🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வடமாநிலங்களில் ரயில்களுக்கு அக்னிபாத் - வரமா? சாபமா?

எந்தவொரு நாட்டின் பாதுகாப்பிற்கும் இராணுவம் முக்கியத்துவம் வாய்ந்தது. அதேபோல் இந்திய நாட்டின் பாதுகாப்பில் ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகியவை முக்கிய பங்காற்றி வருகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த முப்படைகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்திய பட்ஜெட்டில் 12-13 சதவீதமும், 1988 ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.18% ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தநிலையில், தற்பொழுது  அது 1.63% ஆக உள்ளது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இராணுவத்திற்கு "அக்னி பாத்" திட்டத்தின் படி இராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து இத்திட்டத்திற்கு எதிராக மெல்லப்பரவிய தீ தற்பொழுது வடமாநிலங்களில் கொழுந்து விட்டு எரிகிறது. 

கடந்த செவ்வாயன்று (14.06.2022) இதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்சியில் அக்னிபாத் திட்டத்தை வெளியிட்டு பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத்சிங் அவர்கள்,  இன்று நாங்கள் 'அக்னிபாத்' என்ற ஒரு புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறோம். இது நமது ஆயுதப் படைகளை மாற்றியமைத்து மேலும் நவீனப்படுத்தும், இத்திட்டத்தின் கீழ், இந்திய இளைஞர்களுக்கு 'அக்னிவீரர்' என்ற பெயரில் ராணுவத்தில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

ராணுவத்தை மரியாதையுடன் பார்க்கும் நமது இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு சேவையாற்றும் வாய்ப்பை வழங்கவும், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், அக்னிபாத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தையும் தனது வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் ராணுவ சீருடையை அணிய விரும்புகிறார்கள். இத்திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு, புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப எளிதாக பயிற்சி அளிக்கமுடியும். அவர்களின் ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதியும் மேம்படும். அக்னிபாத் திட்டத்தின் கீழ், இந்திய ராணுவத்தை, இந்திய மக்களைப் போலவே இளமையாக ஆக்கிட முயற்சி செய்யப்படுகிறது" என்றார் ராஜ்நாத் சிங்.

அக்னிபாத் திட்டத்தின்படி ராணுவம், கடற்படை, விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு நடைபெறும். வயது வரம்பு 17.5 வயது முதல் 21 வயதுக்குள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் "அக்னிவீர்" என அழைக்கப்படுவர். இத்திட்டத்தில் ஒருவர் நான்கு ஆண்டுகள் பணியில் இருக்கலாம். முப்படையில் பணியில் சேர்வோருக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள கல்வி தகுதியே இதற்கும் பொருந்தும். ஆட்கள் தேர்வு அடுத்த 90 நாட்களில் துவங்க உள்ளது. 46 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். முறையான அறிவிப்புக்கு பிறகு 6 மாத கால இடைவெளியில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நான்கு ஆண்டுகள் என்பது பயிற்சி காலத்தையும் உள்ளடக்கியாதாகும். மாத சம்பளமாக படிகளுடன் குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரமும் அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் வரையும் கிடைக்கும். அதன்படி முதல் ஆண்டு ரூ.30 ஆயிரமும், 2-ஆம் ஆண்டில் ரூ.33,000ம், 3-ஆம் ஆண்டில் ரூ.36,500, 4-ஆம் ஆண்டில் ரூ.40,000 ஆக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் 30 சதவீத தொகை பங்களிப்பு தொகையாகப் பிடிக்கப்படும். எஞ்சிய 70 சதவீத தொகை வழங்கப்படும். அதன்படி முதல் மாதத்தில் ரூ.9 ஆயிரம் சேவை நிதிக்கான பங்களிப்பு தொகையாக பிடிக்கப்பட்டு ரூ.21 ஆயிரம் மட்டும் கையில் கிடைக்கும். 4வது ஆண்டில் மட்டும் சம்பளமாக ரூ.6.92 லட்சம் கிடைக்கும். பிடித்ததற்கு ஏற்ப மத்திய அரசு சார்பில் ராணுவ வீரர்களின் சேவை நிதிக்கும் பணம் வழங்கப்படும். இத்தொகை இறுதியில் சேவை நிதியாக வழங்கப்படும்.

மேலும் வீரர்களின் பங்களிப்பு இன்றி ரூ.48 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் வசதி கிடைக்கும். இத்தகைய நியமனத்தில் 4 ஆண்டு பணிக்கு பிறகு 75 சதவீதம் பேர் திருப்பி அனுப்பப்படுவர். 25 சதவீதம் பேர் மட்டும் தக்க வைக்கப்படுவர். அதாவது பணியில் சேர்க்கப்பட்ட 46 ஆயிரம் பேரில் 34500 பேர் வெளியேற்றப்படுவார்கள், 11500 பேர் பணியில் நீடிப்பர். இவர்கள் வழக்கமான ராணுவ வீரர்களை போல் 15 ஆண்டுகள் பணியை தொடரலாம். ராணுவத்தில் இருந்து திரும்பும் வீரர்களுக்கு சான்றுகள் மற்றும் சேவை நிதியாக ரூ.11.71 லட்சம் வழங்கப்படும். இதற்கு வரி விலக்கு உண்டு. ஆனால் இவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது. 

இதற்கிடையே பணியின்போது வீரமரணம் அடைந்தால் ரூ.44 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும். மாற்றுத்திறனாளியாக மாறினால் மாற்றத்திறனுக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும். அதன்படி 75 சதவீத மாற்றத்திறனுக்கு ரூ.25 லட்சம், 50 சதவீத மாற்றுத்திறனுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்பட உள்ளது .

அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான விமர்சனமும், போராட்டமும்:

அக்னிபாத் திட்டத்தில் ஆட்சேர்ப்பு முறை 'டூர் ஆஃப் டூட்டி' என்று அழைக்கப்படுகிறது.இத்திட்டம் பலநாடுகளில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள இத்திட்டத்தை வழக்கம்போல் ஆளும்கட்சி வரவேற்பதும், எதிர்க்கட்சி எதிர்ப்பதும் தாண்டி, பல தரப்பட்ட விமர்சனங்களும், போராட்டங்களும் வெடித்துள்ளன. 

அக்னிபாத் திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்கு பணியமர்த்தப்படும் வீரர்கள், முதல் ஆறுமாத பயிற்சி காலத்திற்குப்பிறது, படை அணியில் சேர்க்கப்படுவர்.  "தொழில்முறை வீரர்களுக்குப் பதிலாக மொத்தம் மூன்றரை ஆண்டுகள் மட்டுமே படைவீரராக செயல்படும்  குறுகிய கால வீரர்களை நியமித்தால், அது இராணுவத்தின் திறனில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தும், 22-24 வயதில் இராணுவத்தில் ராணுவத்தில் இருந்து வெளியேறும் இளைஞர்களால், நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தையே அதிகரிக்கும் என்றும் வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த இரண்டாண்டுகளாக கொரோனாவை காரணம் காட்டி தேர்வை நடத்தாத மத்திய அரசு, திடீரென அக்னிபாத் திட்டத்தை அறிவித்துள்ளது, இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற இளைஞர்களின் கனவை நிர்மூலமாக்கியுள்ளது, நாட்டில் பலகோடி இளைஞர்கள் வேலையின்மையால் தவித்துக் கொண்டிருக்கையில், அரசின் இதுபோன்ற முடிவுகள் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், சென்னை, வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளருமான தங்கம் அவர்கள்,  அத்னிபாத் திட்டம் இளைய சமுதாயத்திற்கு வரமா? சாபமா? என்றால் சாபம் தான் என்றவர், அக்னிபாத் திட்டத்தில் பணியமர்த்தப்படுபவர்களின் வயது 17.5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் சேர்க்கப்படும்பொழுது, அவன் குறைந்தபட்சம் 8 அல்லது 9 ஆம் வகுப்பிலிருந்தே அதற்கான முன்னெடுப்புகளிலும், பயிற்சியிலும் ஈடுபட வேண்டும். 10, 12 ஆம் வகுப்பு தேவு மதிப்பெண்களே அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்பொழுது, இராணுவப்பயிற்சிக்கு கவனம் செலுத்துவது அவர்களுடைய உயர் கல்வியையும், எதிர்காலத்தையும் பாதிக்கும். 23 வயதில் இராணுவத்திலிருந்து வெளியேறும் இளைஞனுக்கு, அடுத்து உடனடியாக வேலையில் அமர்ந்தால்தான் திருமணத்திற்கு வரனே கிடைக்கும். ஆறுமாத பயிற்சிக்குப்பின் மூன்றரை வருடம் இராணுவத்தில் பணியாற்றும் இளைஞன், வெளிவந்தவுடன் வேலை கிடைக்காது. மாஸ்டர் டிகிரி படித்தவர்களுக்கே நாட்டில் வேலையில்லாதபொழுது 12-ஆம் வகுப்பு படித்தவனுக்கு என்ன வேலை கிடைத்துவிடப்போகிறது. 

எக்ஸ்.சர்வீஸ்மேன் என்ற அந்தஸ்து வழங்கப்படமாட்டாது என்று கூறும் அரசு காவல்துறை, செக்யூரிட்டி பணிகளில் சேரலாம் என்கிறது. காவல்துறை பணியிடங்களை முழுக்க முழுக்க மாநில அரசு நிரப்புகிறது. எக்ஸ்.சர்வீஸ் மேன் அந்தஸ்து இல்லாதபொழுது எந்த ஒதுக்கீட்டில் காவல்துறையில் நியமனம் செய்யும் வாய்ப்பு இருக்கப்போகிறது. மத்திய அரசு அதற்கான உறுதியை வழங்கத்தயாராக இல்லை என்பதும் ஆண்டுதோறும் ஓய்வு பெறும் 35000 பேருக்கு அனைவருக்கும் காவல்துறையில் வேலை வாய்ப்பு வழங்கமுடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. மக்கள்தொகை பெருக்கம், கடும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் சூழலில், ஆயுதப்பயிற்சி பெற்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் சுற்றித் திரிந்தால் நாட்டின் அமைத்திக்கு பெரும் சவாலாகக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கின்றார்.

உயர்கல்வியில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உள்ள தமிழகத்தில் இளைஞர்கள் பெரும்பாலும் மென்பொருள், மருத்துவம், பொறியியல், சட்டம் என முன்னோக்கிச் சென்றுகொண்டிருப்பதால் இதன் தாக்கம் குறைவாக உள்ளது. ஆனால் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காத பல வடமாநில இளைஞர்களுக்கு ரயில்வே, இராணுவம் போன்ற துறைகளில் கிடைக்கும் கடைநிலை வேலைகளே பெரும் வரப்பிரசாதமாக இருந்தது. அக்னிபாத் திட்டம் அதற்கும் முடிவு கட்டியுள்ளதால் பிகாரில் பற்றிய நெருப்பு, அடுத்து உத்திரப்பிரதேசம், ஹரியானா, இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் என்று பரவி தெலுங்கானவை எட்டியுள்ளது. இளைஞர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு நடைபெறாததால், இந்த ஆண்டு மற்றும் வயது வரம்பை 23 ஆக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டாலும் பரவும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. 

இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள இந்தக்கோபத்தை உற்றுநோக்கினால் வேளாண்சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளை ஒருவருடம் சமாளித்த அரசு, அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை ஒரு சில வாரங்கள் கூட தாக்குப்பிடிக்கமுடியாது என்றே தோன்றுகிறது. அரசு உடனடியாக விழித்துக்கொண்டால் நிலைமையை சமாளிக்கலாம். பிடிவாதம் சேதாரம் என்கிறார் தங்கம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved