🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அருந்ததியர்,முஸ்லீம்களுக்கு ஆதரவு!- வன்னியருக்கு எதிர்ப்பா?- உண்மையறிவோம்.

அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கும்போது எதிர்க்கவில்லை. இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கீடு கொடுக்கும்போது எதிர்க்கவில்லை. வன்னியர்களுக்கு கொடுக்கும்போது மட்டும் எதிர்ப்பது ஏன்?

இப்படி ஒரு முட்டாள்தனமான கேள்வியை திரைப்பட இயக்குநர் கௌதமன் தொடங்கி மருத்துவர் ராமதாஸ் வரை எழுப்புகின்றனர். அடிப்படையில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள முடியாதவர்களால் எழுப்பப்படும் கேள்வி இது என்று மேலோட்டமாகச் சொல்லமுடியாது. வேண்டுமென்றே திட்டமிட்டு திசை திருப்புகின்றனர் என்பதே உண்மை.

முதலில் எந்த வகைபாட்டுக்குள் உள்ள பிரிவு மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ, அந்தப் பிரிவு மக்கள் அவர்களுடைய உரிமைக்காகவே போராடுவார்கள். அந்தவகையில் அருந்ததியர் ஒதுக்கீடு என்பது SC பட்டியலில் வருகிறது. அருந்ததியர் ஒதுக்கீட்டால் எம்பிசி மக்களுக்கு என்ன பாதிப்பு?  டிஎன்டி மக்களுக்கு என்ன பாதிப்பு? அவர்கள் எதற்காகப் போராட வேண்டும்?

அருந்ததியர் இடஒதுக்கீடு என்பது முன்னுரிமை ஒதுக்கீடு தானே தவிர தனி ஒதுக்கீடல்ல. தவிர, எஸ்சி/எஸ்டி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு பத்தாண்டிற்கும் ஒருமுறை எடுக்கப்பட்டு வருகிறது என்ற உண்மையை மருத்துவர் மறுக்கமுடியுமா?

அதே போல்தான் இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடும்.  இஸ்லாமியர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெறுகின்றனர். அவர்களால் எம்பிசி மக்களுக்கு என்ன பாதிப்பு?  எதற்காக போராட வேண்டும்? எஸ்சி/எஸ்டி போலவே மதசிறுபான்மையினர் கணக்கெடுப்பும் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கொருமுறை நடத்தப்படும்  மக்கள்தொகை கணக்கெடுப்பின்பொழுதும் நடத்தப்படுகிறது.

இதில் மற்றொரு முக்கிய அம்சம் அருந்ததியர், இஸ்லாமியர் இரண்டிலும் பல சாதிகளை இணைத்தே இடஒதுக்கீடு வழங்கியுள்ளதை மறந்துவிடக்கூடாது.

ஆனால் எம்பிசி பிரிவிலுள்ள வன்னியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு கொடுக்கும் போது அப்பட்டியலில் உள்ள மற்ற நூற்றுக்கும் மேற்பட்ட சமூகங்கள் பாதிக்கப்படுகின்றன. இக்கருத்தை பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக இருந்த நீதிபதி ஜனார்த்தனம் அவர்கள், 25.04.2012-இல் நடைபெற்ற ஆணையக்கூட்டத்தில் வன்னியர் இடஒதுக்கீட்டிற்காக  பரிந்துரைத்த பொழுது , தங்களுக்கு போதுமான கால அவகாசமும், புள்ளிவிபரங்களும் வழங்கப்படவில்லை என்றுகூறி ஆணையத்தின் மற்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து தனி அறிக்கை வழங்கியுள்ளதை உச்சநீதிமன்றம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளதே.

எனவே உள்நோக்கத்தோடு ஒருசாதிக்கு ஆதரவாக உள்ஒதுக்கீடு வழங்கும்பொழுது பாதிக்கப்படும் மற்ற சாதிகள் எதிர்ப்பதில் நியாயம் இருக்கிறது, தர்க்கம் இருக்கிறது. 

அருந்ததியர், இஸ்லாமியர்களுக்கு கொடுக்கும் போது போராடவில்லை என்றால் அந்த வகைப்பாடுகளுக்குள் யார் இருக்கிறார்களோ, யார் பாதிக்கப்படுகிறார்களோ அவர்கள் தான் போராட வேண்டும்.

அடிப்படை தர்க்க நியாயம் கூட இல்லாமல்  முட்டாள்தனமாக கேள்வி எழுப்புவதே பார்த்தால் நகைப்பாக இருக்கிறது. 

அரசியல் பலத்தாலும், அதிகார பலத்தாலும்  மீண்டும் சட்டமியற்றி விடலாம் என்று கனவு காணாதீர்கள். அறத்தின் துணைகொண்டு எந்த சட்டத்தையும் உடைத்தெறியும் வல்லமை எங்களுக்கு உண்டு.

அரசுக்கும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம். அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, எந்த ஒரு சட்டத்தையும் இயற்ற முயற்சி மேற்கொள்ளாதீர்கள். அப்படி மேற்கொண்டால் அது அரசுக்கு களங்கத்தையும், அவப்பெயரை உண்டாக்கிவிடும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தோழமையுடன்.

மருதுபாண்டியன்.

சோசலிச மையம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved