🔴 LIVE | முப்பெரும் விழா 2023


முத்தான முதலாண்டு கண்டவரே தொடரட்டும் சாதனைப் பயணம்!

கொரோனா இரண்டாவது அலை உச்சம் தொட்டிருந்த நிலையில், உயிர்காக்க ஆக்சிஜன் வேண்டி மருத்துவமனை வாசல்களில் வரிசையில் வந்து நின்ற ஆம்புலன்ஸ்கள், மறைந்தவர்களை சுமந்துகொண்டு மயான வாசல்களில் காத்திருந்த ஆம்புலன்ஸ்கள் என மரண ஓலங்களுக்கு மத்தியிலே ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்ட தளபதியார் மூன்று மாதகாலங்கள் ஓயாமல் ஓடோடி உழைத்து தமிழகத்தை இயல்புநிலைக்கு கொண்டு சேர்த்தார். 

இரண்டாண்டு கால பொதுமுடக்கத்தால் முடங்கிப்போனவர்களும், நசுங்கிப்போனவர்களும் பலர் உண்டு. அட்சய பாத்திரத்தை வைத்துக்கொண்டு அகில  இந்தியாவை ஆள்பவர்களே கிள்ளிக்கொடுக்க யோசித்துக்கொண்டிருக்க, நம்பிக்கையோடு தொழுதிடும் மீட்பர்களும்,ரட்சிப்பர்களும் நடையை சாத்திக்கொண்டனர். தளபதி என்ன மந்திரம் செய்தாரோ தெரியவில்லை, காலியாகிப்போயிருந்த கஜானாவிலிருந்து இதோ பிடி நான்காயிரம் என்று துவண்டிருந்த மக்களுக்கு நம்பிக்கையை விதைத்தார்.

உலகம் உருள்வதை நிறுத்தியதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கு கால்தூசு மதிப்பில்லை. ஆனால் கொரோனோவின் பிடியிலிருந்து தப்பினாலும் தப்பலாம் எங்கள் பிடியிலிருந்து தப்பவே முடியாது என்று   பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி ஈவு இறக்கமின்றி மக்களை கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த வேளையில், இந்தியாவில் தளபதி ஒருவர் தான் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து மக்களின் வயிற்றில் பால் வார்த்தார். விலைவாசிகள் விண்ணைத்தொட்டுக்கொண்டிருக்கும் வேளையில் பால் விலையை குறைத்து குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழுவதைக் குறைத்தார்.

நகைக்கடன் தள்ளுபடி, நடமாடும் மருத்துவமனை, நகரப்பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் என மக்களின் நாடிபிடித்து மருத்துவம் செய்ததின் பலனாக இன்று தமிழகம் நாலுகால் பாய்ச்சலில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வலம் வருகிறது. கலவரங்களால் கவலையுற்றுள்ள தொழில்துறையினருக்கு இதோ அழைக்கிறது தமிழகம், அமைதியும், வளர்ச்சியுமோ திராவிட மாடலின் தீரா தத்துவங்கள் என்று அணைத்துக்கொள்வதில் அதிசியக்கிறது அகிலம்.

இந்தியாவே திராவிடத்தை தழுவிக்கொள்ள தயாராகி வருவதுகண்டு, தில்லியே கிறுகிறுத்துப்போய் உள்ளதாக தகவல்கள் பரவுகிறது. இந்தியா முழுமைக்கும், எந்த சூழலுக்கும் ஏற்ற பயிர் சமூகநீதி என்பதை இங்கே பிழைக்க வந்த இந்திக்காரனுக்கு புரிந்துவிட்டால், ஒரே நாடு, ஒரே ஆட்சி என்போர் கனவும் சேர்ந்தே நனவாகும் வகையில் குமரி முதல் இமயம் வரை அமைந்திடும் தளபதியார் தலைமையில்  திராவிட மாடல் ஆட்சி என்பதில் ஐயமில்லை. 

கட்டுரையாளர்:
P.செல்வராஜ்,
ஒன்றியச் செயலாளர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved