🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கண்ணீரோடு விடைபெற்றார் மாண்புமிகு குடியரசு துணைத்தலைவர்!

மாவீரன் கட்டபொம்மன் மீதும், தெலுங்கு மொழி மீதும் தீரா பற்றும், அன்பும் கொண்டவரான இந்தியக்குடியரசு துணைத்தலைவர் மாண்புமிகு வெங்கையா நாயுடு அவர்கள், தனது பதவிகாலத்தை பூர்த்தி செய்து நாளையோடு விடைபெறுகிறார். பாஞ்சாலங்குறிச்சி வீரசக்க ஆலயத்திற்கு செல்பவர்களின் பதவி விரைவில் பறிபோகும் என்று திட்டமிட்டு பரப்பட்டுள்ள வதந்திகளை முறியடித்து, அன்னையின் மண்ணுக்கு வருகைதந்து குடியரசு துணைத்தலைவர் பதவியை அடைந்தவே. அவர் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் வாழ்வாங்கு வாழ அன்னை சக்கதேவி அருள்புரியட்டும்.

வெங்கையா நாயுடு 1949-ஆம் வருடம் ஜூலை'1 ஆம் தேதி  ஆந்திரப் பிரதேசம் மாநிலம், நெல்லூர் மாவட்டம், வெங்கடேசலம் அருகேயுள்ள சாவடபேலம் கிராமத்தில் ரெங்கைய நாயுடு-ரமணம்மா தம்பதிகளுக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். ஆரம்பகால பள்ளிப்படிப்பை நெல்லூர் அருகேயுள்ள புச்சிரெட்டிபேலம் அரசுப்பள்ளியிலும், VR கல்லூரியில் பொலிடிக்ஸ் & டிப்ளமோடிக் என்னும் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். அதன்பிறகு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா சட்ட கல்லூரியில் சேர்ந்து சர்வேத சட்டப்பிரிவில் (International Law) இளங்கலை பட்டம் பெற்றார்.

இவருக்கு திருமணமாகி திருமதி.உஷா என்ற மனைவியும், முப்பவரப்பு ஹர்ஷவர்தன் என்ற மகனும், தீபா வெங்கட் என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஷோரூம்களை நடத்தி வருகின்றனர். பெரும்பாலும் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தொழில்நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். 

மாணவப்பருவத்திலிருந்தே தீவிர அரசியலில் விருப்பமுடைய வெங்கையா நாயுடு, ராஷ்ட்ரிய ஸ்யம் சேவாக் (RSS)  உழியராக பொதுவாழ்வை தொடங்கி, அதன் துணை அமைப்புகளில் ஒன்றான அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் என்ற மாணவர் அமைப்பில் இணைந்து ஆந்திர பல்கலைக்கழக கல்லூரிகள் மாணவர் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளார். 

ஹைதராபாத் நிஜாம் ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட முல்கி ரூல்ஸ் என்றழைக்கப்படும் முல்கி சட்டம் ஹைதராபாத் மாகாணத்தில் நடைமுறைப்பட்டு வந்தது. உருது மொழியில் முல்க் (Mulk) என்றால் தேசம், முல்கீஸ் (Mulkis) என்றால் குடிமக்களை குறிக்கும் சொல். இச்சட்டத்தின்படி முல்கியாக அல்லாதவர்கள் யாரும் ஹைதராபாத் மாகாணத்திற்குட்பட்ட எந்த அரசு பதவியும் வகிக்கமுடியாது அல்லது அரசு பதவிகள் வழங்கப்படாது. இச்சட்டத்தின்படி முல்கியாகும் தகுதியான ஒருவர் ஹைதரபாத் மாகாணத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும், தந்தை 15 ஆண்டுகள் ஹைதராபாத் அரசு பொறுப்பில் 15 ஆண்டுகள் பனியாற்றிவர்களாக இருக்க வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்தியா சுதந்திரம் பெற்று, ஹைதராபாத் மாகாணம் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்பும் இச்சட்டம் அமுலில் இருந்தபடியால், மொழிவாரி மாநில பிரிவினைக்குப்பின் உருவான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராயலசீமா, தெலங்கான மக்கள் அரசுப்பதவிகளை பெருவதில் சிக்கல் ஏற்பட்டது. இச்சட்டம் தங்களை இரண்டாம் தர குடிமக்களாக்குகிறது என்று இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். முல்கிஸ் சட்டத்திற்கு எதிராக 1972-இல் உருவானது  "ஜெய் ஆந்திரா இயக்கம்". இந்த இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் வெங்கையா நாயுடு.

நாட்டின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு தன் பேச்சாற்றலால் விவசாயிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட எளிய மக்களின் மனதை வென்றார். இதே  உத்வேகத்துடன்  உதயகிரி சட்டமன்றத்தொகுதியில் போட்டியிட்டு 1978, 1983 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினராக ஏழாண்டுகாலம் பணியாற்றியுள்ளார்.

1998-இல் கர்நாடக மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கையா நாயுடு அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஜனா கிருஷ்ணமூர்த்திக்கு பின் 2002-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கையா நாயுடு இரண்டாண்டு காலம் (2004 வரை) தலைவராக தொடர்ந்தார். 2016-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாயுடு, நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில்  தகவல் ஒலிபரப்புத்துறை, நகர்ப்புற வளர்ச்சி துறை, வீட்டுவசதி துறை மற்றும் வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை போன்ற முக்கிய இலாக்காக்களில் திறம்பட செயலாற்றியவர்.

2017'ஆகஸ்டு 11-ஆம் தேதி இந்தியக் குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கையா நாயுடு, துணை குடியரசு தலைவர் தேர்தலில் 30 ஆண்டுக்குப் பின்னர் அதிக வாக்குகள் பெற்று சாதனை படைத்தார். அத்தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட வெங்கையா நாயுடு 516 வாக்குகளையும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட கோபாலகிருஷ்ண காந்தி 272 வாக்குகளையும் பெற்றார். இவரின் இந்த வெற்றிக்கு காரணமாக சொல்லப்படுவது கட்சிகள் தாண்டி அனைத்து தரப்பிலும் உள்ள நட்பு, எளிமையாக பழகும் விதமும் என்றால் மிகையல்ல.

தாய்மொழி மீது அதிக பற்றுள்ள வெங்கையா நாயுடு, தாய்மொழியில் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். ஆங்கில மொழியில் சரளமாக எதுகை மோனையோடு பேசும் ஆற்றல் மிக்க தலைவரான நாயுடு, ஆங்கிலம் தெலுங்கு கலந்து சுவைபட பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் மீது அளவற்ற பாசம் கொண்டவரான நாயுடு, அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 258-வது பிறந்தநாள் விழா சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் 2018-இல் நடைபெற்ற பொழுது பங்கேற்று தனது சிறந்த சொற்பொழிவை பதிவு செய்தார். இந்த விழா குறித்த நேரத்தில் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டபொழுது, மற்ற நிகழ்ச்சிகளை தள்ளி வைத்து, ஓரிருநாள் சென்னையில் தங்கியிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது,


துணைக்குடியரசுத் தலைவராக சிறப்பாக பணியாற்றி நாளையோடு ஓய்வுபெறவுள்ள வெங்கையா நாயுடு அவர்களுக்கு நேற்று மாநிலங்களவையில் பாராட்டு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, நமது குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடு இந்த அவையிலிருந்து விடை பெறுகிறார். அவருக்கு நன்றி தெரிவிக்க இங்கு வந்துள்ளோம். இந்த அவைக்கு இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இந்த அவையின் வரலாற்று தருணங்கள் அவரது அழகான இருப்புடன் தொடர்புடையவை. நாட்டின் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், சபாநாயகர் மற்றும் பிரதமர் அனைவரும் சுதந்திர இந்தியாவில் பிறந்தவர்கள் மற்றும் நாம் அனைவரும் மிகவும் சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதால், இந்த முறை அத்தகைய தனி சிறப்பு வாய்ந்த சுதந்திர தினத்தை நாம் கொண்டாட இருக்கிறோம் என்று கூறினார்.தொடர்ந்து பேசிய மோடி, இந்த சபையை (மாநிலங்களவையை) வழிநடத்தும் பொறுப்பிலிருந்து நீங்கள் தற்போது ஓய்வு பெறலாம். ஆனால் இந்த நாடு மற்றும் நாட்டுக்காக பொதுவாழ்வில் பணியாற்றும் எங்களைப்போன்றோர்களை உங்கள் அனுபவங்கள் வழிநடத்தும். அதிலிருந்து நாங்கள் பாடங்களை கற்றுக்கொள்கிறோம். நீங்கள் ஏற்கெனவே கூறியது போன்றதுதான் இது. அதாவது, நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள், 'நான் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். பொது வாழ்விலிருந்து அல்ல' என அதைபோலதான் இந்த அனுபவ பாடங்களும்" என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே பேசும்பொழுது, "நாடாளுமன்ற மாநிலங்களவையின் தேசியக் கொள்கைக்காக பல தருணங்களில் நீங்கள் வாதிட்டுள்ளீர்கள். அதேபோல, பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மற்றும் பிற பிரச்சனைகளில் ஒருமித்த கருத்து குறித்தும் பேசினீர்கள். நீங்கள் விட்டு செல்லும் முழுமையடையாத பணிகளை அரசு நிறைவு செய்யும் என நான் நம்புகிறேன்" என்று குறிப்பிட்டார். "நாம் இரு வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்டவர்களாக இருக்கலாம். உங்களிடம் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவற்றை பற்றி பேச இது நேரமில்லை. நீங்கள் கடினமான, அழுத்தமான சூழல்களிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளீர்கள். அதற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்" என கார்கே தனது உரையில் கூறினார். வெங்கையா நாயுடு கட்சிகளைத் தாண்டி, மாற்றுக்கட்சியினர் மத்தியிலும் நன்மதிப்பைக் கொண்டவர். இன்று அவரது பிரிவு உபசரிப்பு விழாவில் மாற்றுக் கட்சியினர் ஆற்றிய உரையை அவர் எந்தளவுக்கு மாற்றுக் கட்சியினரிடமும் நன்மதிப்பைக் கொண்டிருந்தார் என்பதற்குச் சாட்சியாகும் என்று பேசினார்,

ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் பேசுகையில், "அவையில் வெங்கையா நாயுடுவிடம் இருந்து அதிகம் திட்டுவாங்கிய நபர் நானாகத் தான் இருப்பேன். ஆனால், சபைக்குள் வெளியே அவரிடம் இருந்து அதிகபட்ச அன்பையும் வழிகாட்டுதல்களையும் பெற்ற நபராக நான் தான் இருப்பேன். எங்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் எதுவும் தனிப்பட்ட பிரச்சினை இல்லை. ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக, உங்கள் சேவைக்கு நன்றி" என்று தெரிவித்தார்.

திமுக ராஜ்ய சபா உறுப்பினர் திருச்சி சிவா, நாடாளுமன்றத்தில் மாநில மொழிகள் குறித்து விவாதம் நடத்த அனுமதி அளித்த வெங்கையா நாயுடுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தார். எப்போதும் பிராந்திய மொழிகளுக்காகக் குரல் கொடுத்தவர் என்று குறிப்பிட்ட திருச்சி சிவா, அவையில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தியவர் என்று வெங்கையா நாயுடுவுக்குப் புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, "நீங்கள் அவையின் உறுப்பினர்கள் மீது எந்தளவுக்கு அக்கறை கொண்டு இருந்தீர்கள் என எங்களுக்குத் தெரியும். உறுப்பினர்களின் சிறு சிறு குறைகளைக் கூட நீங்கள் காது கொடுத்துக் கெட்டீர்கள். இந்த சபைக்கு உங்கள் பங்களிப்பை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். நீங்கள் உங்கள் சுயசரிதையைக் கண்டிப்பாக எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். கடைசியாக, நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். நாங்கள் உங்களை நிச்சயம் மிஸ் செய்வோம் சார்" என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையனும் வெங்கையா நாயுடுவை புகழ்ந்து தள்ளினார். டெரெக் ஓ பிரையன் தனது உரையைத் தொடங்கும் போது வெங்கையா நாயுடுவுக்கு ஒரு வயதாக இருந்தபோது இறந்து போன அவரது தாயார் குறித்து குறிப்பிட்டார். இதைக் கேட்டதும் வெங்கையா நாயுடு கண்கலங்கினார்.

சுதந்திர இந்திய வரலாற்றில் தன்னிகரற்ற பேச்சாலும், எளிமையாலும் அனைத்து தரப்பு மக்களின் பேராதரவையும், நன்மதிப்பையும் பெற்றவரான வெங்கையா நாயுடு அவர்கள், குடியரசு துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தேசத்திற்கான சேவையிலிருந்து அவர் ஒருநாளும் ஓய்வு பெறப்போவதில்லை. இனிமேல் தான் அவரின் பேச்சு ஒவ்வொரு தனிமனிதனின் கவனத்தையும் பெறவுள்ளது. வரலாற்றுத் தொன்மங்களையும், தியாகிகளின் போர்க்குணங்களையும் வெங்கையா நாயுடு அவர்களின் குரலில் கேட்க தேசம் காத்துக்கொண்டிருக்கிறது.

அரைநூற்றாண்டுகளுக்கும் மேலாக தேசப்பணியாற்றி, அனைவரின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளோடு ஓய்வு பெரும் இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு அவர்களுக்கு இராஜகம்பள சமுதாயத்தினரின் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.





  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved