🔴 LIVE | முப்பெரும் விழா 2023


முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிச்சயம் இந்த தவறை செய்யமாட்டார்!

வன்னியர் சாதிக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 8/2021 சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ரத்து செய்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை திசைதிருப்பி உயர்நீதிமன்றம் எழுப்பிய 7 கேள்விகளில் 6 கேள்விகளை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும், ஒரே ஒருகாரணத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு இச்சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதாகவும், தமிழக அரசு நினைத்தால் ஓரிரு வாரங்களில் அதை சரிசெய்து மீண்டும் இச்சட்டத்தை நிறைவேற்ற முடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை ஒன்றை உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகிய நாளன்று (31.03.2022) வெளியிட்டார்.

இதனடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், தமிழக வாழ்வுரிமைக்கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் முதல்வரை சந்தித்து வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு மீண்டும் ஒரு சட்டத்தை இயற்ற வலியுறுத்தினர். சட்டமன்றத்திலும் பாமக உறுப்பினர்கள் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். அதற்கு பதிலளித்துப்பேசிய தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன் கலந்துபேசி நிச்சயம் சமூகநீதி நிலைநாட்டப்படும் என்று கூறினார். 

மறுபுறம் வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றங்களில் சட்டப்போராட்டம் நடத்தி வென்ற வன்னியர் அல்லாத தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களில் உள்ள 115 சாதியினர் தமிழக முதல்வரை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்துவதற்காக ஓராண்டாக சந்திக்க முயற்சித்தும் அனுமதி கிடைக்கவில்லை. எனவே அரசு பாராமுகமாக இருப்பதால் வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை மீண்டும் அவசர அவசரமாக நிறைவேற்றுமோ என்ற அச்சம் இச்சமூகங்களுக்கு ஏற்பட்டது.


எனவே சாதிவாரிக்கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஞாயிறன்று தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சமுதாயங்கள் மதுரை பழங்காநத்தத்தில் உண்ணாவிரத போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தின. அதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பொதுவெளியில் பரவிக்கிடக்கும் குழப்பத்தை போக்கும் வகையில் சமூக நீதியில் அக்கறையுள்ள பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்களைக்கொண்டு இணையவழி கருத்தரங்கங்களை தொட்டிய நாயக்கர் சமூகம் அங்கம் வகிக்கும் சமூகநீதி கூட்டமைப்பு நடத்தி வருகிறது.

நேற்று (12.04.2022) நடைபெற்ற கருத்தரங்கில் தமிழகத்தில் சமூகநீதியும், சாதிவாரி கணக்கெடுப்பும் என்ற தலைப்பில் உரையாற்றிய காட்சிப்பிழை மற்றும் அகம் புறம் பத்திரைக்கை ஆசிரியரும், திராவிட இயக்க சிந்தனையாளருமான தோழர் சுபகுணராஜன், எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் எப்படி எடப்பாடி க.பழனிச்சாமி எதிர்பாராதவிதமாக ஒரு விபத்துபோல் முதலைமைச்சர் ஆனாரோ அதுபோல் அவர் ஆட்சியின் இறுதி நிமிடங்களில் கொண்டுவரப்பட்ட இச்சட்டமும் ஒரு விபத்து. அவர் முதல்வராக இருந்த காலங்கள் தமிழகத்திற்கு பெரும் கரும்புள்ளி, ஆபத்து நிறைந்தவகையாக இருந்தன. அதுபோல் தான் அவர்கொண்டுவந்த இந்த சட்டமும் பெரும் ஆபத்து.

தன் தொகுதியில் வெற்றிபெற கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் சமூகங்களில் எந்தவகையான தாக்கத்தை ஏற்படுதும் என்பதை அறியாமல் சுயநல நோக்கில் கொண்டுவரப்பட்டது. இதனால் அவருடைய கட்சிக்கு கொங்கு மண்டலத்தில் இருபது தொகுதிகளை கூடுதலாக பெற்றிருக்கலாம். ஆனால் நாட்டிற்கு அவர் எவ்வளவு ஆபத்தானவர் என்பது இதன்மூலம் உறுதியானது. எடப்பாடி பழனிச்சாமியைத் தவிர வேறு யாருக்கும் இந்த துணிச்சல் இருந்திருக்காது. ஏனெனில் அவருக்கு இடஒதுக்கீடு, சமூகநீதி குறித்தெல்லாம் எதுவுமே தெரியாது என்று கடுமையாக சாடினார்.

மேலும், அரசியல் கட்சிகளுக்கு வாக்கு வங்கியை கருத்தில்கொண்டே செயல்பட்டாலும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக மீண்டும் வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வருவார் என்று நிச்சயம் நான் நம்பவில்லை. அரசியலில் நீண்ட அனுபவம் உள்ளவர், கலைஞர் மு.கருணாநிதியால் வார்ப்பிக்கப்பட்டவர், சமூகநீதியை நிலைநாட்டுவதில் அதிக அக்கறை கொண்டவர், அரசியல் அழுத்தங்களுக்கெல்லாம் இடமளிக்க மாட்டார் என்பது நிச்சயம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை யாரும் திரித்து அவரை திசைதிருப்ப முடியாது என்று தான் நம்புவதாக குறிப்பிட்டார்.

வன்னியர் சமூக மக்களும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர் என்பது உண்மை. ஆனால் அவர்களை பகடைக்காய்களாக்கி உண்டு கொழுத்து திரியும் ஒரு கும்பல் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு எதிராக அவர்களை நிறுத்துகிறது. இதை சமூகநீதி கூட்டமைப்பினரும் உணர்ந்துகொண்டு அம்மக்களையும் இணைத்துக்கொண்டு சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இடஒதுக்கீட்டிற்கு முற்றிலும் எதிரான கட்சி மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருப்பதாகவும், உயர்சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் இன்று வரை நீதிமன்றத்தில் வழக்கு எண்கூட வழங்கப்படவில்லை என்பதை பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் கவந்த்தில் கொள்ளவேண்டும். ஆகவே இப்பிரச்சினையை நமக்குள் தீர்த்துக்கொள்ளாமல் பகை நெருப்பை யார் மூட்டினாலும் மொத்த இடஒதுக்கீட்டிற்கே ஆபத்தாக முடியும் என்று எச்சரித்தார்.

சாதிவாரி கண்க்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் சமூகநீதி என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இன்னும் மத்தியிலும், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு கோரி நீண்ட நெடும் பயணம் செய்ய வேண்டும் என்பதால் சாதிக்கொரு நீதி என்று பேசாமல் சமூகங்களுக்கு நீதி என்ற இலக்கை நோக்கி பயணம் தொடரட்டும் என்று பேசினார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved