🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இன்றுடன் விடைபெறுகிறார் வெளிச்சம் கொடுத்த நீதியரசர்!

இந்தியாவின் மிக உச்சபட்ச அதிகாரம் பெற்ற அமைப்பான உச்சநீதிமன்றம் கடந்த காலங்களில் வழங்கிய தீர்ப்புகளின் மூலம் சர்வதேச கவனத்தையும், நம்பிக்கையையும் பெற்றிருந்தது. அதன் சமீபத்திய செயல்பாடுகள், குறிப்பாக தலைமை நீதிபதிகள், நீதிபதிகள், பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகள், அவர்கள் ஓய்வு பெற்ற பின்னர் உடனடியாக எம்.பி, கவர்னர் உள்ளிட்ட பதவிகளில் அமர்த்தப்படுவதும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வந்தது. இதனால் உச்சநீதிமன்றம் பற்றி சாமானியர்கள் மத்தியில் ஒரு வெறுப்பு நிலவியது.

சுதந்திர இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில்  நீதிமன்றத்தின் மாண்பு குறைநந்து கொண்டிருந்த இதேகாலத்தில் தான், இன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நாரிமன், நாகேஸ்வர ராவ், கவாய், சந்திரசூட் போன்ற தலைசிறந்த நீதிபதிகளும் பதவி வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் எல்லோரும் தனிச்சிறப்பும், பெருமைக்கும் உரியவர்கள் என்றபோதிலும், தான் விசாரித்த வழக்குகளில் "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என மத்திய, மாநில அரசுகள் சம்மந்தப்பட்ட வழக்குகளில் கூட பாரபட்சமின்றி அரசுகளுக்கு எதிராக கடுமையாக  சாட்டையை சுழற்றியவர் நீதியரசர் எல்.நாகேஸ்வர ராவ்.

வன்னியர் சமுதாயத்திற்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் 8/2021 சட்டத்தை, எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு  2021 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு ஒருசில மணித்துளிகளுக்கு முன், சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, கண் இமைக்கும் நேரத்தில் வாக்கெடுப்பு நடத்தி, கவர்னர் ஒப்புதலைப்பெற்று நிறைவேற்றியது. 116 சாதிகள் அனுபவித்து வந்த 20% இடஒதுக்கீட்டில், ஒரே ஒரு சாதிக்கு மட்டும் பாதிக்கு மேற்பட்ட (10.5%) விழுக்காடு இடங்களை பிடுங்கிக் கொடுத்தபொழுது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுள்ள தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சாதிகள் செய்வதறியாது திகைத்து நின்றன.

இந்த 115 சமூகங்களும் எந்தவித பிணைப்பும் இன்றி, அவிழ்ந்துபோன நெல்லிக்காய் மூட்டைகளாய்,  முரண்பாடு, முன்பகை, கோபம், குரோதம், அரசியல் பகை என்று அக்குவேறு, ஆணிவேராய் சிதைந்து கிடந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இடஒதுக்கீட்டை பறித்தபொழுது சமுதாய கட்டமைப்போ, அரசியல், பொருளாதார பின்புலம் ஏதுமில்லாத, இன்னும் சொல்லப்போனால் இதுவரை நீதிமன்றத்தின் படிக்கட்டுகளைக் கூட மிதித்திடாத பல சமூகங்களில், சேர்க்க முடிந்த சமூகங்களைச் சேர்த்துக்கொண்டு, ஓடோடி முதன் முதலில் தட்டியது உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தான்.

நமது அழுகுரலைக் கேட்டு அன்று உச்சநீதிமன்றத்தின் கதவுகளை திறந்தவர்தான் நீதியரசர் எல்.நாகேஸ்வர ராவ். தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சீர்மரபினர் சமூகங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டவர், இச்சட்டத்தில் ஒன்றும் குற்றம், குறை இருப்பதாக தனக்கும் தெரியவில்லை, ஆகையால் தடை ஏதும் கொடுக்கமுடியாது, எதற்கும் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முதலில் தீர விசாரித்து முடிவுக்கு வரட்டும் என்று சொன்னபோது, இடஒதுக்கீட்டை திருடிக்கொண்டவர்கள் அடைந்த ஆனந்தத்தை விட, இடஒதுக்கீடை பறிகொடுத்த சாதிகளில் இருந்த அரசியல் கட்சிகளின் இராஜ விசுவாசிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. எதிரிகள் பரிகாசத்ததைவிட இந்த கட்டுச்சோற்று எலிகளின் கூச்சலை சமாளிப்பது தான் பெரும்பாடாய் இருந்தது.

உண்மையில் நீதியரசர் எல்.நாகேஸ்வர ராவ் அவர்கள் வன்னியர் உள் ஒதுக்கீடு வழங்கும் 8/2021 சட்டத்திற்கு உடனடியாக தடை விதிக்கத்தான் மறுத்தாரே தவிர, வாய்ப்பும், வசதியுமற்ற 115 சாதிகளுக்கு "திசை" காட்டியதை மறுக்கமுடியாது. அன்று மட்டும் அவர் தடை விதித்திருந்தாலோ அல்லது வழக்கை தொடர்ந்து உச்சநீதிமன்றமே வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டிருந்தாலோ, இந்த வழக்கின் வெற்றியை இக்குறுகிய காலத்திற்குள் சுவைத்திருக்க முடியாது என்பதே நிதர்சனம்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரணைக்கு கொண்டுவர போராடிய அதேவேளையில், நெல்லிக்காய் மூட்டையாய் சிதறிக்கிடந்த சமூகங்களை ஒன்றிணைக்க தேவையான கால அவகாசம் கிடைத்தது. மற்றொரு புறம், இடஒதுக்கீடு குறித்து தெளிவான பார்வையுள்ள சென்னை உயர்நீதிமன்றமாகட்டும், வாதாடிய வழக்கறிஞர்களாகட்டும், அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள், அரசுக்குள்ள அதிகாரம், குறித்தெல்லாம் தெளிவான வாதப்பிரதிவாதம்  நடத்தி வழங்கிய தீர்ப்பு, உள் இடஒதுக்கீடு வழக்கில் இந்தியாவிற்கே ஒரு தெளிவான பாதை அமைத்துக்கொடுத்தது. இதில் மற்றொரு சிறப்பம்சம், மிகக்குறைந்த செலவில், மிகக்குறுகிய காலத்தில், மிகப்பெரிய தீர்ப்பு எளிய சமூகங்களுக்கு ஆதரவாக கிடைத்தது. 

2021-நவம்பர் ஒன்றாம் தேதி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, மேல்முறையீட்டு மனுக்களை தமிழக அரசும், பாட்டாளி மக்கள் கட்சியும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தபொழுது, வழக்கு மீண்டும் நீதியரசர் எல்.நாகேஸ்வர ராவ் அமர்விற்கே வந்ததற்கு, முன்பு இச்சட்டத்திற்கு தடைகோரிய வழக்கில் அவர் வழங்கிய தீர்ப்பே அடிப்படையாக இருந்தது. 

மேல்முறையீட்டு மனுக்கள் நீதியரசர் எல்.நாகேஸ்வர ராவ் அமர்வுமுன் வந்து, விரிவான விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட முதல்நாளில், தமிழக அரசு- பாமக கூட்டணியில் இந்தியாவில் மிகப்பிரபலமான, மிகப்புகழ்பெற்ற, மிக அதிக கட்டணம் பெறக்கூடிய, மிகமூத்த வழக்கறிஞர்களை களமிறக்கி, அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றக்கோரியபொழுது நீதியரசர் எல்.நாகேஸ்வர ராவ் அவர்களே சற்று குழம்பித்தான் போனார். முதலில் இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டுமா? இல்லையா? என்று நாளை முடிவு செய்துகொள்ளலாம் என்று, வழக்கு விசாரணையை அடுத்த நாள் தள்ளி வைத்தபொழுது, அய்யகோ... வழக்கின் நிலை என்ன ஆகுமோ என்ற பதற்றம் நமக்கு மட்டுமல்ல, நாட்டில் பலருக்கும் தொற்றிக்கொண்டது. 

அடுத்த நாள் நீதிமன்றம் கூடியபொழுது, 24 மணிநேர பதற்றத்திற்கு தானே முற்றுப்புள்ளி வைத்த நீதியரசர் எல்.நாகேஸ்வர ராவ் அவர்கள், கூடியிருந்த வழக்கறிஞர்கள் யாரிடமும் கருத்து கேட்காமல், இந்த வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்விற்கு மாற்றத் தேவையில்லை,  இந்த அமர்வே விசாரிக்கும் என்ற தெளிவான முடிவை அறிவித்து, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்களை வழக்காட ஆணையிட்டார். அன்றே வழக்கின் முடிவை அறிந்துகொண்ட தமிழக அரசு, "வழக்கறிஞர் படைக்குறைப்பு" வேலையை செய்துகொண்டது. இந்த வழக்கில் தமிழக அரசு செய்த ஒரே நல்ல காரியம் இது ஒன்றுதான். தேவையில்லாமல் மூத்த வழக்கறிஞர் பட்டாளத்தை இறக்கி, பொதுமக்கள் பணத்தை வீணடிக்காமல், ஒரு சிலரோடு நிறுத்திக்கொண்டது. (வழக்கு மட்டும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியிருந்தால் அதே கதிதான்...விசாரணைக்கு வரவே பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும்)

மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிட்டபோதே, வழக்கு விசாரணை பிப்ரவரி 16-இல் தொடங்கும், யாரும் எந்த வாய்தாவும் கேட்கக்கூடாது, எல்லோரும் தயாராக வாருங்கள் என்று முதல்நாளில் காட்டிய அதே கண்டிப்போடு, விசாரணையை தொய்வின்றி கடைசி வரை நடத்தி முடித்து, ஒரே வாரத்தில் இறுதி தீர்ப்பை வழங்கியது நீதியரசர் எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு. வழக்கு விசாரணையின்போது, தமிழகத்தில் காலம் காலமாக ஏமாற்றி வரும் அம்பாசங்கர் அறிக்கை, நீதிபதி.ஜனார்த்தனம் அறிக்கை என எல்லா மோசடிகளையும் நார் நாராய் கிழித்து தொங்கவிட்டது வேறு ரகம்.

வன்னியர் இடஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசின் தலையில் ஓங்கி கொட்டியவர், அடுத்த சில தினங்களில் பேரறிவாளன் வழக்கில் மைய அரசை அடித்து துவைத்து காயப்போட்டார் என்று சொல்லுமளவிற்கு, சுதந்திர இந்திய நீதிமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மாநில அரசு, ஆளுநர், மைய அரசு, குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்றம் என்று அதிகார மையங்களுக்கிடையே பனிப்போர் நிலவியபொழுது, அரசியல் சாசன சட்டமே உயர்ந்தது தீர்ப்பு வழங்கி மைய அரசுக்கு பாடம் நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்தார் நீதியரசர் எல்.நாகேஸ்வர ராவ்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக 2016-இல் பொறுப்பேற்றுக்கொண்டு, ஆறாண்டுகாலம் பல வழக்குகளில் தனிமுத்திரை பதித்து, காலத்தால் அழிக்க முடியாத பல வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கிய நீதியரசர் எல்.நாகேஸ்வர ராவ் இன்றுடன் (07.06.2022) ஓய்வு பெறுகிறார். உச்சநீதிமன்றம் கோடை விடுமுறையில் இருப்பதால், நீதியரசுருக்கு கடந்த மே மாதம் 20-ஆம் தேதியே பிரிவு உபசார விழாவை நடத்தி முடித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் தலைமை நீதிபதி, தலைமை வழக்கறிஞர், கூடுதல் சொலிசிட்டல் ஜெனரல் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பலர் கலந்துகொண்டு நீதியரசர் எல்.நாகேஸ்வர ராவ் அவர்களின் பணி குறித்து சிலாகித்துப்பேசினர்.

எளிய நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த எல்.நாகேஸ்வரராவ் அவர்களின் முழுப்பெயர் லாவு நாகேஸ்வர ராவ் (64), ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பெடாநந்திபாடு பகுதியைச் சேர்ந்தவர். குண்டூரில் உள்ள லயோலா பப்ளிக் பள்ளி, குண்டூர் ஜேகேசி கல்லூரி மற்றும் குண்டூரில் உள்ள டிஜேபிஎஸ் கல்லூரியில் இவர் கல்வி பயின்றார். ஆந்திரா கிறிஸ்டியன் சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, பெயரிடப்படாத ஒரு தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். சில பிரச்சினைகளால் அந்தப் படம் வெளியாகததால் நடிப்பை நிறுத்திவிட்டு படிப்பை தொடர்ந்தார். சில பாலிவுட் படங்களிலும் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப் படிப்பை முடித்த பிறகு, சில ஆண்டுகள் கோயம்புத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது தமிழ் பேசவும், எழுதவும் கற்க முயன்றார். 1984-ம் ஆண்டு ஹைதராபாத்துக்கு சென்ற நாகேஸ்வர ராவ் ஆந்திர‌ உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒய். சூரிய நாராயணாவிடம் ஜூனியராக சேர்ந்தார். ஆறு ஆண்டுகள் அவரிடம் ஜூனியராக பணியாற்றிய நாகேஸ்வர ராவ், 1990-ம் ஆண்டு முதல் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தனியாக வழக்குகளில் வாதிட தொடங்கினார். 

தொடக்கத்தில் பொதுநல வழக்குகளிலும், சர்ச்சைக்குரிய முக்கிய வழக்குகளிலும் ஆஜராகி திறம்பட வாதிட்டார். நாகேஸ்வர ராவ் ஆஜரான வழக்குகளில் பெரும்பாலும் அவருக்கு சாதகமான தீர்ப்புகளே வெளியானதால், குறுகிய காலத்தில் பிரபலமான வழக்கறிஞராக மாறினார். இதனால் ஆந்திரா மட்டுமில்லாமல் ஒடிஸா, அஸ்ஸாம், கேரளா, பம்பாய் உயர்நீதிமன்றங்களில் முக்கிய வ‌ழக்குகளில் ஆஜராகும் வாய்ப்பு தேடிவந்தது.

சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்காக கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி, 14 நாட்கள் இடைவிடாமல் திறம்பட வாதாடி, அவரை விடுதலை செய்து அசத்தினார். ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது, மீண்டும் நகேஸ்வர ராவ் ஜெயலலிதா தரப்பில் ஆஜரானார். கர்நாடக அரசின் மேல்முறையீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 4 நாட்கள் சிறப்பாக வாதிட்டார். இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த நிலையில் பதில் வாதம் செய்ய அனுமதி கோரி இருந்தார்.

இது மட்டுமல்லாமல் அஸ்ஸாம், ஒடிஸா, மத்திய பிரதேசங்களை சேர்ந்த முன்னாள் முதல்வர்களின் வழக்குகளில் ஆஜராகியுள்ளார். இந்தியாவில் அதிக கட்டணம் வாங்கும் வழக்கறிஞர்களில் ஒருவராக உயர்ந்த எல்.நாகேஸ்வர ராவ், ஏர்செல்- மேக்ஸிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி, கலாநிதி மாறன் தரப்பிலும் ஆஜராகியுள்ளார். இதே போல ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்காகவும் ஆஜராகியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் அவர் கடைசியாக வாதாடிய வழக்குகளில் ஒன்று நீட் வழக்கு. அதில் அவர் தமிழக அரசு மற்றும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிக்காக ஆஜரானார்.

இந்திய நீதித்துறையில் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டுமென்றால் டெல்லி போக வேண்டும் என்பதை உணர்ந்த நாகேஸ்வரராவ், 1999-ம் ஆண்டு டெல்லிக்கு இடம்பெயர்ந்தார். உச்ச நீதிமன்றத்திலும், பார் கவுன்சிலிலும் சிறப்பாக பணியாற்றியதை தொடர்ந்து நாகேஸ்வர ராவ் 2000-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். பல்வேறு முக்கிய வழக்குகளில் திறம்பட வாதிட்டதால் கடந்த 2003-ம் ஆண்டு முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டு, மூன்று முறை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார்..

கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நாகேஸ்வர ராவை நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, அப்போதைய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். ஆனால் பல்வேறு காரணங்களினால் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அவரது பரிந்துரையை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2016-இல், நாகேஸ்வர ராவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான கொலிஜியம் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது. குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, வழக்கறிஞராக இருந்து நேரடியாக நாகேஸ்வர ராவ் உச்ச நீதிமன்ற நீதிபதியாக 2016 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி பொறுப்பேற்றுக்,கொண்டார்.

இதன் மூலம், இந்திய நீதித்துறை வரலாற்றில் பார் கவுன்சில் வழக்கறிஞராக இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்ட 7வது நபர் என்ற பெருமையை பெற்றார் நாகேஸ்வர ராவ். இவரும் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவர்களும் ஆந்திர மாநிலம் விஜயவாடா பார்கவுன்சில் உறுப்பினர்களாக ஒரே காலத்தில் வழக்கறிஞர் பயிற்சி மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்ட நாகேஸ்வர ராவ் மகள் மற்றும் மருமகன் இருவரும் வழக்கறிஞர்கள். ஓய்வு நேரங்களில் ஈ.எஸ். கார்டனர்,ட்.ஹெச். லாரன்ஸ், ஜான் கிரிஹாம் ஆகிய ஆங்கில எழுத்தாளர்களின் நூல்களை விரும்பி படிப்பார்.

தனக்கு நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் பேசிய நீதியரசர் நாகேஸ்வர ராவ், உச்ச நீதிமன்ற நீதிபதியாக, ஆறு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியது, மிகவும் சிறப்பாக இருந்தது. அதேநேரத்தில் வழக்கறிஞர் பணி மீதான எனது பற்று, இப்போதும் நீடிக்கிறது. நீதிபதி பணிக்காலத்தில், சக நீதிபதிகளிடமிருந்து நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். நீதிபதிகள் துறவிகள் அல்ல; சில நேரங்களில் பணிச்சுமையால் நீதிபதிகளும் நெருக்கடிக்கு உள்ளாவர். நானும், அது போன்ற சூழ்நிலைகளை சந்தித்து உள்ளேன் என்று வெளிப்படையாக பேசினார்.

அந்த சமயத்தில், நான் கோபப்பட்டு பேசியிருக்கலாம். என் வார்த்தைகள் சிலரை புண்படுத்திஇருக்கலாம். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் பாரபட்சமின்றி தான் நீதி வழங்குகிறோம். ஆனால், அது ஒரு தரப்புக்கு மகிழ்ச்சியையும், மறுதரப்புக்கு வருத்தத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை என்ற எதார்த்தத்தையும் சுட்டிக்காட்டினார்.

விழாவில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, "தானும், நீதிபதி நாகேஸ்வர ராவும், ஒரே இடமான விஜயவாடா பார் அசோசியேஷனில் இருந்து வழக்கறிஞர் தொழிலை தொடங்கியதாகக் குறிப்பிட்டார். மேலும், "எல்.நாகேஸ்வர ராவ், முதல் தலைமுறை வழக்கறிஞர். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள். இது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நாள். நாங்கள் ஒன்றாக வாழ்க்கையைத் தொடங்கினோம். சில காலத்திற்குப் பிறகு நானும் ஓய்வு பெற்று விடுவேன். அவர் வலிமையானவர்" என்றார்

இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பேசுகையில், ஒரு மனிதனாக நான் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்" என்றார். இந்தியாவிற்கான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பேசுகையில், "நீதிமன்றம் மிகவும் நல்ல மற்றும் சக்திவாய்ந்த நீதிபதியை இழக்கிறது என்றும், பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பு, இவர் வழங்கிய தீர்ப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று" என கூறினார்.

கற்றறிந்த சமூகத்தின் வாழ்த்துகளை விட, முகம் தெரியாத கோடிக்கணக்கான எளிய சமுதாய மக்களின் வாழ்த்துகள் வலிமையானது. வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தால் 115 சமுதாயங்களின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை இருள் கவ்வியிருந்த சூழலில், வாக்கு வலிமையற்ற கடைக்கோடி மக்களை, ஆள்பவர்கள் கைவிட்டாலும், நீதிதேவதையின் மடியில் சாய்ந்து ஆறுதல் பெறலாம் என்ற நம்பிக்கை ஒளிக்கீற்றை பரவச்செய்த நீதியரசர்.நாகேஸ்வர் ராவ் அவர்களின் தீர்ப்பை 115 சமூகங்களின் கடைசி மனிதன் உள்ளவரை மறக்கமாட்டோம். வாழ்க நீதியரசர் நாகேஸ்வர் ராவ்! ஓங்குக அவர் புகழ்!

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved