🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கட்டபொம்மன் கதைகேட்டு வளர்ந்த கப்பலோட்டிய தமிழனனுக்கு 151-வது பிறந்தநாள்!

கப்பலோட்டிய தமிழன் என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை (வ.உ.சி) 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள்,  தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகேயுள்ள,  ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் சைவ வெள்ளாளர் மரபில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.


1895ல் வள்ளியம்மையை மணமுடித்தார். ஆனால், அவர் 1901ல் நோய்வாய்ப்பட்டு இறந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், மீனாட்சி அம்மையாரைத் திருமணம் வ.உ.சி. திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு மகன்களும், நான்கு மகள்களும் இருந்தனர். அவருடைய மூத்த மகன், தனது இளமைப் பருவத்திலேயே இறந்து விட்டார்.அவரது வம்சாவளிகள் இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.


வ.உ.சி-ன் தந்தை உலகநாதன் பிள்ளை நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவர். தனது சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்திலும், அருகிலுள்ள திருநெல்வேலி பள்ளிகளிளும் சேர்ந்து கல்விப் பயின்றார். பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, ஒட்டப்பிடாரத்திலுள்ள மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர் சட்டப்பள்ளியில் சேர்ந்து, சட்ட ஆய்வுகளை நிறைவு செய்து அவரது தந்தை உலகநாதன் பிள்ளை போலவே ஒரு வழக்கறிஞரானார்.


சட்டத்தொழிலில், அவரின் மிகப் பெரிய உத்வேகமாக அவரது தந்தை இருந்தாலும், அவருக்கும், அவரது தந்தை உலகநாதன் பிள்ளை அவர்களுக்கும் வழக்கறிஞர் செயல்பாட்டில் ஒரு அடிப்படை வேறுபாடு இருந்தது. உலகநாதன் பிள்ளை சமுதாயத்தில் பணக்காரர்களின் பிரச்சினைகளில் மட்டும் வாதாடுபவர். ஆனால், வ.உ.சி அவர்கள், ஏழை மக்களின் மீது கொண்ட அனுதாபத்தின் காரணமாக, பல தருணங்களில் தனது செல்வாக்குமிக்க தந்தையின் விருப்பத்திற்கு எதிராகவும் வாதாடியிருக்கிறார். தமிழ்நாட்டில் ‘மூன்று துணை நீதிபதிகளின் ஊழல் குற்றச்சாட்டுகள் என்ற வழக்கில்’ சிறப்பாக வாதாடிக் குற்றவாளிகளை நிரூபித்ததால், அவர் பலராலும் ஈர்க்கப்பட்டு, மிகச் சிறந்த வழக்கறிஞர் என்ற புகழ் பெற்றார்.


1905-இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இணைந்து பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தார். இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைத்தூக்கிய அந்த நேரத்தில், தலைவர்களான லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர் போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தக பேரரசின் வற்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்தனர். அதே காரணத்திற்காகவும், இந்தியப் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் அவற்றை சார்ந்த சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரபிந்தோ கோஷ், சுப்ரமணிய சிவா மற்றும் சுப்ரமணிய பாரதி அவர்கள் சென்னை மாகாணத்திலிருந்து போராடினார்கள். இதுவே, வ.உ.சியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேரவும், சென்னை மாகாணத்தின் உறுப்பினர்களுடன் இணைந்துப் போராடவும் தூண்டியது. பின்னர், அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சேலம் மாவட்ட அமர்வில் தலைமை தாங்கினார்.


இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தவுடன்,  இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக அவர்  முழு மனதுடன் சுதேசிப் பணியில் மூழ்கினார். அவரது சுதேசி வேலையின் ஒரு பகுதியாக, இலங்கை கடலோரங்களிலுள்ள ஆங்கிலேய கப்பல் போக்குவரத்தின் ஏகபோகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார். சுதந்திர போராட்ட வீரர் ராமக்ருஷ்ணானந்தாவால் ஈர்க்கப்பட்ட அவர், நவம்பர் 12, 1906ல், ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை’ நிறுவினார். தனது கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்க, இரண்டு நீராவி கப்பல்களான “எஸ்.எஸ்.காலியோவையும், எஸ்.எஸ். லாவோவையும்”, மற்ற சுதேசி உறுப்பினர்களான அரபிந்தோ கோஷ் மற்றும் பால கங்காதர திலகர் உதவியுடன் வாங்கினார். அவரது துணிச்சலான தன்மையே அவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழ்நாட்டில் பெயரெடுக்க வைத்தது. இதனையே ஆங்கிலத்தில், ‘தமிழ் ஹெல்ம்ஸ்மேன்’ என்று கூறுகின்றனர்.


வ.உ.சி கப்பல் வாங்க சென்றபோது அவருடைய மகன் உலகநாதன் இறந்ததாக தந்தியினை அவர் வரப்பெறுகிறார். அதற்கு அவர் கொடுத்த பதில் என்னவென்றால், ‘ஆண்டவன் சித்தம்’. அவ்வளவு தான் அவர் கொடுத்த பதில் தந்தி.


ஆங்கிலேய அரசாங்கம் மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் கோபத்தைத் தாண்டியும், வ.உ.சியின் கப்பல்கள் தூத்துக்குடி-கொழும்பு இடையே வழக்கமான சேவைகளைத் தொடங்கியது. அவரது கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒரு வர்த்தக மையமாக மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு இந்தியர் அமைக்கப்பட்ட முதல் விரிவான கப்பல் போக்குவரத்து சேவையாகவும் இருந்தது. ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’, பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு கடும் போட்டியாக இருந்தது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, வ.உ.சியும் தனது கப்பல் கட்டணத்தை மேலும் குறைத்தார்.


கடைசியில், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. மேலும், பயணிகளுக்கு  இலவச சவாரி மற்றும் குடைகள் வழங்கும் உத்திகளைக் கையாண்டனர், ஆங்கிலேயர்கள். ஆனால், வ.உ.சியால் அவ்வாறு முடியவில்லை. இதனால், சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி திவாலாகும் விளிம்பிற்கே சென்றது.


நாட்டில் சுதேசி இயக்கத்தை விரிவாக்கவும், தவறான ஆங்கிலேய அரசாங்கத்தைப் பற்றி இந்திய மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்துடன் இருந்தார். இந்தியாவில் நடைபெற்ற முதல் தொழிற்சங்க போராட்டமானாலும், அரசியல் ரீதியாக நடந்த முதல் வேலை நிறுத்தப் போராட்டமானாலும், அதில் குறிப்பிடத்தக்க முதல் போராட்டமாக இருந்தது 1908 -இல் நடைபெற்ற திருநெல்வேலியிலுள்ள கோரல் மில்  போராட்டம் தான். தொழிலாளர்களுக்கு 50 விழுக்காடு ஊதிய உயர்வு கேட்டு போராடிய வ.உ.சி., 50 விழுக்காடு உயர்வை பெற்றுக்கொடுத்ததோடு, வார விடுமுறை இல்லாமலிருந்தவர்களுக்கு வார விடுமுறையையும் பெற்றுக்கொடுத்தார்.


ஆங்கிலேய அதிகாரிகள் ஏற்கனவே அவர் மீது கொண்ட வெறுப்பினால், இச்செயலை அரசாங்கத்திற்கு எதிரான துரோகம் என்று குற்றம் சாட்டி, மார்ச் 12, 1908 அன்று அவரைக் கைது செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர். மக்கள் எழுச்சி காரணமாக, வ.உ.சி யை தூத்துக்குடியில் கைது செய்ய முடியாமல், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தை என வரவழைத்து இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை என நடத்திய பின்னர்தான் கைது செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மத்திய சிறையில் ஜூலை 9, 1908 முதல் டிசம்பர் 1, 1910 அடைக்கப்பட்டார். வ.உ.சி கைதுக்குப்பின்னர், நாட்டில் வன்முறை வெடித்தது. இதனால், காவல் அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டு, நான்கு பேர் மரணம் அடைந்தனர். அவரின் புரட்சிகரமான மனப்பான்மையைப் பார்த்து அஞ்சிய ஆங்கிலேயர்கள், தெளிவாக அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தனர்.


இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்ட முதல் வேலை நிறுத்தம் வ.உ.சி. கைதுத்துக்கு எதிரான வேலை நிறுத்தம் தான். அதற்கு முன்னர் ஊதிய உயர்வு ஆகிய உரிமைகளுக்காக நடைபெற்ற போராட்டம். இரண்டாவதாக நடைபெற்றது இவருக்காக நடந்த போராட்டம். 6, 7 நாட்கள் அந்த போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் முடி திருத்துபவர்கள் மட்டுமல்ல, சலவைத் தொழிலாளர்கள் தங்களிடம் கொடுத்த துணிகளை துவைக்கவும் இல்லை. திருப்பிக் கொடுக்கவும் இல்லை. போராட்டம் முடியும் வரை. ஆங்கிலேயர்கள், தூத்துக்குடியில் இருப்பது தங்களுக்கு ஆபத்தாக இருக்கலாம் என்பதால் இரவில் கப்பல்களுக்கு சென்று படுத்துக் கொண்டார்கள். அப்படிப்பட்ட எழுச்சியை உருவாக்கியவராக திகழ்ந்தார்.


சிறையில் இருந்த அந்நாட்களில், மற்ற அரசியல் கைதிகளுக்குக் கிடைத்த சலுகைகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், அவர் மற்ற குற்றவாளிகள் போல சிறையில் கடின உழைப்பில்  ஈடுபட்டார். அவரது இந்த கடின உழைப்பு, அவரின் உடல்நிலையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, அவரது உடல்நலம் படிப்படியாக சரிந்தது. இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் அவரை விடுதலை செய்யும் கட்டாயத்தில் தள்ளப்பட்டதால், டிசம்பர் 12, 1912 அன்று அவரை விடுதலை செய்தனர்.


சிறையில் இருக்கும் போதும் வ.உ.சி, சட்ட மனுக்கள் மூலம் சுதேசி நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். சிறையில் கொடுமையான சூழ்நிலை நிலவியதால், அவர் விடுதலை செய்யப்பட்டார். அவரின் விடுதலைக்குப் பின், சிறை வாயிலின் முன்பு பெருமளவு தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை எதிர்பார்த்த அவருக்கு அச்சம் விளைவிக்கிற அளவுக்கு அமைதி காத்திருந்தது. இது, அவருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. ‘பாரிஸ்டர் பட்டம்’ அவரிடமிருந்து பறிக்கப்பட்டதால், அவரால் சட்டப் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனமும் 1911ல் ஒழிக்கப்பட்டதால்,  அவர் ஏழ்மை நிலையை அடைந்தார்.


சிறையிலிருந்து வெளிவந்த வ.உசி. சென்னையில் குடியேறுகிறார். வறுமை சூழ்ந்த நிலையில் மளிகை கடை வைத்தார், மண்ணெண்ணெய் வியாபாரம் செய்தார். அந்தநிலையில் காலத்திலும் அவர் தொழிலாளர் போராட்டத்தை கைவிட்டதாக இல்லை. டிராம்வே தொழிலாளர் போராட்டத்திலும், 1920 இல் நாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரயில்வே போராட்டத்திலும் பங்கேற்றார்.


திலகரைத் தீவிரமாக பின்பற்றியவ வ.உ.சி, திலகரின் நிலைப்பாடுகளை கண்ணைமூடிக்கொண்டு ஆதரிக்கவும் இல்லை. திலகர் ஆதரவு காட்டும் அன்னிபெசண்டை, தமிழ்நாட்டில் ஸ்மார்த்த பார்ப்பனர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்பதால் எதிர்த்தார். அதேபோல் திலகர் கீதைக்கு உரை எழுதினார். வ.உ.சியோ கீதையை மறுத்து திருக்குறளுக்கு உரை எழுதினார். தன்னுடைய தனித்துவத்தை பாதுகாத்தவராகவே எப்போதும் அவர் இருந்திருக்கிறார்.


1925-வரை காங்கிரசில் இருந்தவர், “பொதுக் கோயில்களில் அனைவருக்கும் சம உரிமை வேண்டும். லஞ்சம் வாங்காத நீதிபதியிடம் தரகர்கள் வேண்டாம்”. என பார்ப்பனர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய வ.உ.சி. முரண்பாடுகள் முற்றிப்போனதால், நவம்பரில் பெரியாருடன் இவரும் காங்கிரசை விட்டு வெளியே வருகிறார்.


காங்கிரசில் இருந்து வெளியேறியதுபற்றி, ஒரு நிகழ்வில் வ.உ.சி. பேசுகிறார். நாகப்பட்டினத்தில் 1928இல் தேசபக்த சமாஜ்யம் ஏழாம் ஆண்டு விழாவில் வ.உசி, பெரியார் படத்தை திறந்து வைத்து பேசுகையில், “எனக்கு நாயக்கரை 20 வருடங்களாகத் தெரியம். நானும் அவரும் ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்து வந்தோம். அந்த இயக்கத்தில் சில அயோக்கியர்கள் வந்து புகுந்த பிற்பாடு நானும் அவரும் விலகி விட்டோம்.


பிறகு நாயக்கர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து, அந்த இயக்கம் மற்ற எல்லா இயக்கத்தினிலும் நல்ல இயக்கம் என்பதால் அந்த இயக்கத்திற்கு நானும் என்னாலான உதவிகளை செய்து வருகிறேன்” என்று இரண்டு மணி நேரம் சுயமரியாதை இயக்கத்தின் தேவைகளை பற்றி பேசியிருக்கிறார்.


1927 இல் திராவிடர் கழகம் என்று ஒரு அமைப்பு விருதுநகரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெரியார் 1944 இல் தான் திராவிடர் கழகம் என நீதிக் கட்சியின் பெயரை மாற்றினார். ஆனால், 1927இலேயே விருதை சிவஞான யோகி என்ற ஒருவர், 1927இல் கோவில் பட்டியில் அவர் நடத்திவந்த திராவிடர் கழகத்தின் 18ஆவது ஆண்டுவிழா மாநாட்டை நடத்தியுள்ளார்.


அந்த மாநாட்டிற்கு பெரியார், வ.உ.சி.,  இராவணப் பெரியார்  என்ற நூலை ஆங்கிலத்தில் படைத்தளித்த ஆங்கிலப் பேராசிரியர் எம்.எஸ். பூரணலிங்கப் பிள்ளை ஆகியோரெல்லாம் அந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். வ.உ.சி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார்.


சுயமரியாதை இயக்கம் போன்றவற்றைப் பற்றி வ.உ.சி அந்த மாநாட்டில் பேசுகிறார். பெரியாரும் கூட ஆரியர், திராவிடர் பற்றிப் பேசுகிறார். எப்போது ஆரியர்கள் சங்கம் ஆரம்பித்தார்களோ அப்போதே திராவிடர் சங்கமும் தேவையாகிவிட்டது என்பதையெல்லாம் கூறிப் பெரியார் பேசுகிறார். அவ்வுரையின் தொடக்கத்தில், “எனது நண்பரும், அரசியல் தலைவருமான திருவாளர் வி.ஓ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் சொல்லியவைகள் யாவும் என்னிடமுள்ள அன்பினால் அல்லாது அவ்வளவும் உண்மையென்று தாங்கள் நம்பிவிடக் கூடாது.


என்னை அவர் தலைவர் என்று சொன்னதற்காக நான் மிகுதியும் வெட்கப் படுகிறேன். அவர் வங்காளப் பிரிவினையின் போது தமிழ்நாட்டில், சிறப்பாக இந்த ஜில்லாவில் அரும்பெரும் தலைவராய் இருந்து நடத்திய பெரும் கிளர்ச்சியின்போது நான் உல்லாசத்துடன் விடலைப் புருஷனாய் விளையாடிக் கொண்டிருந்தேன். அவரையும், அவர் போன்றோரையும் கண்டே பொதுத் தொண்டில் இறங்கினேன்” என்றும் பெரியார் கூறியுள்ளார். எனவே, வ.உ.சி தொடர்ந்து சுயமரியாதை இயக்கத்திற்கு ஆதரவாகவே இருந்து வந்திருக்கிறார்.


பெரியாரும் அவர்மீது கொண்டிருந்த அளவு கடந்த நம்பிக்கையின் காரணமாகவே, வ.உ.சி சுதேசிக் கப்பல் முயற்சியில் இறங்கியபோது, தமது குடும்பத்தின் சார்பாக ரூ.5,000 உம், ஈரோடுவாழ் இஸ்லாமியர்கள் சார்பாக ரூ.5,000 உம், மேலும் தனது தொடர்புகள் வழியாக  மேலும் ரூ.20,000 உம் திரட்டி மொத்தம் ரூ.35,000த்தை பங்குத் தொகையாக அளித்துள்ளார் என்பதை மற்றொரு உரையில் பெரியார் குறிப்பிட்டுள்ளார்.

கப்பல் விடுமளவுக்கு வளமாக இருந்த வ.உ.சி. காலப் போக்கில் தனது மகனுக்கு போலீஸில் ஏதாவது வேலை வாங்கித் தருமாறு பெரியாருக்குக் கடிதம் எழுதினார். பெரியாரும் தனது அரசியல் குரு என்று குறிப்பிட்டிருப்பது வ.உ.சி.யைத்தான்.


1936, நவம்பர் 18ஆம் தேதி அன்று தனது 64 வது வயதில் தூத்துக்குடியில் காலமானார் வ.உ.சி. அவர் இறந்த பின் பெரியார்  ‘சிதம்பரம் சிதைவு’ என்ற தலைப்பில் எழுதிய இரங்கல் செய்தி:


“தோழர் வி.ஓ சிதம்பரம் பிள்ளை அவர்கள் முடிவெய்தி விட்டார். தனக்கு இயங்கும் சக்தி இருந்து ஓடி உலாவித் திரியும் காலமெல்லாம் தனக்கு சரியென்று தோன்றிய வழிகளில் உழைத்துவிட்டு ஒடுக்கம் ஏற்பட்டவுடன் அடக்கமாகிவிட்டார். இது மக்கள் வாழ்க்கையின் நியாயமான நிலையேயாகும்.


மிக்க மந்தமான காலத்தில் அதாவது மனிதன் பொதுநலம் என்றால் மத சம்பந்தமான காரியம் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், அரசியல் என்றால் அது தெய்வீக சம்பந்தமானது என்றும் எப்படி எனில் கூனோ, குருடோ, அயோக்கியனோ, கொள்ளைக் காரனோ ஒருவன் புருஷனாய் அமைந்து விட்டால் பெய்யெனப் பெய்யும் மழை என்பதற்கு இலக்காகவும் பின் தூங்கி முன்னெழுபவள்போலவும் இருப்பது தான் பெண்ணின் கற்புக்கு குறியென்றும் அக்கூட்டு தெய்வீக சம்மந்தமாய் ஏற்பட்டதென்றும் சொல்வது போல் அரசன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், ஆட்சி எப்படிப்பட்டதாய் இருந்தாலும், அரசனை விஷ்ணுவாய் கருதி ஆட்சியை வேதக் கோட்பாடாக வும் கருதி வாழ வேண்டும் என்று இந்த பார்ப்பனீய ஆதிக்க காலத்தில் மற்றும் தண்டனை, சிறை என்பவைகள் மகா அவமானமாகவும், மகா இழிவாகவும், மகா கொடுமையாகவும், துன்பமாகவும் இருந்த காலத்தில், தென்னாட்டில் முதல் முதல் வெளிவந்து அரசினை எதிர்த்து, அரசியலை இகழ்ந்து, துச்சமாய் கருதி தண்டனையை அடைந்து, சிறைக் கொடுமையை இன்பமாய் ஏற்று, கலங்காமல் மனம் மாறாமல் வெளிவந்த வீரர்களின் முதன்மை வரியில் முதன்மை லக்கத்தில் இருந்தவராவார் நமது சிதம்பரம்.


அதன் பலன் எப்படியோ, ஆனாலும் அவராலேயே அநேக பார்ப்பனரல்லாத மக்கள் உண்மை வீரர்களாகவும் சுய நலமற்றவர்களாகவும் வெளிவர முடிந்தது. தோழர் சிதம்பரம் ஒரு பார்ப்பனராய் இருந்திருப் பாரேயானால் லோக மானியர், முனீந்திரர், சிதம்பரம் கட்டம், சிதம்பரம் உருவச் சிலை, சிதம்பரநாதர் கோயில், சிதம்பரம் பண்டு, காங்கிரஸ் மண்டபங்களில் காங்கிரஸ் பக்தர்கள் வீடுகளில் சிதம்பரம் கழுத்து சிலை, சிதம்பரம் உருவப்படம் இருக்கும்படியான நிலையை அடைந்திருப்பார்.


ஆனால் அவர் பிள்ளை. அதுவும் சைவப் பிள்ளை, ஆனதால் அவர் வாழ்வு அவருக்கே அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்காமல் இருந்தது என்பதோடு அவருக்காக ஏற்படுத்தப்பட்ட பண்டுகூட வெளியிட யோக்கியதை இல்லாததாய் இருந்து வருகிறது. சிதம்பரம் பிள்ளையின் அனுபவத்தை மற்ற தேசாபிமான பார்ப்பனரல்லா தாரும் அறியட்டும் என்பதற்காகவே இதைக் குறிப்பிட்டோம்.


அரசியல் உலகம் அவர் இறங்கின காலத்தில் ஒரு விதமாகவும் இப்போது ஒரு விதமாகவும் இருக்கிற படியால் ஓர் அளவுக்கு பார்ப்பனரல்லாத தேச பக்தர்களைப் பற்றி ஆறுதல் அடைகிறோம். எப்படியெனில் பார்ப்பனரல்லாத தேச பக்தர்களை பார்ப்பனர் ஓர் அளவுக்காவது வேஷத்துக்காகவாவது அணைத்துத் தீரவேண்டிய நிலையில் வேறு பல இயக்கங்கள் நிர்பந்தித்துக் கொண்டிருப்பதால் அதிகம் பயப்பட வேண்டிய தில்லை. ஆகையால் சிதம்பரம் பிள்ளையை ஓர் உதாரணமாகக் கொண்டு மற்ற தேசபக்தர்கள் அதற்கேற்றபடி நடந்து கொள்வார்களாக. (22.11.1936 ‘குடிஅரசு’)


காந்தியிடம் வேதியம்பிள்ளை என்பவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வ.உ.சி. அவர்களுக்கு ரூ. 5000 பணம் கொடுத்து அனுப்புகிறார். ரூ.5000 என்பது அந்தக் காலத்தில் பெரிய தொகை. காந்தி அந்த நிதியை கொடுக்காமல் விட்டுவிடுகிறார். வ.உ.சி. கடிதம் எழுதிக் கேட்டும் கணக்குப் பார்க்கவேண்டும் என்று சொல்லி, சொல்லி காலம் கடத்துகிறார். எட்டு வருடம் கழித்து ஆமாம் கொடுத்தனுப்பினார் என்று எழுதுகிறார்.


வட்டியும் முதலுமாக வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார். வ.உ.சி.யோ வட்டி வேண்டாம் கொடுத்து அனுப்பியதை மட்டும் கொடுங்கள் என்று வாங்கிக் கொள்கிறார். ரூ.5000 மறக்கக் கூடிய தொகை அல்ல. வ.உ.சி.யும் அறியப்படாத மனிதருமில்லை. அதைத் தொடர்ந்து மற்றொரு கட்டுரையும் பெரியார் எழுதுகிறார், ஹிந்து, மெயில், மித்திரன், ஜெயபாரதி, தினமணி இடம் கொள்ளுமா? பிறப்புக்கும் பேருக்கும் அடிமையான பித்தலாட்ட தேசம் இதுதானே?


ஏ -பி வகுப்பு சிறையில்லாத முப்பதாண்டுகட்கு முன்பு சிறை புகுந்து, வக்கீல் தொழிலிழந்து, தியாகம் பல புரிந்து, கஷ்டநஷ்டங்கள் அடைந்து, கடைசி வரையில் ஏழையாகவே வாழ்ந்து, சென்ற 18ஆம் தேதியன்று, 65ஆவது வயதில் உயிர் துறந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை பிரம்மா தலையிலிருந்து வெடித்தெழுந்த வ.உ.சிதம்பர அய்யராயிருந்தால், ஹிந்து, சுதேசமித்திரன், ஜெயபாரதி, தினமணி முதலிய பழுப்பு வெள்ளை பத்திரிகைகளிலும், மெயில் போன்ற வெளுப்பு பார்ப்பன பத்திரிகை களிலும் வேறு விஷயங்களுக்கு இடமிருக்குமா? இது வரையில் இந்நாட்டில் இறந்த வடநாட்டு படேல் களாயிருந்தாலும் சரி தென்னாட்டுப் படேல்களா யிருந்தாலும் சரி - சிதம்பரம் பிள்ளை தியாகத்துக்கு ஒப்பாகுமா?


ஜெயிலிருக்கும் திக்கே தெரியாத கஸ்தூரி ரங்கய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார் முதலியோரின் சேவையும் தியாகமும் பிள்ளை அவர்களின் தியாகம் முன்பு உறை போடவும் கூடுமா? ரவுலட் சட்டத்தில் கையொப்பமிட்ட சர். சி.வி.குமாரசாமி சாஸ்திரிக்கும், பார்ப்பனரல்லாதாரிடமே பத்து லட்சக் கணக்கில் கொள்ளையடித்து, எல்லா சொத்தையும் பார்ப்பனருக்கே உதவ வேண்டுமென்று உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து போன டாக்டர் ரங்காச்சாரிக்கும் கொடுத்த இடத்தில் 100இல் ஒரு பங்குகூட, தேசபக்த சிங்கம் சிதம்பர தங்கத்துக்கு, ஹிந்து முதலிய தேசிய பத்திரிகைகள் கொடுக்க வில்லையென்றால் இந்த வகுப்புவாதமே உருவெடுத்த சண்டாள பத்திரிகைகள் தேசியம் பேசி, பாமர மக்கள் தலையில் எத்தனை காலம் மிளகாய் அரைக்க உத்தேசித்திருக்கின்றனவோ தெரியவில்லையே?


போதாக்குறைக்கு சிதம்பரம் பிள்ளை காங்கிரஸ் என்று சொல்லியே உயிர் துறந்தாராம்! சி. ராஜ கோபாலாச்சாரி போன்ற பார்ப்பனத் தலைவர்களின் சூழ்ச்சியை கண்டித்தும், காங்கிரசை விட தேசமே பெரிதென்று கர்ஜித்த சிங்கமா, அக்ரஹாரப் புலிகள் அதிகாரம் செலுத்தும் காங்கிரசைப் பற்றி மகா கவலை கொண்டு இறந்திருப்பார்? ஒரு வேளை காங்கிரசின் பேரால் பாமர மக்கள் தலை மேல் கல் விழப் போகிறதே என்று வேண்டுமானால் கவலைப் பட்டிருக்கலாம்.


தாலி அறுப்பு, ஜவஹர் கூட்டத்தில் யானையை விட்டது, ருக்மணி லட்சுமிபதியை சுந்தரராவ் குத்தப் போனது – போன்ற தேர்தல் அபாண்டங்களோடுதான், சிதம்பரம் காங்கிரஸ் காங்கிரஸ் என்று உயிர்விட்டார் என்ற அபாண்டத்தையும் சேர்க்க வேண்டும். சிதம்பரம் பிள்ளை விஷயத்தில் மவுனம் சாதிக்கும் ஜாதிப் பித்து பிடித்த பார்ப்பன பத்திரிகைகளின் போக்கைக் கண்ட பின்னாவது, பார்ப்பனரல்லாதாருக்கு ஆத்திரம் பொங்குமா? (29.11.1936, குடிஅரசு)


பாஞ்சைக்கு ஒருமைல் தொலைவிலுள்ள ஒட்டப்பிடாரத்தில் பிறந்த வ.உ.சி., வீரம் பெருமாள் அண்ணாவி என்ற பரம்பரை ஆசிரியர் நடத்திய திண்ணைப்பள்ளியில் மரபு வழிக்கல்வி பயிலும்போது, வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோரின் வீரம் செரிந்த நாட்டுப்புற பாடல்களையும், கதைகளையும் கேட்டு வளர்ந்தவர். இப்பாடல்களை பாடக்கூடாதென வெள்ளையர் தடைவிதித்தபோதும் மக்கள் மனதில் நிலைத்த வாழ்வினை பெற்றன. இது வ.உ.சி வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. தனது ஊரைச் சுயசரிதையில் குறிப்பிடும்போது கட்டபொம்மனின் ஊர் பாஞ்சையின் பக்கத்திலுள்ளது என்று குறிப்பிடுகிறார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved