🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஆசிரியர் தினத்தில் வணங்குவோம் நல்லாசிரியர்களை!

சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 1962 முதல், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வி தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களின் தியாகத்தை கவுரவிக்கும் வகையில், கடந்த 1994ம் ஆண்டு உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 5ம் தேதி அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) அறிவித்தது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், சீனாவில் செப்டம்பர் 10, மலேசியாவில் மே 16, ஸ்பெயினில் நவம்பர் 27ம் தேதி மற்றும் ஈராக்கில் மார்ச் 1ம் தேதி என வெவ்வேறு தேதிகளில் ஆசியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர் தினமான இன்று இந்தியாவின் முதல் பெண் ஆசிரியையான சாவித்ரிபாய் புலே, கல்விக்காக செய்த தியாகங்களையும், பட்ட அவமானங்களையும் நினைவுகொள்வோம்.

1831, ஜனவரி மாதம் 3ம் நாள், மகாராஷ்ட்டிர மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில், நைகோன் என்ற கிராமத்தில் வசதியான விவசாயக்  குடும்பத்தில் பிறந்தவர் சாவித்ரிபாய் புலே. இவரது தந்தை கான்டோஜி நைவஸ் பட்டேல், கிராமத் தலைவராக இருந்தவர். இவரின்  திருமணம் ஒரு பால்யவிவாகம். தனது 9 வயதில் 13 வயது நிரம்பிய மகாத்மா ஜோதிராவ் புலேவின் துணைவியானார். ஜோதிராவ் புலே மகாராஷ்டிராவின் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர். எனவே தனது மனைவி சாவித்திரிபாயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தன்னுடன் இணைத்து கொண்டார் ஜோதிராவ். ஜோதிராவ்  புலேதான் சாவித்ரிக்கு ஆசிரியர். அடிப்படைக் கல்வியை தன் கணவரிடமே கற்றார். பின்னர் அகமதுநகரிலுள்ள ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தார். அதனை தொடர்ந்து புனேவில் மற்றொரு ஆசிரியரின் பயிற்சி வகுப்பிலும் பங்கேற்று படித்தார். 

ஆசிரியர் பயிற்சியை முடித்த சாவித்ரி,  வரலாற்றிலேயே முதன் முறையாக பெண் குழந்தைகளுக்கான முதல் பள்ளியை புனேவில் எள்ள பீடே வாடு என்ற இடத்தில் 1847ல் 9  பெண் குழந்தைகளுடன் புலே தம்பதிகள் தொடங்கினர். அதில் ஆசிரியராய், சாவித்ரிபாய் புலே பொறுப்பேற்று, இந்தியாவின் முதல் பெண்  ஆசிரியராக விளங்கினார். 1849ல் மீண்டும் ஒரு பள்ளியை புலே தம்பதிகள் துவங்கினார்கள். அதுவே முதியோர், பிற்படுத்தப்பட்டோர்,  தலித்துகள் மற்றும் அனைத்து சாதியினருக்குமாக இந்தியா விலேயே உருவாக்கப்பட்ட முதல் பள்ளி. இதில் 150 பெண்களும், 100  ஆண்களும் படித்தனர். இந்தப் பள்ளிகள் அரசு பள்ளியைவிட சிறப்பாகச் செயல்பட்டன. கல்வி பயிலும் மாணவர்களுக்கு படிப்புடன்,  தொழில் பயிற்சியையும் அளித்தனர். 1852, நவம்பர் 14ல், பிரிட்டிஷ் அரசு தம்பதிகள் இருவருக்கும் சிறந்த ஆசிரியர்கள் என்ற  பாராட்டையும் பரிசையும் வழங்கியது.

சாவித்திரி பாய் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, விதவைகளுக்கு கல்வி போதித்ததால், இந்து சனாதனவாதிகளின் கோபத்திற்கு ஆளானார். சாவித்திரி பாய் பள்ளி செல்லும்போது, இந்த ரவுடிக் கும்பல் அவர்மேல், கற்கள், சாணம், மனித ,மலம் எல்லாவற்றையும் வீசி எறிந்தனர். ஆனால், இவர் வீட்டுக்கு வந்து கணவர் ஜோதிராவ் புலேவிடம் சொன்னதிற்கு, அவர் " கல்வி ஒன்றுதான் மனிதர்களின் வாழ்க்கை புரட்டிப்போடும்  வல்லமை படைத்தது. கல்வி மட்டுமே சமூக மாற்றத்தை செய்ய முடியும். ஆனால், இந்த சமூகத்தில், நாம் இருவரும் இவர்களை எதிர்க்க முடியாது. எனவே நீ பள்ளி செல்லும்போது பையில் வேறொரு  புடவை எடுத்து சென்று, அங்கு குளித்து உடை மாற்றிக் கொள்  என்கிறார். இதுதான் பெண்கல்வியை முனைப்பாக கொண்டு சென்ற முதல் பெண் ஆசிரியருக்கு கிடைத்த பரிசு என்றே நாம் கொள்ள வேண்டும். தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட மக்கள் பொதுகிணற்றில் தண்ணீர் எடுப்பதை ஆதிக்க சாதிகள் தடுத்தபொழுது தனது சொந்த வீட்டில் ஒரு கிணற்றை நிறுவினார். .

சாவித்திரி பாய் புலே, ஜோதிராவ் புலே இருவரும் மகாராஷ்டிரத்தில் 9 இடங்களில் அனைத்து சாதியினருக்கும்,  விதவைகளுக்கு, தவறான உறவின் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் என எல்லோருக்கும் கல்வி கொடுக்க  பள்ளியை   துவங்கினர். இதில் 150 பெண்களும், 100 ஆண்களும் படித்தனர். இந்த பள்ளிகள் அரசு பள்ளிகளைவிட சிறப்பாக இருந்தன. இதனால்,1852 நவம்பர் 14ல், பிரிட்டிஷ் அரசால் சிறந்த ஆசிரியர் என்ற பாராட்டும்பரிசும்  பெற்றார்.

சமூக சீர்திருத்தவாதியான ஜோதிராவும், சாவித்ரியும் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டனர். பல நலப்பணிகளில் ஈடுபட்டனர்.  1800களில் வட இந்தியாவில் கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டை அடிப்பது, பிறகு முடி வளர்ந்தாலும் தொடர்ந்து மொட்டையடிப்பது  மேட்டிக்குடியினரிடம் வழக்கத்தில் இருந்த ஒரு மூடப்பழக்கம். இதை எதிர்த்து சாவித்ரி போராடினார். மொட்டையடிக்கும் தொழிலில்  இருந்தவர்களுடன் பேசி, இந்த மூடப்பழக்கத்துக்கு துணைபோகாமல் இருக்கும்படி கைவிடச் செய்தார். கணவனை இழந்த இளம்பெண்களை  மேட்டுக்குடி ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்வது அந்தக் காலத்தில் சமூக அங்கீகாரம் பெற்ற கொடூரங்களில் ஒன்று. சமூகத்தால்  ஒதுக்கப்பட்ட கைம்பெண்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக ஆண்களின் பாலியல் சுரண்டலுக்கு ஆளானதும் நடந்தது. இப்படி பாலியல்  சுரண்டல்களால் சில பெண்கள் கருவுற்று, அது வெளியே தெரியவந்தால் என்னவாகும் என பயந்து தற்கொலை செய்வதும் அதிகமாக  இருந்தது.

இப்படி பாதிக்கப்பட்ட ஒரு பிராமணப் பெண்ணை தற்கொலையிலிருந்து மீட்டு அவருடைய குழந்தையை தத்தெடுத்துக் கொண்டனர் புலே  தம்பதியினர். இப்படி பிறக்கும் சிசுக்களுக்கென்றே தனி இல்லமாக ‘பால் ஹத்யா பிரதிபந்தக் கிருஹா’ (சிசுக்கொலைத் தடுப்பு இல்லம்)  ஒன்றைத் துவங்கினார். பாலியல் சுரண்டல்களிலிருந்தும், கட்டுப்பெட்டித்தனமான பழங்கலாச்சாரத்திலிருந்தும் பெண்கள் விடுபட  வேண்டும் என்று இறுதிமூச்சு வரை குரல் கொடுத்தனர். தொடர்ந்து ‘மஹிளா சேவா மண்டல்’ என்ற பெண்கள் சேவை மையத்தை 1852-ம்  ஆண்டு தொடங்கி தீண்டாமை, குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிராகவும் போராடினார். பஞ்ச  காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்கு தமது கணவரோடு இணைந்து கடுமையாக உழைத்தார் சாவித்ரிபாய். மக்களின்  துயரங்களைப் போக்க பல்வேறு ஆலோசனைகளையும் முன்வைத்தார்.

சாவித்ரிபாய் கல்வியாளராக மட்டுமல்லாமல், நவீனப் பெண்ணிய கவிதைகளையும் எழுதினார். இவர் எழுதிய முதல் கவிதை நூல் 1892-ல்  வெளிவந்தது. இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி, பெண் உரிமை, தீண்டாமை ஆகிய அனைத்து விஷயங்கள் பற்றியும் கவிதை எழுதினார்.  கல்வியின் தேவை, சாதி எதிர்ப்பு ஆகிய கருத்துகளை வலியுறுத்தும் வகையில் ‘கவிதை மலர்கள்’ என்ற நூலை வெளியிட்டார்.

கணவரின் மறைவுக்குப் பிறகு சமூகப் பணிகளை தொடர்ந்த சாவித்ரிபாய் மற்றும் அவரது வளர்ப்பு மகன் யஷ்வந்த், புனேவில் பிளேக்கின் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 1897-ல் ஒரு கிளினிக் தொடங்கினர். ஒரு பிளேக் நோயாளிக்கு சேவை செய்ததன் மூலம் சாவித்ரிபாய் புலேவிற்கும் இந்நோய் பரவியது. இதனால் 1897-ம் ஆண்டிலேயே மார்ச் 10-ம் தேதி உயிர் நீத்தார். இவரின் நினைவாக மத்திய அரசு 1998-ல் அவரது படம் போட்ட அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.  மராட்டிய அரசு அவர் பிறந்த தினமான ஜனவரி 3ம் நாளை பெண்கள் தினமாக அனுசரிக்கிறது.  இவருடைய பெயரில் ஒரு பல்கலைக்  கழகமும் செயல்படுகிறது.                      

கல்வி மட்டுமே ஒரு சமூகத்தை நகரீக சமுதாயமாக மாற்றும் என்பதை உணர்ந்து தங்களை வருத்திக்கொண்டு, அவமானங்களையும், அருவருப்பு பேச்சுக்களையும் சகித்துக்கொண்டு பணியாற்றிய சாவித்திரிபாய் புலேவின் பாதையில், பல்லாயிரம் ஆண்டுகாளமாக கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து பல முதல்தலைமுறை பட்டதாரிகளாக்கிட அற்பணிப்போடு பணியாற்றிய/ பணியாற்றிக் கொண்டுள்ள ஆசிரியர் பெருமக்களின் தியாகத்தை நன்றியோடு நினைவு கூறுவோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved