்கிறோம்.

 ஆனால் ஒன்று

அவன் அந்த வாலியை

அம்பு கொண்டு வீழ்த்தியவன்.

நீயோ இந்த வாலியை

அன்பு கொண்டு வாழ்த்தியவன்.

இவ்வாறு எம்ஜிஆர் பற்றி வாலியின் கவிதை இருந்தது. இப்படிப் பலச் சிறப்புகள் பெற்றவர் எம்ஜிஆர் என்பதே உண்மை.

சரித்திரம் தொடரும்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved