🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இந்து ஆங்கில நாளிதழில் ஊமைத்துரைக்கு புகழாரம்!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் உடன்பிறந்த சகோதரரும், கட்டபொம்மன் மறைவிற்குப்பிறகு ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மாவீரன் ஊமைத்துரை குறிந்து தி இந்து ஆங்கில நாளேடு இன்று (12.08.2022) அரைப்பக்க அளவில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. பத்திரிக்கையாளர் கோலப்பன் எழுதிய இந்தக்கட்டுரையில் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு,

அமைதியான சுபாவமும் அதேவேளையில் போர்க்குணமிக்க ஊமைத்துரையின் புகழ், மாவீரன் கட்டபொம்மன் மீதான அதீத புகழால் அவரது சகோதரன் ஊமைத்துரைக்கு கிடைத்திருக்க வேண்டிய பேரும், புகழும் கிடைக்காமல் போனது. துணிச்சல் மிக்க போர்வீரனான ஊமைத்துரை, கட்டபொம்மனின் மறைவிற்குப்பிறகு ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சியை மூர்க்கமாக முன்னெடுத்ததையும், அவரின் போர்த்திறன் குறித்து ஆங்கில ஆவணங்களிலும், தென்னக நாட்டுப்புற பாடல்களிலும் பதிவாகியுள்ளது. ஒருசில வேளைகளில் இதுபோல் வரலாற்றில் உரிய இடம் கிடைக்காமல் போவதுதுண்டு.

வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை திரைப்படமாக உருவானபோது, சிவாஜி கணேசனை கதாநாயகனாக வைத்து, அவரது சகோதரர் ஊமை துரை கதாபாத்திரம் ஓரங்கட்டப்பட்டது. ஆனால் ஆங்கிலேயரின் பதிவுகளிலும் மற்றும் தென்னக நாட்டுப்புற பாடல்களிலும் கட்டபொம்மன் பிடிபட்டு தூக்கிலிடப்பட்ட பிறகு, கிளர்ச்சியை முன்பைவிட இன்னும் அதிக ஆவேசத்துடன் தொடர்ந்தவர் என்ற உண்மைப் பெருமையை அவருக்கு வழங்குகின்றன.

தென்தமிழகத்தில் பாளையக்காரர்களுக்கு எதிராக போரை நடத்திய ஆங்கிலேய அதிகாரி கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ், தனது மிலிட்டரி ரிமினிசென்சஸ் என்ற புத்தகத்தில், ஊமைத்துரையின் நாட்டுப்பற்றுக்கு இறுதியில் தூக்கு மேடையே சன்மானமாக கொடுக்கப்பட்டது. மேலும், காது கேளாமல், வாய்பேச முடியாதவரான ஊமைத்துரை நான் பார்த்த அசாதாரணமான வீரன். அவரைப்பற்றி குறிப்பிடாமல் அந்த பயங்கர போர்நிகழ்வுகளை நினைவுகூற முடியாது என்கிறார்.

சமீபத்திய எழுத்தாளரான ஜகவீரபாண்டியனார், தனது பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் புத்தகத்தில், "அவருக்கு (ஊமைத்துரைக்கு) பயம் தெரியாது. பாஞ்சாலங்குறிச்சி இன்னும் ஊமையன்சீமையால் அறியப்படுகிறது என்றால், அது அவருடைய அரசியல் மற்றும் நிர்வாகத் திறமைக்கு சான்றாகும்.

பேச்சு குறைபாடு இருந்ததால், அமைதியாக இருப்பதைத் கண்டு அவரை அன்புடன் ஊமை துரை என்று அழைக்கப்பட்டார் என்றும் அவரது பெற்றோரால் தளவாய் குமாரசாமி என்று அழைக்கப்பட்டார் என்றும் குறிப்பிடுகிறார். ஆனால் அவர் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரரான கட்டபொம்மனின் இளைய சகோதரர், ஆனால் வெல்ஷ் அவரை உறவினர் அல்லது நெருங்கிய உறவினராகக் குறிப்பிடுகிறார்.

கட்டபொம்மன் கதைப்பாடல்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவரான செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் வி.மாணிக்கம், நாட்டுப்புற பாடல்கள், கள ஆய்வுகள் மற்றும் பிரிட்டிஷ் பதிவுகள் அனைத்தும் ஊமைத்துரை கட்டபொம்மனின் சகோதரர் என்பதை உறுதி செய்வதாகவும்,  வெல்ஷ் எதனடிப்படையில் நெருங்கிய உறவினர் என்ற முடிவுக்கு வந்தார் என்பது தெரியவில்லை என்கிறார்.

மேலும் ஊமைத்துரையின் உருவ அமைப்பு, தோற்றம் குறித்து எழுதியுள்ள வெல்ஷ், போர்க்களத்தில் ஊமைத்துரை படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபொழுது, மற்றொரு போர்வீரனை தேடிவந்த தாய், தன் மகனை காப்பாற்ற முயன்றபொழுது, தாயிடம் நான் சாகிறேன், நீ ஊமைத்துரையை காப்பாற்று என்று கூறியதையும், ஆங்கிலேயர் வழிமறித்த பொழுது தன் மகனை அம்மை நோய் தாக்கியுள்ளதாகக் கூறி ஏமாற்றி உமைத்துரையை தப்பிக்க வைத்ததையும் பதிவிட்டுள்ளார்.

ஆத்தூர், ஆறுமுகமங்கலம், ஆழ்வார்திருநகரி மற்றும் ஸ்ரீவைகுண்டம் போன்ற வளமான பகுதிகள் பாஞ்சாலங்குறிச்சி ஆளுகையின் கீழ் இருந்ததால், செல்வம் மிகுந்த பாளையமாக இருந்ததே ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சி மீது குறியாக இருந்ததாக வரலாற்று ஆய்வாளர் முனைவர் மாணிக்கம் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலேயருக்கு எதிரான பிரச்சாரங்களில் ஊமை துரை தனது மக்களை எவ்வாறு அணிதிரட்டினார் என்பதை வெல்ஷ் தெளிவாக சித்தரித்துள்ளார்.

ஆங்கிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவரது முறை மிகவும் எளிமையானது. அவர் ஒரு சில சிறிய வைக்கோல் துண்டுகளை சேகரித்து, ஆங்கிலப் படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தனது இடது கையின் உள்ளங்கையில் வைத்தார். பின்னர், மற்ற அடையாளங்களுடன், அந்த நேரத்தில், அவர் மற்றொரு கையை குறுக்காக இழுத்து, அவற்றைத் துடைத்தார், அவரது வாயிலிருந்து ஒரு விசில் ஒலி, இது தாக்குதலுக்கான சமிக்ஞையாக இருந்தது. மேலும் நமது அழிவுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் அவர் பொதுவாக முதன்மையானவர்,” என்கிறார் வெல்ஷ்.

முன்னதாக, மேஜர் பேனர்மேன், கட்டபொம்மனை பீரங்கியால் வீழ்த்தி, அவரி 1799 இல் கயத்தாரில் தூக்கிலிட்டனர். இளைய சகோதரர் ஊமைத்துரை உள்ளிட்ட 14 கிளர்ச்சியாளர்களுடன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடம் சிறையில் இருந்தார்கள். சிறையிலிருந்து தப்பிக்க ஊமைத்துரை திட்டம் தீட்டினார்.

ஊமைத்துரை ஆதரவாளர்கள், மாறுவேடத்தில் பாளையங்கோட்டைக்குள் நுழைந்து,  அடைத்து வைக்கப்பட்டிருந்த தோழர்கள் அனைவரையும் விடுவித்தனர். தப்பியவர்கள் அங்கிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்றனர். அங்கு இடிக்கப்பட்ட கட்டபொம்மனின் கோட்டையை மீண்டும் ஊமைத்துரை வெற்றிகரமாக கட்டிமுடித்தார். ஐந்து நாட்களுக்குள் இந்த வல்லமைமிக்க பணியை நிறைவேற்றினர். அதிர்ச்சியடைந்த ஆங்கிலேயர்கள் படையை வலுப்படுத்திக்கொண்டு பாஞ்சாலங்குறிச்சி மீது மீண்டும் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலின்போது கிழக்கிந்திய கம்பெனியின் பல சிப்பாய்கள் இறந்தனர். இதனால் அவர்கள் சமாதானமாக போகவேண்டிய நிலை ஏற்பட்டது. . பிரிட்டிஷாருக்கு தங்கள் வீரர்களின் சிதைந்த உடல்களை சேகரித்து அடக்கம் செய்ய நிபந்தனையின்றி அனுமதி வழங்கிய ஊமைத்துரையின் பெருந்தன்மையை வெல்ஷ் அவர்களே ஒப்புக்கொள்கிறார். ஆனால், ஊமை துரையின் வெற்றி குறுகிய காலமே நீடித்தது.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை இரண்டாவது முறையாக அழிக்கப்பட்டது, ஆனால் அங்கிருந்து தப்பிய ஊமைத்துரை மருது சகோதரர்களிடம் அடைக்கலம் சேர்ந்தார். இது பிரிட்டிஷாரை கோபப்படுத்தியது. பகை தவிர்க்க முடியாததாக மாறியது, மருது சகோதரர்களும் முறியடிக்கப்பட்டனர். ஆனால் ஊமைத்துரை விருப்பாச்சி மலையில் தஞ்சம் புகுந்து தொடர்ந்து போராடினார். துரதிர்ஷ்டவசமாக, அவர் உணவுப் பற்றாக்குறையாலும், நோயாலும் பாதிக்கப்பட்டார். இறுதியில், அவர் பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்டார், என்று திரு.மாணிக்கம் கூறுவதாக இந்து ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரையில் எழுதியுள்ளார் கோலப்பன்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved