🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கொங்கு மண்டலத்தில் திமுக Vs பாஜக! - கட்டமைக்கப்படும் பிம்ப அரசியல் எடுபடுமா?

சென்றவார மத்தியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தமிழக முதல்வர் கோவையில் கலந்துகொள்ளும் முதல்நாள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட பொறுப்பாளர் என்ற வகையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்திருந்தார். முதல்வரின் இந்த வருகையை மையமாக வைத்து அரசியல் திறனாய்வாளர் என்ற பின்புலத்தோடு சுந்தர் ராஜ சோழன் என்பவர் வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார்.

அக்கட்டுரையில் கொங்கு மண்டலத்தில் திமுக-பாஜக கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுவதாகவும், இதில் உளவியல் ரீதியாக பாஜக வெல்லும் நிலையில் இருப்பதாகக்கூறி கட்டுரையை நிறைவு செய்துள்ளார். சமூக ஊடகங்களின் ஆதிக்கத்திற்கு முன்பிருந்தே "பிம்ப அரசியல்" கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், சமூக வலைதளங்களின் ஆதிக்கத்திற்குப்பிறகு, பணபலமிக்க அரசியல் கட்சிகள் தங்கள் தலைவரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வதற்காக பிரத்யோகமாக சம்பளத்திற்கு ஆட்களை நியமித்து "ப்ரமோட்" செய்துகொள்ளும் அதேவேளையில், தங்கள் சார்ந்த கட்சியின் ஆட்சியில் முன்னெடுக்கப்படும் மக்கள் விரோத செயல்களைக்கூட சரியானதே என்றும் சாதிக்க முயலும் சுயசிந்தனையில்லாத, சீர்தூக்கி ஆராயத்தெரியாத தொண்டர்களையும் கட்சிகள் உருவாக்கியுள்ளதை பார்க்கமுடிகிறது. இதுதவிர காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்களை நெருக்கடிகளுக்கு உள்ளாக்கி அரசுக்கு ஆதரவான கருத்துக்களை திணிக்கும் வேலைகளிலும் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதுபோதாதென்று பல பல யூடியூப் சேனல்கள் லட்சக்கணக்கில் கொட்டி தொடங்கப்படுவதோடு, யூடியூப்பில் பேசுவதற்கும், டிவி விவாதங்களில் பேசுவதற்கும் அரசியல் விமர்சகர், அரசியல் திறனாய்வாளர், பொருளாதார நிபுணர், வலதுசாரி, இடதுசாரி என்று பல்வேறு பட்டங்களில் கூலிக்கு ஆட்கள் அமர்த்தப்பட்டு வருவதும் நடக்கிறது.

சமூக ஊடகங்களின் எழுச்சி காரணமாக சமூகத்தில் அன்றாடம் நடைபெறும் எந்தவொரு நிகழ்வானாலும் அதுகுறித்தான விவாதம் அல்லது அதுகுறித்தான செய்தி அச்சு ஊடகத்திலோ, காட்சி ஊடகத்திலோ வெளியாகாமல் போவதே இல்லை. இதனால் சமூகத்தில் சாதாரணமாக நடைபெற்று வந்த நிகழ்சிகளுக்குக்கூட பல வண்ண வண்ணச் சாயங்களைப்பூசி பூதாகரமாக்கி விடுகின்றன. இதில் நன்மைகளும், தீமைகளும் சரி விகிதத்தில் கலந்தே இருந்தாலும், நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இவற்றை முற்றிலும் புறக்கணித்துவிட முடியாது. இருந்தபோதிலும், வலிந்து திணிக்கப்படும் இத்தகைய கருத்துருவாக்கங்கள், கட்டமைக்கப்படும் மாய பிம்பங்கள் கற்றரிந்த மனிதனைக்கூட சுயமாக சிந்தித்து முடிவெடுக்க முடியாமல் ஏதோ ஒரு கருத்தின் பின்னனியில் இயங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அத்தகைய பின்னனியில் தான் சுந்தர் ராஜ சோழன் எழுதியுள்ள கட்டுரை பார்க்கமுடிகிறது.

கட்டுரையாளர் குறிப்பிட்ட இரண்டு விடயங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்படியானதாக உள்ளது. முதலாவதாக கொங்கு மண்டலத்தில் அனைத்திந்திய அண்ணா திமுக-வில் கொங்கு வேளாளர் சமூகம் தாண்டி அனைத்து சமூக மக்களுக்கும் கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்புகள் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் காலத்தில் கூட நடக்காதது, செல்வி.ஜெயலலிதா அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு சாதி,மத பேதமின்றி, ஏற்றத்தாழ்வுகளின்றி அனைவருக்குமான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தபடியால், அரசியல் ஆர்வமுள்ள பலரும் போட்டி போட்டிக்கொண்டு அதிமுகவில் இணைந்தனர். ஆகையால் அதிமுக கூட்டணியின்றியே தனித்து களம்காணும் துணிச்சலை பெற்றிருந்தது. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியிலும் கட்சி பொறுப்புகளிலும், உள்ளாட்சி தேர்தல்களிலும் ஓரளவு அனைவருக்குமான வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டது. அதேவேளையில் ஆட்சி நிர்வாகத்திலும், அரசு ஒப்பந்தங்களிலும் எடப்பாடியார் சார்ந்த சமூகத்தினரின் கை ஓங்கியிருந்தது பிற சமூகங்களிடையே சிறிய அதிருப்தி இருந்தாலும், எதிர்க்கட்சிகள் அந்த அதிருப்தியை அரசியலாக்கி அறுவடை செய்ய முடியவில்லை. காரணம் எதிர்க்கட்சி வரிசையிலும் அதே சமூகத்தைச் சார்ந்தவர்களே முக்கியப்பொறுப்பில் இருந்ததே. இதையும் தாண்டி வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் பாதிக்கப்பட்டிருந்த வேட்டுவக்கவுண்டர், தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகங்களை பயன்படுத்திக்கொள்ள திமுக தவறவிட்டதும் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தோல்யடைந்தது.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள நிரந்தர பிரச்சினை என்பது, கொங்கு மண்டலத்தில் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதிலுமே அந்தந்தப்பகுதி பெரும்பான்மை சாதியைச் சார்ந்தவர்கள் மாவட்டச் செயலாளராக அமர்த்தப்படுவதும், ஆட்சிபொறுப்புக்கு வந்தால் அவர்களே மந்திரிகளாக நியமிக்கப்படுவதும் காலம் காலமாக நடைபெற்றுவரும் நடைமுறை. இதனால் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் தொடங்கி, மாநகர மேயர் முதல் ஊராட்சி மன்றத் தலைவர் வரை பெரும்பான்மை சாதிக்கே வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. நியமனப்பதவிகளைக்கூட கட்சித் தலைமை முயற்சி செய்து பிற சமூகங்களுக்கு வழங்காது. மாவட்டச் செயலாளர்கள் முழுக்க முழுக்க சாதிச்சங்க தலைவர்போல் தான் செயல்படுவார்கள். சுருக்கமாக சொல்வதென்றால் மாவட்டச் செயலாளர்களிடமே கட்சி முழுமையாக ஒப்படைக்கப்படுகிறது. அவர்களும் குறுநில மன்னர்கள் போல் ஆதிக்கம் செலுத்துவதால், சிறுபான்மை சாதியினரையோ அல்லது அரசியலில் ஆர்வமுள்ள இளைஞர்களையோ அக்கட்சியால் கவர முடிவதில்லை.

திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே எப்பொழுதும் ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருக்கும். அதிமுக தலைமைக்கும் தொண்டர்களுக்குமான ஒரு அந்நியோன்யம் திமுகவில் ஒருநாளும் இருந்ததில்லை. இதனால் எத்தனை கட்சிகளை உடைத்து முன்னனி தலைவர்களை  திமுக-வில் சேர்த்தாலும்,  எத்தனை லட்சம் தொண்டர்களை சேர்த்தாலும் அக்கட்சிக்கும், அதிமுகவிற்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் பத்து சதவீதம் இருந்துகொண்டே இருப்பதை பார்க்கலாம். இதனால் முழுக்க முழுக்க கூட்டணி கட்சிகளை நம்பியே தேர்தல் களத்தை சந்திக்க  வேண்டியுள்ளது என்பது திமுக வில் தொடரும் பலவீனம்.

இரண்டாவதாக சுந்தர் ராஜ சோழன் கூறியுள்ளதுபோல், கொங்கு மண்டலத்தில் கொங்கு வெள்ளாளக் கவுண்டர் அல்லாத சாதிகள் தெலுங்கு மொழிபேசும் கம்மவார் நாயுடு, இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர், 24 மனை தெலுங்கு செட்டியார், போயர், ஓட்டர், கன்னட மொழிபேசும் ஒக்கிலிய கவுடர் போன்ற சமூகங்களும், வேட்டுவக்கவுண்டர், நாட்டுக்கவுண்டர், ஊராளிக்கவுண்டர், கொங்கு நாடார்,  போன்ற தமிழ்மொழி பேசும்  சிறுபான்மை சாதியினரும் அதிக அளவில் உள்ளனர். அதிமுக-வில் இச்சமூகங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பு திமுக-வில் வழங்கப்படுவதில்லை. அதிமுக-வில் இருந்து வந்த செந்தில்பாலாஜி கரூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் இச்சமூகங்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்குவதால் அம்மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதிகளை திமுக முழுமையாக கைப்பற்றியது. அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் கொங்கு வெள்ளாளர் அல்லாத நாட்டுக்கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமாரை மாவட்டச் செயலாளர் ஆக்கியதின் மூலம் அவர் ஓரளவு மற்ற சமூகங்களுக்கு வாய்ப்புள்ள இடங்களில் உரிய பிரதிநிதித்துவம் வழங்குவதால் நாமக்கல் மாவட்டத்திலும் திமுக பெரும்பான்மையாக  வென்றது. ஆனால் மற்ற கொங்கு  மாவட்டங்களில் திமுக கூட்டணியால் வெற்றிபெற முடியவில்லை.


சுந்தர் ராஜ சோழன் கட்டுரையில் இந்த சாதிகளையெல்லாம் குறிப்பிட்டு எழுதியிருப்பது சரியானதே என்றாலும், இச்சாதி வாக்குகளை வெறுமனே இந்து வாக்குகளாக கருதிட முடியாது. ஆகையால் அது அப்படியே பாஜக வாக்கு வங்கியாக மாறி அக்கட்சி ஆதாயம் பெறும் என்பது அவரின் விருப்பமாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர, உண்மை ஆகிவிடாது. கட்டுரையாளர் சொநினைப்பதுபோல் அதிமுக முழுமையாக அங்கு தன் பலத்தை இழந்துவிடவில்லை. வேலுமணி, தங்கமணி, தாமோதரன், மகேந்திரன் போன்ற வலிமையான தலைவர்கள் அதிமுக-வில் இருக்கும்வரை அதிமுக விற்கு கொங்கு மண்டலத்தில் சிறு சேதாரத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாமே தவிர முற்றிலும் கட்சையை கரைத்துவிட முடியாது.

 பாஜக-வின் சோசியல் எஞ்சினியரிங் யுக்தி எல்லா தரப்பு மக்களையும் அரசியல் மையப்படுத்துகிறது. இதனால் கொங்குவேளாளர் அல்லாத சமூகங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கிறது என்பது உண்மை. ஆனால் பாஜகவில் கட்சி அமைப்பு தவிர விவசாய பிரிவு, மாணவர் பிரிவு, ஓபிசி பிரிவு, அறிவுசார் பிரிவு, கலாச்சார பிரிவு, கோவில் புணரமைப்பு பிரிவு என்று இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் கேள்விப்படாத வகையில்  20-க்கும் மேற்பட்ட பிரிவுகளில், 20-க்கும் மேற்பட்ட பொறுப்புகளை வழங்குவதால், ஒரு கிளையில் இருக்கும் அனைத்து உறுப்பினருக்கும் பதவி என்றாகியுள்ளது. இது பதவிகளை வாரி வழங்கி கட்சிக்கு ஆட்களை திரட்டும் முடிவாகத்தான் பார்க்க முடிகிறதே தவிர, மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் அதிகாரமிக்க பதவிகளில் யார் யார் அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள் என்று பார்த்தால் அங்கும் பெரும்பான்மை சாதியின் ஆதிக்கமே உள்ளது. மேலும் கட்சியை வளர்க்க நினைக்கும் பாஜக தலைமை, அந்தந்த மாநிலத்திலுள்ள பெரும்பான்மை சாதிகளைச் சார்ந்தவர்களுக்கே முக்கிய பதவிகளை வழங்கி வருவதையும் பார்க்கிறோம். மேலும் மத்தியில் 8-ஆண்டுகளாக பதவியில் இருக்கும் பாஜக, எவ்வளவோ அரசு நியமனங்களை செய்ய முடியும். அதில் சிறுபான்மை சமூகங்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளதா என்று பார்த்தால் இல்லை என்பதே நிதர்சனம். பாஜக-வில் நிலவும் இந்தப்போக்கு ஏறக்குறைய திமுக-வின் நிலைப்பாட்டிற்கு ஒப்பானதே.

உதாரணமாக 30 முதல் 40 லட்சம் கம்பளத்தார்களில் ஒருவருக்கு மட்டுமே விவசாய பிரிவில் மாநில செயலாளர் பதவியும், மாவட்ட தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே பாஜக வாய்ப்பற்ற இதுபோன்ற  சமூகங்களை “இந்து” வாக்குகளாக மட்டுமே கருதும் பட்சத்தில்,  அதிகாரமற்ற துணை அமைப்புகளில் பத்தோடு பதினொன்றாக பதவிகளை வழங்காமல், அனைவரும் “இந்து”க்களே என்பதை நிரூபிக்கும் வகையில் கட்சியில் முக்கிய பதவிகளும், அரசு நியமனங்களில் உரிய வாய்ப்பும் வழங்கிட வேண்டும்.

இதுதவிர, சுதந்திரப்போராட்ட தியாகிகளை பெருமைப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, எல்லா சாதிகளைச் சேர்ந்த தியாகிகளையும் கொண்டாடும் அரசியல் மூலம் அச்சமூகங்களை வளைக்க நினைக்கும் யுக்தி என்பது எந்த அளவில் அக்கட்சிக்கு பயன் தரும் என்று தெரியவில்லை. சாதிகளையோ அதன் தலைவர்களையோ பெருமிதப்படுத்துவதால் அச்சமூகங்கள் உணர்ச்சிவயப்படும் என்பது உண்மையே. ஆனால் உண்மையிலேயே சுதந்திரப்போராட்ட வீரர்கள் மீது அக்கறை இருந்தால் மத்திய அரசின் திட்டங்களுக்கோ, சிபிஎஸ்சி பாடங்களிலோ தியாகிகளின் வரலாற்றை இடம்பெறச் செய்திருக்க வேண்டும். ஆனால் அதிலெல்லாம் வடமாநில தலைவர்கள் குறிப்பாக பிராமணர்கள் அல்லது பெரும்பான்மை சாதி தலைவர்களின் வரலாறுகள் இடம்பெறுவதையும் கவனிக்காமல் இல்லை.

முன்பிருந்த அரசியல் அறியாமை இச்சமூகங்களிடம் தற்போது இல்லை. கல்வியறிவு, அரசியலறிவு பெற்ற சமூகங்களாக மாறிவருவதை டிஎன்டி போராட்டம், இடஒதுக்கீடு போராட்டம், சமூகநீதி மாநாடுகளில் தொட்டிய நாயக்கர், வேட்டுவக்கவுண்டர், ஊராளிக்கவுண்டர், போயர் சமூகங்கள் பெருமளவில் கலந்து கொண்டதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.

எனவே, உண்மை நிலையை உணர்ந்து இச்சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கட்சியிலும், நிர்வாகத்திலும் வழங்காமல், அதிமுக பலவீனப்பட்டுவிட்டதாக கருதி, கொங்கு மண்டலத்தில் “பிம்ப அரசியல்” மூலமாக வாய்ப்பற்ற சாதிகளின் வாக்குகளை ‘இந்து” மையப்படுத்தி அறுவடை செய்துவிடலாம் என்று பாஜக நினைத்தாலும், பிரமாண்ட மாநாடுகள் மூலம் பல்லாயிரக்கணக்கானோரை கட்சியில் இணைத்து கொங்கு மண்டலத்தில் கொடி நாட்டி விடலாம் என்று திமுக நினைத்தாலும் தோல்வியே பரிசாகக் கிடைக்கும் என்பது வரும் தேர்தல் உணர்த்தும். பிம்ப அரசியலை கட்டமைக்க முனையும் பத்திரிக்கையாளர்களும் இதை உணர்ந்து கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கிட வேண்டும் என்பது சாதிகளின் விருப்பம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved