🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பழங்குடியா- உயர்குடியா? உன் குடி என்ன அறிவாயா?

16-வது இந்தியக்குடியரசுத் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்தியில் ஆளும் கூட்டணி கட்சியும், எதிர்க்கட்சி கூட்டணியும் தத்தமது வேட்பாளர்களை அறிவித்ததைத் தொடர்ந்து, வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரங்களை தொடங்கி, மாநிலம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ஆளும்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திருமதி.திரௌபதி முர்மு, ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினர் சமுதாயத்தில் பிறந்தவர். இவர் பிஜூ ஜனதாதளம் - பாஜக கூட்டணி அமைச்சரவையில் மாநில அமைச்சராக இருந்தவர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்ட பொழுது, பழங்குடி வகுப்பைச் சேர்ந்த முதல் பெண் ஆளுநர் என்ற பெயரைப்பெற்றவர்.

எதிர்க்கட்சி வேட்பளாரான திரு.யஷ்வந்த் சின்ஹா, ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தவர். இந்தியாவிலுள்ள மிகமூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். பிகார் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். முன்பு சந்திரசேகர் அமைச்சரவையிலும், பின்னர் அடல்பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையிலும் அங்கம் வகித்தவர். இவரது மகன் ஜெயந்த் சின்ஹா, மோடி அமைச்சரவையில் நிதித்துறை இணை அமைச்சராக இருந்தவர். பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்ட சின்ஹா அவர்கள், மோடி தலைமையிலான ஆட்சியின் தவறான போக்குகளை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், கடந்த மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலின்போது திருணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அக்கட்சியின் துணைத்தலைவராக பணியாற்றி வந்தார்.

இதனடிப்படையில் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்களும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்பது உறுதியாகிறது. ஒருவர் பழங்குடி வகுப்பையும், மற்றொருவர் உயர்ஜாதி பிரிவையும் சார்ந்தவர். இதில் கூர்ந்து பார்க்கப்பட வேண்டிய விசயம் யாதெனில், வலதுசாரி சித்தாந்தம், முதலாளித்துவ ஆதரவு, பெரும்பான்மை மதம், உயர்சாதியினர் கட்சி என்று சொல்லப்படுகின்ற பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்தவரை முதல்குடிமகனாக அறிவித்ததின் மூலம் தங்கள் கட்சி அனைவருக்குமான கட்சி என்ற கருத்தை முன்வைக்கிறது.

இதற்குமாறாக, சோசலிஷம், இடதுசாரி சித்தாந்தம், சமூகநீதி என்று பேசும் எதிர்க்கட்சிகளின் சார்பில் உயர்சாதியைச் சேர்ந்தவர் நிறுத்தப்படுகிறார். அனைவருக்கும் அனைத்தும், பொதுவுடமை சிந்தனை, பாட்டாளி வர்க்கத்தின் உரிமை, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் நலன், மதச்சார்பின்மை போன்ற மக்களின் நலன் குறித்துப்பேசும் கட்சிகள், மதசிறுபான்மையினரையோ அல்லது இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவிக்காமல், உயர்சாதியைச் சேர்ந்த யஷ்வந்த் சின்காவை நிறுத்தியுள்ளனர்.

இதன்மூலம் சாதி சங்கங்கள் அல்லது பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது, கட்சிகள் எப்பொழுதும் வாக்கு அறுவடையை மட்டுமே சிந்திக்கின்றன. அவ்வப்போதைய தேவைக்கு ஏற்ப வேட்பாளர்களை களமிறக்கி, அவர் சார்ந்த சமூகத்தின் வாக்குகளை கவர காய் நகர்த்துகின்றன. அதேபோல் தான் இசைஞானி இளையராஜாவை நாடாளுமன்ற மேலவைக்கு நியமன உறுப்பினராக பரிந்துரை செய்து வெளியிடப்பட்ட கடிதத்திலும் "தலித்" சாதியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இளையராஜாவோ, திரௌபதி முர்முவோ தலித், பழங்குடிகள் என்றி கட்சிகளால் அடையாளப்படுத்தப்பட்டாலும், எந்த சாதியினால் இவர்களுக்கு இப்படி பெருமைமிகு பதவிகள் அளிக்கப்படுகிறதோ அந்த சமூக மக்களுக்காக, மக்கள் படும் துயரங்களில், வளர்ச்சியில், உரிமைகளை பெற்றுக்கொடுப்பதில் ஏதாவது சிறுதுரும்பையாவது கிள்ளிப்போட்டிருக்கின்றார்களா என்று பார்த்தால், இல்லை என்பதே உண்மை. இன்னும் ஒருபடி கூடுதலாக குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு அவர்களின் சொந்த கிராமத்தில் இன்றுவரை மின்சாரம் இல்லை என்பதிலிருந்து, முர்மு அவர்களால் அப்பகுதி மக்களோ, சமுதாய மக்களோ பெற்றது எதுவுமில்லை என்பது தெளிவாகிறது. 

திரௌபதி முர்முவை குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவித்ததின் மூலம், நாட்டில் வாழும் 20 கோடி பழங்குடியினருக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குவதாக பெருமைப்பட்டுக்கொள்ளும் பாரதிய ஜனதா கட்சி தான், பழங்குடியினர் காலம் காலமாக வாழ்ந்து வரும் இடங்களில் இருந்து அவர்களை அப்புறப்படுத்துவது, அந்த இடத்தை அம்பானி, அதானி முதலான கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதை தொடர்ச்சியாக செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தது தொடங்கி, வனப் பகுதிகளில் வளர்ச்சி என்ற பெயரில் ஏறத்தாழ ஆயிரம் திட்டங்களுக்கு அனுமதி தந்துள்ளது. இதனால், சுமார் 45 லட்சம் பழங்குடியினர் வனப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். சுமார் 12 லட்சம் பழங்குடிகளுக்கு வாழ்விடப் பட்டா மறுக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கொண்டுவந்த வன உரிமைச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் விதமாக பாஜக- ஒரு சட்டம் கொண்டு வந்தது. அந்த முயற்சி நீதிமன்றத்தில் தோல்வியடைந்த நிலையில், பா.ஜ.க வனப்பகுதிகளில் பெரும் போரை உண்டாக்கியது. அதில், இயற்கை வளங்களையும், விலங்குகளையும், பழங்குடியினரையும் பலியிட்டது.

ஜார்கண்டில் வாழும் பழங்குடிகளின் நிலம் சார்ந்த உரிமைகளை பாதுகாப்பதற்காக என்று கூறி சோட்டானக்பூர் குத்தகை சட்டம், சந்தல் பர்கானா குத்தகை சட்டம் ஆகியவற்றில் சட்டத்திருத்தத்தை கொண்டுவருவதற்கு பாஜக தலைமையிலான அம்மாநிலத்தின் முந்தைய அரசு முயற்சி செய்தது. அதற்கு கவர்னாராக இருக்கும் போது துணை போனவர் தான் இந்த திரெளபதி முர்மு என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர். இது பாஜக மீது பழங்குடி மக்கள் இடையே பெரும் அதிருப்தி ஏற்படுவதற்கு வழிவகுத்தது. இப்படி எண்ணற்ற குற்றச்சாட்டுகள் சமூக ஆர்வலர்களாலும், எதிர்க்கட்சிகளாலும் விமர்சிக்கப்படுகிறார் முர்மு.

இதே நிலையைத் தான் தமிழகத்திலும் பார்த்துவருகிறோம். வன்னியர் இடஒதுக்கீடுக்கு எதிராக போராடிவரும் சாதிகளைச் சேர்ந்த பலர் தமிழக அமைச்சரவையிலும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். இதற்கு முந்தைய ஆட்சியில் துணைமுதல்வராகக்கூட இருந்தார். ஆனால் இறுதியில் என்ன நடந்தது? வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்படலாம் என்பதை சீர்மரபினர் நலச்சங்கம் முன்கூட்டியே கணித்து ஆறுமாதகாலமாக போராடி வந்தோம். நமது அமைச்சர்களை சந்தித்து எச்சரிக்கை செய்தோம். கடைசிவரை நமது கோரிக்கைகள் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை, மாறாக துரோகத்திற்கு துணைநின்று வேடிக்கை பார்த்தனர்.

இந்த அமைச்சரவையிலும் சீர்மரபினர் வகுப்பு, வன்னியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கவே செய்கின்றனர். இன்றைய முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்கனவே வாக்குறுதியும் அளித்திருந்தார். ஆனால் நடந்து கொண்டிருப்பது என்ன? ஏதாவது ஒரு அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினர்களோ நமது கோரிக்கை குறித்தோ, முதல்வர் அளித்த வாக்குறுதி குறித்தோ பேசுகின்றார்களா என்றால் இல்லை என்பதே நாம் கடந்த ஒருவருடமாக கண்டுவரும் உண்மை. 

ஆனால் இதற்கு நேர்மாறாக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும், அம்மக்களுக்கு விசுவசமாக இருப்பதை அவர்களின் செயல்பாடுகளில் இருந்து உறுதியாகிறது. உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டபிறகும் மீண்டும் வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டுவர தமிழக அரசை வற்புறுத்துவதிலாகட்டும், சீர்மரபினர் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த விடாமல் தடுப்பதிலாகட்டும் வெற்றிபெற்றுள்ளனர் என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது யாதெனில், சாதி சங்கங்கள் தான் தன்சாதியைச் சேர்ந்தவருக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று போராடுகிறோமே தவிர, அந்த வாய்ப்பைப்பெற்று அதிகாரத்திற்கு வந்தவர்கள், பேசாமடந்தைகளாக, வாய்மூடி மௌனிகளாக, கமிஷனுக்கும், காண்ட்ராக்ட் பெறவும் தான் அழைகின்றனரே தவிர, சாதி மக்களுக்காக ஒருநாளும் பேசியதில்லை என்பதை பார்த்து வருகிறோம். மேலும் கட்சியின் கொள்கைகளை அல்லது கட்சித்தலைமையிடும் கட்டளைகளைத்தான் நம் மக்கள் மீது திணிக்கின்றனரே தவிர நமது எண்ணங்களை, தேவைகளை கட்சித் தலைமைகளிடம் கொண்டு சேர்ப்பதில்லை.


இதைத்தான் மேலேயுள்ள தகவல் நமக்கு உறுதி செய்கிறது. நாட்டில் 24 விழுக்காடுள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவைச்சேர்ந்தவர்களுக்காக ஆங்கிலேயர்காலத்திலிருந்தே போரடிய அச்சமுதாய தலைவர்களால், சுதந்திரத்திற்கு முன்பே தனித்தொகுதி, தனி இடஒதுக்கீடு பெற்று அரசியல் அதிகாரத்தையும், நிர்வாக அதிகாரத்தையும் பெற்றுள்ளனர். ஆனால், ஆண்டபரம்பரைகள் வெள்ளையர்களோடு போராடிக்கொண்டிருந்த வேளையில், அவர்களுக்கு ஒத்தாசையாக செயல்பட்ட 12 விழுக்காடு  உயர்சாதிப்பிரிவினர், ஏறக்குறைய 55 விழுக்காடு இடங்களை ஆக்கிரமித்துக்கொண்டனர். ஆனால் நாட்டின் மக்கள்தொகையில் 65 விழுக்காடுள்ள பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த "ஷோ கால்டு ஆண்ட பரம்பரைகள்", மதக்காவலர்களாக, மண்ணின் மைந்தர்களாக, வீரகுடிகளாக சொல்லிக்கொள்பவர்கள் வெறும் 19 விழுக்காடு இடங்களையே பெற்றுள்ளனர்.

இந்த 19 விழுக்காடு இடம் கூட ,10 ஆண்டுகாலம் கிடப்பில் போடப்பட்டிருந்த மண்டல் கமிஷன் பரிந்துரையை நிறைவேற்றிட தனது பிரதமர் பதவியைக்கூட துச்சமென தூக்கியெறிந்த சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களின் தியாகம், கருணை என்றால் மிகையல்ல. சாதாரண வார்டு கவுன்சிலர், கட்சிப்பதவிகளுக்கே நமது சொந்தங்கள் அடிக்கும் அந்தர் பல்டிகளும், நடிப்பு, நாடகம், கோமாளித்தனமான பேச்சுகளை தினம்தோறும் தொலைக்காட்சிகளில் பார்த்து வருகிறோம். ஆனால் நாட்டில் தேசபக்தி, தேசப்பாதுகாப்பு, வளர்ச்சி, சமூகநீதி, மதம் என்ற போர்வைகளில் ஆண்டாண்டுகாலமாக சுரண்டப்பட்டு வரும் கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்காக  பாரதப்பிரதமர் பதவியை துச்சமென தூக்கியெறிந்த வி.பி.சிங் அவர்கள் மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்று 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை 1990 முதல் நடைமுறைப்படுத்தியும், முப்பது ஆண்டுகள் கடந்து இதுவரை 19 விழுக்காடு இடங்களே கிடைத்துள்ளது என்பது எவ்வளவு பெரிய துயரம். இதற்கும் சட்டமியற்றும் அதிகாரமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களாக பாதிக்கும் மேற்பட்டோர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தும் கண்ட பயன் ஏதுமில்லை.

ஆகவே, கட்சியிலும், ஆட்சியிலும், பிரதமாகவோ, குடியரசுத்தலைவராகவோ, முதல்வராகவோ, கவர்னராகவோ, இருப்பவர்கள் உயர்குடியோ, பழங்குடியோ அல்லது பிற்படுத்தப்பட்ட சாதியோ நமக்கு ஒன்றும் ஆகப்போது ஏதுமில்லை என்பதே கடந்த காலம் காட்டும் வரலாறு. எனவே கட்சிகள் நடத்தும் நாடகங்களில், நம்மவர்கள் நடிக்கும் வேடங்களைக் கண்டு ஏமாறாமல், நிலைமைகளை சீர்தூக்கிப்பார்த்து சங்கங்கள் செயல்பட்டால் மட்டுமே அவரவர் சாதிக்கு நீதி இடைக்கும், இல்லையேல் அநீதிகளே தொடரும்.

சாதிகளுக்கு சமூகநீதியையும், சமத்துவத்தையும் பெற்றுக்கொடுக்கும் அமைப்பாக சமூக நீதி கூட்டமைப்பு செயல்படும். கட்சிகளால் நாட்டை கொள்ளையடிக்கவும், சமூகநீதியை சூரையாட மட்டுமே முடியும். பல சாதிகள் இணைந்த சமூக நீதி கூட்டமைப்பே நாட்டில் சமூகநீதியைம், அமைதி, வளர்ச்சியையும் ஏற்படுத்தமுடியும். அரசியல் அறிவோம்! ஆகஸ்டி ஏழில் மதுரையில் திரள்வோம்!


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved