🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக பதவியேற்கும் தம்பதியினர்! நீதி வெல்லட்டும்-வாழ்த்தி மகிழ்கிறோம்!

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான முந்தைய அதிமுக அரசு, 2021-சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பிற்கு சிலமணி நேரம் முன்பாக, வன்னியர் சாதிக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 8/2021 அவசர சட்டத்தைக்கொண்டுவந்தது. அன்றைய கவர்னர் பன்வாரிலால் புரோகித் அச்சட்டத்திற்கு 24 மணிநேரத்தில் ஒப்புதல் வழங்கினார். அரசியல் சாசனத்தை அவமதித்தும், பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட 115 சாதிகளின் உரிமைகளை பறிக்கக்கூடிய இச்சட்டத்தை எதிர்த்து, தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை உள்ளடக்கிய சீர்மரபினர் நலச்சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் அவசர வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. உச்சநீதிமன்ற விசாரணையில் இச்சட்டத்திற்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கை முதலில் விசாரிக்கட்டும் என்றுகூறி முடித்து வைத்தது.

அதன்பிறகு வழக்கை விசாரித்த சென்னையை உயர்நீதிமன்றமும் வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு தடைவிதிக்க மறுத்தது. இதனையடுத்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவே பலகட்ட போராட்டங்களை தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சீர்மரபினர் சாதிகள் செய்ய வேண்டியிருந்தது. 2021-பிப்ரவரி இறுதிநாளில் கொண்டுவரப்பட்ட 8/2021 சட்டத்திற்கு எதிராக, உடனடியாக வழக்கு தொடரப்பட்டு, 2021- மார்ச் முதல்நாளில் இருந்து தொடர் சட்டப்போராட்டத்தை நடத்தியபொழுதும், இவ்வழக்கை விசாரிக்கும் நிரந்தர அமர்வை அமைக்கமுடியவில்லை. கொரோனோ பெருந்தொற்றின் இரண்டாவது அலை, தமிழக சட்டமன்றத் தேர்தல், நீதிமன்ற கோடை விடுமுறை என அடுத்தடுத்த தடைகளால் வழக்கு விசாரணை முழுவடிவம் பெறவில்லை. முதலில் உயர்நீதிமன்றத்தின் அன்றைய தலைமைநீதிபதி சந்தீப் பானர்ஜி, நீதிபதி செந்தில் ராமமூர்த்தி அமர்வில் விசாரணை தொடங்கிய நிலையில், செந்தில் ராமமூர்த்தி திடீரென வழக்கிலிருந்து விலகிக்கொண்டார். மீண்டும் சில வாரங்களுக்குப்பிறகு வழக்கு தலைமை நீதிபதி.சந்தீப்பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கு பட்டியலிடும்பொழுதே விலகிக்கொள்ளாத நீதிபதி ஆதிகேசவலு அவர்கள், வழக்கு விசாரணையின்பொழுது விலகிக்கொள்வதாக அறிவித்தபொழுது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

மீண்டும் வழக்கை விசாரணைக்கு கொண்டுவருவதே பெரும்பாடாக இருந்தநிலையில், தலைமை நீதிபதியும் வழக்கை வேறு அமர்விற்கு மாற்றி தன்னையும் விடுவித்துக்கொண்டார். ஒருசில மாத போராட்டத்திற்குப்பிறகு ஒருவழியாக வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.கண்ணம்மாள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபொழுது, அப்பொழுது நடைபெற்றுவந்த கல்லூரி சேர்க்கைகளில் வன்னியர் 10.5% சட்டத்திற்கு தடைவிதிக்க மறுத்தனர். இருந்தாலும் 8/2021 சட்டப்படி கல்லூரிகளில் சேரும் மாணவர் சேர்க்கை நீதிமன்ற இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது என்ற நிபந்தனை விதித்து அனுமதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 14-க்கு ஒத்தி வைத்தனர். மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்று மாறுதலாகி சென்றார். இதனால் வழக்கின் நிலை மீண்டும் கேள்விக்குறியானது.

இதனைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகங்கள் சார்பில் முறையிட்டதைத் தொடர்ந்து, வழக்கை நீதிபதிகள் எம்.துரைச்சாமி, கே.முரளி சங்கர் அமர்விற்கு மாற்றி உத்தரவிட்டார். ஒருவழியாக செப்டம்பர் இரண்டவது வாரத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபொழுது, இவ்வழக்கு குறித்து தாங்கள் முழுமையாக அறிந்துகொள்ள கால அவகாசம் வேண்டுமென்று கூறி விரிவான வழக்கு விசாரணை செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். அதன்பிறகு வழக்கு விசாரணை சூடி பிடிக்கத்தொடங்கியது.

விசாரணையை தொடங்கியதிலிருந்து பிற்பகல் அமர்வில் எந்தவிதமான தொய்வும் இன்றி விசாரணையை தொடர்ந்து  நடத்தினர் நீதியரசர்கள். சுமார் ஒருமாதகாலம் நடைபெற்ற வழக்கின் இறுதி விசாரணை அக்டோபர் 22 ஆம் தேதி நிறைவு பெற்று, வழக்கறிஞர்களின் எழுத்துப்பூர்வ வாதத்தை அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு இறுதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். எப்படியும் இறுதி தீர்ப்பிற்கு ஒருசில மாதங்கள் ஆகலாம் என்று அனைவரும் எண்ணிக்கொண்டிருந்த வேளையில் ஒரே வாரத்தில் தீர்ப்பு வெளியானது.

2021' நவம்பர் ஒன்றாம் தேதி வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடை ரத்து செய்து நீதியரசர்கள் எம்.துரைசாமி, கே.முரளி சங்கர் எழுப்பிய ஏழு கேள்விகள் இந்திய நாட்டையே உலுக்கியது. தமிழகம் தாண்டி அனைத்து மாநிலங்களில் கவனத்தையும் பெற்றது. வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்தத் தீர்ப்பை பல வழக்கறிஞர்களும், பத்திரிக்கையாளர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். முழுக்க முழுக்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு சென்றாலும் வெல்லவே முடியாது என்று அடித்துக்கூறினர். அதன்படியே உச்சநீதிமன்ற தீர்ப்பும் அமைந்தது.

எளிய சமூகங்கள், அரசியல் வாய்ப்பும், வசதியும் அற்றவர்கள் நடத்திய இந்த சட்டப்போரட்டத்தை தெய்வமாக நின்று சட்டப்படியான தீர்ப்பு வழங்கிய இரு நீதியரசர்களில் ஒருவரான கே.முரளி சங்கர் இன்று சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக பதவியேற்கிறார். இவரோடு இவரது துணைவியார் நீதிபதி தமிழ்ச்செல்வி உள்ளிட்ட ஒன்பது நீதிபதிகளை நிரந்தர நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவு வழங்கியதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கின்றார்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி கே.முரளிசங்கர், 1985-1990-ம் ஆண்டு கோவை அரசு சட்டக்கல்லூரியில் படித்தார். சட்டப்படிப்பை முடித்து விட்டு, கோவையில் வக்கீலாக பணியாற்றி வந்தார். அதேபோல ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த நீதிபதி எஸ்.டி.தமிழ்செல்வி, புதுச்சேரி சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். இருவரும் ஒரே நேரத்தில் மாஜிஸ்திரேட்டாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்றனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்து, 1996-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

1968-இல் பிறந்த இத்தம்பதிகள், திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியாக கே.முரளிசங்கரும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதித்துறை பதிவாளராக நீதிபதி எஸ்.டி.தமிழ்செல்வியும் பணியாற்றி வந்தநிலையில், 2020-டிசம்பர் மாதம் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் சட்டப்படிப்பை படித்து வருகிறார். இந்திய நீதித்துறை வரலாற்றில் கீழ் கோர்ட்டு நீதிபதிகளாக இருக்கும் கணவன், மனைவி ஒன்றாக ஐகோர்ட்டு நீதிபதிகளாக பதவி ஏற்க உள்ளது இதுவே முதல் முறை என்று வக்கீல்கள் மத்தியில் பெருமையாக பேசப்படுகிறது.

வன்னியர் இடஒதுக்கீடு வழக்கில், இந்திய குடிமக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாத்து நீதி வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் கே.முரளி சங்கர் அவர்களும், அவரது துணைவியார் நீதியரசி எஸ்.டி.தமிழ்செல்வி அவர்களும் நீதிதேவதையின் இருகண்களாக செயல்பட்டு சாமானிய மக்களின் கடைசி புகழிடமான நீதிமன்ற மாண்புகளை உயர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி, நீங்கள் வழங்கும் ஒவ்வொரு நீதியும் உங்கள் வாழ்க்கையின் படிக்கட்டுகளாய் அமைந்து கோபுரத்தில் அமர்த்தும் என்று கூறி சாமானிய மக்கள் சார்பில் வாழ்த்துகிறோம். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved