🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்! காலம்-ஒரு வரலாற்றுச் சுருக்கம்!

1988 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்", உலகளவில் 9 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் அச்சிடப்பட்டு, அறிவியல் எழுத்திலும் உலகளவில் பாராட்டிலும் பிரபலத்திலும் ஒரு முக்கிய புத்தகமாகும். அறிவார்ந்த சமூகம் கண்டிப்பாக படித்து தெளிவுபெற வேண்டிய நூல்களில் ஒன்றாக பரிந்துரைக்கப்படும் இந்நூல், முதல்முறை படிக்கும்பொழுது சற்று கடினமாக இருக்கும். எழுத்தாளர் நளங்கிள்ளியின் அருமையான மொழிபொயர்ப்பில், புதிய புதிய அறிவியல் தமிழ் சொற்கள் மொழியை நவீனமாக்குகிறது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குப் பிறகு தமது அறிவியல் ஆராய்ச்சி மூலமாக உலக மக்களின் அறிவியல் நோக்கில் பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் வரிசையில் ஸ்டீஃபன் ஹாக்கிங் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறார். அறிவியலாளர் கார்ல் சகனின் முன்னுரையில் ஸ்டீஃபன் ஹாக்கிங்கைத் தாம் முதல் முறை பார்த்த விதத்தை சொல்லும் போது நமக்கு நெஞ்சு உருகிறது. ஹாக்கிங்கின் தன்னுரையில் தமக்கு கை, கால் செயல் இழந்தது மட்டுமன்றி பேச்சும் முடியாமல் போனதைப் படிக்கும் போது இந்த மனிதரின் விந்தைகளுக்கு ஒரு அளவே இல்லையா என்று தோன்றுகிறது. மனிதப் பிறப்பின் மகோன்னதத்தைப் பறைசாற்றும் காட்சி அதைப் படிக்கும் ஒவ்வொருவின் மனத்திரையிலும் உதிக்கும் என்று நான் உணர்கிறேன்.
இயற்பியல் கருத்துக்களை அவர் தமது புரிதலின் அடிப்படையில் விளக்கிச் சொல்லும்போது அங்கே மனித மூளையின் மகோன்னதம் தூக்கலாய்த் தெரிகிறது. அரிஸ்டாட்டில் முதற்கொண்டு ஐன்ஸ்டீன் வரை அண்டவெளியில் நமது பூமியின் இருப்பை, காலத்தோடு அது கை கோர்த்துக் கொண்டு செல்லும் நேர்த்தியை எவ்வாறு புரிந்து கொண்டிருந்தார்கள் என்பதைச் சொல்லி இனி முன்னோக்கியுள்ள காலத்தை தான் அர்த்தம் செய்து கொண்டிருக்கும் விதத்தைப் படிக்கும் போது விண்வெளியில் விரிந்த கண்களோடு ஆச்சர்யங்களைப் பார்த்தவாறு பறந்து செல்லுவதை போல ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது. ‘குவாண்டம் ஃபிசிக்ஸ்’ என்பது இருபதாம் நூற்றாண்டின் ஒரு இணையற்ற இயற்பியல் கோட்பாடு. அடிப்படைத் துகள்கள் எவ்வாறு பயணப்படுகின்றன என்பதை விளக்கும் இந்தக் கோட்பாட்டின் முக்கிய நாயகன் ‘குவாண்டம்’ என்ற சக்தித் துகள். இதனைத் தமிழில் ‘அக்குவம்’ என்றும், ‘அக்கு, அக்காக பிரித்தல்’ என்ற மூல அர்த்தத்தின் அடிப்படையில் செய்திருப்பதும் அருமையான சிந்தனை. இப்படியான முத்துக் குவியல்கள் இந்தப் புத்தகத்தில் ஏராளம். தமிழாக்கப் பட்ட ஆங்கில வார்த்தைகளையும் அங்கங்கே உடன் சேர்த்திருப்பதால் ஆங்கிலத்தில் மூலத்தைப் படித்தவர்கள் கூட தாய்த்தமிழில் படிக்கும் போது இதமாய்ப் புரிய உதவும். பல பக்கங்களில் எழுத்துக்கள் மூலம் சொல்ல முனையும் கருத்தை ஒரு அழகான அறிவார்ந்த படத்தின் மூலம் சுலபமாக சொல்லிவிடலாம்.
குறிப்பாக எட்வின் ஹபிள் பூமி உருண்டையின் மேல் நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பெரிய தொலை நோக்கியினுள்ளே நோக்க, அவர் தலைக்குப் பின்னே மேலே அண்ட வெளிகள் பல வண்ணங்களில் மிளிருவதைப் பார்க்கும் போது ‘ஆகா, அற்புதம் !’ என்று பாராட்டத் தோன்றுகிறது. அறிவியலைப் புரிந்து கொண்டு அதை பற்றிப் பேச கற்பனா சக்தி அவசியம். புத்தகமும், புத்தகத்தின் படங்களும் இதை நிரூபிக்கின்றன. தமிழில் படிக்கத் தெரிந்த மாணவர்களும் ஆசிரியர்களும் ஒரு சேரப் படித்துணர வேண்டிய நூல். அறிவியலில் ஆவல் வளரவும், தேடலின் தீவிரம் கூடவும் இந்த நூல் உதவும். ‘தமிழுக்குப் புகழ் சேர்ப்போம்’ எனப் பல இடங்களில் கூறக் கேட்டிருக்கிறோம்.
இந்தப் புத்தகம் இதற்குக் கொஞ்சம் மேலே போய் தமிழ் மனங்களை உலகளாவிய அறிவியல் நோக்கிற்கு அழகாக கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது. புத்தகத்தை மாணவர்-ஆசிரியர், சிறுவர்-பெரியவர், ஆண்-பெண் என்ற அனைத்து மட்டத் தமிழர்களும் படித்துப் பயன் பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved