🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இந்தியாவின் இதயத்தை அறிவோம்!

உலக மக்கள் தொகையில் 17.5% மக்கள் இந்தியாவில் வசிக்கின்றனர். இதில் ஏறக்குறைய 50 சதவீதத்தினர் 25 வயதுக்கும் உட்பட்ட இளைஞர்கள் ஆவர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் இதயமாகச் செயல்பட்டு வருவது இந்திய நாடாளுமன்றம் ஆகும். இந்நாடாளுமன்றமானது  சட்டமியற்றும் அதிகாரமிக்க, மக்களவை (Loksabha) மற்றும் மாநிலங்களவை (Rajyasabha) என இரு அவைகளை உள்ளடக்கியது. இவற்றில் முறையே 545, 245 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் இந்திய அரசியலமைப்பின்படி மேலவையில் 250 இடங்கள் உள்ளது. ஆனாலும் 5 யூனியன் பிரதேசங்களுக்கு இடம் இல்லாததால் தற்போது 245 இடங்களே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கீழவையான மக்களவையில் இரு ஆங்கிலோ இந்தியரையும், மேலவையான மாநிலங்களவையில் கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில் துறைகளில் புகழ்பெற்ற 12 உறுப்பினர்களை குடியரசுத்தலைவர் நேரடியாக நியமனம் செய்கிறார். இவ்விரு அவைகளின் உறுப்பினர் எண்ணிக்கை அந்தந்த மாநிலத்தின் மக்கள் தொகைக்கேற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது.


அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு மக்களவையில் 39 இடங்களும், மாநிலங்களவையில் 18 இடங்களும் உள்ளது. மிக அதிக மக்கள்தொகை கொண்ட உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு 80 மக்களவை உறுப்பினர்களும், 31 மாநிலங்களவை உறுப்பினர்களும் உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப்பிரதேசம் 2, சிக்கிம் 2, நாகாலாந்து 1, மணிப்பூர் 2, திரிபுரா 2, என்ற விதத்தில் மக்களவை உறுப்பினர் இடங்களும், இவை அனைத்திற்கும் தலா  ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும்  உள்ளது. அதுமட்டும் அல்ல அந்தமான் நிக்கோபர் தீவுகள், தத்ரா மற்றும் நாகர் ஹைவேலி, டாமன் மற்றும் டையூ, சண்டிகர்,  லட்சத்தீவு போன்ற யூனியன் பிரதேசங்களுக்கு தலா  ஒரு மக்களவை இருக்கைகள் உள்ளது. ஆனாலும் மாநிலங்களவை உறுப்பினருக்கான இடம் ஒதுக்கப்படவில்லை. இதில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு  ஒரு மாநிலங்களவை மற்றும் ஒரு மக்களவை உறுப்பினர் இருக்கை உள்ளது. அதேபோல் யூனியன் பிரதேசங்களிலேயே அதிக மக்களவை (7) உறுப்பினர்  உள்ள டெல்லி யூனியன் பிரதேசத்திற்கு, மாநிலங்களவையில்  ஒரு இருக்கை மட்டுமே உள்ளது .இந்தியக் குடியரசின் மாநிலங்களவை அமைப்பு அமெரிக்காவின் செனட் சபையைப் போல எல்லா மாநிலங்களுக்கும் சம அளவில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 


 
இந்திய அரசியலமைப்பின்படி மக்களவைத் தலைவராக, மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒருவர் மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். மாநிலங்களவையின் நிரந்தர தலைவராக "குடியரசு துணைத் தலைவர்" பொறுப்பு வகிப்பார். அதேபோல் மேலவை உறுப்பினரின் பதவிக் காலம் 6 ஆண்டுகள். இந்த மாநிலங்களவை நிலையான ஆயுட்காலம் உடையது. எனவே இந்த அவையைக் கலைக்க முடியாது. இதன் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவியிலிருந்து ஓய்வு பெறுகின்றனர்.(28) மாநிலங்கள் மற்றும்( 8) யூனியன் பிரதேசங்களைக் கொண்ட கூட்டாட்சி நாடான இந்தியாவிலிருந்து, எந்த ஒரு மாநிலமோ அல்லது சில மாநிலங்கள் இணைந்தோ, பிரிந்து செல்ல முடியாது. ஆனால் சோவியத் யூனியன் கூட்டமைப்பில் பிரிந்து செல்லும் அதிகாரம் இருந்தது. இந்தியாவில் அத்தகைய உரிமை இல்லை. உண்மையான கூட்டாட்சியில் பிரிந்து செல்லும் உரிமை, எந்த ஒரு மாநில அரசுக்கும் கிடையாது. இந்திய அரசிலமைப்புச் சட்டம் இங்கிலாந்து அரசிலமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு எழுதப்பட்ட அரசியல் அமைப்பாகும். இந்தியாவின் மாநிலங்களவை, இங்கிலாந்தில் உள்ள மேலவையான 'பிரபுக்கள் அவை' போல் முற்றிலும் அதிகாரமற்ற சபையும் அல்ல,  அமெரிக்காவின் 'செனட் சபை' போல் வானளாவிய அதிகாரம் கொண்டதும் அல்ல. இந்தியாவில் நிதி மசோதா தவிர, மற்ற அனைத்திலும் ஏறக்குறைய மக்களவையைப் போல் அதிகாரம் பெற்றது தான் மாநிலங்களவை ஆகும். அந்தவகையில் தற்பொழுது தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கான தேர்தல், வரும் ஜூன் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில்  திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, ராஜேஸ்குமார் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் முடிவடைகிறது. இத்தேர்தலில் திமுக சார்பில் 3 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும், காங்கிரசில் ஒருவரும் போட்டியிட முடிவு செய்துள்ளனர். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் (இன்று) மே 24 ல் துவங்கி மே- 31 அன்று முடிகிறது.வாக்குப்பதிவு  ஜுன் 10 ல் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்குப் பதிவு நடந்து, அன்று மாலை 5 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கட்டுரையாளர்: திரு.அ.காசிராஜன்.M.A.,
  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved