🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதியை சாத்தியபடுத்துமா தலைமை? கழக தலைவருக்கு ஒரு கடிதம்.

வணக்கம்,

நான்கு கால்கள் தான் யானையின் பலம், அதுபோல் சமூக நீதி, சுயமரியாதை, மொழி இன பற்று மற்றும் மாநில சுயாட்சி என்ற நான்கு கால்களில் தான் அரசும், கழகமும் நிற்கிறது என்ற கொள்கை பிரகடனத்தை ஆட்சி பொறுப்பேற்றுக்கொண்டபின் நடைபெற்ற முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அறிவித்து, முதலாம் ஆண்டை நிறைவு செய்து, அகிலம் திரும்பிப்பார்க்கும் வகையில் பணியாற்றி வரும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

பல்லாயிரம் ஆண்டுகளாக மரபணுவில் ஏற்றப்பட்டுள்ள சாதி, மத கட்டமைப்புகளையும், பெரும்பான்மை வாதத்தையும் உடைத்தெரிவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை நாங்கள் அறிவோம். இருந்தாலும் இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் போன்ற அரசியலில் வாய்ப்பற்ற எண்ணற்ற மொழி,இன சிறுபான்மை சமூகங்களுக்கு, தங்கள் பொற்கால ஆட்சியில் அடைபட்டுள்ள கதவுகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கையை ஓராண்டுகால ஆட்சி அளித்துள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவலாகவும், தெலுங்குமொழி பேசக்கூடிய மக்களில் அதிக மக்கள்தொகை கொண்டவர்களும், அதிக ஊரக உள்ளாட்சிப்பிரதிநிதிகளை கொண்டுள்ள சமூகம் தொட்டிய நாயக்கர் சமூகம். தமிழகம் முழுவதும் எங்கள் சமூகத்தினர் வசிக்கும் 3000-க்கும் மேற்பட்ட கிராமங்களில், கட்சிப்பொறுப்புகளில் இல்லாதவர்களே இல்லை என்ற அளவில் அரசியல் மையப்பட்டிருந்தாலும், சமூகத்தை வாக்குவங்கியாக கட்டமைக்கும் வல்லமைமிக்க தலைவர்கள் உருவாகாதது எங்களின் துரதிஷ்டம்.

தற்போதுவரை நீடித்துவரும் இந்த ஏமாற்றம், திராவிட முன்னேற்றக்கழகத்தில் நடைபெற்று வரும் உட்கட்சித் தேர்தல்களிலும் எதிரொலிக்கிறது. உதாரணமாக ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி, சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியக் கழகத்திற்குட்பட்ட 8 கிராம ஊராட்சிமன்றங்களான புதுபீர்கடவு, இக்கரைநெகமம், கோணமூலை, செண்பகப்புதூர், உக்கரம், இண்டியம்பாளையம், அரசூர், மாக்கிணாங்கோம்பை ஆகியவற்றில் உக்கரம், அரசூர், இண்டியம்பாளையம் ஆகிய மூன்று ஊராட்சி மன்றத்தலைவர்களும், ரிசர்வ் ஊராட்சியான செண்பகப்புதூர் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் என சரிபாதி ஊராட்சி மன்றத் தலைவர்கள் தொட்டிய நாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள். மேலும், உக்கிரம், செண்பகப்புதூர் என இரண்டு ஒன்றியக்குழு உறுப்பினர்களும், அரியப்பம்பாலையம் பேரூராட்சி உறுப்பினர்களில் இருவரும் தொட்டியநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே இருக்கும் நிலையில், ஒரே ஒருஊராட்சி மன்றத் தலைவர் பதவியையும், ஒருசில ஆயிரம் வாக்குகள் உள்ள மாவட்ட பெரும்பான்மை சமூகத்திற்கு ஒன்றியச் செயலாளர் பதவியை தாரை வார்க்கத் துடிப்பது சமூகநீதியாகும்?.

சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 18000 வாக்களர்களைக் கொண்ட பெருங்கொண்ட சாதியான தொட்டிய நாயக்கர் சமூகம், அந்த ஒன்றியத்தை உள்ளடக்கிய பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் 30000 வாக்காளர்கள் உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம் தவிர்த்து அதிமுக, காங்கிரஸ்,பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளில் எல்லாம் தொட்டிய நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே நீண்ட காலமாக ஒன்றியச் செயலாளர் பதவியை ஒதுக்கும்போது, சமூகநீதி பேசும் திமுக-வில் மட்டும் பெரும்பான்மை சாதியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, அனைத்து சமூகங்களுக்குமான வாய்ப்புகளை கட்சியில் உறுதி செய்ய வேண்டிய தலைமை, பொறுப்பை தட்டிக்கழித்து வருவதே மொழி, சாதி சிறுபான்மையினர் திமுக-வில் இணைவதற்கு தயக்கம் காட்டுகின்றனர் என்ற எதார்த்தத்தை கட்சி எப்போது உணரப்போகிறது.

கிருஷ்ணகிரி தொடங்கி தூத்துக்குடி வரையுள்ள 40 லட்சம் கம்பளத்தார்களுக்கு கட்சியில் கிடைக்கும் உட்சபட்ச வாய்ப்பு என்பது ஒன்றியச்செயலாளர் பதவி மட்டுமே. எதையும் விடாத பெரும்பான்மைகள் இதற்கும் முட்டுக்கட்டை போட்டால் என்ன செய்வது? 

ஈரோடு மாவட்டத்தில் ஏறக்குறைய 2.5 முதல் 3 லட்சம் வரையுள்ள தொட்டிய நாயக்கர் சமூகத்தோடு, போயர், வேட்டுவக்கவுண்டர், ஒக்கிலியர், செட்டியார் போன்ற எண்ணற்ற சமூகங்கள் கொங்கு மண்டலம் முழுவதும் உண்டு. இவர்களை அடையாளம் கண்டு உரிய பிரதிநிதித்துவம் வழங்காததே கடந்த சட்டமன்றத் தேர்தலில், கொங்கு மண்டலத்தில் திமுக படுதோல்வியை சந்திக்க காரணம் என்ற அடிப்படைக் காரணத்தை, உளவுத்துறை, தேர்தல் வியூக வல்லுநர்கள் என அனைத்துவிதமான நிறுவனங்களை வைத்துள்ள கட்சிக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியம். இச்சமூகங்களை அல்லது இச்சமூகங்களின் பிரச்சினையை சரியாக கையில் எடுத்து வியூகம் வகுத்த கரூர், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் கழகத்திற்கு வெற்றியை தேடித்தந்த உண்மையையும், தலைமையின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற பெரும்பான்மையில்லை என ஒதுக்கப்படும் சமூகங்கள், ஒன்றியப்பெருந்தலைவர், நகரமன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர் என அனைத்திலும் பெரும்பான்மை சமூகங்களுக்கே வழங்கப்படுவதோடு, அரசு நியமிக்கும் அரசு வழக்கறிஞர் பதவி முதல் வாரியம், ஆணையம், குழு, அறங்காவலர் என அனைத்து பதவிகளிலும் சமூகநீதியை கடைபிடிப்பது உறுதி செய்யப்படாமல் போனால், அரசு சமூகநீதி பேசுவதிலும் அர்த்தமில்லை, வாய்ப்புகளற்ற சமூகங்கள் கட்சிக்கு உழைத்தும் பயனில்லை என்பதே இன்றுவரையிலான நிலைமை.

சமூகநீதி திமுக-வில் தேங்கி நிற்பதால், வாய்ப்பற்ற சமூகங்களைச் சேர்ந்த இளம் தலைமுறையினர், தங்களுக்கு கட்சியில் எதிர்காலம் இருக்காது என்று விலகி நிற்பதை சோசியல் எஞ்சினியரிங்க் என்ற பெயரில் அறுவடை செய்யப்படுவது தவிர்க்கமுடியாததாகிறது. இந்தத் தேக்கம் கட்சியின் கொள்கையால் ஏற்பட்டதல்ல என்பது தெரிந்தாலும், அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு தலைமைக்கே உண்டு என்பதை சொல்லாமல் இருக்க முடியாது.

இந்த உண்மையை சுட்டிக்காட்டுவது எங்கள் சமூகத்திற்காக மட்டுமே அல்ல, எங்களைப்போன்ற வாய்ப்பற்ற சமூகங்கள் மீது தமிழக முதல்வராகவும், கழகத் தலைவராகவும் பார்வை படுவதே, கழகமும், முதல்வரும் முழங்கும் கொள்கைப் பிரகடனத்தை வேர்வரை கொண்டு சேர்த்து, கழகத்தை வலுப்படுத்தும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிச்சயம் செய்வார் என்ற நம்பிக்கையோடு கோரிக்கை விடுக்கின்றோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved