🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இராஜகம்பளத்தாரை ஏமாற்றாதே! உயர்நீதிமன்றம் குட்டு!

தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையத்தின் கூட்டம் வரும் 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்று தடைவிதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு. 

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் கமிசன் இரண்டுமுறை (1968,1983) அமைக்கப்பட்டபோது அதன் தலைவராக இருந்தவர்கள் சட்டநாதன் மற்றும் அம்பாசங்கர் என இருவரும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள். அதேபோல் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவராக ஜனார்த்தனம் முதல் இன்றைய தலைவர் தணிக்காசலம் வரை வன்னியர் சமூகத்தினரே கோலேச்சி வருகின்றனர். இதுதவிர மயிலாப்பூரில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் பணியாற்றும் அலுவலர்களும் பெரும்பான்மையினர் வன்னியர் சமுதாயத்தினரே இருந்து வருகின்றனர். 

இதில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக அம்பாசங்கர் அளித்த அறிக்கையை மையப்படுத்தியே இதுவரை இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த ஆணையத்தில் மொத்தம் இருந்த 21 உறுப்பினர்களில் பெரும்பான்மையினர், அதாவது 14 பேர் அம்பாசங்கர் அரசுக்கு அளித்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளாமல், 14 பேர் இணைந்து தனியாக அறிக்கை வழங்கினர். 1985-இல் அறிக்கை அளித்த அம்பாசங்கர் எந்தவித தகவல்களையும் நேரடியாக கள ஆய்வு செய்து திரட்டாமல், வேண்டுமென்றே தன் சாதியான வன்னியர் சாதி மக்கள்தொகையை கூட்டியும், பிற சாதிகளை குறைத்தும் கணக்கிட்டுள்ளதாகவும், எனவே அதை ஏற்க முடியாது என்று கூறி 14  உறுப்பினர்கள் தனியாக அரசிடம் அறிக்கை வழங்கினர். 

இதனால் அம்பாசங்கர் அறிக்கையை ஏற்காமல் அன்றைய முதல்வர் எம்ஜிஆர் கிடப்பில் போட்டுவிட்டார். ஆனால் அதிகாரத்திலுள்ள அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் அம்பாசங்கர் அறிக்கையை எங்கெங்கு பயன்படுத்தவேண்டுமோ, அங்கெல்லாம் திணித்து பல்வேறு சதிச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் வன்னியர் சமூகம் தமிழகத்தில் மிகப்பெரிய சமூகம் என்று கட்டமைக்கப்பட்டது. 

இதுகுறித்தான தெளிவு பிற சமுதாயங்களுக்கு இல்லாமல் போனது அவர்களுக்கு வசதியாக போனது. இதுவே வன்னியர் தனி இடஒதுக்கீடு கேட்கும் போராட்டத்திற்கும், வன்முறைகளுக்கும் அடிப்படையாக இருந்தது. 1989-இல் வன்னியர் சமூகத்தையும் இதர 115 சாதிகளையும் இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனால் அனைத்து சமூகங்களும் உரிய பலனை பெற்றனர்.

சமூகத்தில் எந்தப்பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாக இருப்பது வன்னியருக்காகவே கட்சி நடத்துகிறோம் என்று சொல்பவர்களின் அரசியலுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இதனால் வன்னியருக்கு மட்டுமே தனியாக 20% இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை கையிலெடுத்து அவ்வப்பொழுது பேசுவதும், தேர்தல் பேரம் வேறுவகையில்  செட்டில் செய்யப்பட்டால் அதை கிடப்பில் போடுவதுமாக இருந்தனர். 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலில் முழுமையாக துடைத் தெரியப்பட்டவுடன், மீண்டும் அரசியல்  செய்யவும், கூட்டணி பேரங்களுக்கும், வன்னியர் தனி இடஒதுக்கீட்டை கையில் எடுத்தனர். கலைஞர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இருந்தபொழுது அரசியல் பேரங்களை அறங்கேற்ற முடியாதவர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பலவீனமான அரசு இருந்தபொழுது வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு பெற்று, அதை தங்கள் சாதனையாக முன்னிறுத்தி 2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டனர். 

அரசியலில் இது ஒருபுறம் நடந்துவந்தாலும், அதிகார மட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர்களாக தங்கள் சாதியினரை கொண்டு வந்து மோசடிகளில் ஈடுபட்டு வந்தனர். அதன்படி 2012-இல் நீதிபதி ஜனார்த்தனம் தலைவராக இருந்தபொழுது வன்னியருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கும் பரிந்துரையை நிறைவேற்றும் தீர்மானத்தை கொண்டு வந்தபொழுது பிற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு அறிக்கை அனுப்பினர், இருந்தாலும் அம்பாசங்கர் போன்றே ஜனார்த்தனமும் தனியாக பரிந்துரை செய்தார். 

இதையே மீண்டும் தற்போதைய ஆணையராக உள்ள நீதிபதி தணிக்காசலமும் செய்து வருகிறார். 2020 டிசம்பரில் நடைபெற்ற ஆணையக்கூட்டத்தில் வன்னியர் தனி இட ஒதுக்கீட்டிற்கான பரிந்துரை செய்யவுள்ளதாக தெரிந்தவுடன், தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சாதியினர், மயிலாப்பூரிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  அப்பொழுது போராட்டக்காரர்களிடம் பேசிய ஆணைய தலைவர் தணிக்காசலம், இக்கூட்டத்திற்கு அம்மாதிரி எந்த நோக்கமும் இல்லை என்று தெரிவித்தார். ஆனால் இக்கூட்டத்தின் நோக்கம் குறித்து பிற உறுப்பினர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தாக சொல்லப்பட்டது. இதற்குப்பிறகு ஒருசில மாதங்களில் வன்னியருக்கு 10.5 இடஒதுக்கீடு வழங்க அரசு பெயரளவில் ஆணையத்தின் கருத்து கேட்டபொழுது , அதற்காகவே காத்திருந்தது போல் அதேநாளில் தன் சாதி பாசத்தால் ஒப்புதல் வழங்கினார் தணிக்காசலம். 

இதன்பிறகு வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் 8/2021 கொண்டுவரப்பட்டதும், அதை தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சாதியினர் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் போராடி ரத்து செய்தது அனைவரும் அறிந்ததே. 

நீதிமன்றங்களில் குட்டுப்பட்ட தமிழக அரசும், பாமக வும் எப்படியாவது வன்னியர் சாதிக்கு தங்களே பாதுகாவலன் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் சட்ட வல்லுனர்களிடம் கலந்து ஆலோசித்து மீண்டும் சட்டம்கொண்டுவரப்படும் என்று அரசும், உச்சநீதிமன்றத்தீர்ப்பு தற்காலிக பின்னடைவே  மீண்டும் கொண்டுவர தடையில்லை என பாமகவும் சொல்லிவருகின்றன. இந்த களோபரங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கூட்டம் மே-31 அன்று நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

ஏற்கனவே ஆணையத்தின் தலைவராக அமர்ந்து கொண்டு அனைத்து மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு தன் சாதிக்காக பாடுபட்டு வரும் ஆணையத்தின் தலைவர் தணிக்காசலம் , இக்கூட்டத்தில் மீண்டுமொரு மோசடியை அரங்கேற்றலாம் என்ற அச்சம் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையே ஏற்பட்டுள்ளது. 

எனவே இதனை முறியடிக்க ஒன்றுகூடியுள்ள தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகங்கள் சார்பில், உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு நேற்று நீதியரசர்கள் சுரேஷ்குமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு  வந்தது. விசாரணையின் முடிவில், மாநில மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 31.5.2022 நடத்தும் கூட்டத்தில் , இடஒதுக்கீடு சம்பந்தமாக எந்த விவாதமோ, முடிவோ எடுக்கக்கூடாது என இடைக்கால உத்திரவு வழங்கினர்.    

மேலும் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மற்றும் மாநில அரசு  உள் இடஒதுக்கீடு சம்மந்தமாக முக்கிய முடிவுகள் எடுக்கும்போது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை கலந்து ஆலோசிக்க வேண்டும் ஏன்றும் உத்தரவிட்டுள்ளனர்.  இதுகுறித்து  நான்கு வாரங்களில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர்,  முதன்மைச்செயலாளர்,  பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர், ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்திரவுவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். 

உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவால் 40 ஆண்டுகாலம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை தங்கள் இஷ்டம் போல் ஆட்டு வித்தவர்களின் ஆதிக்கமும், உச்சநீதிமன்றம் குட்டு வைத்த பிறகும் ஆணையத்தின் தலைவர் பதவியில் தொடரும் முன்னாள் நீதிபதி தணிக்காசலம் மோசடிகளுக்கும் முடிவு கட்டியுள்ளது. 

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்தித்து முறையிட பலமுறை நேரம் ஒதுக்கக்கேட்டும் கிடைக்காத போதும், தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகங்களின் சட்டப்போராட்டம் தொடர்ந்து பெரிய அளவில் வெற்றிபெற்று வருவது அரசியல் அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தீர்ப்பு ஆகஸ்டு 7-இல் மதுரையில் நடைபெறும் சமூகநீதி மாநாட்டிற்கு உற்சாக டானிக்காக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved