🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! தொடர் 31

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் (30 ஆம் வாரத் தொடர்ச்சி )

எம்ஜிஆரின் தத்துவம்:
 காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்ப்பவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ...

பொன்மனச் செம்மல் எம்ஜிஆரின் மறைவையொட்டி பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அவற்றில் சிலத் தலைவர்களின் கருத்துக்களை இங்கே காண்போம்.  அதில் முதலாவதாக .

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி.

எம்ஜிஆர் அவர்களுடைய 10 ஆண்டு கால ஆட்சி மிகச் சிறப்பானது. தமிழ்நாடு பல தொழில்களில் முன்னேற்றம் அடைந்தது. குறிப்பாக சமுதாய நலத் திட்டங்களில் முதன்மை பெற்று திகழ்ந்தது. எம்ஜிஆர் மாநில தலைவர் மட்டும் அல்ல, இந்த நாட்டிற்கே உன்னதமான தலைவர். அவர் நாட்டிற்கும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் சிறந்த பணியாற்றியவர். இந்தியா ஒன்றாக ஒருமைப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று  விரும்பினார். அதற்காக அவருக்கு மக்களிடம் அதிக அன்பும், ஆதரவும் கிடைத்தது. இந்த யுகத்தில் தோன்றிய நல் இயல்புகள் கொண்ட நல்ல மனிதர். அவர் மறைவினால் இந்தியா மிகச் சிறந்த தலைவரை இழந்துவிட்டது.

முன்னாள் குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா: தேசிய நலனை முன்வைத்து ஏழை மக்களின் உண்மை ஊழியனாக எம்ஜிஆர் திகழ்ந்தார். அவர் பரந்த மனப்பான்மை கொண்டவர், நல்லெண்ணத்தோடு வாழ்ந்தவர். எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஒப்பற்ற தலைவரான, அவரின் புகழ் இந்தியச் சரித்திரத்தில் என்றும் நிலைத்து நிற்கும்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி: மக்களின் நல்வாழ்வையே புனிதமாகக் கருதியவர் எம்ஜிஆர் அவர்கள். தாய் நாட்டின் ஒற்றுமையையும், அதன் மேன்மையையும், முன்னேற்றத்தையும் மிகவும் விரும்பினார். குறுகிய மனப்பான்மையை அவரிடம் நான் கண்டதே இல்லை. அவரின் சேவைக்காக இந்திய மக்கள் மட்டுமல்லாமல், இலங்கை மக்களும் அவரை என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்கள். இலங்கை தமிழ் மக்கள் ஒற்றுமையாகவும், கெளரவமாகவும், மரியாதையோடும், மகிழ்ச்சியோடும் வாழ்கின்ற வகையில், அவர்களுக்கு சம உரிமையை பெற்றுத் தரும் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர் அவர். எந்த பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது என்பதில் நம்பிக்கை கொண்டவர். மகாத்மா காட்டிய பாதை மூலம்தான் உரிமைகளைப் பெற வேண்டும் என்ற கருத்தில் முழு ஈடுபாடு கொண்டவர்.சுத்தமான இதயம் கொண்ட எம்ஜிஆர் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.  

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி: இனிய நண்பர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் மறைவு கேட்டு, அதிர்ச்சியும், பெரும் துன்பமும் தாங்கிய நிலையில் இருக்கிறேன்.1945 ஆம் ஆண்டு ஜுபிட்டர் திரைப்பட நிறுவனத்தில் திரு ஏ.எஸ்.ஏ.சாமி அவர்களின் டைரக்சனில் வெளிவந்த ராஜகுமாரி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த அவருக்கும், வசனகர்த்தாவாகப் பணியாற்றிய எனக்கும் நட்பு உதயமாயிற்று. கோவை நகரத்தில் நானும் அவரும் ஒரே வீட்டில் வாழ்ந்ததும், அரசியல்  சமுதாயக் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதும், கலை உலகில் இணைந்து பணியாற்றியதும், இருவரும் ஒரே இயக்கத்தில் செயலாற்றுகிற அளவுக்கு எங்கள் நட்பு கனிந்ததும், என்றென்றும் மறக்க முடியாத பசுமையான நினைவுகள் ஆகும். 

அபிமன்யு, மருதநாட்டு இளவரசி,மந்திரிகுமாரி,நாம்,மலைக்கள்ளன்,காஞ்சி தலைவன்,எங்கள் தங்கம்,புதுமைப் பித்தன்,அரசிலங்குமரி போன்ற பல்வேறு திரைப்படங்களில் எங்களின் கலைத்துறைத் தோழமை கொடிகட்டிப் பறந்தது. கலைத்துறையில் கொண்டிருந்த அதே நட்புணர்வுடன், 1972 வரையில் நானும், அவரும் அரசியல் துறையிலும் இரண்டறக் கலந்திருந்தோம். அதற்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாறுதலிலே கூட எத்தனையோ கருத்து மாறுபாடுகளுக்கு இடையே எங்களின் நட்புணர்வு ஆழமாகவே இருந்தது. திரைக்கலைத்துறையில் தமிழகத்தில் ஈடு இணையற்ற கதாநாயகனாகத் திகழ்ந்தார். திரைப்படத்துறையில் எம்ஜிஆர் அவர்கள் ஒரு புதிய சகாப்தத்தையே உருவாக்கியவர். அவரைப் போல திரைப்படத்துறையை தன் வயப்படுத்திக் கொண்டு வெற்றி முரசு கொட்டிய நடிகர்கள் ஒரு சிலரே ஆவர்.1972 ல் அவர் தொடங்கிய அதிமுக கட்சியை மிகக் குறுகிய காலத்திலேயே ஆளுங்கட்சி ஆக்கிய பெருமைக்குறியவர் அவர். பத்தாண்டு காலம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தவர், இரண்டு மூன்று ஆண்டு கால உடல் நலிவுக்கு இடையிலேயும் சலிப்பின்றி உழைத்த,உள்ள உறுதியை பாராட்டாதார் இருக்க முடியாது. விடாமுயற்சி, ஓய்வற்ற உழைப்பு இவற்றின் மூலம் மக்களின் செல்வாக்கைப் பெற்று ஒளிர்விட்ட எனது ஆருயிர் நண்பரின் பிரிவினால் கண்ணீர் வடித்திடும் இந்த நேரத்தில், எனது ஆழ்ந்த இரங்கலை திருமதி ஜானகி ராமச்சந்திரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், அதிமுக இயக்கத்தின் உடன்பிறப்புகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய துயர சூழ்நிலையை ஒட்டி கசப்புணர்வு, காழ்ப்புணர்ச்சிகளைத் தவிர்த்து அமைதியும், ஒற்றுமையும் கட்டிக் காக்கப்பட தமிழ் மக்கள் உறுதி மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

கர்நாடக முன்னாள் முதல்வர் இராமகிருஷ்ண ஹெக்டே: எம்ஜிஆருக்கு ஈடாக ஒரு தலைவரைப் பார்க்க முடியாது. அவருடைய மறைவு இந்த நாட்டிற்கு குறிப்பாக அடித்தள மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

கர்நாடக முன்னாள் முதல்வர் குண்டுராவ்: தமிழக அரசியல் வரலாற்றில் எம்ஜிஆரின் பங்கு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். 

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ்: எனது குருநாதரை இழந்துவிட்டேன் என கலங்கிய கண்களுடன் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் ஆளுநர் குரானா: ஒப்பற்ற மக்கள் தலைவரை இந்த நாடு இழந்து தவிக்கிறது. எம்ஜிஆர் நல்ல பல குணங்களை பெற்றிருந்ததால் மக்கள் அவரை தங்கள் சிம்மாசனத்தில் வைத்திருந்தனர். அவர் மக்களுக்காகவே வாழ்ந்தார். மக்களும் அவரைப் பெரிதும் நேசித்தனர்.

எம். கல்யாணசுந்தரம் (கம்யூனிஸ்ட்): மக்கள் திலகமான எம்ஜிஆரின் மறைவுக்கு இரங்கல் செய்தி கூறவேண்டிய நிர்பந்தத்தை எண்ணித் துயரமடைகிறேன். அவர் இல்லாத தமிழகத்தைப் பற்றி சிந்திக்கக் கூட முடியாது. திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி, அவர் பிறரால் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு புகழ் பெற்றவர். தனது திரைப்படங்கள் மூலமாக சமுதாய மாற்றங்களை வலியுறுத்திய வள்ளல். அவர் தன் பத்து வருடகால ஆட்சியில் நலத் திட்டங்கள் பலவற்றை வகுத்து, மக்களின் துயர் துடைத்த பெருந்தகை. அதன் மூலம் மக்களின் அன்பை பெற்றவர். இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் காக்க மிகுந்த அக்கறை காட்டிய தேசபக்தர் அவர்.இவ்வாறு இரங்கல் செய்தி வெளியிட்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved