🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இயற்கை சூடும் மணிமகுடம்! - ஓய்வுக்கே ஓய்வளிக்கும் அதிகாரி!

இந்திய ஜனாதிபதி, பிரதம மந்திரி தொடங்கி மத்திய அரசு அதிகாரிகள்,  ஊழியர்கள் என அனைவரும் பதவி ஏற்று அரசு பங்களாவில் குடியேற முதலில் தேடுவது மத்திய அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகளைத்தான். அத்துறையில் உயர் பதவியில் அமர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முப்பதாண்டு காலம் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றவரை தங்கள் நிறுவனங்களில் ஆலோசகராககாரில் பணியமர்த்திக் கொள்ள முண்டியடித்தது பல தனியார் பெரு நிறுவனங்கள். கைநிறைய கிடைக்கும் ஓய்வூதியம், தனியார் நிறுவனங்களில் ஆலோசகர் பதவி, காலை பத்தரை மணிக்கு காரை வீட்டிற்கு அனுப்பி அழைத்துக்கொண்டு செல்வார்கள். குளிரூட்டப்பட்ட ஏசி அறையில் சில பல மணிநேரங்கள் ஆலோசனை, இடையிடையே காபி, ஸ்நேக்ஸ்,  உயர்தர ஓட்டல்களில் இருந்து மதிய உணவு. மீண்டும் மாலை காபி சாப்பிட்டு விட்டு ஷாப்பிங் ஏதாவது செல்லவேண்டியிருந்தால் அதையும் முடித்து வீட்டிலிருந்து கொண்டு இறக்கிவிடும் டிரைவர், ஏறும்போது இறங்கும்போதும் கூட காரின் கதவுகளை திறக்க அனுமதிக்கமாட்டார்.

சொகுசு வாழ்க்கை என்றால் அப்படியொரு சொகுசு வாழ்க்கை. வீட்டில் அன்பான மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள், சிட்டி வாழ்க்கை கொஞ்சம் போரடித்தாலும் உடனே சென்று ஓய்வெடுக்க தென்மேற்கு மலைத்தொடரின் உச்சியில் ஏலக்காய் எஸ்டேட். இப்படித்தான் கடந்த ஒன்றரை இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.  இந்த சொகுசு வாழ்க்கைக்கு எமனாக இருந்தது கொஞ்சம் தூக்கலாக இருந்த "சாதி" பாசம் என்று சொல்லமுடியாது, அக்கறை என்று சொல்லலாம். தன் சொந்த ஊரைச்சுற்றி ஏகப்பட்ட ஜமீன்களும் அவர்களுக்கு சொந்தமான இடங்களும். இவர்களில் பலர் இவருக்கு நெருங்கிய உறவினர்களும் கூட. மத்திய அரசுப்பணியில் இருந்தகாலம் முதல் இப்போது வரை கிராமங்களில் இருந்து எந்த தேவை என்றாலும் உறவுகள் தேடக்கூடிய முதல்நபர், அவர்களின் நம்பிக்கை பொய்க்கா வண்ணம் இன்று வரை பலருக்கு கல்வி உதவி, வேலை தேடுவோருக்கு ஆபத்பந்தவனாக இருந்து செய்யும் உதவி என எல்லாம் செய்தாலும், ஒட்டுமொத்தமாக சமுதாய மக்களின் வளர்ச்சி மற்ற சமுதாயங்களோடு ஒப்பிடுகையில் சிறப்பாக இல்லை என்ற கவலை இவருக்கு நெடுநாளாக இருந்துவரும் ஒன்று. 

எப்படியாவது இந்த சமுதாயத்தை உயர்த்திவிட முடியாதா என்ற ஏக்கத்தில் ஒத்த கருத்துடைய உறவுகளை இணைத்து அறக்கட்டளை மூலம் அரசுப்பணி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கும், நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெறும் மாணவ-மாணவியருக்கு உதவிகள் பல செய்தாலும் மனம் முற்றிலும் திருப்தியடைந்துவிடவில்லை. 

சரி, முதலில் ஏதாவது ஒன்றை செய்துகொண்டே இருப்போம்,  வாய்ப்பு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று பயணத்தை தொடர்ந்துகொண்டே இருந்தார். இதற்கிடையே சீர்மரபு பழங்குடிகள் தேசிய ஆணையம் சென்னைக்கு வந்திருந்தபோது கிடைத்த தகவலின் அடிப்படையில், தி.நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு அதிலுள்ள வாய்ப்புகள் குறித்து அறிந்துகொண்டார். 

அக்கூட்டம் தன் சொகுசு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்குமென்று அப்போது அவரது வீட்டில் யாராவதுக்கு தெரிந்திருந்தால் கூட சமுதாயப்பணிக்கு செல்வதை தடுத்திருப்பார்கள். அன்று கிடைத்த அனுபவம், தொடர்புகள் அவரை தொடர்ந்து இயங்கச்செய்ய போதுமானதாக இருந்தது. இதில் கிடைக்கும் பலன்கள் நிச்சயம் தனது கனவை நிறைவேற்ற இந்த சமுதாயத்திற்கு உதவிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.

அன்றிலிருந்து எத்தனை எத்தனை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பத்திரிக்கையாளர் சந்திப்புகள், கருத்தரங்கங்கள், காணொளி கூட்டங்கள், தலைவர்கள் சந்திப்புகள், கட்சிகளிடம், ஆட்சியரிடமும் கொடுத்த மனுக்கள், சட்டமன்ற உறுப்பினர் சந்திப்புகள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நடத்திய விளக்கக் கூட்டம், இடையிடையே திருச்சி, மதுரை என்று வெளியூரில் நடைபெற்ற போராட்டங்கள், அப்பப்பா நினைத்தாலே மலைக்கும் உழைப்பு. ஓய்வில்லை, போதிய உறக்கமில்லை சொந்த ஊருக்கு போகும்போதும் வரும்போதும் கிராமங்களுக்கு சென்று முக்கியஸ்தர்களை சந்தித்து விளக்குவது,  ஏதாவது பேச அழைக்கும் நண்பர்கள், உறவுகள், சமுதாய தலைவர்களிடம் இடஒதுக்கீட்டின் பலன்,  முக்கியத்துவத்தை வைக்காமல் பேச்சை முடித்ததில்லை என்ற அளவில் எப்போதும் அதே சிந்தனை, செயல் அனைத்தும். 

இடையே ஒருநாள் கோட்டையை முற்றுகையிடப்போய் நாள் முழுக்க காவல்நிலையத்தில் சிறைவாசம் வேறு. கொஞ்சம் கிடைத்த கால அவகாசத்தில் இளையமகளின் திருமணம்,  கண்ணில் ஏற்பட்ட கோளாறோ சிகிச்சைக்கு கட்டுபட மறுத்து அறுவைசிகிச்சை வரைபோக, தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சையும்,  அறுவை சிகிச்சையும் செய்யும் உலகப்புகழ் பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்களின் கணிப்பும், சிகிச்சையும் தோல்வியில் முடிந்தது. முதல் அறுவைசிகிச்சை முடித்த சில நாட்களில் மீண்டும் அதே கண்ணில், அதே இடத்தில், அதே நோய்க்கு நடைபெற்ற இரண்டாவது அறுவை சிகிச்சையை முடித்துக்கொண்டு, தினந்தோறும் காணொலியில் முகம் மறைத்து உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நடத்திய சட்டப்போராடங்களில் துணைநின்று வழக்கறிஞர்கள் தேர்வு, வழக்கிற்கு தேவையான ஆவணங்கள், அதுமட்டுமா? நிதியையும் திரட்டிக் கொடுத்து நிறைவாக பணியாற்றி, நீதிமன்ற தீர்ப்பால் நிம்மதி கண்ட பெருமகனார். 

வருங்கால சமுதாயத்திற்கு வளமான அடித்தளமே இலக்கு என்று தன் சமுதாய மேம்பட அர்ப்பணித்துக் கொண்டவரை உபயோகப்படுத்தி உயர்வுகாண,  சொந்த சமுதாயத்தினர் பயன்படுத்திக் கொள்ள தயங்கலாம். ஆனால் அறிவார்ந்த சமூகம் தயங்குமா என்ன? ஐயா, உங்கள் உழைப்பு எங்களுக்கு தேவை. நீங்கள் வழிகாட்டுங்கள் நாங்கள் பின்தொடர்கிறோம். நீங்கள் கட்டளையிடுங்கள் நாங்கள் செய்து முடிக்கிறோம் என்று 262 சாதிகளை இணைத்து சமூகநீதி கூட்டமைப்பு உருவாக்கி அதன் ஒருங்கிணைப்பாளராக நியமித்து வழிநடத்தச் சொல்கிறது. 

சமுதாயப்பணி எப்பொழுதும் புலி வாலை பிடித்த கதை தான். அன்புக்கட்டளைக்கு மறுக்கமுடியுமா என்ன? ஆண்டாண்டு காலம் அரசியல் செய்பவர்கள், தலைமுறை தாண்டி கட்சிக்காக உழைத்து, உழைத்து ஓடாய் போனவர்வர்கள், அது நம்ம சாதிக்கெல்லாம் தேர்தலில் நிற்கும் வாய்ப்பு கொடுக்கமாட்டாங்க... நம்ம ஆளுகளுக்கு கட்சியல பெரிய பதவியெல்லாம் கொடுக்க மாட்டாங்க...,  என்று கேட்டு கேட்டு புளித்துப்போன காதுகளுக்கு, இரண்டே வருடத்தில் ஒட்டுமொத்த சாதியினரும் பாராட்டும் தலைவராக உயர்ந்தது கம்பளத்தாருக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம். 

சவாலை ஏற்றுக்கொண்டார்,  இதோ இந்திய துணைக்கண்ட வரலாற்றில் இது வரை முன் எப்போதும் நடந்திடாத அதிசயமாக, முதல்முறையாக 262 சாதிகள் ஒன்றிணையும் ஒரு மிகபிரமாண்டமான சமூகநீதி மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் தளகர்த்தகர்களில் ஒருவராக மதுரைக்கும், சென்னைக்கும் பறபறந்து பணியாற்றிவருகிறார். இடையிடையே கிடைக்கும் ஓய்வையும் புறந்தள்ளிவிட்டு தனி ஒருவனாக, துணைக்கு வந்த உறவுகளை அழைத்துக்கொண்டு, தேனீக்களும் தோற்றுவிடும் சுறுசுறுப்போடு, தேனி மாவட்ட கிராமங்களில் வீடு வீடாக சென்று சமூகநீதி மாநாட்டு அழைப்பிதழை வழங்கி, படை திரண்டு வாருங்கள் மதுரைக்கு சதியை முறியடித்து சமூகநீதியை வென்றெடுப்போம் என்று அன்போடு அழைக்கின்றார். எதிர்கால சமுதாய இளைஞர்களின் நலன்கருதி அக்கறையாய் அழைக்கின்றார். 

இட ஒதுக்கீட்டால் மருத்துவராய்,  பொறியாளராய்  மென்பொருள் வல்லுனராய் ஆனவர்கள் தன்நலன், தன்குடும்ப நலன் என ஓடிக்கொண்டிருக்கையில், பொதுநலன்,  சமூக நலனுக்காக தன் சுகங்களையெல்லாம் துறந்து, வானம் தனக்காக பொழிவதில்லை,  நதி தனக்காக ஓடுவதில்லை என்பது போல் ஓயாமல் ஓடும் 65-வயது இளைஞரை என்ன சொல்லி வாழ்த்துவது? எப்படி நன்றி சொல்வோம்?. உங்கள் உழைப்பை சமூகம் பயன்படுத்திக்கொள்ளும் அறிவையும், வல்லமையும் பெறட்டும். 

இதோ எண்ணங்களை எழுதி முடிக்கும் முன் இயற்கைக்கு உங்கள் மீது என்ன வன்மமோ தெரியவில்லை. இதோ மற்றுமொரு மகுடம் சூட்டி ஓடிக்கொண்டே இருக்க கட்டளை இடுகிறது. எந்த ஆணையத்தின் கூட்டத்தில் முதலில் கலந்து கொண்டாரோ அதே ஆணையம் இன்று மகுடம் சூட்டி அழைக்கிறது. 

தேசிய நாடோடிகள், அரைநாடோடிகள், சீர்மரபு பழங்குடி கவுன்சிலின் மாநில துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள இராஜகம்பளத்தார் மேன்மக்கள் அறக்கட்டளை தலைவர், இராஜகம்பளத்தார் சமுதாய கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர்,  சமூகநீதி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்,   மத்திய அரசு பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற பொறியாளர் திரு.P.இராமராஜ் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved