🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! தொடர்ச்சி 30

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் (29 ஆம் வாரத் தொடர்ச்சி )

எம்ஜிஆரின் தத்துவம், "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்". 

தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் முன்பு தான் எழுதிய உயிலை ரத்து செய்து விட்டு 1987 ஜனவரி 18 ல் (அமெரிக்கா செல்வதற்கு முன்பு) புதிய உயில் ஒன்றை எழுதுகிறார். பிப்ரவரியில் எம்ஜிஆரின் முயற்சியால்  மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் சிலை டெல்லியில் அமைக்கப்படுகிறது. அந்த திறப்பு விழாவில் பிரதமர் ராஜீவ் காந்தி, துணை ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் ஆகியோருடன் எம்ஜிஆரும் கலந்து கொள்கிறார்.

தமிழகத்தின் குக்கிராமத்திலும் கூட மின்சார விளக்கு இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் வண்ணம்  'வீட்டுக்கு ஒரு விளக்கு' என்ற திட்டத்தின் கீழ் இலவச மின்சாரம் வழங்கினார். தீப்பெட்டி தொழிலாளர், நெசவாளர், பனையேறும் தொழிலாளர் போன்றோர்களுக்கு 'விபத்து நிவாரணம் திட்டத்தை' அமல்படுத்தினார். மீனவர்களுக்கும், நெசவாளர்களுக்கும் சிறப்பு 'வீட்டு வசதி திட்டம்' கொண்டு வந்தார். விதவை மறுமணத் திட்டத்தின் மூலம் திருமணத் தம்பதிகளுக்கு 5300 ரூபாய் வரை உதவித் தொகை வழங்க உத்தரவிட்டார். சுமார் 325 கோடி ரூபாய் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார். விவசாயப் பாசனத்திற்காக புதிதாக 3.31 லட்சம் பம்ப்செட்களுக்கு மின் இணைப்பு கொடுக்கச் செய்தார். மேலும் பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் முறையை அமுல்படுத்தினார். கரூர் அருகில் உள்ள புகலூரில், கரும்புச் சக்கையில் இருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கொண்டு வந்தார். 

அண்ணா முதல்வராக இருந்தபொழுது நடத்திய உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, தமிழகம் வருகை தந்த அன்றைய குடியரசுத் தலைவர் ஜாகீர் உஷேனை, பிச்சாவரம் அழைத்துச் சென்று, அங்குள்ள இயற்கை காட்சிகளைக் காட்டிய அண்ணா. பிச்சாவரத்தை சுற்றுலாத் தலமாகவும்  மாற்ற விரும்பினார் என்று தெரிய வருகிறது. அன்று அண்ணா விரும்பியதை பின்னாளில் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர்  செய்து முடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் அன்பை பெற்றவர் எம்ஜிஆர். குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் வாழ்விலும் அதிக அக்கறை காட்டியவர்.1987 ஜுலை 26 அன்று டில்லியில் இருந்த எம்ஜிஆரிடம், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், பாலசிங்கம், யோகி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசுகின்றனர். இதைத்தொடர்ந்து ஜுலை 29 ல் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஆகிய இருவருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இந்த ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகளுக்கு அறவே விருப்பம் இல்லை. அதேபோல் எம்ஜிஆருக்கும் இதில் உடன்பாடு இல்லை. 

இதேகாலகட்டத்தில் தமிழகத்தில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில், வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மத்தியில் 2% மும், மாநிலத்தில் 20%  வகுப்புவாரி இட ஒதுக்கீடு வேண்டி  செப்டம்பர் 17-ல்   தொடங்கிய போராட்டம் ஒரு வாரம் வரை தொடர்கிறது. இந்த சமயத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக எம்ஜிஆர் அமெரிக்கா சென்றிருந்தார். தமிழகம் திரும்பிய எம்ஜிஆர் அனைத்து சாதி சங்கங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார். எம்ஜிஆருடைய அழைப்பின்  பேரில் மொத்தம் 94 சாதிச்சங்கங்கள் கலந்துகொள்கின்றன. 

டிசம்பர் முதல் வாரத்தில் நாகி ரெட்டியினுடைய பேத்தியின் திருமணம் நடைபெறுகிறது. தன் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் அந்த திருமண விழாவில் எம்ஜிஆர் கலந்து கொள்கிறார். தமக்கு எல்லாமே தமிழ்நாடும், தமிழ் மக்களும் தான் என வாழும் எம்ஜிஆர்,டிசம்பர் 21 ல் (கிண்டி) கத்திப்பாரா சந்திப்பில் உள்ள ஜவஹர்லால் நேருவின் சிலை திறப்பு விழாவில் பிரதமர் ராஜீவ் காந்தியுடன்  கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி தான் எம்ஜிஆர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 23 அன்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் நித்திரையிலிருந்து எழுந்த எம்ஜிஆர் கழிவறைக்குச் சென்று வந்துள்ளார். சில மணித்துளிகளில் நெஞ்சு வலிப்பதாகவும் கூறி உள்ளார். உடனே மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதற்குள்  மயக்க நிலைக்குச் சென்ற எம்ஜிஆர் திடீரென இயற்கை எய்துகிறார்.

இதற்கு முன்பெல்லாம் எம்ஜிஆரிடம் தோற்று ஓடிய காலன் இந்த முறை எம்ஜிஆரின் கையை இறுகப் பற்றிக்கொண்டு அழைத்துச் சென்றுவிட்டான். எம்ஜிஆரின் மரணச்செய்தி தமிழகம் முழுவதிலும் காட்டுத் தீயாய் பரவுகிறது. அண்ணா திமுக தொண்டர்களும், பொதுமக்களும் தங்கள் தலையில் அடித்தப்படியே தலைநகர் நோக்கி வரத் தொடங்கினர். தமிழகமே  கண்ணீர் கடலில் சோகத்தில் மூழ்கியது. டிசம்பர் 24 அன்று காலை 8.40 மணிக்கு   எம்ஜிஆரின் பொன் உடல் ,  பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக ராஜாஜி மண்டபத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு திரண்ட லட்சக்கணக்கானோர் கண்ணீருடன் தங்கள் தலைவனுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். தாய்மார்கள் தங்கள் மார்பில் அடித்தபடி,தரையில் புரண்டு குமுறி அழுகின்றனர். எம்ஜிஆரின் உடலில் தேசியக் கொடி போர்த்தப்படுகிறது. ஆண்களும், பெண்களும் தனித் தனி வரிசையில் வந்து இறுதி மரியாதை செலுத்துகின்றனர். தமிழக அரசு ஒருவாரம் துக்கம் அறிவித்தது.

இந்தியாவில் உள்ள எல்லா மாநில அரசுகளும் அரசு விடுமுறை அறிவித்து துக்கம் அனுசரித்தது. பிரதமர் ராஜீவ் காந்தி உள்பட பல தேசிய தலைவர்களும், மாநில தலைவர்களும் எம்ஜிஆரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்திய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன், துணை ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, கவர்னர் குரானா மற்றும் பல்வேறு மாநிலங்களின் கவர்னர்களும், முதல்வர்களும் அனுதாபங்கள் தெரிவித்து செய்தி வெளியிட்டனர். டிசம்பர் 25 ல் நடைபெற்ற ராணுவ வாகன இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் லட்சக்கணக்கில் கண்ணீருடன் அணிவகுத்தனர். மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகில் இறுதி சடங்குகள் நடைபெற்றது. 42 குண்டுகள் முழங்க இறுதி மரியாதையுடன் எம்ஜிஆரின் உடல் சந்தனப் பெட்டியில் வைத்து புதைக்கப்பட்டது, அல்ல விதைக்கப்பட்டது என்றே சொல்லலாம்.ஏனெனில் லட்சியவாதிகள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் .மண்ணைத் தோண்டி தங்கம் எடுப்பார்கள், இங்கோ மண்ணைத் தோண்டி தங்கத்தைப் புதைத்தார்கள்.

1917 ஜனவரி 17 அன்று மண்ணில் கண் விழித்த எம்.ஜி. ராமச்சந்திரன், நாடகத்தில் நடிக்கத் தொடங்கி, திரை உலகில் தடம் பதித்து, அரசியலில் மன்னாதி மன்னன் ஆக மகுடம் சூடி மக்களுக்காக வாரி வாரி வழங்கிய  சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் அவர்கள் 1987 டிசம்பர் 24 ல் கண்மூடி விண்ணுலகம் சென்றார்.எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோதும் அரசாங்க காரை பயன்படுத்தியது இல்லை. தனக்குச் சொந்தமான TMX 4777 என்ற எண் உள்ள அம்பாசிடர் காரையே பயன்படுத்தி வந்தார்.அதற்கான எரிபொருள் செலவையும் அவர் அரசிடம் கோரியது இல்லை. அந்தக் கார் அவருடைய நினைவு இல்லத்தில் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் எழுதிய உயில் 1988 ஜனவரி 9 அன்று வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆரின் வழக்கறிஞர் என்.சி.ராகவச்சாரியாவால் வெளியானது. எம்ஜிஆரின் சேவையைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு 1988 மார்ச் 19 அன்று இந்தியாவின் உயரிய விருதான "பாரத ரத்னா" விருது வழங்கி சிறப்புச் சேர்த்தது.சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆருக்கு என் வீர வணக்கம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved