🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தேர்தல் இலவசங்கள் கடுமையாக மோதிக்கொள்ளும் திமுக-பாஜக

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அஸ்வின் குமார் உபாத்யா என்பவர் அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்க கூடாது என்றும், அப்படி வழங்கினால் தேர்தல் ஆணையம் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அந்த கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

குஜராத் சட்டமன்றத்தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி கோவா, பஞ்சாப் போல இங்கும் களம் காணத்தயாராகி வருகிறது. இது தற்போது மாநிலத்தை ஆளும் கட்சியான பாஜகவிற்கு கடும் சவாலாக இருக்கும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் பலர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து வருகின்றனர். தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில் ஆம் ஆத்மி கட்சி இரண்டு கட்டமாக வேட்பாளர்களை அறிவித்து, பல இலவசங்களை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் இலவசங்களுக்கு எதிராக கடுமையாக பேசியிருந்தார். 

ஆம் ஆத்மியின் வளர்ச்சிக்கும், கவர்ச்சி அறிவிப்பிற்கும் முட்டுக்கட்டை போட நினைக்கும் பாஜக, செய்தி தொடர்பாளராகவும், டெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு கோஷங்களை எழுப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டவருமான அஸ்வின்குமார் உபாத்யா வழியாக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாக சொல்லப்படுகிறது. நேரடியாக பாஜக இதில் சம்மந்தப்படவில்லை என்றாலும், பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இலவசங்களுக்கு எதிராக பேசிவருவது, அஸ்வின்குமார் பின்னனியில் பாஜக இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபொழுது இலவசங்கள் குறித்து நிபுணர்குழு அமைக்கப்போவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்தும், அதனைத்தொடர்ந்து எழுந்துள்ள விமர்சனமும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் எண்ண ஓட்டத்தை புரிந்துகொண்ட திமுக, உடனடியாக வழக்கில் தங்களையும் ஒருதரப்பாக இணைத்துக்கொள்ள இடையீட்டு மனு தாக்கல் செய்தது. இதனை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வடஇந்திய ஊடகத்திற்கு அளித்த பேட்டி இந்திய அரசியலில் அனலை கிளப்பியுள்ளது. 

வழக்கில் பல முக்கியமான கேள்விகளை உச்சநீதிமன்றத்தில் எழுப்பி உள்ள திமுக, முதலாவதாக அரசின் இலவச திட்டங்கள், அதற்கு ஒதுக்கப்படும் நிதிகுறித்து ஆராய உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தன் எல்லைக்குள் நிற்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. மேலும், மனுதாரர் பெருமுதலாளிகளுக்கு செய்யப்படும் கடன் தள்ளுபடி குறித்து கேள்வி எழுப்பாமல், சாமானிய மக்களுக்கு வழங்கப்படும் இலவசங்கள் குறித்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன் என்று வினவியுள்ளது. தவிர, நரேந்திரமோடி தலைமையிலான அரசின் முதல் மூன்றாண்டுகளில் (2014-2017) அதானி குழுமத்திற்கு சுமார் 72000 கோடியும், பொதுத்துறை வங்கிகள் ரூ 7.27 லட்சம் கோடி கடனை  கடந்த ஐந்தாண்டுகளில் (2017-22)  தள்ளுபடி செய்துள்ளது இலவசங்களில் வராதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

பெருநிறுவனங்களுக்கு பெரிய அளவில் வரிச்சலுகை வழங்கிவிட்டு, ஏழைகளுக்கு உணவு, கல்வி, போக்குவரத்திற்கு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து கேள்வி  எழுப்புவது எந்த விதத்தில் நியாயம் என்றும் முதலில் பெருமுதலாளிகளுக்கு ஆதரவான போக்கிற்கு முடிவு கட்ட வேண்டும் என்று கோரியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் (2008-2019) மத்திய, மாநில அரசுகளால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தள்ளுபடி ரூ.3.12 லட்சம் கோடி என்பது கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் தனியார் நிறுவனங்களின் கடன் தள்ளுபடியான ரூ.7.27 லட்சம் கோடியில் பாதிக்கும் குரைவு என்பதை 2019-இல் வெளியான ரிசர்வ் பேங்கின் தணிக்கையில் வெளியாகி இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் திமுக தனது மனுவில் தமிழகத்தில் இலவசங்களாக வழங்கப்பட்டுவரும் மதிய உணவு, மறுமண உதவி, இலவச மின்சாரம், இலவச வீட்டுமனை, கலப்புத்திருமண உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மருத்துவ காப்பீடு போன்ற திட்டங்களால் சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு பெருமளவில் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இலவச டிவி, பெண்கள் பாலிடெக்னிக்க்கில் சேர்ந்து பயில மாதம் ரூ.1000/-, அரசுப்பள்ளி மாணவர்கள் ஐஐடி-யில் சேர்ந்தால் முழுமையான உதவித்தொகை போன்ற திட்டங்களால் தமிழக வளர்ச்சி பெற்ற மாநிலமாக உயர்ந்துள்ளதாக தனது மனுவில் தெரிவித்துள்ளது.

மாநில நிதி அமைச்சர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசின் நிதிபற்றாக்குறையை விட மாநில அரசின் நிதி பற்றாக்குறை குறைவாகவே உள்ளது என்றும், ஒன்றிய அரசுக்கு தமிழக வழங்கும் வரிவருவாயில் ஒரு ரூபாயில் 35 பைசா மட்டுமே திரும்பி வருவதாகவும், அதை வைத்துக்கொண்டு இவ்வளவு மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்து திராவிட கட்சிகள் தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக்கியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். 35 பைசா பெரும் தமிழகத்தின் வளர்ர்சி 55 பைசா பெறும் உத்திரப்பிரதேச மாநிலத்தின் வளர்ச்சியை விட பன்மடங்கு அதிகம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். 

வழக்கின் அடுத்தகட்ட விசாரணை விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலவசம் குறித்த விவாதமும், தமிழக நிதி அமைச்சரின் பேட்டியும் ஊடகங்களில் பெரும் விவதமாக நடைபெற்று வருவது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved