🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மணிவிழா பிறந்தநாள் காணும் எழுச்சித்தமிழருக்கு வாழ்த்துகள்!

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்த பிறந்தநாள் மணிவிழா ஆண்டாக அமைந்துள்ளதால் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 60-வது பிறந்தநாளையொட்டி நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.க.தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் தொல்.திருமாவளவனை வாழ்த்திப்பேசினர்.

தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஆளுமைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன், பொதுவாழ்வில் கடந்துவந்த பாதை கட்சி அல்லது சாதி அமைப்புகள் தொடங்கி நடத்த நினைப்பவர்களுக்கு பெரிய பாடமாக இருக்கும்.

அரியலூர் மாவட்டம், செந்துரை அருகிலுள்ள அங்கனூர் கிராமத்தில் ஆகஸ்ட் 17, 1962-ம் ஆண்டு ராமசாமி, பெரியம்மாள் தம்பதியருக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் திருமாவளவன். தொடக்ககால கல்வியை சொந்த ஊரிலும், இளங்கலை பட்டத்தை சென்னை மாநிலக்கல்லூரியிலும், முதுகலை பட்டத்தை சென்னை பல்கலைக்கழகத்திலும் பெற்றவர், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டமும் பயின்று அரசியலுக்கு ஏற்ற வகையில் கல்வியை உறுதி செய்துகொண்டார்.

அரசு தடயவியல்துறையில் அறிவியல் உதவியாளராக வாழ்க்கையைத் தொடங்கியவர், கல்லூரி காலத்திலிருந்தே அரசியலில் ஆர்வமிக்கவராக, குறிப்பாக தலித் அரசியலை முன்னெடுப்பதில் ஆர்வமிக்கவராக இருந்தார்.  அதனடிப்படையில் அம்பேத்கரின் மனைவி சவீதா ஆரம்பித்த `பாரதீய தலித் பேந்தர்’ அமைப்பில் தனது இருபதாவது வயதில் (1982-ல்) இணைத்துக்கொண்டு பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தார்.

1983-இல் நடைபெற்ற ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டு அரசியலை வளர்த்துக்கொண்டவர். 1986-இல் இலங்கை தீவில் நடைபெற்ற தமிழ் மாணவர் போராட்டங்களில் நேரடியாக கலந்துகொண்டார்.

ஒருசில ஆண்டுகளில் பாரதிய தலித் பேந்தர் அமைப்பின் மாநில அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டது, இவரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்பமாக இருந்தது. "இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள்" என்று முதலில் அமைப்பின் பெயரை மாற்றி தனிக்கொடியையும் அறிமுகம் செய்து வைத்தவர், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் "விடுதலை சிறுத்தைகள்" என்று பெயர் மாற்றம் செய்தார்.

தமிழகத்தின் பெரும்பான்மை சாதிகளில் ஒன்றான "பறையர்" சமுதாய மக்களின் விடுதலையை மையப்படுத்தி தன் அரசியல் பாதையை கட்டமைத்துக்கொண்டவர், ஒரு கட்டத்தில் தான் வகித்து வந்த அரசுப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர அரசியல் பயணத்தை தொடர்ந்தார். நாடி நரம்புகளில் முறுக்கேறச்செய்யும் தன் துடிப்பான பேச்சு வலிமையால் முடங்கிக்கிடந்த இளைஞர்களை ஒன்று திரட்டினார்.

தொடக்கத்திலிருந்தே தன் அரசியல் பாதையை தீர்க்கமாக முடிவு செய்துகொண்டவர், தன்னைப்பின் தொடர்ந்த இளைஞர்களுக்கு வரலாற்றையும், சித்தாந்தங்களையும் போதித்து வலிமைமிக்க தலைவர்களாக வார்த்தெடுத்தார். அம்பேத்கார், பெரியார், மார்க்ஸ் போன்ற சமூகத்தை புரட்டிப்போட்ட சிந்தனையாளர்களின் கருத்துக்களை அரசியல் தளங்களிலும், பிரச்சார மேடைகளிலும் தொடர்ந்து மேற்கோள்காட்டி பேசும் தொல்.திருமாவளவன், பிற சாதியினரின் வெறுப்பிற்கும், கல்லடிக்கும், சொல்லடிக்கும் ஆளாகினாலும், அதை எதிர்கொண்டு தமிழகத்தின் ஆகச்சிறந்த தலைவர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

அவர் குறித்தான விமர்சனங்கள் பலவாராக இருந்தாலும், அவரின் அடிப்படை வாக்கு வங்கியை கட்டமைப்பதற்காக சொல்லப்பட்ட வார்த்தைகளை மேற்கோள்காட்டி விமர்சனம் செய்தாலும், விமர்சனத்தை முன்வைப்பவர்கள் தொடர்ந்து அதேநிலையிலும், தொல்.திருமாவின் உயரம் அரசியலில் உயர்ந்துகொண்டே செல்வதையும் பார்க்கமுடிகிறது.

ஒடுக்கப்பட்ட சமூகங்களை மையப்படுத்தி தன் அரசியலை தொடங்கியிருந்தாலும், பின்னாட்களில் அனைவருக்குமான தலைவராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஒரே சாதிய தலைவர் தொல்.திருமாவளவன் என்பதை யாரும் மறுக்கமுடியாது. வடமாவட்ட அரசியலில் வன்னியர் சாதிக்கு இணையான மக்கள் தொகை கொண்ட 'பறையர்" சமூகம் தனித்த ஆளுமைகள் இன்றி தடுமாறி வந்த நிலையில் அதை சரியாக கணித்து, கையாண்டு வெற்றி பெற்றவர் இவர் மட்டுமே. வன்னியர் சமுதாய அரசியல் மாணிக்கவேலர், இராமசாமி படையாச்சி தொடங்கி திண்டிவனம் இராமமூர்த்தி, நடராசன், வாழப்பாடி இராமமூர்த்தி, மருத்துவர் இராமதாஸ், வேல்முருகன் என தொடர்ச்சியான ஆளுமைகளால் முன்னெடுக்கப்பட்டு, ஐந்து லட்சம் கோடிக்கும் அதிகமான வன்னியர் அறக்கட்டளை சொத்துகள் இருந்தும் அரசியலை வெற்றிகொள்ள முடியாதபொழுது, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து எந்த பின்புலமும் இல்லாமல் தன் கல்வி அறிவை மட்டும் பின்புலமாகக்கொண்டு வெற்றிகரமான அரசியல் தலைவராக உயர்ந்துள்ளார் தொல்.திருமாவளவன்.

பெரிய கட்சிகள் திருமா-வை தலித் தலைவராக அடையாளப்படுத்தும்பொழுது, கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆறு தொகுதிகளில் தலித், முஸ்லிம், வன்னியர் சமுதாய வேட்பாளரகளை களமிறக்கி வெற்றிபெறச் செய்துள்ளார்.  

கடந்த சட்டமன்றத்தேர்தலுக்குப்பிறகு திமுக கூட்டணியில் விசிக தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், தொட்டிய நாயக்கர் சமுதாயம் அங்கம் வகிக்கும் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ஒரே அரசியல் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் என்பதும், அக்கூட்டத்தில் கலந்துகொண்டு சமூகநீதி கூட்டமைப்பின் கோரிக்கையை அரசு உரிய முறையில் பரிசீலிக்கவும் வேண்டுகோள் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்குமொழி பேசுபவர்களை குறிவைத்து வந்தேறிகள் என்று போலி தமிழ்தேசியவாதிகள் துவேச அரசியலை முன்னெடுத்தபொழுது, அக்கருத்தோடு உடன்படாமல் பெரியார் உள்ளிட்ட  பிற மொழி பேசும் தலைவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பை மேடைதோறும் முழங்குவதோடு, சாதிவாரி கணக்கெடுப்பு, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு போன்ற பல்வேறு பொதுப்பிரச்சினைகளில் சமூகநீதி கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து குரல்கொடுத்துவரும்  தொல்.திருமாவளவன் அவர்களின் மணிவிழா பிறந்தநாளில், அவர் இன்னும் பல்லாண்டு வளமோடும், நலமோடும் வாழ்ந்து தமிழ்ச்சமுதாயத்திற்கு தொண்டாற்றிட தொட்டிய நாயக்கர் சமுதாயம் சார்பில் வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved