🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தனியார்துறையில் ஏன் வேண்டும் இடஒதுக்கீடு? சாமானியனுக்கு இந்தநாட்டில் பங்கென்ன?

தனியார்துறையில் ஏன் இடஒதுக்கீடு வேண்டும்?

இடஒதுக்கீடு என்பது அரசமைப்புச்சட்டம் உத்தரவாதமாக வழங்கியுள்ள சமவாய்ப்புக்ககளை உறுதி செய்ய அவசியமான கருவி. அது சட்டமன்றம் நாடாளுமன்றம் மற்றும் அரசு கல்வி பணியில் மட்டும்தான் என்று நினைப்பது குருடர்கள் யானையைப்பார்பது போன்று. சமூகத்தின் எல்லா அமைப்புக்களிலும் உரிய வாய்ப்பு அளிப்பது மட்டுமே உண்மையான சமூகநீதி.

இடஒதுக்கீட்டிற்கு எதிராக உண்மைக்கு மாறாக பல வாதங்கள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டுவருகின்றது. இடஒதுக்கீட்டால் முற்பட்ட வகுப்பில் இருக்கும் திறமை மிகுந்த பலருக்கு வேலைகிடைப்பதில்லை என்ற பொய்பிம்பம் கட்டமைக்கப்படுகின்றது. ஆனால் புள்ளிவிபரம் என்ன தெரியுமா? 15 விழுக்காடு இருக்கும் முன்னேறிய வகுப்பினர் அரசுத்துறையில் 70 விழுக்காடு இடத்தையும், தனியார்துறையில் 90 விழுக்காட்டையும் அனுபவித்து வருகின்றனர். மீதமுள்ள 30 விழுக்காடு அரசு வாய்ப்புக்களிலும், 22.5 விழுக்காடு இருக்கும் தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பு 20  விழுக்காட்டையும் பெறுகின்றனர். ஆனால் 62.5 விழுக்காடு இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் 10 விழுக்காட்டை மட்டுமே பெறுகின்றனர் என்பது மிக அநீதியானது. 

திறமை என்ற பெயரில் தனியார்துறையிலும் மிக குறைவான வாய்ப்புக்களே தாழ்த்தப்பட்ட பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்களுக்கு வழங்கப்படுகிறது.  

1905ல் அரசமைப்பு சட்டத்தில் சரத்து 16/4ன் கீழ் BC வகுப்பினருக்கு அரசு பணியிலும்; சரத்து 330, 332 மற்றும் 335ன்கீழ் SC/ST பிரிவினருக்கு நாடாளுமன்றம் சட்டமன்றம் மற்றும் அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வழிவகையுள்ளது. 

ஆனால் கல்வியில் இடஒதுக்கீடு இல்லை என்று செண்பகம் துரைராஜன் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின், 1951ல் சரத்து 15/4  சேர்க்கப்பட்டு SEBC/SC/ST மேம்பாட்டிற்காக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கலாம் என்று தெளிவாக உள்ளது. இருப்பினும் 2006ம் ஆண்டு இனாம்தார் வழக்கில் உச்சநீதிமன்றம் தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கமுடியாது என்று தீர்ப்பளித்ததால் சரத்து 15/5 சேர்க்கப்பட்டு தனியார் கல்விதுறையில் இடஒதுக்கீடு வழங்கப்படுகின்றது. சரத்து 15/4 ன் கீழ் தனியார் துறையில் பணியில் இடஒதுக்கீடு வழங்க முடியும். 1953ல் போடப்பட்ட காக்கா கலேல்கர் ஆணையம் முதலே தனியார்துறையில் பிற்படுத்தபட்ட வகுப்பின் பங்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் இன்றுவரை அது உரிய கவனம் பெறவில்லை. 2006ம் ஆண்டு பிரதமர் அலுவலகத்தில் தனியார்துறையில் SC/ST இடஒதுக்கீடு ஒருங்கிணைப்புக்குழு நியமிக்கப்பட்டு இன்றுவரை 9 கூட்டங்கள் நடத்தி செயல்பட்டுவருகின்றது. தனியார்துறை அமைப்புக்களும் தாங்களாகவே தனியார்துறையில் இடஒதுக்கீடு வழங்க வழிகாட்டுதல்களை வகுத்துள்ளனர்.

2016ல் NCBC தனியார்துறையில் ஓபிசிக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்துள்ளது. 2019ல் ஆந்திர அரசும், 2020ல் ஹரியான அரசு உள்ளூர்வாசிகளுக்கு தனியார்துறையில் 75 விழுக்காடு  இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றியுள்ளது. உயர்நீதிமன்றம் வழங்கிய தடைகளை உச்சநீதிமன்றம் நீக்கி அச்சட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் அது வகுப்புவாரி தனியார் இடஒதுக்கீடு அல்ல, வசிப்பிட தனியார் இடஒதுக்கீடு. மே 2022ல் காங்கிரஸ் கூட்டத்தில் தனியார்துறையில் இடஒதுக்கீட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்கா போன்ற மேலைநாடுகளிலும் தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்கப்படுகின்றது. 

சுருங்கி வரும் அரசுத்துறை பணிகளாலும் விரிந்துவரும் தனியார்துறைகளிலும் பலவிதமான வினோதமான சமூக கட்டமைப்புக்களால் விசித்திரமான கண்ணுக்குத்தெரியாத காரணிகளால்  முற்பட்ட வகுப்பினரே  தனியார்துறையையும் ஆக்கிரமித்துள்ளனர். எனவே அனைத்து சமூகங்களுக்கும் அனைத்துத்துறைகளிலும் உரிய வாய்ப்பளித்தால் மட்டுமே சமதர்ம சமத்துவ சமுதாயத்தைப் படைக்கும் அரசமைப்புச்சட்ட இலட்சியத்தை அடைய முடியும். 

சமூகநீதி மாநாட்டில் இக்கோரிக்கை அதிமுக்கியத்துவம் பெறும்.

BC/MBC/DNT  சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved