🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! தொடர்-32

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் (31 ஆம் வாரத் தொடர்ச்சி )

எம்ஜிஆர் மரணம் பற்றி நாளிதழ்களில் வெளியான செய்தித்துளிகள்.

தினமணி:

நாடோடி மன்னன், புரட்சி தலைவர், பொன்மனச் செம்மல் இதுபோன்ற எந்த அடைமொழியும், எம்ஜிஆர் என்னும் மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தியையும், பெருமையையும் வெளிப்படுத்த முடியாது.அரை நூற்றாண்டு காலமாக தமிழக மக்களை சினிமா, அரசியல் என இரண்டு வகையிலும் கட்டிப்போட்டு வைத்த மாயக் கவர்ச்சியுடைய இந்தப் பெயர் தமிழகச் சரித்திரத்தின் ஏடுகளில் நிரந்தரமாக இடம் பெற்றுவிட்டது.

சென்னையைப் பொறுத்தவரை இன்று எம்ஜிஆரின் திருநாளாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டு, அதைக் குடியரசுத் தலைவர் திறந்து வைக்கும் வைபவம் நிகழவிருந்தது. இதற்காக எம்ஜிஆரின் கட்சித் தொண்டர்கள் தொலைதூரத்தில் இருந்து லட்சக்கணக்கில் வந்து குழுமிக்கொண்டு இருந்தனர். அவர்கள் காணக்கொடுத்தது எம்ஜிஆரின் பூத உடலைத்தான். மேலும் எம்ஜிஆரின் இறுதியாத்திரையில் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்த முடிந்ததே என்ற ஆறுதலும் தான் பெற முடிந்தது.

சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி எம்ஜிஆரின் சாதனைகள் நிகரற்றவை. சினிமாவிற்கு ஒரு புதிய அர்த்தத்தையும், கொள்கையையும் வகுத்துக் கொடுத்தவர்.

தினத்தந்தி:

தமிழகத்தின் விடிவெள்ளியாகவும், தமிழக மக்களின் இதயம் கவர்ந்த தலைவராகவும் விளங்கிய புரட்சி தலைவர், முதலமைச்சர் எம்ஜிஆரின் மறைவு தமிழகத்திற்கு மட்டுமல்ல, அகில இந்தியாவிற்கு மட்டுமல்ல, மனித சமுதாயத்திற்கே ஏற்பட்ட மாபெரும் இழப்பாகும். கலை உலகிலும் சரி, அரசியலிலும் சரி அவருடைய சாதனைகள் மகத்தானவை, ஈடு இணையற்றவை. வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. தனி மனிதர் ஒருவர் இத்தகைய சாதனைகள் புரிவது உலக வரலாற்றிலும் மிக அரிது. அவர் உயிர் வாழ்ந்தவரை அவருக்கு நிகர் அவரே என வாழ்ந்து காட்டினார்.

 தினமலர்:

தமிழக அரசியலில் திண்டுக்கல் பாராளுமன்றத் தேர்தல் ஒரு திருப்புமுனை. அத்தேர்தலில் மத்திய ஆளும் கட்சியையும், மாநில ஆளும் கட்சியையும் தோல்வியுறச் செய்து ஒரு சாதனை புரிந்தார். எந்த அரசியல் கட்சியும் தன்னை அசைக்க முடியாத நிலையில் பத்து ஆண்டுகளாக தமிழக முதல்வராக வீற்றிருந்த பெருமை அவருக்கு உண்டு.

வேறு எந்த அரசியல் தலைவரிடமும் இல்லாத நற்குணம் புரட்சி தலைவரிடம் உண்டு. தன்னிடம் பழகுபவர் நாணயமும், நம்பிக்கையும் உடையவர் என்று தெரிந்து கொண்டால், அவர் ஒரு சாதாரண தொண்டனாக இருந்தாலும் அன்புடன் பழகுவார். அதனால் தான் அவர் லட்சக்கணக்காணத் தொண்டர்களைப் பெற்று இருந்தார். இந்த நூற்றாண்டில் நமது நாட்டில் தோன்றிய மிகச் சிறந்த தலைவர்களுள் அவரும் ஒருவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனந்த விகடன்:

எம்ஜிஆர் திரைப்படத் துறையிலும் சரி, அரசியலிலும் சரி தனக்கென "தனி பாணி" கொண்டு தனி முத்திரை பதித்தவர். சினிமாவை எடுத்துக் கொண்டால், அவர் நடித்த படங்களில் ஆரம்பத்தில் பல இன்னல்களுக்கும், சோதனைகளுக்கும் ஆளாவார். ஆனால் இறுதியில் அவரே வெற்றி பெறுவார். அரசியலிலும் திமுக அவரைத் தூக்கி எறிந்தபொழுது, நடிகராவது அரசியல் கட்சி நடத்துவதாவது என்று கேலி பேசப்பட்டது. ஆனாலும் அவர் வீழ்ந்துவிடவில்லை. கட்சி ஆரம்பித்து சில ஆண்டுகளிலேயே திமுகவை தூக்கி அடித்து ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சர் ஆனார். பின்னர் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்ட போதும்  வெற்றி வாகை சூடி மீண்டும் முதலமைச்சர் ஆனவர். ஆட்சி பொறுப்பேற்றதும் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. கட்சிக்குள் கோஷ்டி பூசல் வெடித்ததையும் எதிர் கொண்டார். கோஷ்டி அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார். தன் அரசியல் வாரிசு யார் எனச் சொல்ல மறுத்தார். தலைமைப் பதவி தானாக கனிந்து உருவாக வேண்டிய விஷயம் என்பதை சொல்லாமல் சொன்னவர். இதையெல்லாம் பார்க்கும்பொழுது அவர் ஒரு புரியாத புதிர், எவரும் எடை போட முடியாத அதிசயம். எம்ஜிஆரின் வெற்றிக்கு காரணம் தான் என்ன?உண்மையில் யுகப் புரட்சியை உண்டாக்கிய பலத் தலைவர்களைப் போல, அடித்தள மக்களை வசப்படுத்தியதே எம்ஜிஆரின் மாபெரும் வெற்றியின் ரகசியம். உலக சரித்திரத்தில் இன்னொரு எம்ஜிஆர் தோன்ற முடியாது.

குமுதம்:

கடந்த பத்து ஆண்டுகாலமாகத் தமிழ்நாட்டின் மாபெரும் சக்தியாக இயங்கி வந்த முதல்வர் சரித்திரத்தில் தன் பெயரை அழியாதபடி பதித்துவிட்ட பெருமையுடன் காலமாகிவிட்டார்.மக்களின் நாடித்துடிப்பை சரிவரப் புரிந்துகொண்டு கோடிக்கணக்கான இதயங்களில் இடம் பெற்றிருந்த கவர்ச்சி மிக்க கதாநாயகன் காலமாகிவிட்டார். சரியாகப் பேசமுடியாத நிலையில் கூட, தனக்கு எதிராக ஒரு பேச்சுக்கூட எழும்பாத வகையில் கட்சியை நடத்தி வந்த அதிசய மனிதர் காலமாகிவிட்டார்.

வறியவர்களுக்கு கை கொடுப்பதை ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்து வந்த புகழ் செல்வர் காலமாகிவிட்டார்.

வறுமை வயப்பட்டவர்கள் ஒரு வள்ளலை இழந்திருக்கிறார்கள். அரசியல் பக்குவப்பட்ட ஒரு ராஜதந்திரியை இழந்திருக்கிறது. தமிழ்நாடு பல அலைகளையும், புயல்களையும் சமாளித்து ஆட்சிக் கப்பலைச் சோர்வில்லாமல் செலுத்தி வந்த ஒரு திறமைமிக்கத் தலைவரை இழந்துவிட்டது. இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது.

கல்கண்டு (தமிழ்வாணன்):

எம்ஜிஆரை அட்டைக்கத்தி வீரர் என்று சிலர் கேலி பேசி வருகிறார்கள். உண்மையிலேயே எம்ஜிஆர் கத்திச்சண்டை புரிவதில் வல்லவர் என்பது அந்த கிண்டல் பேர்வழிகளுக்குத் தெரியாது. உண்மையான வாளை ஏந்தி ஏக காலத்தில் பலர் பாய்ந்து வந்தாலும், அவர்களின் தாக்குதலில் இருந்து தற்காத்து, அவர்களை விரட்டி அடிக்கும் வல்லமை எம்ஜிஆருக்கு உண்டு. கத்திச் சண்டையில் அவர் முறைப்படி பயிற்சி பெற்றவர். ஆனாலும் அதற்காக இறுமாப்புக் கொள்வதில்லை. எனக்கு நிகர் யார்? என்று எதிர்ச் சவால் விடுவதுமில்லை. தன் ஆற்றலில் தன்னம்பிக்கை கொண்டவர். அதே நேரம் தன்னடக்கமும் கொண்டவர். எம்ஜிஆர் உள்ளம் தூய்மையானது. உண்மையான கத்திச் சண்டை புரிவதில்  "ஏர்ள்பிளைன்" என்ற மேலை நாட்டு நடிகர் புகழ் பெற்றிருந்தார். இன்று அந்த இடத்தில் எம்ஜிஆர் வீற்றிருக்கிறார், உலகப் புகழ் பெற்று இருக்கிறார். இதுபோல் இன்னும் சில பத்திரிகை செய்திகள் வெளிவந்தன.

அதேபோல் எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அவரின் நினைவாக, சென்னையில் நினைவிடம், நினைவு இல்லம், பல்கலைக்கழகம், தற்போது சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, எம்ஜிஆர் பெயர் என்று பல சிறப்புகள் சேர்த்துள்ளனர். அதேபோல் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் எம்ஜிஆரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் கூட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுமட்டும் அல்லாது வெளிநாட்டிலும் இதுபோல் பல சிறப்புகள் உண்டு. 

வலைதளங்களில் கிடைக்கப்பெற்ற அரிய தகவல்கள்:

இந்தியத் தலைவர்களிலே எம்ஜிஆருக்கு மட்டுமே பிரான்சில் சிலை உள்ளது. அதுபோலவே இந்தியத்  தலைவர்களில் எம்ஜிஆர் சிலை மட்டுமே இலங்கையிலும்  உள்ளது. மலேசியாவிலும் எம்ஜிஆர் சிலை திறக்கப்பட்டது, சிலையை  வடிவமைத்தது விஜிபி. மலேசியாவில் எம்ஜிஆருக்கு கோவில் உள்ளது எனவும், அதை அந்நாடு சுற்றுலாத் துறையில் சேர்த்துள்ளது எனவும் கூறுகிறார்கள். தமிழக தலைவர்களில் வெளிநாட்டில் அதிக சிலை உள்ளது எம்ஜிஆருக்கு மட்டுமே.

அமெரிக்கா ப்ரூக்கிளின் மருத்துவமனையில் எம்ஜிஆர் நலம் காண, மக்களின் பிராத்தனை பிரசாதம் பாதுகாக்க, தனி பிளாக் கட்டினார்கள் எனவும். அது சுற்றுலா சார்ட்டில் இணைக்கப்பட்டது எனவும் சொல்கிறார்கள். இந்திய முதல்வர்களிலே எம்ஜிஆருக்கு மட்டுமே அமெரிக்கா பாராளுமன்றம் மரியாதை செலுத்தியுள்ளது. எம்ஜிஆருக்கு முதல் தபால் தலை வெளியிட்டது கனடா. அதேபோல் பிரான்ஸ் நாட்டிலும் மலேசியாவிலும் தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது. 

உலகிலே தனி நபர் மேல் எழுதப்படட நூல்களில் அதிகம் எழுதப்பட்டது எம்ஜிஆர் பெயரில் தான். இதுவும் ஒரு கின்னஸ் சாதனை எனச் சொல்கிறார்கள். இப்படி பலச் சிறப்புக்களுக்குச் சொந்தக்காரர் எம்ஜிஆர்.

அடுத்த வாரம் எம்ஜிஆர் படங்களின் பட்டியலைப் பார்ப்போம்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved