🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஷாக் அடிக்கும் மின் கட்டண உயர்வு? இது மக்கள் நலன்பேணும் அரசின் செயலா?

தமிழகத்தில் எட்டு ஆண்டுகளுக்குப்பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக நேற்று முன்தினம் (18.07.2022) மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறித்தார். தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சிகளினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மின்கட்டண உயர்வு குறித்து சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  

நாட்டு மக்கள் ஏற்கனவே ஜிஎஸ்டி வரி உயர்வு, அரிசி, தயிர்,பால் உள்ளிட்டவற்கு புதிய வரிவிதிப்பு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, சுங்கக்கட்டண உயர்வுகளால் பொதுமக்கள் திண்டாடி வரும் நிலையில் தமிழக அரசும் தன் பங்கிற்கு வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என போட்டி போட்டுக்கொண்டு உயர்த்தி வருவது மக்கள் நலனில் அரசுகளுக்கு அக்கறை இல்லையோ என்ற அச்சத்தை தோற்றுவிக்கிறது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வால் உயர்ந்து வரும் பணவீக்கம் காரணமாக வீடு மற்றும் வாகனக்கடங்களுக்கான வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. 


பஞ்சு மற்றும் நூல் விலை ஏற்றத்தின் காரணமாக பின்னலாடைத் தொழில் நசிந்து ஏற்பட்டுள்ள வேலையின்மை, கட்டுமானப்பொருட்களின் விலை ஏற்றத்தால் தள்ளாடும் கட்டுமானத்துறையில் ஏற்பட்டுள்ள வேலையின்மை, இடுபொருள்களின் விலை உயர்வு, தேங்காய், வெங்காயம் உள்ளிட்ட விவசாயப்பொருட்களின் விலை வீட்சியால் விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள வேலையின்மை, மிக்சி, வெட்கிரைண்டர் தொழில்களுக்கு அதிகரிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியால் சிறு,குறு தொழில்களில் ஏற்பட்டுள்ள வேலையின்மை என மக்கள் அல்லோகலப்பட்டு வரும் நிலையில் இதையெல்லாம் ஆளுகின்ற அரசுகள் கருத்தில் கொள்ளாமல் வரி,வரி என மத்திய, மாநில அரசுகள் வரிக்கொள்ளையில் ஈடுபடுவது மக்கள் நல அரசுகள் செய்யும் வேலையல்ல.

மின்சாரத்துறை அமைச்சர் பேசும்பொழுது, தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளதாகவும், கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். யாரோ செய்த தவறுகளுக்காக, எந்தத் தவறும் செய்யாத மக்களை தண்டிப்பது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்? மின்திட்டங்களை உரிய காலத்தில் செயல்படுத்தி மின்னுற்பத்தி செலவுகளை குறைப்பதில் அரசுகள் போதிய அக்கறை காட்டுவதில்லை.  2006-ஆம் ஆண்டில்  தொடங்கப்பட்டு 2014-ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 1800 மெகாவாட் மின்சாரத் திட்டங்கள் தவிர கடந்த 20 ஆண்டுகளில் எந்த புதிய மின்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. 17,000 மெகாவாட்டுக்கும் கூடுதலான மின்திட்டங்கள்  செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவற்றுக்கு பொதுமக்கள் எந்த வகையில் காரணம்? உரிய காலத்தில் மின்னுற்பத்தி திட்டங்களை முடிப்பது, மின் திருட்டை தடுப்பது, மின் இழப்பை குறைப்பதின் மூலம் மின்கட்டணத்தை உயர்த்தாமல் மின் வாரியத்தை லாபத்தில் இயக்குவதற்கான உருப்படியான முயற்சிகளில் அரசு முனைப்புக்காட்ட வேண்டும்.

பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கட்டணம் மாற்றப்படும் என்று அமைச்சர் கூறுவது எப்படி சாத்தியமாகும்? தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தேசித்துள்ள கட்டண உயர்வின் அடிப்படையில் இலவச மின்சாரம் பெறுவோர் தவிர மற்ற அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். இரு மாதங்களுக்கு 200 அலகு வரை மின்சாரம் பயன்படுத்துவோர், ஓர் அலகுக்கு 27.50 காசுகள் கூடுதலாக செலுத்த வேண்டும்.  இது 32.35% உயர்வு ஆகும். 500 அலகு வரை மின்சாரம் பயன்படுத்துவோர் ஓர் அலகுக்கு ரூ.1.19 வரையும், 900 அலகு வரை பயன்படுத்துவோர் அலகுக்கு ரூ.1.25 வரையும் கூடுதலாக செலுத்த வேண்டும். 


இவர்கள் மொத்தமாக முறையே  ரூ.595, ரூ.1,130 கூடுதலாக செலுத்த வேண்டும். இது முறையே 52%, 25% அதிகம். தமிழக வரலாற்றில் இந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை. மின்சாரக் கட்டணத்தை இந்த அளவுக்கு உயர்த்த தமிழக அரசு கூறியுள்ள காரணங்கள் எவையும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.  மின்னுற்பத்தித் திட்டங்கள் திட்டமிடப்பட்ட காலத்திற்குள் செயல்படுத்தி முடிக்கப்படாததால் அவற்றின் திட்டச் செலவு அதிகரித்தது, மின்திட்டங்களை செயல்படுத்துவதற்காக வாங்கப்பட்ட கடன் மீதான வட்டி ரூ.12,647 கோடியாக அதிகரித்திருப்பது, வெளிநாடுகளில் இருந்து அதிகவிலைக்கு நிலக்கரி வாங்கியது ஆகியவை தான் காரணம் என்று மின்துறை அமைச்சரின் பேட்டி மூலம் தெரியவருகிறது.

தவிர்க்கவே முடியாத சூழலில் மின்சாரக் கட்டணத்தை ஓரளவு உயர்த்துவதைக் கூட நியாயப்படுத்த  முடியும். ஆனால், அனைத்துப் பிரிவினருக்கும் சராசரியாக 20 விழுக்காடு அளவுக்கும், அதிகபட்சமாக 52% வரையிலும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்றது. ஏனவே தமிழக அரசு உடனடியாக மின்கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும். மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி மாதாந்திர கணக்கீட்டு முறையை அமல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved