🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பளத்தார் ஓட்டு இலவசமல்ல! - ரவீந்திரன் துரைசாமி பாராட்டு!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (7.08.2022) மதுரையில் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 261 சாதிகளை உள்ளடக்கிய சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் "சமூகநீதி மாநாடு" பிரமாண்டமான முறையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில், தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் சென்னை, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி,கரூர், நாமக்கல்,ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலிருந்தும் 2500-க்கும் மேற்பட்டோர் 200-க்கும் அதிகமான வாகனங்களில் வந்து கலந்துகொண்டனர். மாநாட்டில் கலந்துகொள்ள வந்த கம்பளத்தாரில் பெரும்பகுதியினர் மாநாட்டுத் திடலின் இடதுபுறம் குழுவாக அமர்ந்திருந்தனர்.

சமூகநீதி மாநாட்டில் மிக அதிக அளவில் மக்கள் கலந்துகொண்ட ஓருசில சமுதாயங்களில் கம்பளத்தார் சமுதாயமும் ஒன்று. முழுக்க முழுக்க சொந்த காசை செலவு செய்து வந்திருந்த கம்பளத்தார் கூட்டம், மாநாடு நடைபெறும்பொழுதே மேடையில் அமர்ந்திருந்த அனைத்து சமுதாய தலைவர்களின் கவனத்தையும், மாநாட்டிற்கு வந்திருந்த உளவுத்துறை, பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் கவனத்தையும் பெற்றது.

சமூகநீதி கூட்டமைப்பின் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து சீமானின் நாம் தமிழர் கட்சியும், வேல்முருகன் அவர்களின் தமிழக வாழ்வுரிமை கட்சியும் சமூகநீதி கூட்டமைப்பு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டதுபோல் "சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு"  நடத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தின. மேலும், இம்மாநாடு குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவு யூடியூப் சேனலும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தது. தற்பொழுது பாமக சார்பிலும் இதுபோன்ற ஒரு மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகிறது.

அரசியல் தளங்களில் மதுரை சமூகநீதி மாநாடு உடனடியாக ஏற்படுத்திய தாக்கத்தைப்போன்றே, ஊடகங்கள் மத்தியிலும் கவனத்தைப்பெற்றுள்ளது. இம்மாநாடு குறித்து தமிழகத்தின் அனைத்து நாளிதழ்களிலும் செய்தி வெளியானதே சாட்சி. இதன் வெளிப்பாடாக, மாநாடு நடைபெற்ற அடுத்த நாளே சத்தியம் தொலைக்காட்சியில் மாலை 7 மணிக்கு நடைபெறும் "சத்தியம் சாத்தியமே" என்ற விவாதமேடை நிகழ்ச்சியில் சமூகநீதி கூட்டமைப்பில் வலியுறுத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் ஒருவரும், மாநாடு வெற்றிகரமாக நடைபெற முக்கியப்பங்காற்றிய "தொட்டிய நாயக்கர்" சமுதாயத்தின் சார்பில் ஒருவரும் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சமூகநீதி கூட்டமைப்பின் சார்பில் பேசிய ஓசூர் இராமசாமி அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு  சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்கள் மற்றும் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் 69 விழுக்காட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியாக வேண்டியதின் அவசியத்தையும் விளக்கினார்.

தொட்டிய நாயக்கர் சமூகத்தின் சார்பில் பேசிய விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரி தொட்டிய நாயக்கர் சமுதாயம் வலியுறுத்துவதற்கான தேவை குறித்தும், இடஒதுக்கீடு பங்கீடு மற்றும் இதுவரை நடத்திய போராட்டம், இனிமேல் நடைபெறவுள்ள போராட்டம் எதுமாதிரியாக  இருக்கும் என்பதை விளக்கிப்பேசினார். கொ.நாகராஜனின் இப்பேச்சு அரசியல் அரங்கிலும், ஊடகங்கள் மத்தியிலும் மீண்டும் கவனத்தைப்பெற்றது.

இதன் எதிரொலியாக நாம் தமிழர் கட்சியின் ஆதரவு யூடியூப் சேனலான "பேசு தமிழா பேசு" சார்பில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் ஒரு பேட்டிக்காக அழைக்கப்பட்டிருந்தார். இப்பேட்டியில் பங்கேற்பதற்காக நேற்று காலை அவர் சென்னை வந்திருந்தார். ஏற்கனவே தெலுங்கு அமைப்பின் தலைவர் காமாட்சி நாயுடு யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டி பரபரப்பாக பேசப்பட்டு, கடும் விமர்சனத்திற்கும், விவாதப்பொருளாகவும் மாறியிருந்த சூழலில், நாம் தமிழர் ஆதரவு ஊடகமான "பேசு தமிழா பேசு" சேனல் இருப்பதால் அதில் எம்மாதிரியான கேள்விகள் கேட்கப்படும், அதை எதிர்கொள்வது எப்படி என்ற கேள்வி எழுந்தது.


ஒருவழியாக கேள்விகளை யூகித்துக்கொணடு, பதில்களையும் விவாதித்துக்கொண்டே விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜனோடு சென்னை அண்ணாநகரில் இருந்து வேளச்சேரி நோக்கி காரில் புறப்பட்டோம். அலுவலகத்தை அடைந்த கொஞ்ச நேரத்திலேயே நிகழ்ச்சி தொடங்கியது. மிகவும் அன்போடு வரவேற்ற குழுவினரே கேள்விகளையும் அடுக்கினர். எதிர்பார்த்தது போலவே சமூகநீதி மாநாட்டு தீர்மானங்கள், அதன் செயல்பாடுகள் குறித்து அதிகம் பேசப்படாமல், சாதிவாரி கணக்கெடுப்பின் தேவை தொடங்கி, பாமக-வுடனான முரண், தமிழக அரசியலில் பிறமொழியாளர்களின் ஆதிக்கம், பிறமாநிலங்களில் தமிழர்களின் நிலை, சு.ப.வீ கருத்து குறித்தான கேள்வி, தமிழக முதல்வரின் தாய்மொழி, செயல்பாடு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, திராவிடக்கட்சிகள் ஏமாற்றுகிறதா, சகோதர சமூகங்கள் என அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. கொஞ்சம் பிசகியிருந்தாலும் பொறியில் சிக்கிய எலியாக நிலைமை மாறியிருக்கும், ஆனால், கலைஞர் மு.கருணாநிதி போல் March attempt Fail (M.A.F)- லான (பத்தாங்கிளாஸ் பெயில்) கொ.நாகராஜனும் தன் கால்நூற்றாண்டுகால பொதுவாழ்க்கை அனுபவத்தை வைத்து மிக லாவகமாக எதிர்கொண்டார். இதனால் காமாட்சி நாயுடு பேட்டியை அடுத்து ஒரு சர்ச்சை உருவானது போல் மாறிட வாய்ப்பளிக்காமல், எந்தவிதமான சர்ச்சைக்கும் இடம்கொடுக்காமல் பேட்டி சுபமாக முடிந்தது. சுமார் நாற்பது நிமிடங்கள் பேட்டியெடுத்த குழுவினரும் இறுதியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


"பேசு தமிழா பேசு" நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தாணுலிங்கநாடாரின் மாணவனாக, பெரியார் வழியில் "பாசிடிவ் சோசியல் ஜஸ்டிஸ்" என்ற கருத்தியலோடு, தமிழகத்தில் அதிகாரமற்ற சாதிகளான முத்தரையர், வலையர், வேட்டுவக்கவுண்டர், ஒட்டர், போயர், தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகங்களுக்காக குரல் கொடுப்பவரும், வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது பாமக தலைவர் மருத்துவர் ஐயா இராமதாஸ், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் எளிய சமூகங்களுக்கு செய்த "பச்சைத்துரோகம்" என்று  வெளிப்படையாக அரசியல் தளங்களிலும், ஊடகங்களிலும்  தன் கருத்தை தொடர்ந்து பதிவு செய்துவரும் மூத்த ஊடகவியளார், அரசியல் திறனாய்வாளர் இரவீந்திரன் துரைசாமி அவர்களுடன் சந்திப்பு நடைபெற்றது.

முதல்முறையாக அறிமுகமாகும் ரவீந்திரன் துரைசாமி அவர்கள் பார்த்தவுடனே வயதையும் பொருட்படுத்தாமல் தந்தை பெரியாரைப்போலவே எழுந்துநின்று கைகொடுத்து வரவேற்று ஆரத்தழுவிக்கொண்டது "பாசிட்டிவ் சோசியல் ஜஸ்டிஸ்" கொள்கை அவரின் ரத்தத்தில் ஒன்றியிருப்பதை உணர்ந்துகொள்ளமுடிந்தது. அவர் அமர்ந்திருந்த சோபா தரையில் இருந்து சற்றே உயரமாக இருந்தது. அதில் இருந்து உடனடியாக எழுவது வாலிப வயதினருக்கு கூட கொஞ்சம் அசௌகரியமாக இருக்கும். ஆனால் மிகமூத்த பத்திரிக்கையாளர், தேசிய அளவிலும்,  பிரதம அமைச்சாராலும் மதிக்கப்படுபவர், எளிய மனிதர்களையும் எழுந்திருந்து வரவேற்பது என்பது அவரின் உயரத்தைப்போலவே உயர்ந்த குணத்தையும் வெளிப்படுத்தியது.

தனியார் சேனலில் பேட்டி ஒன்றிக்காக தயாரகிக்கொண்டிருந்ததற்கும் மத்தியில், நமக்காக நேரம் ஒதுக்கி, மதுரை சமூகநீதி மாநாடு, இடஒதுக்கீடு பிரச்சினை பற்றியெல்லாம் பேசியவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கம்பளத்தாரின் நிலைப்பாடு, போட்டியிட்ட தொகுதிகள், வாங்கிய வாக்கு குறித்தெல்லாம் கேட்டு, உதவியாளரை குறிப்பெடுத்துக்கொள்ள சொன்னார். திருச்சுழி, அந்தியூர், வேடசந்தூர், பெருந்துறை உள்ளிட்ட தொகுதிகளில் வாங்கிய 2000-க்கும் அதிகமான வாக்குகள் நிச்சயம் அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்ககூடிய வாக்குகள் என்றும், இரு தொகுதிகளில் ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் பெற்றது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை, பெரிய கட்சியாக கருதப்படுபவை கூட பல தொகுதிகளில் இந்த வாக்குகளைக்கூட பெறமுடியாதபொழுது, பிரச்சாரம், தனி சின்னம், ஊடக பலம் ஏதுமின்றி, நோட்டீஸ்கூட விநியோகிக்க முடியாத சமூகம், வெறும் உணர்வால் மட்டுமே இந்த வாக்குகளை பெற்றிருக்கிறது என்று உற்சாகப்படுத்தினார்.  "தொட்டிய நாயக்கர் சமூகம்" இதுவரை எந்தவித அதிகார பகிர்வையோ, ஆதாயத்தையோ பெறாமல் இலவச வாக்குகளாக கட்சிகளுக்கு வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும், இம்முயற்சியை தொடருங்கள் என்றும் உங்களுக்காக என் குரல் ஒலிக்கும் என்றார். இப்பேச்சினூடே, வைகோ அவர்கள் திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக உதயமாகி சந்தித்த முதல் தேர்தலான பெருந்துறை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதிமுக இரண்டாம் இடம் பிடிக்க காரணம் கம்பளத்தாரே என்பதையும் நினைவு படுத்தினார்.

அதிகாரமற்ற சாதிகள், புறக்கணிக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப்பட்ட சாதிகளுக்காக "பாசிட்டிவ் சோசியல் ஜஸ்டிசிஸ்" கோட்பாட்டில் எந்த வித சமரசமுமின்றி பயணிப்போம் என்று உறுதிபட கூறியவர், எனது தம்பிகளோடு புகைப்படம் எடுங்கள் என்று உதவியாளரிடம் கூறி எங்களைப் பற்றிக்கொண்டு புகைப்படம் எடுத்து அன்போடு பேட்டிக்காக விடைபெற்றார். 

நேற்றைய பொழுது கம்பளத்தார் சமுதாயத்திற்கு நல்லபொழுதாக இருந்ததாக நிச்சயம் நம்புகிறேன்.

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் ராமராஜ் டைரி குறிப்பிலிருந்து...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved