🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மழையெனப்பெய்து மறைந்த மாமனிதரே! - பிறந்தநாளில் வணங்குகிறோம்.

க.சுப்பு, மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அடுத்தபடியாக கம்பளத்தார்களால் அதிகம் உச்சரிக்கப்படும் மந்திரச்சொல். இன்று அவரின் 82-வது பிறந்தநாளைக் கொண்டாடிடும் இந்த வேளையில், அவர் எழுதி வெளியிட்ட காலமெல்லாம் வாழும் கட்டபொம்மன் புத்தகத்தில், நூலாசிரியர் பற்றிய குறிப்பில் 1941, நவம்பர் 11 பிறந்தநாளாக  குறிப்பிடப்பட்டுள்ளது. இது அன்றைய காலத்தில் நடைமுறையில் இருந்த உண்மையான பிறந்தநாளுக்கும், பள்ளிச் சேர்க்கையின் பொழுது குறிப்பிடப்படும் பிறந்தநாளுக்கும் உள்ள வேறுபாடுதான் என்பதை குடும்பத்தினரிடம் உறுதிபடுத்திக்கொண்டதை இங்கே குறிப்பிடுவதின் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் குழப்பங்களுக்கு விடையாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.


நமது சமுதாயத்தின் "அறிவு ஜீவி" மறைந்தும் கம்பளத்தார்களின் மனங்களில் வாழும் ஐயா க. சுப்பு அவர்கள் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகில் உள்ள எஸ்.பி நத்தம் கிராமத்தில் மு. கந்தசாமி நாயக்கருக்கும், பொம்மக்காளுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பள்ளி, கல்லூரி நாட்களில் மாணவர் தலைவராக விளங்கினார். விருதுநகரில் உள்ள செந்தில்குமார நாடார் கல்லூரியில் பயின்றபொழுது, கோவையில் உள்ள பூ.சா.கோ. கலைக்கல்லூரியின் 'நாவலர் மன்றம் ' நடத்திய மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் தொடர்ந்து மூன்றாண்டுகள் முதல் பரிசாக தங்கப்பதக்கம் வென்றார். பின்னர் சட்டம் பயின்ற க.சுப்பு, சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ப.சுப்பராயன் அவர்களின் மூன்றாவது மகனாக லண்டனில் பிறந்து வளர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞராக பணியாற்றி மறைந்த அமரர்.மோகன் குமாரமங்கலம் அவர்களிடம் பயிற்சி வழக்கறிஞராகப் பணியாற்றினார். 

அதன்பின்னர் மதுரையில் பாளை.சண்முகம் என்பவரிடம் இளநிலை வழக்கறிஞராகவும் பணியாற்றி, இறுதியில் திருவில்லிபுத்தூரில் வழக்கறிஞர் ஆகப் பணியாற்றினார். பொதுவுடைமைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த இவர்,1971 ல் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி வாகை சூடி முதல் முறையாக சட்டமன்றம் சென்றார். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான மணலி கந்தசாமி அவர்களின் துணையோடு க.சுப்பு எடுத்த பெரும் முயற்சியால், வீரத்தின் விளை நிலமாம்  பாஞ்சையில், வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை கட்டப்பட்டு, வருவாய் துறைப் பதிவேட்டிலிருந்து வெள்ளையரால் நீக்கப்பட்ட "பாஞ்சாலங்குறிச்சி" பெயரை 18.8.1974 ல் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் மீண்டும் உருவாகிட காரணமானவர். 

பின்னர் திமுகவில் இணைந்து உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டத்தின் (மிசா) கீழ் கைது செய்யப்பட்டு, ஓராண்டு காலம் சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார். இதன் விடுதலைக்குப் பிறகு 1977 ல் வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். சட்டமன்றத்தில் தன் நகைச்சுவைப் பேச்சாற்றலால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பாராட்டையும் பெற்றார். அரசியல் மேடைகளில் 'மழை' என்ற அடைமொழியுடன் சிறந்த மேடைப் பேச்சாளராகத் திகழ்ந்தார். 


கட்டபொம்மன் பெயரில் போக்குவரத்துக் கழகம் அமைவதற்கு காரணமானவராக விளங்கியவர். அடுத்து அரசியலின் தட்பவெப்பம் அறிந்த இவர், எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.1986 ல் அதிமுக சார்பில் சட்டமன்ற மேலவைக்குத் தேர்வு செய்யப்பட்டு MLC யாகவும் பணியாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர். நமது சமுதாயத்தில், என் நினைவுக்கு எட்டிய வரையில் வேறு எவரும் MLC யாகப் பணியாற்றியதாகத் தெரியவில்லை. செக் நாட்டில் நடைபெற்ற உலக சமாதான மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து சென்ற தூதுக்குழுவில் இடம் பெற்றார். சோவியத் நாட்டிற்கும் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பெருமைக்குச் சொந்தமானவர். 

எம்ஜிஆர் ஆட்சியில் "நெல்லை கட்டபொம்மன்" மாவட்டம் உருவாக முக்கிய காரணமும் இவரே ஆவார். பாஞ்சை வேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் பரப்புவதை முக்கிய நோக்கமாகக் கொண்டவர். அரசியலில் முன்னணித் தலைவர்களின் அன்பைப் பெற்றவர். அந்த வரிசையில் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, ஜீவானந்தம், கல்யாணசுந்தரம், தா.பாண்டியன்,நல்லகண்ணு, மகேந்திரன், சுப்பாராயன், மூப்பனார், வாழப்பாடி இராமமூர்த்தி, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ப.சிதம்பரம் போன்றோருடன் நெருங்கிப் பழகியவர். எங்களைப் போன்ற இளம் அரசியல்வாதிகளுக்கு நல்ல முன்னோடியாகத் திகழ்ந்தவர். அன்னாரின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குவோம். அரசியலில் அவர்தம் இடத்தை நிரப்பிட அயராது பாடுபடுவோம் என்று உறுதி ஏற்போம்.

கட்டுரையாளர்:

திரு.அ.காசிராஜன், அருப்புக்கோட்டை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved