🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பொருளாதார வலிமையை சாத்தியப்படுத்துவோம்!

பல்வேறு சாதி,மத, இன, மொழி அடையாளங்களைக்கொண்ட இந்திய துணைக்கண்டத்தில், தனி மனித சமூக அந்தஸ்திற்கும், அதிகாரத்திற்கும் சாதியே அடிப்படையாக உள்ளது. மானிட சமூகத்தின் வாழ்க்கையானது தேசம், ஆட்சி, ஆட்சிமுறை, ஆட்சிக்காலம், சொத்து, நிலவுடமை, தொழில், கல்வி இவற்றை மையமாகக்கொண்டு காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வந்திருக்கிறது. வேவ்வேறு காலங்களில் பெயர்கள் வெவ்வேறாக இருந்தாலும், அந்தஸ்து, அதிகாராம் இவற்றிற்கு மையப்புள்ளியாக என்றும் நிலைத்து நீடித்து இருப்பது அச்சமுதாய மக்களின்  சொத்து மதிப்பு.

சமூக மதிப்பீட்டுக்குறியீடுகளில் பல இராஜகம்பளத்தார் சமூகத்திற்கு மிகநெருக்கமானவையாக இருந்திருந்தாலும், சமகால புதிய பொருளாதாரக்கொள்கையில் உலகம் பயணித்துக் கொண்டிருக்கையில், கம்பளத்தார் சமுதாய மக்களிடமிருந்த நிலவுடமை கொஞ்சம், கொஞ்சமாக தேய்ந்துகொண்டு வருகிறது. இதற்கு இணையாக கல்வியில் முன்னேறி, பூர்வீக .கிராமங்களில் இருந்து நகரங்களுக்கும், வெளிநாட்டிற்கும் குடியேறிக்கொண்டுள்ளனர். மென்பொருள்துறையில் பேக்கேஜ்களாக பல லட்சங்களை பெற்றாலும், அடிப்படை வாழ்க்கைக்கும், உணவிற்கும் தங்கள் உடலை மட்டுமே நம்பியுள்ளனர். மூலதனமோ, உற்பத்தி சாதனங்களோ இல்லாமல், அடிமைச்சமூகங்களும், தொழிலாளர் வர்க்கங்களும் எப்படி உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டிருந்ததோ, அதுவே இன்று வேறுவடிவில் மனிதமூளையை மட்டுமே நம்பி வாழும் நவீன நாடோடி, பாட்டாளி வர்க்கங்களாக தொடர்கின்றனர். இவர்கள் நிலவுடமை, தனிச்சொத்துக்களில் இருந்து மட்டுமல்ல குடும்ப உறவுகளில் இருந்தும் விடுபடும் போக்கு அதிகரித்துவருகிறது.

இதற்கு மாற்றாக தொடக்க காலம் தொட்டு வணிகம், தொழில்துறைகளில் கால்பதித்த சமூகங்கள் தொடர்ந்து தங்கள் பொருளாதார செல்வாக்கை தக்க வைத்துக்கொள்வதும், அரசியல், ஆட்சி நிர்வாகங்களோடு நல்ல தொடர்பில் இருந்துகொண்டு செல்வாக்கு செலுத்துவதையும் பார்க்கிறோம். தமிழகத்தில் கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன் சமூகமாக ஒருங்கிணைந்து தொழில்துறையில் கால்பதித்த சமூகங்கள் இன்று தமிழக பொருளாதாரத்தையே தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதையும் பார்க்கின்றோம். இதையும் தாண்டி பார்சி, சிந்தி, ஜெயின் உள்ளிட்ட சமூகங்கள் இந்திய பொருளாதாரத்தில் தங்களின் பங்களிப்பு இத்தனை சதவீதம் என்று பேசும் அளவிற்கு தொழில்துறையில் கோலேச்சுவதும், ஆண்டுதோறும் தங்கள் சமுதாய வர்த்தகர்கள் மாநாட்டை நடத்தி வருவதையும் பார்க்கின்றோம்.

இவற்றையெல்லாம் காலதாமதமாக உணர்ந்து கொண்டாலும், கம்பளத்தார் சமுதாயத்தினரும் வலிமையான பொருளாதார கட்டமைப்பை உருவாக்க வேண்டியுள்ளது. இதற்கு இளைஞர்கள் பெருமளவில் தொழில்துறையில் தடம்பதிக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே ஒரு சிலர் தொழில்துறையில் தடம்பதித்து முதல்தலைமுறை தொழிலதிபர்களாக வெற்றிகரமாக வலம் வருவது பெருமைக்குறிய விசயம். சமுதாயத்தில் அதிகப்படியானோர் தொழில்துறையில் தடம்பதிப்பது ஒருவிதமான பாதுகாப்பை வழங்குவதோடு, தன்னம்மிக்கையையும் வளர்க்கிறது. முதல்தலைமுறை தொழில்முனைவோராக களம்கண்டு வெற்றியை சுவைப்பதும், அதை நிரந்தரமாக்கிக்கொள்வது ஒருபுறம் இருந்தாலும், சுயதொழில் செய்யும் இளைஞர்களுக்கு மணப்பெண் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. எதிர்கால வாழ்க்கைக்கு குறைந்தபட்ச உத்தரவாதம் இல்லாதபோது, பெற்றோர்கள் துணிந்து தங்கள் மகள்களை திருமணம் செய்துகொடுக்க தயங்குகின்றனர். இது தொழில்துறையில் கால்பதிக்க நினைப்பவர்கள் சந்திக்கும் முதல் சவால் என்றால் மிகையல்ல.

இதற்கு மாற்றாக, ஒரு சமூகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் தொழில்துறையில் ஈடுபடும்பொழுது, முதல்முயற்சியில் தோல்வி அடைந்து பொருளாதாரத்தை இழந்திருந்தாலும்கூட, அவரின் அனுபவத்தை மூலதனமாகக் கொண்டு சமுதாயத்தின் துணைகொண்டு மீள்வதும், பொருளாதார சுழற்சியை சமூகத்திற்குள்ளேயே தக்கவைப்பதால் கிடைக்கும் ஆதாயமும், சமுதாயத்தினர் பெருமளவில் தொழில்துறை பக்கம் கொண்டு சேர்க்கும். குறிப்பிடத்தக்க அளவில் பொருளாதாரத்தை கைப்பற்றினால் மட்டுமே சமுதாயத்திற்குள் நிலவி வரும் ஏற்றத்தாழ்வு, வரன் தேடுவதில் உள்ள சிக்கல், நாடோடிகள் போல் பிழைப்புக்காக இடத்தை மாற்றிக் கொண்டேயிருக்கும் போக்கு, அரசியல் அதிகாரத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி ஆகியவற்றிற்கு அருமருந்தாக அமையும்.

எனவே தொழில்துறையின்மேல் கம்பளத்தார்களுக்கு இருக்கும் ஒவ்வாமைக்கு முற்றுப்புள்ளி வைத்து, இளம் தலைமுறையினரை சுயதொழிலுக்கு ஊக்குவிக்க, கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த முதல்தலைமுறை தொழில்துறை உறவுகளை நமது தொட்டிய நாயக்கர்.காம் இணையதளத்தில் அறிமுகம் செய்துவைக்கின்றோம்.

சாதித்துவிட்டதாக அவர்கள் ஏற்க மறுத்தாலும், நாடு முழுவதுமுள்ள கம்பளத்தார்களின் நிலையை அறிந்தவர்கள் என்ற வகையில் அவர்களின் சாதனை உயரங்களை நாம் அறிவோம். அதே தன்னடக்கத்தோடும், உழைப்போடும் அவர்கள் தம் இலக்கிணைநோக்கி பயணிக்கட்டும். கரடுமுரடான பாதையை கொஞ்சமேனும் சீர்படுத்தி அமைத்துள்ள இந்தப்பாதையில், நம் முன்னே செல்லும் உறவுகளின் கரம்பற்றி இளைஞர்கள் தங்கள் பயணத்தை தொடங்க இவர்களின் வாழ்க்கை பாதைகாட்டும்.

சாதி சிறுபான்மையினருக்கு பொருளாதார வலிமையே அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் வழி. பொருளாதார வலிமை ஒருநாளில் சாத்தியப்படுவதல்ல. பல தலைமுறைகளின் உழைப்பு. விதையை நாம் நடுவோம், அறுவடையை வருங்காலம் அனுபவிக்கட்டும். சமூகமாய் சிந்திப்போம்! சாத்தியப்படுத்துவோம்!

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved