🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மதுரை சமூகநீதி மாநாட்டில் அசத்திய கம்பளத்தார்கள்!

கடந்த ஞாயிறன்று (07.08.2022) மதுரையில் நடைபெற்ற சமூகநீதி மாநாடு பிரமாண்டமான முறையில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 260-க்கும் மேற்பட்ட சாதிய அமைப்புகள் இணைந்து உருவாக்கியுள்ள சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முக்குலத்தோர், முத்தரையர் உள்ளிட்ட பெருங்கொண்ட சாதிகளோடு எளிய சமூகங்களான நரிக்குறவர், வண்ணார், நாவிதர் உள்ளிட்ட சமூகத்தினரும் ஒற்றுமையுடனும், சமத்துவத்துடனும் கலந்துகொண்டனர். 


115 MBC/DNT சாதிகளில் பெரும்பாலான சமுதாய அமைப்புகளும், பிற்படுத்தப்பட்ட சாதிகளின் சார்பாக SFBC ஏற்பாட்டில் குழுவாகவும் கலந்துகொண்ட இந்த மாநாடு தமிழக காவல்துறை, அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்பிற்கும் மாறாக மக்கள் திரண்டது ஆச்சரியமளிப்பதாக இருந்துள்ளது. இதுகுறித்தான் தங்கள் பார்வையையும், மகிழ்ச்சியையும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டு ஏற்பாளர்களிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டனர். உளவுத்துறை அதிகாரி ஒருவர் பேசும்பொழுது,  எல்லா சாதிகளிலும் பல அமைப்புகள் இருந்தாலும் பெரும்பாலனவை லெட்டர் பேட் அமைப்புகளாக இருப்பதால் மக்களை திரட்டமுடியுமா என்ற கேள்வியும், இத்தனை சாதிகள் ஒன்றிணைந்து மாநாடு நடத்துவது சாத்தியமா என்ற ஐயமும் இருந்ததாகவும், அதை தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சில சமூகங்கள் பொய்யாக்கிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அவர்கூறுகையில் அரசியல், பணபலம், படைபலம் உள்ள சில சமுதாய அமைப்புகள் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டத்தை அழைத்து வராதது ஏமாற்றமாக இருந்தாலும், நாலைந்தைந்து சமூககங்கள் அந்தக்குறையை நிவர்த்தி செய்துவிட்டதாகவும் தனது கருத்தை பதிவு செய்தார். 


உளவுத்துறை அதிகாரியின் இந்தக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், இம்மாநாட்டில் எல்லாவிதத்திலும் பங்களிப்பை செய்த ஒருசில சாதிகளில் தொட்டிய நாயக்கர் சமுதாயம் முதன்மையானது. மாநாட்டிற்கு ஒப்புக்கொண்டதுபோல் நிதி வழங்கியது, மலருக்கு தேவையான விளம்பரங்கள், மாநாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாடுகளை செய்தது, மக்களை திரட்டியது, கடுப்பாடோடு கலந்துகொண்டது என அனைத்திலும் மாற்றோர் வியக்கும் வண்ணம் கம்பளத்தார் சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்துகொண்டனர். 


அதேபோல், தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், நாமக்கல், சேலம், கோவை, ஈரோடு, சென்னை, திருச்சி என அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட வாகங்களில் 2500 முதல் 3000 நபர்கள் வரை கம்பளத்தார் சமுதாயத்தின் சார்பில் கலந்துகொண்டிருக்கலாம் என்று மதிப்பிடும் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள், கம்பளத்தார் காட்டும் ஒற்றுமையும், திரளும் கூட்டமும் போல் சமூகநீதி கூட்டமைப்பிலுள்ள இருபது,இருபத்தைந்து சாதிகள் சேர்ந்தால் போதும் அரசியல் போக்கையே மாற்ற முடியும் என்று மனதார பாராட்டினர். 


மற்ற சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் பாராட்டுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகள் அனைத்தும் சமூகநீதி மாநாட்டிற்கு தங்கள் பங்களிப்பை செவ்வனே செய்திருந்தன. குறிப்பாக விழா மலரின் பின்பக்க அட்டையில் த.வீ.க.பண்பாட்டுக்கழகத்தின் விளம்பரம் முழுபக்க செலவை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டவுடன் அதன் அவைத்தலைவர் பி.எஸ்.மணி மற்றும் பொதுச்செயலாளர் இராமகிருஷ்ணன் ஆகியோர் உடனடியாக ரூ.30000/- வழங்கினர். அதேபோல் பொருளாளர் மறும் இளைஞரணி செயலாளர் ஆகியோரும் மதுரை சுற்றுவட்டார தலைவர்களை அனுப்பி வைத்தனர். மாநிலதுணைத்தலைவர் மல்லுச்சாமி அவர்கள் மாநாட்டு மேடையில் முக்கிய தலைவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்ததோடு, மாநாட்டிற்காக பிரத்யேக பாடலையும் வெளியிட்டிருந்தார். 


விடுதலைக்களம் கட்சியின் சார்பில் முழுவீச்சில் மாநாட்டுப்பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டதின் விளைவாகவே தமிழகம் தழுவிய அளவில் எல்லா பக்கங்களில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், கோட்டை முற்றுகை, திருச்சி டோல்கேட் முற்றுகை என அனைத்திலும் மாஸ் காட்டும் விடுதலைக்களம் கட்சி, இந்த மாநாட்டிலும் சிறப்பான பங்களிப்பை செய்திருந்தது. மாநாட்டு அடிக்கோல் நாட்டியதிலிருந்து தனி பிரச்சார வாகனத்தை ஏற்பாடு செய்ததோடு, தானே நேரடியாக பல மாவட்டங்களுக்குச் சென்று ஏற்பாடுகளை செய்து வந்தார் நிறுவன தலைவர் கொ.நாகராஜன். மேலும் மாநாட்டு குடிநீருக்காக ரூ.10000/- வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இராஜகம்பளத்தார் மேன்மக்கள் கல்வி அறக்கட்டளை தலைவர்களில் ஒருவரும்,  இராஜகம்பளத்தார் சமுதாய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பெ.இராமராஜ் அவர்கள் ஒட்டுமொத்த மாநாட்டின் கதாநாயகனாக, அனைத்து தரப்பு தலைவர்களும் ஒருமனதாக பாராட்டிச்சென்றனர். மாநாட்டில் முதல்நாள் தொடங்கி நூறு நாட்களும் உழைத்து, அனைத்து கணக்கு வழக்குகளையும் நேர் செய்து மாநாடு முடிந்து மூன்றுநாள் கழித்து வீடு திரும்பிய ஒரே நபர் மத்திய அரசின் முன்னாள் பொதுப்பணித்துறை அதிகாரி பெ.இராமராஜ் என்றால் அவரின் உழைப்பை மதிப்பீடு செய்துகொள்ளலாம். 


நாமக்கல் தொட்டிய நாயக்கர் கலவி அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, டிஎன்டி பிரச்சினை தொடங்கியதிலிருந்து சமுதாயத்திற்காகவே நேர்ந்துவிடப்பட்டவர் போல், அதே சிந்தனையாக, முழுநேர பணியாக செய்து வருபவர். கூட்டமைப்பில் ஏற்படும் சிறுசிறு சலசலப்புகளை உடனடியாக சரிசெய்வது, உச்சநீதிமன்ற வழக்காடு நிதியிலிருந்து, மாநாட்டு மலர் வரை இவரின்றி அணுவும் அசையவில்லை என்பதை உறுதியாக கூறமுடியும். அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்தது, மாநாட்டு நிதியாக ரூ.ஒருலட்சம் வழங்கியதோடு, மாநாட்டு மலர் விளம்பரங்களில் மூன்றில் இரண்டு பங்கு பங்களிப்பு இவருடையது என்பதையும் கூறியாக வேண்டும். இதுதவிர அறக்கட்டளை நிர்வாகிகள் சின்னசாமி, மணி, சரவணன், துரைசாமி, நாகப்பன் என அனைவரையும் களமிறக்கி வெற்றிகரமான மாநாட்டை நடத்தியதில் முக்கிய பங்குண்டு. ஓய்வு பெற்ற பிடிஓ நாகப்பன் சமூகநீதி கூட்டமைப்பின் முழுநேர ஊழியராகவும், விழா மலரின் மூளையாகவும் செயல்பட்டார் என்பது அறக்கட்டளைக்கு கூடுதல் சிறப்பு. 


சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் எஸ்.இராமராஜு, ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன், முகப்பேர் இராஜா, போடி சௌந்திரபாண்டியன் ஆகியோர் சமூகநீதி மாநாடு தாண்டி கடந்த ஒன்னரை வருடங்களாக இதே சிந்தனையில் இருப்பவர்கள். அனைத்து சமுதாய தலைவர்களையும் தொடர்பு ஒருங்கிணைத்தது,  பிரச்சினைகளை தீர்த்து வைத்தது, சமூக ஊடகங்களில் பிரச்சாரங்களை முன்னெடுத்தது, விருதுநகர், கோவை போன்ற பகுதிகளில் இருந்து சமுதாய மக்களை மாநாட்டிற்கு வரவழைத்தது, மாநாட்டு மேடையை நிர்வாகித்தது, மாநாட்டு வரவு செலவுகளை பார்த்துக்கொண்டது என அனைத்திலும் தன் பங்களிப்பை செவ்வனே செய்து சங்கத்திற்கு பெருமை சேர்த்தார் பொருளாளர் இராமராஜூ. 


இதுதவிர, மாநாட்டிற்காக ஆங்காங்கே உழைத்த முகம்தெரியாத சொந்தங்கள், மாநாட்டு மலரில் விளம்பரம் செய்துள்ள உறவுகள், தங்கள் சொந்த கைக்காசை செலவு செய்து, நேரம் ஒதுக்கி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய உறவுகள் என அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம். 

மொத்தத்தில் கம்பளத்தாருக்கு இம்மாநாடு ஒரு எழுச்சியை தந்துள்ளதோடு, சமுதாய நலனுக்காக எல்லா அமைப்புகளும் ஒன்றுசேரக்கூடிய ஒரே சாதி இராஜகம்பளத்தார் மட்டுமே என்று மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு பெருமையையும் பெற்றுத்தந்துள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved