🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கயத்தாறு கட்டபொம்மன் சிலை உருவான வரலாறு!

கயத்தாறு கட்டபொம்மன் சிலை உருவான வரலாறு!

கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட இடத்தில், கம்பீரமான சிலை உருவாக காரணமானவர்களை பற்றி நம் இனத்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மலரும் நினைவுகளாக இச்செய்தியை பதிவு இடுகிறேன்.

சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் கயத்தாறில் ஜில்லா போர்டு மெம்பராக இருந்த கருணாகரப் பாண்டியனை சந்திக்கின்ற ஒரு வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது, நான் சந்திக்கின்ற காலத்தில் அவருக்கு 80 வயதுக்கு மேல் இருக்கும். அப்போது நமது இனத்தின் முன்னோடி சீனி குருசாமி அவர்களும் என்னோடு இருந்தார்.

கருணாகரப் பாண்டியன் தேவர் சாதியை சேர்ந்தவர், அவருடைய பூட்டியார் கட்டபொம்மன் காலத்தில் வாழ்ந்தவர், கட்டபொம்மனை தூக்கில் போடும் போது நேரடியாக பார்த்தவர், கயத்தாறு பகுதி ஊர் மக்களெல்லாம் அழும் பொழுது அவர்களோடு இவரும் அழுதவர், அவர் குடும்ப உறுப்பினர்களிடம் கட்டபொம்மனின் பெருமைகளை பற்றி  அடிக்கடி பேசுவாராம், அதன் தொடர்ச்சியாக கருணாகரப் பாண்டியனுக்கும் கட்டபொம்மன் மேல் மிகுந்த பக்தி ஏற்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் (பிரிட்டிஷ்காரன்) கட்டபொம்மன் உறவினர்கள் கயத்தாறுக்கு சென்று இரவு நேரத்தில்  ரகசியமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள். பிரிட்டிஷ்காரன் காலத்தில் கட்டபொம்மன் நினைவிடத்தில் வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.அதே போல் சாதாரண பொதுமக்களும் கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட இடத்தை வழிபட்டு வந்திருக்கிறார்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மன்  சினிமா எடுக்கும் போது சிவாஜி கணேசனோடு ம.பொ.சி.யும் கயத்தாறுக்கு சென்றிருக்கிறார், அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த கற்குவியல்களில் ஒரு கம்பை நட்டு அதில் ஒரு போர்டை வைத்து "கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட இடம்" என்று நட்டு வைத்தாராம்.

இதன் பின்னர்,கருணாகர பாண்டியன் கயத்தாறு ஜில்லா போர்டு மெம்பரான பிறகு ஊர் வரி அறிவித்து, ஒவ்வொரு வீட்டுக்கும் வரி போட்டு, கயத்தாறு நிலத்தை ஊருக்கு பொதுவாக வாங்கினார்கள், அதன் பிறகு அன்றைக்கு தமிழ்நாடு சட்டசபையில் சபாநாயகராக வீற்றிருந்த செல்லப்பாண்டியனை சந்தித்து, திருநெல்வேலி பாப்புலர் திரையரங்கு உரிமையாளரையும் சந்தித்து, கட்டபொம்மனுக்கு கயத்தாறில் சிலை வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து, சிவாஜி கணேசனுக்கு அழுத்தம் தரப்பட்டது, அதன் பிறகுதான் கயத்தாறு நிலம் சிவாஜிகணேசன் பெயரில் பத்திரப்பதிவு செய்து தரப்பட்டது.

சிவாஜிகணேசன் அவர்கள் சினிமா படப்பிடிப்பில் மிகத் தீவீரமாக இருந்த காலத்தில் அவரைச் சந்திப்பதே மிக கஷ்டமாக இருந்த காலக்கட்டத்தில் பலமுறை அலைந்து தான் சிவாஜிகணேசன் அவர்களை சந்திக்க முடிந்தது, முன்னாள் சபாநாயகர்  செல்லப்பாண்டியன் அவர்களும் எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தார்.

கட்டபொம்மன் நினைவிடத்தில் இருந்த கற்குவியல்கள் எல்லாம் இன்றைய நினைவு பீடத்தோடு சேர்த்து கட்டப்பட்டதாகும். முதலில் நிலத்தை வாங்கியது ஊர் பொதுமக்கள் தான், அதன் பின்னர் தான் சிவாஜி கணேசன் கைக்கு சென்றது, என்று கருணாகரப் பாண்டியன் என்னிடம் சொன்னார். 

ஆரம்ப காலத்தில் சிலைக்கு வாட்ச்மேனாக இருந்தது தெற்கு இலந்தைக் குளத்தை சேர்ந்த தேவர் சமுதாயத்தை சார்ந்தவர், அவர் மறைவிற்கு பிறகு அவரது மகனும் சிலகாலம் வாட்ச்மேன் வேலை பார்த்தார்.

அந்தக் காலத்தில் இவ்வளவு சாதிய வேற்றுமைகள் கிடையாது, எல்லா ஜாதி மக்களும் பாஞ்சாலங்குறிச்சிக்கு மாட்டு வண்டி கட்டிக்கொண்டு வருவார்கள், கட்டபொம்மனை தேசிய தலைவராக நினைத்து தான் வழிபட்டார்கள், இப்போது சில தீய சக்திகள் தவறான சொற்களை பயன்படுத்தி கட்டபொம்மனை இழித்தும் பழித்தும் சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள், இது போன்ற இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். 

வருங்கால தலைமுறையினர் தேவையில்லாத கருத்துக்களை வாட்சப்பில் பரப்புவது, நமக்குள்ளேயே கருத்தியல் சண்டையிட்டுக் கொள்வது அவசியமற்றது. நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து கட்டபொம்மன் புகழை பரப்புவது,  ஒற்றுமையை நிலைநாட்டுவது போன்றவை அவசியமாகும்.

நன்றி.

மு.சங்கரவேலு,
தலைவர்,
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம்.

2020-ஆண்டு வெளிவந்த முகநூல் பதிவிலிருந்து-தகவலுக்காக.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved