🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உட்கட்சிப்பதவிகளில் சமூகநீதி! கவனிப்பாரா முதல்வர்?

திமுக-வின் 15-வது பொதுத்தேர்தலை நடத்த தலைமைக்கழகம் கடந்த ஏப்ரல் 17-இல் அறிவிப்பு வெளியிட்டது.

இதில் முதல் கட்டமாக மாநகராட்சி அமைப்பிலுள்ள வார்டு செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும், நகர அமைப்புகளிலுள்ள வார்டு செயலாளர், நகர செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும், பேரூர் அமைப்புகளில் வார்டு செயலாளர், பேரூர்க் கழக செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் தேர்தல்கள் நடந்து முடிந்து நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுதவிர மாநகராட்சிகளில் உள்ள பகுதிச் செயலாளர், மாநகரச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியுள்ளது.

இதுதவிர, ஊராட்சிச் செயலாளர் பதவிகள் நீக்கப்பட்டு கிளைக்கழக அளவில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இப்பொறுப்புகளுக்கான தேர்தல் 2020-ஆம் ஆண்டே முடிக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அளவிலான (ஒன்றியச் செயலாளர்) நிர்வாகிகள் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகம் 2021-இல் ஆட்சியமைத்தபின் நடைபெறுகின்ற உட்கட்சித் தேர்தலாக இருப்பதால் பதவிகளை கைப்பற்ற கட்சியினரிடம் கடும் போட்டி நிலவுகிறது. இதில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு குறிப்பாக தங்கள் சாதியினருக்கே முக்கிய பொறுப்புகளில் வாய்ப்பளிப்பதாக கட்சிக்குள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பு பெரும்பான்மை சாதியினருக்கு வழங்குவதே வாடிக்கையாக உள்ளது. இதன் மூலம் அமைச்சர் பதவிகளையும் கைப்பற்றிக்கொள்ளும் பெரும்பான்மை சாதியினர், மறைமுக தேர்தல் நடப்பதால் ஒன்றிய பெருந்தலைவர், பேரூராட்சி தலைவர், நகரமன்ற தலைவர், ராஜ்யசபா, வாரியம் அன அனைத்து பதவிகளையும் அபகரித்துக் கொள்கின்றனர்.இதனால் காலம் காலமாக கட்சிக்கு உழைத்தாலும் திமுக-வில் சாதி சிறுபான்மையினருக்கு வாய்ப்பே இல்லை என்ற எண்ணம் கட்சியினரிடம் மேலோங்கி வருகிறது. 

தேர்தல் மூலமே நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும், தமிழகத்திலுள்ள ஐந்தாறு சாதிகளைத் தவிர்த்து முன்னூறுக்கும் மேற்ப்பட்ட சமூகங்களுக்கு போதிய அரசியல் பிரதிநிதித்துவம் கிடைப்பது இல்லை என்பதே எதார்த்தம். நீண்டகாலமாக திமுகவில் நிலவிவரும் இந்தப்போக்கு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரானதாக உள்ளது.

திமுக ஆட்சிப்பொறுப்பேற்றுக்கொண்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அரசுப் பதவிகளில் சமூகநீதியை கண்காணிக்க பேரா.சு.வீ தலைமையில் குழு அமைக்கப்பட்டது வரவேற்பை பெற்றது. அதேபோல் கட்சியிலும், ஆட்சியிலும் சாதி சிறுபான்மை மக்களுக்கும் உரிய வாய்ப்பினை வழங்கிட கண்காணிப்புக்குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமிக்க வேண்டும்.

வாய்ப்புள்ள இடங்களில் சாதி சிறுபான்மையினரில் தீவிரமாக கட்சிக்கு உழைப்பவர்களுக்கு செயலாளர், மாவட்டப்பிரதிநிதி, மாநில செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர் பதவிகளும், வாரியம் உள்ளிட்ட நியமனப்பதவிகளையும் வழங்கி சுதந்திரத்திற்குப்பின் தமிழகத்தில் ஒருசில சாதிகளிடம் மட்டுமே தேங்கியுள்ள அரசியல் அதிகாரத்தை எல்லோருக்கும் பரவலாக்க தமிழக முதல்வர் முன்வரவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved