🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திராவிட ஆட்சியின் பிதாமகன் பேரறிஞர் பெருந்தகையின் 114-வது பிறந்தநாள்!

"திராவிட ஆட்சி"யின் பிதாமகன் அறிஞர் அண்ணாதுரை அவர்களின் 114-வது பிறந்தநாள் இன்று (15.09.2022).  அறிஞர் அண்ணா என அழைக்கப்பட்ட சின்னக்காஞ்சீவரம் நடராஜன் (சி.என்.) அண்ணாதுரை, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1909-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் நாள் திரு.நடராஜன்-திருமதி.பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார். அண்ணாவின் குழந்தைப்பருவத்திலேயே பங்காரு அம்மாள் இறந்துவிட்டதால், தந்தையார் நடராஜன் ராஜாமணி என்பவரை மறுமணம் செய்துகொண்டார். ராஜாமணி அம்மாள் பராமரிப்பில் அண்ணாதுரை வளர்ந்தார்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் படித்துவந்த அண்ணா, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்டர் மீடியட் (பி.யூ.சி) முடித்தார். பொருளாதார சுழல் காரணமாக தொடர்ந்து படிக்க முடியாததால், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக சில காலம் பணியாற்றினார்.  பச்சையப்பன் கல்லூரி முதல்வராக இருந்த சின்னத்தம்பி பிள்ளை, அண்ணாவை பி.ஏ. ஹானர்ஸ் படிக்கும்படி வலியுறுத்தினார். கல்வி உதவித் தொகை கிடைக்கவும், பாடநூல் வாங்கவும் உதவுவதாக அவர் ஒப்புக்கொண்ட பிறகு, 1931ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. ஹானர்ஸ் படிப்பில் சேர்ந்தார் அண்ணாதுரை. அதன் பிறகு பொருளியல் மற்றும் அரசியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று கல்லூரி வாழ்வை நிறைவு செய்தார். கல்லூரியில் சேர்வதற்கு ஓராண்டு முன்பே, 21-ஆவது வயதில் அண்ணாதுரைக்கும் ராணி அம்மையாருக்கும் சம்பிரதாய முறைப்படி திருமணம் நடந்திருந்தது.

அண்ணாவின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது பச்சையப்பன் கல்லூரி வாழ்க்கையே என்றால் மிகையல்ல. மோசூர் கந்தசாமி முதலியார், மணி திருநாவுக்கரசு முதலியார் ஆகிய தமிழ்ப் பேராசிரியர்கள்தான் அண்ணாவுக்கு சங்கத் தமிழைக் கற்பித்தனர். அவர்களிடம் கற்ற சங்கத் தமிழ்தான் பின்னாநாட்களில் அண்ணாவின் புகழ் பெற்ற மேடைத் தமிழுக்கு அடிப்படையாக அமைந்தது. ஆங்கிலப் பேராசிரியரும். நீதிக்கட்சியில் செயல்பட்டவருமான, வரதராஜன் தான் அண்ணாவின் கவனத்தை அரசியல் பக்கம் திருப்பி அழைத்து வந்தவர். மண்ணடியில் இருந்த பேராசிரியர் வரதராஜனின் எளிய, நெரிசலான அறையில் எப்போதும் மாணவர்கள் மொய்த்துக் கொண்டிருப்பார்கள். அதுதான் அண்ணாவுக்கு குருகுலம் போல அமைந்த இடம்.  வரதராஜனோடு சேர்ந்து பேராசிரியர் வேங்கடசாமி என்பவரும் அண்ணாவிடம் அரசியல் ஈடுபாடு ஏற்படக் காரணமாக இருந்தவர் என்று அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதிய (Anna: Life and Times of C.N.Annadurai) ஆர்.கண்ணன் குறிப்பிடுகிறார். 

கல்லூரியில் தவறாமல் வகுப்புகளுக்குச் செல்கிற அண்ணா, தீவிரமான படிப்பாளி. நீண்ட நேரத்தை நூலகங்களில் செலவிடும் வழக்கமுடையவர். கல்லூரிக் காலத்திலேயே தமிழ், ஆங்கிலப் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்றவர். கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த அண்ணா, 1931-ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர் பேரவையின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாண்டுகள் கழித்து கல்லூரி பொருளாதாரத் துறை மாணவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். தன்னுடைய கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு, சென்னை கோவிந்தப்ப நாயக்கன் பள்ளில் ஆறுமாத காலம் தமிழ் ஆசிரியராகவும், பின்னர் பச்சையப்பன் உயர்நிலைப்  பள்ளியில் ஆங்கில  ஆசிரியராகவும் பணியாற்றினார். ஆசிரியராக இருந்தபோதே, பிராமணர் அல்லாதார் அரசியல் இயக்கமாக இருந்த நீதிக்கட்சி செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார் அண்ணா. ஆகையால், குறுகிய காலத்திலேயே ஆசிரியர் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர், பத்திரிக்கை மற்றும் அரசியலில் ஈடுபாடுகொண்ட அண்ணா முழுநேர அரசியல்வாதியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். 

நீதிக்கட்சியுடனான தொடர்பு ராஜாக்களோடும், பெரும் பணக்காரர்களோடும், கனவான்களோடும் பழகும் வாய்ப்பை அண்ணாவிற்கு ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால், அவர்களில் யாரையும் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளாத அண்ணா, சாமானியர்களைப் பற்றிய கவலைகளோடு சமூகப் பாகுபாடுகளை அகற்றப் பாடுபட்டுவந்த, அலங்காரங்கள் இல்லாமல், கடும் மொழியில் பேசிவிடக்கூடிய பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கரைத்தான் தலைவராகத் தேர்ந்தெடுத்துக்கொண்டர் அண்ணா. 

1935-ஆம் ஆண்டு திருப்பூரில் நடந்த செங்குந்த இளைஞர் மாநாட்டில் பெரியாரை முதல் முதலாக சந்தித்தார் அண்ணா. அப்போது முதல் பெரியார் அண்ணாவின் தலைவரானார். அப்போது நடந்த உரையாடலை, 1949ம் ஆண்டு நடந்த திமுக தொடக்க விழாவில் அண்ணா இப்படி நினைவு கூர்ந்தார்: 

"பெரியார் என்னைப் பார்த்து என்ன செய்கிறாய் என்று கேட்டார். படித்துகொண்டிருக்கிறேன், பரீட்சை எழுதியிருக்கிறேன் என்றேன். உத்தியோகம் பார்க்கப் போகிறாயா என்று கேட்டார். இல்லை உத்தியோகம் விருப்பமில்லை. பொது வாழ்வில் ஈடுபட விருப்பம் என்று பதில் அளித்தேன். அன்று முதல் அவர் என் தலைவர் ஆனார். நான் அவருக்கு சுவீகாரப் புத்திரன் ஆகிவிட்டேன்".

1937-ஆம் ஆண்டு ஈரோடு சென்ற அண்ணா அங்கு பெரியாரின் குடியரசு, பகுத்தறிவு மற்றும் விடுதலை நாளிதழ்களில் துணை ஆசிரியராக 60 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தார். அப்போது அண்ணாவின் வயது 28. அந்த வயதில், அண்ணாவின் திறமையைக் கண்டு வியந்த பெரியார், அதே ஆண்டு துறையூரில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டை தலைமையேற்று நடத்தும் பொறுப்பை அண்ணாவுக்கு அளித்தார்.

1928-ல் மோதிலால் நேரு அவர்கள் அதிகாரப்பூர்வ மொழியாக பயன்படுத்த ஹிந்தியை  பரிந்துரைத்த போது, தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளும்  ஹிந்தி வட இந்தியர்கள் முக்கிய மொழியாக இருப்பதால் மற்ற மொழிமக்கள் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட வேண்டும் என்று கருதி கடுமையாக எதிர்த்தார்கள். கடுமையான எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டிருந்த ஹிந்தி திணிப்பை, சென்னை மாகாணத்தில் ஆட்சியைப் பிடித்த ராஜாஜி, பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல்  8-ஆம் வகுப்பு வரை இந்தி கற்பது கட்டாயம் என்று உத்தரவிட்டு மீண்டும் திணித்தார். சுயமரியாதை மாநாட்டை நடத்தி முடித்திருந்தவேளை, ஹிந்தி மொழியை கட்டாயமாக்கும் முடிவை எதிர்த்து பெரியார் போராட்டம் அறிவித்தார். பெரியார், அண்ணா ஆகியோர் 1938ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அண்ணாவுக்கு 4 மாத சிறைவாசம் விதிக்கப்பட்டது. பெரியாருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கிடைத்தது. இந்த முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து பெரியார் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தை முன்வைத்தார். அப்போது தமிழ்நாடு என்ற மாநிலமே உருவாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையில் இருக்கும்போதுதான் பெரியாருக்கு நீதிக்கட்சித் தலைவர் பதவி தரப்பட்டது. இதுவே பின்னாளில் நீதிக் கட்சியையும், பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தையும் இணைத்து 1944ல் திராவிடர் கழகமாக ஆக்குவதற்கு வழி கோலியது. நீதிக்கட்சியிலும், திராவிடர் கழகத்திலும் பெரியாரின் தளபதியாக இருந்தார் அண்ணா. இந்திய சுதந்திரம் குறித்து ஆலோசிக்கவும், இரண்டாம் உலகப் போரில் இந்தியர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்காகவும் 1942ல் இந்தியா வந்த கிரிப்ஸ் தூதுக்குழுவை சந்தித்து திராவிட நாட்டை தனி நாடாக அங்கீகரிக்கும்படி பெரியார் கோரிக்கை வைத்தார். அந்த சந்திப்பின்போது அண்ணா உடன் இருந்தார். ஆனால், இந்தக் கோரிக்கையை சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து, திராவிட நாடு கோரிக்கை நிறைவேறுவதற்கான வாய்ப்பு நழுவிவிட்டது. ஆனால், திராவிட நாடு என்ற லட்சியத்தை அண்ணா அத்துடன் கைவிடவில்லை. தன்னுடைய பத்திரிகைக்கு 'திராவிட நாடு' என்று பெயர் வைத்தார். 

இதனால் சுதந்திர தினமான ஆகஸ்ட்  15, 1947- ஐ கறுப்புதினமாக அறிவிக்க தனது தொண்டர்களுக்கு அழைப்புவிடுத்தார் பெரியார். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த அண்ணா “இந்தியாவின் சுதந்திரம்” இந்தியாவில் உள்ள அனைவரின் போராட்டத்தினாலும், வியர்வையாலும் கிடைக்கப்பெற்ற ஒன்று. அது ஆரிய மற்றும் வடஇந்தியர்களால்  மட்டும் பெறப்பட்டது அல்ல என்றார்.  இதனால் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு 1948-இல்  நடந்த “திராவிட கட்சி”  கூட்டத்திலிருந்து  அண்ணா வெளியேறவும் நேர்ந்தது. அது மட்டுமல்லாமல் பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மணந்ததால் அண்ணாவும் அவருடைய ஆதரவாளர்களும் திராவிட கட்சியை விட்டு வெளியேறி  1949ல் “திராவிட முன்னேற்ற கழகம்” (தி.மு.க) என்ற கட்சியைத் தொடங்கினார். திமுக-வை தொடங்கியதில் பெரியாரின் அண்ணன் மகன் ஈ.வி.கே சம்பத் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அண்ணா, சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், அன்பழகன், கருணாநிதி போன்ற ஜாம்பவான்கள் பேச்சில் மயங்கியிருந்த தமிழக மக்களிடம் திராவிட முன்னேற்றக் கழகம் குறுகிய காலத்திலேயே மக்களிடையே பெரும் செல்வாக்கையும், ஆதரவையும் பெற்றது.

1950 இல், இந்தியா ஒரு குடியரசு நாடாக மாறிய போது, இந்தியை இந்தியாவின் அலுவலக ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் நடைமுறைபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதனால் 1960-ல் திமுக கட்சி அண்ணாவின் தலைமையில் கட்டாய இந்தி மொழி திணிப்பை எதிர்த்து சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் “இந்தி எதிர்ப்பு மாநாடு”  நடத்தப்பட்டது.  பிறகு இந்திய குடியரசு தலைவர் வருகையின் பொழுது கருப்புக்கொடி காட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை கண்ட இந்திய பிரதமர்  ஜவஹர்லால் நேரு   இந்தி பேசா மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும் வண்ணம் இந்திய அரசியல் அமைப்பில் சட்ட திருத்தம் நிறைவேற்றினார். அதன் பிறகு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அண்ணா வெற்றி பெற ஓர் முக்கிய காரணமாகவும் அமைந்தது. 

1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஒன்பது மாநிலங்களில் தி.மு.க வெற்றிபெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சி சென்னையில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1967 பிப்ரவரியில் சென்னை மாநில அமைச்சர் ஆனார் அண்ணா. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை “தமிழ் நாடு” என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். அது மட்டுமல்லாமல்  கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் நிலவும் மூன்று மொழி திட்டத்துக்கு எதிராக   தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையை அமல்படுத்தினார். பின்னர் ஜனவரி 3,  1968 ஆம் அண்டு “இரண்டாம் உலக தமிழ் மாநாடு”  நடத்தப்பட்டது. ஏப்ரல்-மே 1968 இல் யேல் என்ற அமெரிக்க பல்கலைக்கழகம் இவருக்கு “சுபப் பெல்லோஷிப்” என்ற விருதை வழங்கி கௌரவித்தது. இந்த விருதை பெற்ற அமெரிக்க அல்லாத ஒரு இந்தியர் என்ற பெருமையை தேடித்தந்தது. பின்னர் அதே ஆண்டில், அவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மூலமாக  கெளரவ முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது.

அண்ணா  அரசியல் வாழ்க்கையை தவிர, நாடகங்களுக்கும், திரைபடங்களுக்கும் திரைக்கதைகள் எழுதும் திறமை படைத்தவராக விளங்கினார். அது மட்டுமல்லாமல் அண்ணாதுரை ஒரு மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார். அவருக்கே உரித்தான தனிப்பட்ட பாணியில்  அனைவரையும் கவர்கின்ற வகையில் பேசும் திறன் மற்றும் எழுத்தாற்றலும் பெற்றவராக விளங்கினார். பல நாவல்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் சார்ந்த மேடை நாடகங்களையும்  அண்ணா எழுதினார். தனது சொந்த நாடகங்களில் நடித்தும் உள்ளார். மேலும் 1948 இல் எழுதப்பட்ட இலட்சிய வரலாறு மற்றும் வாழ்க்கை புயல், ரங்கோன் ராதா,  பார்வதி பி.ஏ., கலிங்கா ராணி மற்றும் பாவையின் பயணம்  இவரின் முக்கிய படைப்புகளாகும். 

1948 ஆம் ஆண்டு ‘நல்லதம்பி’ என்ற திரைப்படத்தை முதன் முதலில் அரங்கேற்றினார். இந்த படம் ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத்  திரைப்படமாகும். இந்த படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் இவருக்கு 12,000 ரூபாயை பெற்றுத்தந்தது இது அந்த நேரத்தில் ஒரு பெரிய தொகையாகும். அதுமட்டுமல்லாமல் இவரின் மிகச்சிறந்த நாவலான வேலைக்காரி (1949) மற்றும் ஒர் இரவு, போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. இத்தகைய திரைப்பட பணியின் மூலமாக இ.நாராயணசுவாமி,  K.R. ராமசாமி, N.S. கிருஷ்ணன், எஸ் ராஜேந்திரன், சிவாஜி கணேசன், மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்ற திரை நட்சத்திரங்களின் ஆதரவு இவருக்கு கிடைக்கபெற்றது. 

இரண்டு ஆண்டு காலம் தமிழக முதல்வராக பணியாற்றி “திராவிட மாடல் ஆட்சிக்கு” அஸ்திவாரம் அமைத்த அறிஞர் அண்ணா 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி  3 ஆம் தேதி இறந்தார்.  அவர் புற்று நோயால் அவதிபட்டுக்  கொண்டிருந்த போதிலும், அவர் தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டார்.  அவருக்கு புகையிலை மெல்லும் பழக்கம் இருந்ததால், அவரது உடல் நிலை மேலும் மோசமடைய செய்தது. அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு “கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்” இடம் பெற்றுள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 மில்லியன் மக்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இவருடைய உடல் சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம்  என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அறிஞர் அண்ணா

பெரியாரின் பாசறையில் கற்றார் பாரில்

பெரியோரும் வியந்துநிற்க நடந்தார் நாட்டில்

அரியதொரு தலைவராக வளர்ந்தார் கற்ற

அறிஞரெலாம் போற்றுவழி சிறந்தார் பேச்சால்

பெரியதொரு எழுச்சியினைக் கொணர்ந்தார் போற்றும்

பேரறிஞர் ஆகிமனம் நிறைந்தார் தொண்டால்

உரியதொரு முதல்வரென உயர்ந்தார் என்றும்

ஊர்போற்றும் அண்ணனென ஆனார் வாழி!

ஓரிரவில் திரைக்கதையை அமைத்து நாளும்

ஓய்வின்றிப் படித்துயர்ந்து நின்றார் வெல்லும்

பாரினிலே முத்திரையைப் பதித்தார் நாட்டில்

பல்கலைவாழ் கழகமென வாழ்ந்தார் நெஞ்சில்

ஓரிதயக் கனியாக எம்சி யாரை

உயரிடத்தில் வைத்துயர்ந்து நிறைந்தார் என்றும்

ஈரிதயம் இல்லாது கொள்கை மாறா

இமயமென வாழ்ந்துயர்ந்த அறிஞர் வாழி!

செவ்வாழைப் பழமாக வறியோர் வாழ்க்கை

சீரழிந்து போவதெலாம் கதையில் சொல்லி

ஒவ்வாத பணக்காரர் போக்கைப் பேச்சால்

ஓட்டிடவே வந்துதித்த கதிரோன் தோழர்

மவ்வலவள் தோழிக்கும் மணமுண்டென்று

மாற்றானின் கருத்துக்கும் மதிப்பைத் தந்தார்

எவ்வாத அரசியலை எட்டித் தொட்டே

ஏதுமின்றிக் காங்கிரசை செய்தார் வாழி!

ஒன்றுகுலம் ஒருவனிங்கே தேவன் என்றார்

உயர்தமிழன் நல்லொழுக்கம் பேணச் சொன்னார்

நன்றிவரின் ஆற்றலென பிறநாட் டாரும்

நன்முறையில் பாராட்டும் தரவே செய்தார்

குன்றெனவே உயர்ந்தகுணம் கொண்டார் சாதிக்

குமுகாய வேறுபாட்டைக் கடிந்து போனார்

என்றென்றும் தமிழ்மக்கள் மறவா வண்ணம்

இயந்திரமாய் உழைத்ததமிழ் அண்ணா வாழி!

அரிசிவிலை குறைப்பதற்குப் பாடு பட்டார்

அருந்தமிழர் மனங்குளிரும் பாதை கண்டார்

பரிதியெனத் தமிழகத்தில் வலமும் வந்து

பழியேதும் இல்லாமல் ஆட்சி செய்தார்

நரிக்குணத்தார் செயல்வாலை நறுக்கிப் போனார்

நாட்டோரின் நலனொன்றே இலக்காய்க் கொண்டார்

பெரியாரின் தொண்டரென்றும் தம்பி யென்றும்

பெருமைதனைப் பெற்றஅண்ணா துரையார் வாழி!

கலைஞரெனும் தம்பியினைத் தந்தார் நாட்டைக்

காக்கின்ற நற்பாதை காட்டிச் சென்றார்

தலைவரெனும் சொல்லுக்கு வலிமை கூட்டித்

தாரணியில் தனித்தன்மை காட்டி நின்றார்

அலைகடலும் நாணுமாறு உழைப்பைத் தந்தே

ஆலமரத் திராவிடத்தின் வித்தாய் வாழ்ந்தார்

உலைக்களத்தின் நெருப்பாகிச் சமூகக் கேட்டை

உருத்தெரியா தழித்தெழுந்த அண்ணா வாழி!

சீர்திருத்தத் திருமணத்தைச் சட்ட மாக்கிச்

சேறுநிறை சாதியத்தை ஒழித்த அண்ணல்

ஆர்த்தெழுந்தே ஓடிவரும் தமிழைப் பேச்சால்

அலங்கரித்து நமக்களித்த அறிஞர்க் கோமான்

வார்த்தெடுக்கும் வார்த்தைகளால் ஒளிரும் சிப்பி

வடித்தெடுக்கும் காவியத்தால் சிறந்த சிற்பி

பார்த்தனென நோக்கமைந்த செம்மல் மேடை

பார்த்தழைக்கும் ஆளுமையாம் அண்ணா வாழி!

தோல்விதனைப் பள்ளியிலே பெற்ற போதும்

துவளாது மீண்டெழுந்து வெற்றி கண்டு

வேல்பிடித்துத் தமிழ்படித்துப் பட்டம் பெற்று

வேந்தெரெலாம் பாராட்ட வலமும் வந்து

கால்பிடிக்கத் தெரியாத கொள்கை வீரர்

கரம்பிடித்த எழுதுகோலால் உயர்ந்த சூரர்

கோல்பிடித்து மாநிலத்தை ஆள வந்த

கொற்றவையின் திருமகனார் அண்ணா வாழி!

ஏ. தாழ்ந்த தமிழகமே என்று நாட்டை

எழுப்பிவிட மேடைதோறும் முழக்கம் செய்து

வாதாடும் திறனாலே மன்றம் தோன்றி

வழக்காடி எதிராளி மனத்தை வென்றார்

ஆதார வாழ்விற்குச் சட்டம் போட்டார்

அடித்தளத்து மக்களுக்குக் கடவுள் ஆனார்

ஊதாரி அரசியலை விரட்டி வி்ட்ட

உயர்தமிழர் மொழிஅறிஞர் அண்ணா வாழி!

காஞ்சிநகர் தோன்றிவிட்ட அறிஞர் வாழி

கனிச்சாற்றுப் பேச்சுதிர்த்த செல்வர் வாழி

வாஞ்சைமிகு அன்புகொண்ட தலைவர் வாழி

வரலாற்றில் தடம்பதித்த மன்னர் வாழி

ஆஞ்சநேயர் பலங்கொண்ட தொண்டர் கூட்டால்

அதிசயங்கள் நிகழ்த்திவிட்ட நன்னர் வாழி!

நாஞ்சிலெனத் தமிழ்நாட்டை உழுது சென்ற

நற்றமிழர் வழிநடப்போம் உயர்ந்து வாழ்வோம்

பாவலர்மணி இராம வேல்முருகன்

கவிதை - நன்றி - திரு.A.M.R.துரைசாமி






  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved