🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இது எங்கள் கோவை! கோவை என்பதே எங்கள் பெருமை!

கோவை மாநகராட்சிக்கு 156-ஆம் ஆண்டு நிறைவு!

கோவை 1799-ல் ஆங்கிலேயர் வசமானது, தலைநகரமாக பவானி, தாராபுரம் இருநகரங்களே ஆங்கிலேயர்களால் ஏற்கப்பட்டன.  ஒன்று பட்ட மாவட்டத்திற்குக் கோவை 24.11.1804 ஆம் நாள் தலைநகரமாக்கப்பட்டது. கோவையின் வளர்ச்சிச் சுவடுகள் இதிலிருந்தே தொடங்குகின்றன.


மாவட்ட அளவிலான வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியரும், வட்ட (தாலுக்கா) அளவில் வட்டாட்சியரும்  'பிர்கா' அளவில் வருவாய் அலுவலரும், கிராம அளவில் மணியகாரரும் மேற்கொண்டு வருவதே தொடக்க நாள் வழக்கம்.

பின்பு உருவானவை ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு, யூனியன் போர்டு, (முனிசிபாலிட்டி) முதலானவை!


கோவை, மதுரை இருநகராட்சி (முனிசிபாலிட்டி) களும் ஒரே ஆண்டில் உருவானவை.

கோவை நகராட்சித் தொடங்கப்பட்டது 1866 ஆம் ஆண்டில்! முதல் நகராட்சித் தலைவர் மக்ரிகர். அன்றைய கோவை மாவட்ட ஆட்சியரும் அவர்தாம்.

மாவட்ட ஆட்சியரே நகரசபைத் தலைவராக இருந்து வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளும் வழக்கம் தொடக்கத்தில் இருந்து. அவர் பெயரில் அமைந்த மக்ரிகர் வீதி இரத்தினசபாபதி (ஆர்.எஸ்) புரத்தில் இப்போதும் உள்ளது.

கோவை நகரை மக்கள் வாழத் தகுதியற்ற ஊர் என்று குறிப்பிடுவதையே ஆங்கிலேயர் முன் வழக்கமாக வைத்திருந்தனர். கோயம்புத்தூரின் காற்றும் நீரும் நோயை உருவாக்குபவை என ஆங்கிலேயர் அச்சத்தோடு எழுதியுள்ள ஆவணங்கள் உள்ளன.

மக்கள் வாழும் நகராக கோவையை மாற்றிக்காட்டியவர் சி.எஸ்.இரத்தினசபாபதி முதலியார். திராவிட இயக்கமான நீதிக்கட்சியைச் சேர்ந்தவர் இவர். காஞ்சிபுரம் இவரின் பூர்வீகம். 


பதினாறாண்டுகள் கோவை நகரசபைத் தலைவராகக் கோலோச்சியவர். சிறுவாணி குடிநீர் இவரின் பெருமுயற்சியால் 1929 இல் கோவைக்கு வந்தது. அதன்பின்பே கோவையின் வளர்ச்சி வாயில்கள் ஒவ்வொன்றாயத் திறக்கத் தொடங்கின.

இவரின் முயற்சிகளுக்கு வழிகாட்டியும் வலிமை சேர்த்தும் வெற்றிக்காண வைத்தவர் சர்.ஆர்.கே சண்முகம் செட்டியார். இவரும் நீதிக்கட்சி ஆதரவாளர்: பெரியாரின் நண்பராகவும், சுயமரியாதை இயக்கச் செயல்பாட்டாளராகவும் திகழ்ந்தகர்.

உலகம் வியக்கும் பொருளியல் மேதையாகத் திகழ்ந்த ஆர்.கே.சண்முகனார் விடுதலை பெற்ற இந்தியாவில் முதல் நிதியமைச்சராகப் பதவி வகித்தவர். இவர் கோவை நகராட்சித் துணைத்தலைவராகவும் பதவி வகித்தவர். கோவை நகருக்கான வளர்ச்சிப் பணிகளுக்குத் தொடர்ந்து வழிகாட்டி வந்த இவர் கோவையில் வாழ்ந்தவர். பூர்வீகம் இருகூர்.

இரத்தினசபாபதி முதலியார் காலத்தில் 26.04.1929 ஆம் நாள் கோவை நகரம் முதன் முதலாகச் சிறுவாணிக் குடிநீரைச் சுவைத்து மகிழ்ந்தது: கோவைக்கு மின்சாரம் 1933-இல் வந்தது! 

ஆங்கில மருத்துவர்களை உருவாக்கும் மருத்துவப்பள்ளி 1921-இல் இவர் பதவிக்காலத்தில் கோவை பெற்ற பயன்களில் ஒன்று. அன்றைய மருத்துவப்பள்ளிக் கட்டிடத்தில் இப்போது செயல்பட்டு வருவது கோவை அரசு கலைக்கல்லூரி. இரத்னாசபாபதி முதலியாரின் கொடையாலும் உழைப்பாலும் கோவை உயர்ந்த வரலாற்றை நன்றியுடன் நினைவு கூர்வதற்காகச் சூட்டப்பட்ட பெயரே இரத்தினசபாபதி (ஆர்.எஸ்) புரம்.

1866 இல் தொடங்கப்பட்ட நகராட்சிக்கு நூற்றாண்டு வந்தபோது ஐந்து நாள் பெருவிழாவாகக் கோவை கொண்டாடி மகிழ்ந்தது.கோவை நகராட்சி நூற்றாண்டு விழா 8.1.1967 முதல் 12.1.1867 வரை ஐந்து நாள் நிகழ்ந்தது. நிறைவு விழாவில் பங்கேற்றவர் தந்தை பெரியார்.

இப்போது 150 ஆம் ஆண்டு கடந்து சென்ற பின்பும் அசைவின்றி உள்ளது கோவை! மாநகராட்சி 150 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டுக் கடந்த காலச் சாதனைகளும் திராவிடர் இயக்கப் பங்கும் நினை வு படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

156 ஆம் ஆண்டும் வந்து விட்டது. இப்போதாவது கோவை மாநகராட்சி கோவை நகராட்சியின் 150 ஆம் ஆண்டு விழாவினை கொண்டாட வேண்டும்.

கோவை நகராட்சித் தலைவர்கள் வரிசை: 

1. மக்ரிகர் (1866 - 1873) 

2. பாஷ்யகார்லு (1873 - 1885)

3. ஏ.பெரியசாமி முதலியார் (1885 - 1888)

4. பொன்னுசாமி முதலியார் (1888 - 1895) 

5. ஐ.வெங்கடசாமி நாயுடு (1895 - 1896)

6. ஏச்.ராமராவ் (1897 - 1898)

7.  ஏ.பொன்னுரங்க முதலியார் (1898 - 1900)

8. ஏ.டி. திருவேங்கடசாமி முதலியார் (1900 - 1909)

9. டி.ஸ்.கோவிந்தசிங் (1909 - 1910)

10. கான்பகதூர் முகமது அப்துல் ஆபீஸ் (1910 -1913)

11. எம்.ஜி.ஆரோக்கியசாமி பிள்ளை (1913 - 1915)

12. எம்.சம்பந்தம் முதலியார் (1916 - 1919)

13. சி.வி.வெங்கட்ரமண அய்யங்கார் ( 190 - 1901) 

14. திவான்பகதூர் சி.எஸ்.இரத்தினசபாபதி முதலியார் (1921 - 1936)

கோவை வளர்ச்சி வரலாறு தொடர்ந்து நிகழ்ந்துள்ளதை அடுத்தடுத்து விரிவாகக்காணலாம். பழைய வறலாற்றை அறிந்தவர்களால் மட்டுமே, புதிய வரலாற்றைப் படைக்க முடியும்.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கோவை மாநகராட்சியின் தற்போதைய (2022) மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் ஆவார்கள்.

நன்றி:திராவிடன், புலவர்.செந்தலை ந.கவுதமன்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved