🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதியை தமிழ் மண்ணில் விதைத்த அரசர் வந்தேறியா?

பனகல் அரசர் வாழ்வும் பணியும்:

பனகல் அரசரின் இயற்பெயர் இராமராயநிங்கார் என்பதாகும். பழைய சென்னை மாகாணத்தில் குண்டூர் மாவட்டத்தில் இருந்த பனகாலு என்ற ஜமீன் குடும்பத்தில் 9.7.1866-இல் இவர் பிறந்தார். இளமையில் தெலுங்கையும், சமற்(ஸ்)கிருதத்தையும் இவர் காள அ(ஹ)ஸ்தியில் பயின்றார்.

ஆங்கிலக் கல்வி கற்பதற்காக இவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். முதலாம் படிவத்தில் (ஆறாம் வகுப்பு) திருவல்லிக் கேணி பெரியதெருவில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்க்க முயன்றனர். திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளி தெலுங்கு மொழி பார்ப்பனர்களால் நடத்தப்பட்டு வந்தது. இவர் பார்ப்பனரல்லாதார். எனவே அங்கு இவரைச் சேர்த்துக்கொள்ள மறுத்தனர். பின்பு சர்.பிட்டி. தியாகராயர் நேரில் வந்து இவரை அப்பள்ளியில் சேர்த்துவிட்டுச் சென்றார். அப்பள்ளியில் இவர் சிறப்பாகப் படித்துப் பதினொன்றாம் வகுப்பில் அப்பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். சர்.பிட்டி. தியாகராயர் நேரில் வந்து இவரைப் பாராட்டினார். இச்செய்தியை தியாகராயர் இறந்தபோது  சட்ட மன்றத்தில்  நடந்த  இரங்கல் கூட்டத்தில் பனகல் அரசர் நினைவு கூர்ந்தார். பனகல் அரசர் உயர்கல்வியை சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றார். 1892இல் எம்.ஏ., சமற்(ஸ்)கிருதத்தில் தேர்ச்சி அடைந்து முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை மாகாணத்தில் இருந்த சிற்றரசர்கள் குடும்பங்களில் எம்.ஏ., படித்தவர் இவர் ஒருவர் மட்டுமே. எனவே இவர் ஆளுநரை எப்போது வேண்டுமானாலும் முன் அனுமதியின்றி நேரில் பார்க்க சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது. இராமநாதபுரம் சிற்றரசர் இவருக்குத் தங்கக் கடிகாரம் பரிசளித்தார்.

1912-இல் நில உடைமையாளர்கள் தொகுதியிலிருந்து தில்லி சட்டசபைக்கு, உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1915-வரை அப்பொறுப்பில் அவர் இருந்தார். இதனால் இந்தியா முழுவதிலும் இருந்த பல பெரிய மனிதர்களின் நட்பு அவருக்குக் கிடைத்தது.

1912இல் சென்னையில் டாக்டர். நடேச முதலியார் தொடங்கிய முதல் பார்ப்பனரல்லாதார் அமைப்பான திராவிடர் சங்கத்தில் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டார்.1916இல் பார்ப்பனரல்லாதார் நலனுக்காக சர்.பிட்டி, தியாகராயர். டாக்டர். டி.எம். நாயர், டாக்டர் நடேச முதலியார் ஆகியோரின் முயற்சியால் தொடங்கப் பட்ட "South Indian Liberal Federation" (S.I.L.F.)  தென் இந்தியர் முற்போக்குக் கூட்டமைப்பில் (நீதிக் கட்சி என்றும் அழைப்பர், பலர் இதை தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் என்று மொழிபெயர்க்கின்றனர்.) தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார்.

பார்ப்பனர்கள் அந்தக் காலக்கட்டத்தில் அரசியல் உள்பட அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவர்களின் ஆதிக்கத்தை வீழ்த்தவே இந்த அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மூன்று மொழிகளில் நாளிதழ்கள் தொடங்கத் திட்டமிட்டனர். இதற்காக தென்னிந்தியர் மக்கள் சங்கம்  (South Indian People’s Association) என்ற வரையறுக்கப்பட்ட குழுமத்தை நிறுவினர். இதன் வாயிலாக ஆங்கிலத்தில் (‘Justice’) ஜஸ்டிஸ்' என்ற நாளேடும், தமிழில் 'திராவிடன்' என்ற நாளேடும், தொடங்கினர். தெலுங்கில் 'ஆந்திரப் பிரகாசிகா' என்ற பழைய ஏட்டை விலைக்கு வாங்கினர்; அதைக் கொள்கை ஏடாக நடத்தினர். இந்த இதழ்கள் வாயிலாகப் பார்ப்பனரல்லாதார் உணர்வை மக்களிடையே பரப்பினர்.

1919இல் மாண்டேகு - செம்ஸ்போர்டு சட்டத் திட்டத்தின் படி, 1920-இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரசுக் கட்சி போட்டி இடவில்லை; நீதிக்கட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றது. இத்தேர்தலில் பார்ப்பனர்கள் 16 பேர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். ஆளுநர், நீதிக்கட்சி யின் தலைவரான சர்.பிட்டி. தியாகராயரை அழைத்து ஆட்சி அமைக்க வேண்டினார். சர்.பிட்டி. தியாகராயர் பொறுப்பேற்க மறுத்துத் தன் நண்பர் கடலூர் அகரம் சுப்பராயலு ரெட்டியாரை முதல்வராக  அமர்த்தினார், பனகல் ஓர் அமைச்சராகப் பொறுப்பேற்றார். கே.வி. ரெட்டி நாயுடு மற்றோர் அமைச்சராகப் பொறுப்பேற்றார். 17.12.1920இல் இந்நிகழ்வு நடைபெற்றது. முதலமைச்சர் அகரம் சுப்பராயலு ரெட்டியார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 11.7.1921 இல் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். இம்முறையும், ஆளுநர் வேண்டியும், சர்.பிட்டி. தியாகராயர் முதல்வராகப் பொறுப்பேற்க மறுத்து, பனகல் அரசரை முதல்வர் பதவியில் அமர்த்தினார்.

11.7.1921 முதல் பனகல் அரசர் சென்னை மாகாணத்தின் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டு பல அரிய சாதனைகளைப் புரிந்தார். அப்போது இருந்த அரசமைப்பின்படி மாகாண அரசாங்கத்தின் நிர்வாகப் பொறுப்புகள் இரண்டுவிதமாகப் பிரிக்கப்பட்டன. ஒன்று ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் (Reserved Subjects).  இதில் நிதி, நில வருமானம், நீதி, காவல் படை, நீர்ப்பாசனம், அச்சகங்கள், மின்சாரம் தொழிலாளர் நலம் உள்ளிட்டவை இருந்தன. இவை கவர்னர் பொறுப்பில் நிருவாகச் சபையிடம் இருந்தன. இதை ஆங்கிலேயர்களோ, அல்லது ஆளுநர் அமர்த்தும் நபரே கவனித்துக் கொள்வர். மற்றொன்று மாற்றப்பட்ட இலாகாக்கள் (Transferred Subjects). இதில் கல்வி, நூலகம், உள்ளாட்சிகள். சுகாதாரம், விவசாயம், கூட்டுறவுக் கழகங்கள், கால்நடைத்துறை, மதம் சம்பந்தமான காரியங்கள், பொதுப் பணிகள், உள்ளிட்டவை அடங்கும். இந்தப் பொறுப்புகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் கவனித்து வந்தனர்.

1919ஆம் ஆண்டு சட்டப்படி நடைபெற்ற இந்த இரட்டை ஆட்சி முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களுக்கு அதிகாரம் குறைந்த இலாக்காக்களே ஒதுக்கப்பட்டிருந்தன. குறைந்த அளவிலான அதிகாரத்தையும், சிறிய அமைச்சரவையையும் கொண்டிருந்த நீதிக்கட்சி தன் ஆட்சிக் காலத்தில் (1920-1936) மிகப் பெரிய சாதனைகள் புரிந்துள்ளது என்பது வியக்க வைக்கும் செய்தியாகும்.

பனகல் அரசரின் ஆட்சியின் சிறப்புகள் :

மார்க்சின் கொள்கைகளை இலெனின் சோவியத்தில் நிலை நாட்டியதுபோல, நீதிக் கட்சியின் கொள்கைகளைச் செயல்படுத்தி நடைமுறைப் படுத்தியவர் பனகல் அரசர் ஆவார்.இந்தியாவில் சென்னை மாகாணத்தைப்  போன்று ஒன்பது மாகாணங்கள் அன்று இருந்தன. இந்தியாவிலேயே முதன்முதலாக 5ஆம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வியை (Free & Compulsory Education)1922 ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்தியவர் பனகல் அரசரே ஆவார். அப்போது தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு மாதம் 10 ரூபாய்தான் சம்பளமாக இருந்தது. பனகல் அரசர் இதை ரூ.30-5-35 என்று மாற்றினார்; 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற கொள்கையும் 500 பேர்கள் உள்ள பகுதிக்கு (அ) கிராமத்திற்கு ஒரு பள்ளி என்ற கொள்கையும் உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. தொடக்கக் கல்விக்கு, முன் எப்போதும் இல்லாத அளவிற்குப் பணம் செலவிடப்பட்டது. ஏராளமான தொடக்கப் பள்ளிகள் தொடங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆணையிடப் பட்டு அரசின் நிதி உதவியும் அளிக்கப்பட்டது.

பனகல் அரசர் ஆட்சிக்காலத்தில் மட்டும் 1921-26வரை புதியதாக 12,384 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. பனகல் ஆட்சி முடிவடையும் போது (1926) சென்னை மாகாணத்தில் அரசுக் கல்வி நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 50,941, வேறு எந்தக் காலக்கட்டத்திலும் சென்னை மாகாணத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

ஆறாம் வகுப்பு முதல் உயர்கல்விவரை அரைக் கல்விக் கட்டணம், கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக (Depressed Class) ஆதித்திராவிடர்கள், (Backward Classes of Communities) பிற்படுத்தப்பட்டோர் என்று இரண்டு வகையாகப் பிரித்தனர், ஒடுக்கப்பட்டோரில் 85 உள்சாதிகளும், பிற்படுத்தப்பட்டோரில் 95 உள்சாதிகளும் அடங்கும். 1921 ஏப்பிரல் முதல் இது செயல் படுத்தப்பட்டது.

உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு அதிக இடம் கிடைக்கும் வகையில் 1922 சூன் முதல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தேர்வுக் குழுக்கள் (Selection Committee) அமைக்கப்பட்டன. அக் குழுக்களில் கல்லூரி முதல்வர், கல்வித் துறைச் செயலர், நீதிக் கட்சித் தலைவர் ஒருவர் இடம் பெற்றனர். உயர்கல்வியில் 50% இடங்கள் பார்ப்பனருக்கும், 50% இடங்கள் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இதற்கான அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. மருத்துவக் கல்லூரி சேர்க்கைக் குழுவில் சர்.ஏ. இலட்சுமணசாமி முதலியார் நியமிக்கப்பட்டு, பார்ப்பனரல்லாதாருக்கு இடம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

1923இல் சென்னைப்பல்கலைக் கழகச் சட்டம் கொண்டு வந்து அப்பல்கலைக் கழகத்தை மாகாண அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அங்கிருந்த பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்தார். சமற்கிருதம் தெரியாமல் தமிழ் எம்.ஏ. படிக்க முடியாத நிலையை, 1926இல் மாற்றினார். சமற்கிருதம் தெரியாமல் மருத்துவம் படிக்க முடியாது என்ற நிலையையும் 1924இல் மாற்றினார். சமற்கிருதப் பேராசியருக்கும், தமிழ்ப் பேராசிரியருக்கும் இருந்த சம்பள வேறுபாட்டை நீக்கினார்.

இந்தியாவிலேயே பெண்களுக்கு முதன் முதலாக வாக்குரிமை வழங்கியது சென்னை மாகாணத்தில்தான். 04.07.1921 இல் சென்னை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்த உரிமை வழங்கப்பட்டது. பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. எல்லாப் பெண்களுக்கும் ஆறாம் வகுப்பிற்குப் பிறகு அரைக்கட்டணச் சலுகை வழங்கப்பட்டது. பெண்களுக்கு விடுதிகளும் திறக்கப்பட்டன. 1928இல் இந்திய அரசால் நியமிக்கப் பட்ட பெண் கல்வியைப் பற்றி ஆய்வு செய்த பிலிப் ஆர்ட்டாக் குழு இந்தியாவிலேயே சென்னை மாகாணத்தில் மட்டும்தான் பெண் கல்வி சிறப்பாக இருந்ததாகக் கூறியுள்ளது. விதவைப் பெண்கள் தங்கிப் படிக்கவும் தனி விடுதி திறக்கப்பட்டது. அதில் 42 பார்ப்பன விதவைகளும், நாயுடு சாதி விதவைகள் 3 பேரும், முதலியார் சாதி விதவைகள் இருவரும் தங்கிப் படித்தனர்.

டாக்டர். முத்து லட்சுமி ரெட்டி இங்கிலாந்து சென்று உயர் மருத்துவம் படிக்கவும் நிதி உதவி  அளிக்கப்பட்டது. இதை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி  நன்றியோடு தன்னுடைய தன் வரலாற்றில் குறித்துள்ளார்.

இந்துமத பரிபாலன போர்டு :

தென்னகத்தில் ஆட்சிபுரிந்த அரசர்கள் பெரிய பெரிய கோவில்களைக் கட்டி அவற்றிற்கு ஏராளமான சொத்துக்களையும் வைத்துச் சென்றனர். இவற்றைப்  பார்ப்பனர்கள் கொள்ளையடித்து வாழ்ந்து வந்தனர். இந்தப் பார்ப்பனக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த பனகல் முயன்றார். இந்துமத பரிபாலனச் சட்ட மசோதா 18.12.1922-இல் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். கோவில்களின் வருமானத்தை அரசு ஊழியர்களைக் கொண்டு பராமரித்தல், உபரி நிதியைக் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்குப் பயன்படுத்துதல் முதலானவை இச் சட்டத்தின் நோக்கமாகும். நீண்ட விவாதத்திற்குப் பிறகு, சுமார் 600 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு 1923 ஆளுநர் ஒப்புதல் அளிக்காதபடி பார்ப்பனர்கள் தடுத்தனர்.  ஆளுநரை வலியுறுத்தி நடைமுறைப் படுத்துவதற்குள் 1923 நவம்பர் மாதத்தில் முதல் அமைச்சரவையின் பதவிக் காலம் முடிவுற்றது.

இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு மீண்டும் 19.11.1923இல் பனகல் அரசரே முதல்வராகப் பொறுப்பேற்றார். இம்முறை ஒரு தமிழர் சிவஞானம் பிள்ளை அமைச்சராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்துமதபரிபாலனச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவண்ணம் பார்ப்பனர்கள் சதி செய்து, ஆளுநரும் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார். பனகல் அரசர் சளைக்கவில்லை . எப்படியாவது இதை நிறைவேற்றியே தீருவது என்று முடிவுசெய்து, மீண்டும் ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இம் முறை சத்தியமூர்த்தி அய்யர் சென்னைப் பல்கலைக்கழக பட்டதாரித் தொகுதி மூலமாகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் இதை எதிர்த்து ஓயாமல் சட்டமன்றத்தில் பேசினார்: திட்டினார். 475 திருத்தங்களை அவர் ஒருவர் மட்டுமே கொண்டு வந்தார். மொத்தம் 800 சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. திருப்பதி கோவிலுக்கு மட்டும் விலக்கு அளித்தால் ரூ.5 இலட்சம் கையூட்டு தருவதாக பனகலிடம் பேசிப் பார்த்தனர். எதற்கும் பனகல் மசியவில்லை. 1925 நவம்பரில் வெற்றிகரமாகச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்தினார். 

பனகல்  அரசுமீது மடாதிபதிகளும் கோவில் நிர்வாகிகளும் 50க்கும் மேற்பட்ட வழக்குகளை உயர்நீதி மன்றத்தில் தொடுத்தனர். இதனால் காங்கிரசில் இருந்த பெரியாருக்கு, பனகல் அரசர் மீது நேசம் ஏற்பட்டது. காங்கிரசைவிட்டுப் பெரியார் வெளியேறிய காலகட்டமும் அதுதான்.

பனகல் அரசர் காலத்தில்தான் 1924 இல் சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் சமஸ்தான அரசுக்கும் இடையே காவிரி நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பயனாக மேட்டூர் அணை கட்டத் திட்டம் உருவாக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று 1924 முதல் 1933க்குள் 10 ஆண்டுகளில் 5,91,38,000 ரூ. செலவில் கட்டி முடிக்கத்திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு 3.10,000 ஏக்கர் பாசன வசதி பெற்றுத் தமிழகம் பஞ்சமில்லாமல் இருக்க வழிவகை செய்தார்.

வகுப்புவாரி உரிமை: 

பனகல் அரசர் 1921 முதலே வேலை வாய்ப்பில் வகுப்புரிமை அளிக்க முயற்சி மேற்கொண்டார். முதல்முறை ஆட்சியில் அவர் அதை நடைமுறைப் படுத்த விடாமல் பார்ப்பனர்கள் தடுத்தனர். ஆனால் இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் அவர் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட்டார். அரசுப்  பணியாளர் தேர்வுக் குழுவை (Staff Selection Board) 1924இல் ஏற்படுத்தினார். இதில் பார்ப்பனர்ரல்லாதவர்களைத் தலைவராகவும், உறுப்பினர்  களாகவும் நியமித்து அரசுப் பணிகளில் பார்ப்பனரல்லாதார் இடம்பெற வழிவகை செய்தார்.

1.4.1924இல் முதன்முதலில் வகுப்புரிமை அடிப்படையில் அரசுத் தேர்வுக்குழு மூலமாக நிரந்தரப் பணி நியமனம் செய்தார். அரசு ஆணை து எண் 658 - நாள் 15.8.1922இன் படியும், அரசு து, ஆணை எண் 563 - நாள் 21.7.1923இன் படியும்  இப்பணி நியமனம் செய்யப்படுவதாக அரசிதழில்  அறிவிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு.

குறிப்பு: உயர் பதவிகளில் பார்ப்பனரல்லாதார் மற்றும் ஆதித் திராவிடர்களுக்கு அதிக இடம் கிடைக்காமல் போனதற்குக் காரணம். அப்போது படித்தவர்களில் நம்மவர் அதிகமில்லை என்பது தான். 1924 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 1 ஆம் தேதி இதுபோன்ற அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். Madras Presidency Administrative Report Communal Representation இல், கடைசிப் பக்கம்  வகுரிமை அடிப்படையில் பணி நிரப்பட்ட விவரத்தை 1924-25 முதல் தவறாமல் வெளியிட்டு வந்தார்கள். பார்ப்பனர் பார்ப்பனரல்லாத இந்துக்கள் இந்தியக்கிறித்துவர் முகமதியர் ஆங்கிலோ இந்தியர் ஆதிதிரவிடர் கெசட் பதிவு பெற்ற அலுவலர்கள்

573 268 116 51 459 ... 7
ரூ.100ம் அதற்கு மேலும்
2, 578 1,227 337 232 350 2 4
ரூ.35 முதல் ரூ 100 வரை
11,224 7,000 1,427 162 46 34
ரூ.35க்குக் கீழ்
1,974 38,020 2,249 12,047 20 1259 213

ஆதித் திராவிடர் நலன் :

ஆதித் திராவிடர் நலனில் பனகல் அரசர் மிகவும் அக்கறை காட்டினார். பள்ளர், பறையர் என்று இழிவாக உள்ள பெயரை மாற்றி ஆதித் திராவிடர் என்ற பெயரை எங்கள் சமூகத்திற்கு இட்டு அழைக்கவேண்டும்' என்று எம்.சி. இராசா 20.2.1922 சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். அத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. அதன் அடிப்படையில் இனி இச் சமூகத்தினரை ஆதித்திராவிடர்கள் என்றே அனைத்து ஆவணங்களிலும் பதிய வேண்டும் என்று அரசாணை எண் 817 சட்டம் (பொது) நாள் 25.3.1922 இல் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

அரசாங்கத்தின் பொதுப் பள்ளிகள் மற்றும் அரசு மானியம் பெறும் பள்ளிகள் அனைத்திலும் ஆதித்திராவிட மாணவர்களைக் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்களைத் தனியே பிரித்து உட்கார வைக்கக் கூடாது என்றும், ஆதித்திராவிட மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் பள்ளிகளுக்கு அரசு நிதி உதவி நிறுத்தப்படும் என்றும் அரசாணைகள் வெளியிடப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டன. ஆயிரம் ஆண்டுகளாகப் பிரிந்து கிடந்த சமூகத்தை மற்றவருடன் இணைக்கப் பெருமுயற்சி பனகல் அரசர் ஆட்சிக்காலத்தில்தான் மேற்கொள்ளப்பட்டது.

உள்ளாட்சி அமைப்புகளில் (Taluk Board, District Board) ஆதித்திராவிடர்கள் தொடர்ந்து இடம்பெறச் செய்தார் பனகல் அரசர். இந்தியாவிலேயே முதன்முறையாக ஆதித்திராவிடப் பிள்ளைகள் இலவயமாகத் தங்கிப் படிக்க முதல் மாணவர் விடுதியை 1921 இல் ஏற்படுத்தியவர் பனகல் அரசர். அவர் ஆட்சி முடிவடைவதற்குள் நான்கு விடுதிகளாக விரிந்தன. நீதிக் கட்சி ஆட்சி முடிவடைவதற்குள் அவை 18 விடுதிகளாக விரிவு படுத்தப்பட்டன.

22.8.1924இல் இரட்டைமலை சீனிவாசன் சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானத்தின்படி, பொது இடங்களில் ஆதித் திராவிடர்கள் நுழைய இருந்த தடை அகற்றப்பட்டது. மேலும் இது விரிவு படுத்தப்பட்டு, வீரய்யன் கொண்டுவந்த தீர்மானத் தின்படி, ஆதித் திராவிடர்களைப் பொது இடங்களில், (பொதுக்கிணறு, பொதுச் சாலை, பொது அங்காடி,) தடுப்பவர்களுக்கு ரூ. 100 அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டது. அந்த ஆணை 24.12.1925 அரசிதழிலும் வெளியிடப்பட்டது. தண்டோரா மூலம் மாகாணம் முழுவதும் அறிவிக்கப்பட்டது.

1920வரை  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலம் 19.251 ஏக்கர்கள்தான். ஆனால் பனகல் அரசரின் ஆறு ஆண்டு ஆட்சிக் காலத்தில் ஆதித்திராவிடர்களுக்குக் கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலம் 2,06.200 ஏக்கர்கள் ஆகும். (சான்று  Madras Presidency Administrative Report, 1926 .) பக்கம் 134.)

பிரிட்டிசு இந்தியாவில் முதன்முறையாக ஆதித் திராவிடர் களை இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசுப் பணியில் அமர்த்தியவர் பனகல் அரசரே யாவார். அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் காவல் துறையில் ஆதித்திராவிடர்கள் காவலர் பணியில் 382 பேரும், தலைமைக் காவலர் பணியில் 20 பேரும், துணை ஆய்வாளர் பணியில் ஒருவரும் அமர்த்தப்பட்டனர். நீதிக்கட்சி ஆட்சி முடிவடையும் போதுதான் துணைக் கண்காணிப்பாளர் பணிவரை ஆதித் திராவிடர் இடம்பெற்றனர். அக்காலத்தில் இந்தியாவில் வேறு எந்த மாகாணத்திலும் காவல் துறையில் காவலர் பணியில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர்கூடச் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது, எம்.சி. இராசா 1928இல் மத்திய அரசு அமைத்த குழுவில் இருந்தபோது தயாரித்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆதித்திராவிடர்களுக்குக் கூட்டுறவுக் கடன் பனகல் அரசர் காலத்தில்தான் அதிக அளவு வழங்கப்பட்டது. அதற்காக தனிக் கூட்டுறவுச் சங்கம் ஏற்படுத்தப்பட்டு அது தொழிலாளர் நலத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டது. அதன் விவரம் வருமாறு. ஆண்டு கடன்தொகை திரும்பச்செலுத்தியதொகை 

1921-22 1,04,543 73,728

22-23 1,40,340 87,886

23-24 93,005 63,413

24-25 4,29,465 1,89,732

25-26 2,07,542 1,89,748

26-27 5,53,283 1,30,098

27-28 49,377 60,180

28-29 51,252 1,30,098

29-30 63,068 1,21,897

சிதம்பரத்தில், சாமி சகஜானந்தம் ஆதித் திராவிடப் பிள்ளைகளுக்கென 1916இல் ஒரு பள்ளியைத் தொடங்கினார். ஆங்கில அரசிடம் நிலம் கேட்டார். அவர்கள் கொடுக்கவில்லை . அவர் திண்ணைப் பள்ளி மாதிரி நடத்தினார். பனகல் அரசர் தான் 50 ஏக்கர் நிலம் கொடுத்து அதை நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தி அங்கீகாரம் கொடுத்து, ஆண்டுதோறும் அரசின் நிதியுதவி கிடைக்கவும் வழிசெய்தார்.

சென்னையில் எல்.சி. குருசாமி அருந்ததியர்களுக்கு 5 பள்ளிகளைத் தொடங்கினார், அதில் நான்கு இரவுநேரப் பள்ளிகள், ஒன்று பகல்நேரப் பள்ளி. பனகல்அரசர்  எல்.சி. குருசாமியை மேலாளராக இருக்க வைத்து அய்ந்து பள்ளிகளுக்கும் அரசின் நிதி உதவியை எல்.சி. குருசாமியிடமே கொடுத்து வந்தார்.பனகல் அரசர் காலத்தில்தான் ஆதித்திராவிட மாணவர்கள் 3 பேருக்கு வகுப்புரிமையின் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்தது. அதேபோல் பொறியியல் மற்றும் வேளாண் கல்லூரியிலும், கால்நடை மருத்துவக் கல்லூரியிலும் இடங்கள் கிடைத்தன.மற்றபல அரசுப் பணிகளிலும் ஆதித்திராவிடர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆதித் 'திராவிடர்களின் நலனைக் காப்பதில் அவருக்கு நிகர் - அவரே. இதுவும் பெரியாரை பனகல் பக்கம் - இழுத்துச் சென்றதற்கு மற்றொரு காரணம் ஆகும்.

பனகல் அரசரின் இந்தச் செயல்களால் வெறுப்பும் சினமும் கொண்ட பொறுமையிழந்த பார்ப்பனர்கள், பணக்காரர்கள், மேல்சாதியினர், மடாதிபதிகள் முதலானோர் ஒன்றுசேர்ந்து 1926 தேர்தலில் அவரைத் தோற்கடிக்கவும், ஆட்சியை விட்டு அகற்றவும் இரவு பகலாகப் பாடுபட்டனர்.சுயராச்சியக் கட்சியினர் முதன்முதலாக வாக்காளர்களுக்கு 1926 தேர்தலில் பணம் கொடுத்தனர். தந்தை பெரியார் 'குடிஅரசு' ஏட்டில் சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில், இன்றைய மார்கட் நிலவரம் - ஓட்டு ஒன்றுக்கு ரூ.1 முதல் 5 வரை, ஒரு கிராம மொத்த ஓட்டும் பெற மணியக்காரருக்கு ரூ.100, கணக்குப் பிள்ளைக்கு ரூ. 50, பள்ளிக்கூட உபாத்தியாயருக்கு ரூ.25-என்று எழுதி அம்பலப் படுத்தினார். (குடிஅரசு 17.10.1926). அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் பனகல் அரசரை எதிர்த்து நில உடைமையாளர் தொகுதியில் போட்டியிட வேண்டி, ஆந்திராவின் ஒரு சிறிய ஜமீனை விலைக்கு வாங்கி இவரை எதிர்த்து நின்றார்; படுதோல்வி அடைந்தார்.

ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டிருந்த பெரியார், பனகல் அரசரின் மேற்கண்ட செயல் பாடுகளால் நீதிக்கட்சி வெற்றிபெறப் பாடுபட்டார். 1920முதல் 1923 வரை அரசின் தலைமை வழக்குரைஞர் ராகவும், 1923 - 26 வரை (Home Member)  காவல் மற்றும் நீதித்துறை நிர்வாகப் பொறுப்பு வகித்த  சர்.சி.பி. இராமசாமி அய்யர் (துப்பாக்கியை, எடுத்துக்கொண்டு மிரட்டி) பலரை நீதிக்கட்சிக்கு வாக்களிக்க விடாமல் மிரட்டினார். மடாதிபதிகளும், மகந்துக்களும் பணத்தைத் தண்ணீராய் வாரி இறைத்து நீதிக் கட்சியைத் தோற்கடித்தனர். பனகல் தேர்தலில் வெற்றிபெற்றார்; ஆனால் ஆட்சியை இழந்தார். ஆட்சியை இழந்திருந்த பனகல் அரசரை பெரியார் பயன்படுத்திக் கொண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்குவதற்காகத் தென்னகம் முழுவதும் அவரையும் அழைத்துக்கொண்டு சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பனகல் அரசரின் அமைச்சரவை செயலளராகப் பணியாற்றிய டாக்டர். சுப்பராயனுக்கு சுயராச்சியக் கட்சியினர் ஆசை வார்த்தை காட்டினர். நீதிக்கட்சியிலிருந்து விலகி டாக்டர். சுப்பராயன் சுயராச்சியக் கட்சியினரின் ஆதரவோடு சுயேச்சை அமைச்சரவையை 4.12.1926இல் அமைத்தார். ஆனால் நீண்ட நாள்கள் அவரை ஆட்சியில் நீடிக்க விடவில்லை சுயராச்சியக் கட்சியினர். சைமன் குழுவிற்கு வரவேற்பு கொடுத்தார் என்ற காரணம் காட்டி, அவருடைய அமைச்சரவையைக் கவிழ்க்க முயன்றனர். சுயராச்சியக் கட்சியின் சார்பில் அமைச்சர்களாக இருந்த அரங்கசாமி முதலியார், ஆரோக்கியசாமி முதலியார்; இருவரும் 8.3.1928 இல் பதவி விலகினர்.

டாக்டர். சுப்பராயன் வேறு வழியின்றிப் பனகல் அரசரின் உதவியை நாடினார். பனகலும் அவருக்கு ஆதரவு அளித்தார். பனகலின் ஆலோசனைப்படி எஸ். முத்தய்யா முதலியாரும், எம்.ஆர்.சேதுரத்தினம் அய்யரும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். இப்போது உள்ள முதல்வர்கள் யாராக இருந்தாலும் தன்னிடமிருந்து பிரிந்து சென்றவரின் ஆட்சி கவிழ்கிறது என்றால் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து, ஒழியட்டும் என்றே நினைப்பார்கள். ஆனால் பனகல் அரசர் மிகவும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார். நீதிக் கட்சியைச் சார்ந்த ஊ.ஆ.பு. சவுந்தரபாண்டியன் கட்சிக் கொரடாவாக இருக்கச் சம்மதித்தார். இதனால் அந்த ஆட்சி அடுத்த தேர்தல்வரை நீடித்தது.

தியாகராயர் மறைவுக்குப் பின் நீதிக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பனகல் அரசர், திராவிடன் அச்சகத்தில் இயக்க நாளேடுகளை நடத்துவதற்காகப் பணத்தைத் தண்ணீராய்ச் செலவழித்துக் கடன்காரரானார். அவருடைய நிலம் கடனுக்காக ஏலம் போடப்பட்டது. அவர் ஆட்சியை இழந்த ஒரே ஆண்டில் திராவிடன் அச்சகமும் கடன் சுமையால் ஏலத்திற்கு வந்தது. பெரியார் அதை ஏலத்தில் எடுத்து, திராவிடன் ஏட்டை 3 ஆண்டு காலம் தம் சொந்தப் பொறுப்பில் நடத்தினார். Justice ஆங்கில ஏட்டை சர். ஆர்க்காடு, ஏ. இராமசாமி முதலியார் தம் சொந்தப் பொறுப்பில் ஏற்று நடத்தினார்.

1928 திசம்பரில் பனகல் அரசருக்கு இன்புளயன்சா என்னும் வைர காய்ச்சல் வந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை . 1928 திசம்பர் மாதம் 16ஆம் தேதி பனகல் அரசர் மறைவுற்றார். தந்தை பெரியாருக்குச் செய்தி தெரிவிக்கப்பட்டு அடுத்த நாள் காலை அவர் ஈரோட்டிலிருந்து சென்னை வந்தார். பெரியாருக்கு ஒரு கை ஒடிந்த மாதிரி ஆகிவிட்டது. 'நமது அருமைத் தலைவர் பனகல் மறைந்தார்' என, குடிஅரசு ஏட்டில் இரங்கல் உரை எழுதினார்.

பனகல் அரசரின் சேவையைப் பாராட்டி ஆங்கிலேயர் ஆட்சி 1.1.1918இல் திவான்பகதூர் பட்டமளித்தது. 3.6.1922இல் அவர் குடும்ப வாரிசு உரிமைப்படி இராசா' பட்டம் அளிக்கப் பட்டது. 1926இல் KCIE என்ற பட்டத்தை ஆங்கில அரசு வழங்கியது.

இன்றும் தியாகராயர் நகரில் பனகல் அரசர் பெயரை நினைவூட்டிக் கொண்டிருப்பது, 'பனகல் பூங்கா'வாகும். பனகல் உயிருடன் இருக்கும்போதே நீதிக் கட்சியினர் பனகல் பெயரில் 1928 நவம்பர் 9ஆம் நாள் அன்றைய ஆளுநர் கோட்சன் அவர்களைக் கொண்டு அப் பூங்காவைத் திறப்புவிழாச் செய்தனர்.

சென்னை சைதாப்பேட்டையில் இருந்த பழைய அரசு அலவலக வளாகம் பனகல் பில்டிங்ஸ்' என்று இருந்த கட்டடத்தைப் புதுப்பித்தபோது தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், அக் கட்டடத்திற்கு பனகல் மாளிகை என்று தமிழில் பெயர் மாற்றினார்.

இன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் திராவிடர் இயக்கத்தில் சேருவதற்குக் காரணமாக இருந்தது, அவர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது துணைப்பாட நூலாக இருந்த பனகல் அரசரைப் பற்றிய எண்பது பக்க நூலை, தான் படித்ததாலேயே ஆகும் என்று நெஞ்சுக்கு நீதி முதல் பாகத்தில் அவரே எழுதியுள்ளார்.

பனகல் அரசர் மறைந்து 96 ஆண்டுகள் ஆகிவிட்டன. பள்ளி, கல்லூரிப் பாடநூல்களில் பனகல் அரசரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெற்றால் இளைய தலைமுறையினர் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், திராவிடர்இயக்கப் பற்றுக்கொள்ளவும் வாய்ப்பாக இருக்கும். முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இதனைச் செய்ய முன்வருவார் என நம்புகிறேன்.

நன்றி:திரு.வாலசா வல்லவன்.

தமிழகத்தில் போலி தமிழ்தேசியம் பேசும் சிலர் தெலுங்கர்களை வந்தேறி என இகழ்வதும், சமூகநீதி பேசும் ஆதிக்க சாதியினர் பனகல் அரசர், சர்.பி.டி.தியாகராயர், பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் சமூகநீதிக்காக இந்த மண்ணில் உழைத்ததை மறைத்து, மொழி அடிப்படையில் பரபட்சம் காட்டுவதற்கும் சவுக்கடியாய் அமைந்துள்ளது இக்கட்டுரை. இந்த மண்ணிற்காக நாம் என்ன செய்கிறோம், நம் முன்னோர்கள் என்ன செய்தார்கள் என்று தெரிந்துகொள்வது, மூளைச்சலவை செய்து, இளைய சமுதாயத்தை தெலுங்கர்களுக்கு எதிராய் திசைதிருப்பும் போலி தமிழ்தேசியவாதிகளை அம்பலப்படுத்த உதவும்


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved