🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும்-மெய்ஞானமும் ! பகுதி-1

விஞ்ஞானமும் மெய்ஞானமும் - முனைவர். திரு.கெ.. நாகராஜன், இயற்பியல் பேராசிரியர், பூ.ச.கோ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை.

அறிமுக பதிவு 

அன்பும், வீரமும் கொண்ட அனைத்து நமது சமுதாய சொந்தங்களுக்கும் எனது பணிவான வணக்கம்!

மக்களுக்கு செய்யும் சேவையே மகேசனுக்கு செய்யும் சேவை என பெரியோர்களும், தமிழ் சான்றோர்கள் கூறுவது போல், அதாவது கல்வி, அறிவு, ஒழுக்கம், அன்பு, கருணை மற்றும் ஞானம் என்னும் ஆறு தமிழ் படிகளில் முதல் படியாக உள்ள கல்வி மற்றும் இரண்டாவது படியாகிய அறிவு ஆகியவற்றின் சிறப்பையும் அதன் தேவையையும் அறிந்து ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது போல’ எமது சமுதாய மக்களும்  பெறவேண்டும்  என்ற நல்ல நோக்கத்திலும், நம்பிக்கையிலும்  இந்த  “விஞ்ஞானமும் மெய்ஞானமும்” என்ற தலைப்பில் நமது சமுதாய முகநூல் பத்திரிகையில் எழுத எனக்கு வாய்ப்பு கொடுத்த நல் உள்ளங்களுக்கு நன்றி கூறி, முழுமுதல் கடவுளாகிய விநாயகரையும், கலைகளுக்கு எல்லாம் தலைவியான அன்னை மகாசரஸ்வதியையும் வணங்கி எனது சேவையை தொடங்குகிறேன்.

கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை அறிவியல் அதாவது விஞ்ஞானம் ஒவ்வொரு பரிமாணத்திலும் வளர்ந்து கொண்டுதான் உள்ளது. அதனுடைய அசுர வளர்ச்சியை காணும் பாக்கியம் இருத்தோறாம் நூற்றாண்டில் வாழும் நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களிலும் அதன் வளர்ச்சி இன்னும் விவரிக்க முடியாத அளவுக்கு இருக்கும் என்பதிலும் ஐயமில்லை.

எனவே, இந்த பகுதியில் நாம் காண இருக்கும் அறிவியல் அறிவு என்பது அணு முதல் அண்டம் வரையிலானது. அறிவியலானது இயற்கையை பற்றி நாம் அறியாத பல அற்புத தகவல்களை மனித சமுதாய மேம்பாட்டிற்காக ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டின் மூலமாக நமக்கு விளக்கிக் கொண்டுள்ள ஒரு விஞ்ஞானம். இதைப்பற்றி வரும் வாரங்களில் நாம் அறிந்து கொள்வோம். உங்களுடன் உரையாட காத்திருக்கிறேன்! வாசியுங்கள் இந்த பகுதியை உங்கள் வாழ்க்கையை வளமாக்கிட! வாழ்க வளமோடு!

உங்கள் அன்புடன்,
முனைவர்.கெ. நாகராஜன்,
இயற்பியல்துறை பேராசிரியர்.


விஞ்ஞானமும் மெய்ஞானமும் – பகுதி  -1


விநாயகர் துதி

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடக்காது – பூக்கொண்டு  

துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் 

தப்பாமல் சார்வார் தமக்கு! – ஔவையார்


சரஸ்வதி துதி

ஓம் ஷிரி வித்யாரூபிணி சரஸ்வதி

சகலகலாவல்லி சாரபிம்காதரி

சாரதாதேவி சாஸ்திரவல்லி

வீணா புஸ்தக தாரணி வாணி கமல

பாணி, வாக்தேவி வரதாயகி

புஸ்தக ஹஸ்தே நமோஸ்துதே!

அன்பும், வீரமும் கொண்ட நமது சமுதாய அனைத்து சொந்தங்களுக்கும் எனது பணிவான வணக்கம்.

இந்த  விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் என்ற தலைப்பில் நமது சமுதாய சொந்தங்களை எழுச்சி பெற வைக்க வேண்டும், இழந்த அறிவியல் மற்றும் ஆன்மீக விழிப்புணர்வை மீட்டுத்தர வேண்டும், அவர்கள் யாவரும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி கொண்டு இழந்த செல்வங்களை கல்வி, ஞானம் கொண்டு மீட்டு எடுக்க வேண்டும், வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த சேவையை தொடங்குகிறேன்.

 எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு – திருவள்ளுவர் 

அதாவது எண் - கணிதம், எழுத்து – மொழி (தமிழ், ஆங்கிலம், தெலுங்கு , மலையாளம் அல்லது பேசு மொழி)   இந்த இரண்டையும் ஒருசேர பெற்றவர்களே உயிரோடு வாழ்வர், மற்றவரெல்லாம் கண் இல்லாதவர் என சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறியுள்ளார் அய்யன் திருவள்ளுவர். கண்கள் இல்லாமல் ஒருவர் வாழ முடியுமா! உலக இன்பங்களை அனுபவிக்க முடியுமா? முடியாது. ஆகவே ஒருவர் கணிதம், விஞ்ஞானம் (மொழி)   என்ற இரண்டையும் தனது இரண்டு கண்களாக எண்ணி கல்வி ஞானம் பெற வேண்டும். ஒரு நாணயத்திற்கு எப்படி இரண்டு பக்கங்கள் உள்ளதோ அதேபோல்தான் விஞ்ஞானமும், மெய்ஞானமும். மெய் என்றால் உடம்பு என்று ஒரு பொருள் உண்டு, எனவே மெய்ஞானம் என்பது நம்மைப்பற்றிய அறிவு. விஞ்ஞானம் என்பது வெளியில் அதாவது நமக்கு வெளியில் உள்ளனவையைப்  பற்றிய அறிவு. இதைத்தான் பிண்டத்தில் இல்லாததது அண்டத்தில் இல்லை என்பர். நம்மை நாமே அறிவது என்பது அவ்வளவு எளிதல்ல. நம்மை நாமே வெல்வது தான் மெய்ஞானம். விஞ்ஞானம் என்பது புறப்பொருட்களின் தன்மைகளை ஆராய்ந்து அதன் பயன்பாடுகளை அறிதல் மற்றும் அதனை மனிதகுல மேம்பாட்டிற்காக உபயோகப்படுத்துதல். தொடர்ந்து வாசியுங்கள் இன்னும் நிறைய அறிந்து கொள்ளலாம், வாழ்க வளமோடு!

அன்புடன்,
முனைவர். கெ. நாகராஜன்.
பூ.ச.கோ கலை அறிவியல் கல்லூரி,
கோயமுத்தூர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved