🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அறிஞர் அண்ணா பெயரிட்ட தமிழ்நாடு! - இந்திய வரலாற்றில் இந்நாள் ஒரு பொன்நாள்!

மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி 1968 ஆம் வருடம் ஜூலை 18ஆம் நாள் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட நாள் இன்று தமிழ்நாடு நாள் என்று கொண்டாடப்படுகிறது.

28.03.1956 -இல் பிரஜா சோஷலிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி கே.விநாயகம், 19.08.1960-இல் அதே பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் பி.எஸ்.சின்னதுரை, 24.02.1961-இல் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.சின்னதுரை, 27.03.1964-இல் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரங்கண்ணல் ஆகியோரால் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டக்கோரி கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் தோற்கடிக்கப்பட்டது. 1962-இல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.இராமமூர்த்தி கொண்டுவந்த தமிழ்நாடு என்ற பெயர்மாற்றக்கோரிய தீர்மானம் சீனபோரின் காரணமாக விவாதிக்கப்படவில்லை. மீண்டும் 3.05.1963-இல் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பூபேஸ் குப்தா கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்தை ஆதரித்து அறிஞர் அண்ணா மேலவையில் பேசினார். இறுதியில் மாநிலத்தின் பெயர் மாற்றக்கோரும் கோரிக்கையை சட்டமன்றம் தான் தீர்மானத்தை கொண்டுவரமுடியும் என்று கூறி நிராகரித்தது. மாநில அரசு சட்டம் நிறைவேற்றி, அதற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுப்பதைவிட, நேரடியாக மத்திய அரசே செய்துவிட சட்டத்தில் இடமிருக்கிறது என்பதால், அந்த முயற்சியை முன்னெடுத்தார் பூபேஷ் குப்தா.

தீர்மானம் தோல்வி அடைந்தாலும், பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் வரலாற்றில் நிலைக்கக்கூடியது. பரபரப்பான இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், “சுமார் ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு வரைக்கும் ஒன்றுபட்ட தமிழ்நாடு என்ற ஒன்று இருந்ததே இல்லை. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்றுதான் இருந்தது. வரலாற்று ரீதியாக நியாயப்படுத்த முடியாதபோது, எதற்காகப் புதிய பெயரை உருவாக்க முனைகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

அந்தக் கேள்விக்கு, பரிபாடல், பதிற்றுப்பத்து, மணிமேகலை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களில் இருந்தெல்லாம் சான்றுகளை எடுத்துச்சொல்லி பதிலளித்த அண்ணா, கம்பனும் சேக்கிழாரும் தமிழ்நாடு என்ற பதத்தைப் பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அப்போதும் திருப்தியடையாத ஓர் உறுப்பினர், “தமிழ்நாடு என்று பெயரிடுவதால் உங்களுக்கு என்ன லாபம்?” என்று கேள்வி எழுப்பினார்.

“பார்லிமெண்ட்டை, லோக்சபா என்று பெயர் மாற்றியதில் என்ன லாபம் கண்டீர்கள்? கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸை ராஜ்யசபா என்று மாற்றியதில் என்ன லாபம்? பிரசிடெண்ட்டை ராஷ்டிரபதி ஆக்கியதால் என்ன லாபம்?’’ என்றவர், ‘‘தமிழ்நாடு என்ற பெயரைத்தான் நீங்கள் மாநிலத்துக்குக் கொடுத்தாகவேண்டும். மாநிலத்தின் பெயருக்கும் அதன் தலைநகரத்தின் பெயருக்கும் வேறுபாடு இருக்க வேண்டும்” என்பதை அழுத்தமாக வலியுறுத்தினார். என்றாலும், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த அபரிமிதமான வலிமை காரணமாக ‘மெட்ராஸ் ஸ்டேட்’ பெயர் மாற்ற தனிநபர் மசோதா தோற்கடிக்கப்பட்டது.

1938-இந்தி எதிர்ப்பு போராட்டத்திலிருந்தே தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோரிக்கையை மறைமலை அடிகள், பெரியார் உள்ளிட்டோர் முன்வைத்தாலும், சுதந்திரத்திற்குப்பின் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபொழுது அக்கோரிக்கை வலுப்பெற்றது. அன்றைய சென்னை மாகாணத்திலிருந்த சித்தூர் மாவட்ட திமுக குழு சார்பில் தமிழ்நாடு என்ற பெயர்சூட்டக்கோரி இரயில் மறியல், கடையடைப்பு போராட்டங்களை நடத்தியது. கடைசியில் சித்தூர் ஆந்திர மாநில எல்லைக்குள் அடங்கியது வேறுகதை. 17.09.1954-இல் தனது பிறந்தநாள் அறிக்கை வெளியிட்ட தந்தைப்பெரியார் தெலுங்கர்கள், கன்னடர்கள் அவரவர் மொழிக்கு மாநிலத்தை உறுதி செய்துகொண்டபின் இன்னும் சென்னை மாகாணத்தை மட்டும் தமிழ்நாடு என்று பெயர்சூட்ட வடநாட்டினர் தடுப்பதாக குற்றம் சாட்டியிருப்பார்.

1956- நவம்பர் ஒன்றாம் தேதி மொழிவாரி மாநிலங்கள் அடிப்படையில் ஆந்திரப்பிரதேசம் உருவாகின்ற நிலையில், 1956-ஜூலை 27 இல் தொடங்கி அக்டோபர் 13 வரை 76 நாட்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார் தமிழ்நாடு பெயர் மாற்றக்கோரிக்கை, இரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணிக்க வேண்டும், வெளிநாட்டு விருந்தினருக்கு நாடனம் உள்ளிட்ட கேளிக்கை வரவேற்பை ஒதுக்கி சைவ உணவே வழங்க வேண்டும், அரசுப்பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் அணிதல் வேண்டும் போன்ற 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரம் மேற்கொண்டு உயிரிழந்தர். 

1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் சூட்டவேண்டும் என அண்ணா  கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது பற்றி அண்ணாவின் உரையில் ...

நாங்கள் சாதித்து இருக்கிறோம். அது இப்பொழுது தெரியாது. நம்முடைய பேரன் படிக்க போகிறான். அவன் படிக்கும் பொழுது ஒரு பக்கத்தில்  இந்த நாட்டுக்கு சென்னை என்று பெயர் இருந்தது என எழுதியிருக்கும். அவன் பக்கத்திலே இருக்கும் நண்பனை பார்த்துக் கேட்பான். நம்முடைய பெரியவர்களை பார்த்தாயா எவ்வளவு பைத்தியக்காரர்களாக இருந்திருக்கிறார்கள். நம் நாட்டுக்கு மதராஸ் என்று பெயராமே? ஏன் என்று கேட்பான். இல்லை இதற்குத் தமிழ்நாடு என்று மாற்றி பெயரிட்டார்கள். 

அப்படி மாற்றுவதற்கு யார் பாடுபட்டார்கள்?  " இன்னின்னார் பாடுபட்டார்கள்",  எந்த முறையிலே பாடுபட்டார்கள் சட்டசபையிலே தீர்மானம் கொண்டு வந்தார்கள். கொண்டு வந்த பொழுது மெஜாரிட்டி கிடைத்ததா?  கிடைக்கவில்லை. யார் யார் வேண்டும் என்றார்கள்? 15 பேர் வேண்டும் என்றார்கள்.  யார் யார் வேண்டாம் என்றார்கள்? 150 பேர் வேண்டாம் என்றார்கள்.  " தமிழ்நாடு வேண்டாம் என்ற தமிழன் கூடவா அந்த காலத்தில் இருந்தான்?, ஆமாம் அய்யா! இருந்தான். அவன் இப்பொழுது எங்கே இருக்கிறான். அவர் இப்பொழுது இல்லைம் அவருடைய பேரன் அதோ பார் இருக்கிறான். 

நண்பர்களே நீங்கள் தெளிவாக எழுதி வைத்துக்கொள்ளுங்கள். 15 பேராக இருக்கின்ற நாங்கள் இந்த காலத்து வரலாற்றை எழுதவில்லை எதிர்கால வரலாற்றை எழுதுகிறோம். கண்ணீரால் எழுதுகிறோம், இரத்தத்தால் எழுதுகிறோம். எங்கள் வியர்வையால் எழுதுகிறோம். அது உலர்வதற்கு பத்தாண்டுகள் பிடிக்கலாம் இருபது ஆண்டுக பிடிக்கலாம் ஆனால் அந்த வரலாற்றில் எழுதப்படுகின்ற ஒவ்வொரு வாசகமும் எதிர்காலத்தில் நம் நாட்டினுடைய எதிர்கால தலைமுறைக்கு ஏற்படுகின்ற மன எழுச்சிக்கு உறுபடையாக அமையும்.

இவ்வாறு '1967' என்ற தலைப்பில் 1957 ஆம் ஆண்டு உரையாற்றினார். அதே 1967 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்து மதராஸ் ஸ்டேட் க்கு தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய நாள் ஜூலை 18.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved