🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பஞ்சம் பிழைக்க வந்தோம்! இனி யாரையும் பஞ்சத்தில் விட மாட்டோம்!

இராஜகம்பளத்தார் வரலாற்றில் ஒரு அமைப்பு செயல்படத்தொடங்கிய ஒருசில ஆண்டுகளுக்குள் தலைநகர் சென்னையில் 3600 சதுரடி நிலத்தை சொந்தமாக்கியதும், அதன் தொடர்ச்சியாக 12000 சதுரடி பரப்பளவு கொண்ட மூன்றடுக்கு கட்டிடத்தைக் கட்டிய பெருமையும் சென்னை வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தையே சேரும். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தொடர்ந்து ஒரு அமைப்பு தன் சொத்து மதிப்பை உயர்த்திக்கொண்டே இருப்பதும் இச்சங்கமே. ஏற்கனவே தொடங்கப்பட்ட கட்டுமானப்பணிகள் கொரோனோ பெருந்தொற்று மற்றும் நிதிச்சுமைகளுக்கு மத்தியில் தொடர்ந்து நடைபெற்று,  திறப்புவிழாவை எதிர்நோக்கியுள்ள நிலையில், தடைகளையும் கடன்சுமைகளையும் பற்றி கவலை கொள்ளாமல்,  கால் கோடி பதிப்பிலான நிலத்தை கடந்த வாரம் சொந்தமாக்கி மீண்டுமொரு வரலாற்றுச் சாதனையை சத்தமில்லாமல் செய்து முடித்துள்ளது இச்சங்கம்.


இந்த கடுமையான பணிகளுக்கு மத்தியில் நம் வருங்கால பிள்ளைகளின் உரிமைகளை பாதுகாத்திட,  இடஒதுக்கீடு உரிமைக்காக உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் சட்டப்போராட்டம் நடத்திய அதேவேளையில், பொதுவெளியில் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும்  நடத்தி அரசின் கவனைத்தை ஈர்க்க தோழமை அமைப்புகளுடன் கைகோர்த்து போராடி வருகிறது இச்சங்கம். 

இதுமட்டுமா? கடந்த மூன்றாண்டுகளாக பெற்றோர்களுக்கு உதவும் வகையில் திருமண தகவல்களை பரிமாறிக்கொள்ள தொட்டிய நாயக்கர் மேட்ரிமோனி என்ற இலவச இணையதளம், மக்களுக்கும் அமைப்புகளுக்கும் இடையே செய்திகளை பரிமாறிக்கொள்ளும் உறவுப்பாலமாக தொட்டிய நாயக்கர்.காம் இணையதளத்தையும் நடத்தி வருகிறது இச்சங்கம்.

நிர்வாகிகள், உறுப்பினர்கள் யாருக்கும் சென்னை பூர்வீக பூமி அல்ல. ஒருசில பத்தாண்டுகளுக்கு முன்னர் பிழைப்புதேடி வந்தோரும்,பஞ்சம் பிழைக்க வந்தோரும் சேர்ந்து செய்துவரும் இந்த வரலாற்றுச்சாதனைகளுக்கு உறுதுணையாக தமிழகத்தில் மட்டுமல்ல கடல்தாண்டி உலகம் முழுவதும் பரவி வாழும் கம்பளத்து சொந்தங்கள் இருப்பது மகிழ்ச்சிக்குறிய செய்தி.


சிலபல ஆண்டுகளாக சங்கத்தின் முன்னாள் பொருளாளர் ராமசாமி அவர்கள் இல்லம்தேடி சங்கம் வளர்த்த நிலையில் திடீரென ஏற்பட்ட அவரின் இழப்பு பெரும்பணிகளை தோளில் சுமக்கத்தாயாராகி வந்த சங்கத்திற்கு பேரிடியாய் இருந்தது.  நல்ல செயல்பாட்டாளர் ஒருவரை இயற்கை பறித்துக்கொண்ட அதேவளையில் இருவரை அடையாளப்படுத்தவும் தவறவில்லை.

எழுபதை நெருங்கும் இளைஞர்கள் என்றாலும் எறும்பின் சுறுசுறுப்பு. பழனி தண்டாயுதபாணி உலகைச்சுற்றிய அதே சுறுசுறுப்போடு சென்னையின் முலைமுடுக்கெல்லாம் சுற்றிச்சுழன்றுசங்கம் வளர்க்கின்றனர் திரு.செல்வராஜ் மற்றும் திரு.குருசாமி ஆகியோர். கடந்த நவம்பரில் சங்க உறுப்பினர்கள் இல்லம் தோறும் சென்று காலண்டர் வழங்கி, சந்தா வசூல் செய்து நிதிதிரட்டியவர்கள், புதிதாக நிலம் வாங்க நிதிதிரட்டவும் அதேவேகத்தில் சக்கரமாய் சுழன்றனர். தகதகக்கும் சென்னை வெயிலை பொருட்படுத்தாமல் நிர்வாகம் கைகாட்டிய இடங்களுக்கெல்லாம் இரவு பகல் பாராமல் தொடர்ந்த பயணம் மூன்று மாதங்களைக் கடந்தது என்றாலும் ஓயாமல், ஓய்வறியாமல் நிதி திரட்டிக்கொடுத்த செயலை பாராட்டாமல் இருக்கமுடியாது.


இருவரும் மிட்டா மிராசுகள் அல்ல. வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் சென்னை வந்து உழைத்து முன்னேறியதோடு சமுதாயத்தையும் முன்னேற்ற அதே அர்ப்பணிப்போடு உழைக்கின்ற இன்றைய கோடீஸ்வரர்கள். இவ்விருவரும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள். முதலாமவர் திரு.S.செல்வராஜ் (70) அவர்கள், சங்கத்தின் மண்டலப்பொறுப்பாளர்களில் ஒருவர், புதூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 1975-இல் சென்னையை வந்தடைந்து "தேனீர் கடை" உரிமையாளராக உயர்ந்து, தொடர் பயணத்தில் ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்து சாதித்தவர். துணைவியார் திருமதி.கஸ்தூரி, இரு மகள்கள், ஒரு மகன் என சென்னை முகப்பேரில் குடியிருந்து வருகிறார்.

இரண்டாமவர் திரு.C.குருசாமி (65) சங்கத்தின் மண்டல பொருப்பாளர்களில் மற்றுமொருவர். இவர் 1977-இல் முதலாமவரால் குமாரசித்தன்பட்டியில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டவர். மளிகைக் கடை ஊழியராக பணியைத் தொடங்கி "மளிகைக்கடை உரிமையாளர்" என்ற அந்தஸ்த்திற்கு உயர்ந்து, இன்று சிட்பண்ட் துறையில் கொடிகட்டி பறப்பவர். மாதந்தோறும் பலகோடிகளில் புரண்டாலும் எளிமையானவர், சங்கத்தின் ஊழியராக தலைமையின் கட்டளையை நிறைவேற்றும் செயல் வீரர். சங்கத்தின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவர். துணைவியார் திருமதி.சுப்புலட்சுமி மற்றும் இரு மகள்களோடு சென்னை பாடி புதுநகரில் வசித்து வருபவர். சங்கத்தின் "பர்பிள் கிளப்" (ரூபாய்.இரண்டு லட்சம் நன்கொடையாளர்) உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


"ஆப்ரேஷன் 864" ஐ வெற்றிகரமாக செயல்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் தாங்கள் அடைந்த உயரங்களை மறந்து, நாளைய தலைமுறையும் நம்மைப்போல் உயரவேண்டுமென்று தங்கள் வயதையும், கொடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் என்ற தேரின் சக்கரமாய் சுழன்று பணியாற்றிய திரு.செல்வராஜ், திரு.குருசாமி ஆகியோரை சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் திரு.நல்லையா, திரு.நாரயணசாமி, திரு.சுப்பையா ஆகியோர் பொன்னாடை போர்த்தி பாராட்டினர். பாராட்டுக்கு நன்றி கூறிய இருவரும் "பஞ்சம் பிழைக்க வந்தது உண்மை, ஆனால் இனி யாரையும் அப்படி விடமாட்டோம் என்பதே சங்கத்தின் இலக்கு". அதை நோக்கி எங்களின் பயணம் தொடரும் என்றனர்.

இந்த நிகழ்வில் தலைவர் இராதாகிருஷ்ணன், பொருளாளர் இராமராஜ், துணைத்தலைவர் பெருமாள், மண்டல பொறுப்பாளர்கள் சுந்தரராஜன், சுப்பிரமணியன், இளைஞரணி தலைவர் நல்லுசாமி, த்ங்கவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved